"எட்டப்பனா... அவனுக்கென்ன.. எங்க போய் தொலைஞ்சான்...

சாயந்திரத்துல இருந்து காணமாமா...

பரோட்டா கடைல பினாத்திக்கிட்டு நிப்பா.... இல்ல இல்ல தேடியாச்சு... காணோம்..."

ஆளாளுக்கு எட்டப்பனை தேட ஆரம்பித்திருந்தார்கள்.

தொலைஞ்சான் விடு என்று தேடுவது போல பாவனை செய்பவர்களும் இருந்தார்கள். எட்டப்பனின் அப்பாவும் அம்மாவும் கையில் பந்தங்களை கொளுத்திக் கொண்டு அந்த பனிக்காட்டுக்குள் பதற பதற அலைந்தார்கள். சவுக்கை மரங்களினூடாக...உறவுகள் அலைய... தேயிலை தோட்டங்களின் வழியே நண்பர்கள் சொந்தங்கள் ஊர்க்காரர்கள் என்று இரவும் தேடலும் அங்கே தீயாய் பரவிக் கொண்டிருந்தது.

"ஒளிஞ்சு விளையாட்டு விளையாடி இருக்கானுங்க. விஜி பிரேமு சங்கீதா சிவா புனிதா பிரியா முனீசு... எட்டப்பன்... சுமதின்னு... இந்த வீதி பசங்க முழுக்க இருந்திருக்கானுங்க. எல்லாரும் ஒளிஞ்சுக்கறதும்.. ஒருத்தன் தேடி போய் ஒவ்வொருத்தனா கண்டு பிடிக்கறதும்... எப்பவும் போல விளையாட்டு தான். ஆனா எல்லாரையும் கண்டு பிடிச்சப்பறமும் இந்த எட்டப்பன மட்டும் கண்டு பிடிக்க முடியல...

எங்க போய் தொலைஞ்சானோ... இல்ல இல்ல அவன் கொஞ்சம் குசும்புதான்யா.... வால மரத்துல ஏர்றதும்... சாணிக்குள்ள குத்திக்கறதும்... ஓடற பஸ் பின்னால ஓடி ஏணில தொத்திக்கறதும்... அய்யயோ... குரங்குப்பய.. இப்ப பாரு ஊரையே தேட வெச்சிட்டான்..."

தேடலின் இடையே அவன் தொலைந்த கதையையும் பேசிக் கொண்டார்கள். அவன் வளர்ந்த கதையையும் பேசிக் கொண்டார்கள். பேசிக் கொண்டே... ஆசுவாசம் பெற்ற சடுதியை குளிருக்கு போர்த்திய சால்வையில் இழுத்து பிடித்தபடியே கடந்தார்கள்.

"பேரு பாரு எட்டப்பன்...!"

"அய்யயோ அவன் பேரு சரவணன்... எட்டப்பன்ங்கறது அவன் பட்ட பேரு. கூடவே இருப்பான்.... போட்டு குடுத்துருவான்... அதான் அந்த பேரு..."

பேச்சினூடாகவே கண்கள் டேம் தண்ணி பக்கம் போனது ஊர் பெருசுக்கு.

"அட கொஞ்சம் உள்ள பாருங்கப்பா.. மீன் புடிக்கறேன்னு சொல்லி அடிக்கடி இங்க சுத்தறவன் தானப்பா..." என்றார்.

எட்டப்பனின் அம்மாவுக்கு அடிவயிற்றில் திமிலங்கலம் முட்டியது போல ஒரு சுளீர்.

 

ஒரு கூட்டம் டேம் தண்ணி பக்கம்.. ஒரு கூட்டம் ஃபேக்டரி பக்கம்.. ஒரு கூட்டம்.. ஊருக்குள் வீதி வீதியாக தேட.. ஒருவேளை பஸ் ஏறி பொள்ளாச்சி பக்கம் போயிருப்பானோ என்றும் பேசியது...ஒரு கூட்ட தலை.

"கருமாந்திரம் புடிச்ச பைய..." என்று மீண்டும் ஒளிஞ்சு விளையாடிய கூட்டத்தில்... விசாரணையை தொடங்கினார் விஜயன் மாமா. ஆனாலும் ஒரு பிடியும் கிடைக்கவில்லை. எந்த கணக்குக்குள்ளேயும் ஒளிந்து விளையாட்டின் முடிவு தெளிவு பெறவே இல்லை. விஜியின் தலைமையில் வீதியில் மீண்டும் அதே விளையாட்டு விசாரணைக்கு நிகழ்த்தி காட்டப்பட்டது. ஓரிடத்தை சுட்டிக் காட்டி.... அதுவரை அவன் எட்டப்பனை கண்டதாக.... முனீஸ் சொன்னது ஆர்வம் ஏற்படுத்தினாலும்.. அதன் பிறகு தேயிலை காட்டின் இறக்கம் தான் வழியாக நீள்கிறது. அதற்குள் சென்று ஒருவேளை புலி இழுத்து சென்றிருந்தால்... நினைத்தாலே அனைவரின் காதிலும் இல்லாத உறுமல் இருக்கிறேன் என்றது.

பனி கொட்டும் இரவில் கண்களில் விழும் இடமெல்லாம் வெள்ளை பூதமாகவே இருக்க... சாமிதாஸ்- ஐ... அங்கே ஏதோ புதருக்குள் இருந்து எழும் அழுகை சத்தம் ஒரு பக்கமாக இழுத்தது. முதலில் ஏதோ காட்டு பூனை போல தான் அந்த சத்தம் இருந்தது. காட்டு பூனை என்றதுமே சாமிதாஸ்- ன் மனக்கணக்கு குழம்பில் கொதிக்கும் கம கம என துள்ள ஆரம்பித்து விட்டது. உருளும் இரவும்... உறைந்த பனியும் பழக்கம் தானே. உடன் இருந்த சின்னப்பனை நீ போ நான் ஒண்ணுக்கு போயிட்டு வந்தர்றேன் என்று சொல்லி முன் சென்ற கூட்டத்தை முன்னால் போக விட்டு பின்னால் சத்ததோடு கமுக்கமாக தன்னை தக்க வைத்து நின்று விட்டான்.

சிலியில் சிக்கிக்கொண்ட துண்டு பனி பிரதேசம் இது. சுற்றிலும் சித்திரம் கொட்டுவது போன்ற கற்பனையை அப்போது உணர முடியவில்லை. சத்தம் மட்டுமே பிரதானம். எல்லா ஓசைகளும் அடைபட்டு காட்டு பூனையின் பொல்லாத பாஷையை மட்டும் வடி கட்ட ஆரம்பித்திருந்தது அவன் செவிகள். ஒலி வரும் திசையில் ஓரடியை ஈரடியாய் வைத்து தாவி தாவி முன்னேறினான். சத்தம் மிக அருகே இருக்கையில்... ஒலியின் வடிவம் காட்டு பூனையின் தொண்டையில் இருந்து ஒரு நறுமண பெண்னின் துயரத்தில் வடிந்தது.

"இந்த நேரத்தில் தனியா ஒரு பெண்.... எப்படி... அதுவும் இடுப்பில்.... என்ன அது... குழந்தை மாதிரி..."

யோசனையை உருவகத்துக்கு கொண்டு வருவதற்கு முன்னே... இன்னும் கிட்ட நெருங்கி இருந்தான். புல் வெளியில் சேர்ந்திருந்த துளிகளின் ஈரம் செருப்பை தாண்டிய கடுமையாய் இருந்தது. கையிலிருந்த நெருப்பு பந்தம்... பனியை விலக்கி விலக்கி எரித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் எதுவோ சரிவாய் நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற காட்சி உணர்வு அங்கே.

சிக்கி முக்கி கல்லை போல... வந்த ஒலியிலும் வெளிச்சம் கண்டான். தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட பெருந்துயரத்தின் வடிவம் அந்த அழுகையின் எக்களிப்பில் இருப்பதை உணர உணரவே... தலைவிரி கோலமாய் தவம் கலைக்கும் நோக்கத்தோடு இடுப்பில் பிள்ளையோடு நிற்கும் ஒரு நிழல் சித்திரம் துரிதத்தில் அந்த டன்னலுக்குள் எட்டி குதித்து விட்டது. ஒருமுறை மனதுக்குள் அதே காட்சியை ஓட்டி பார்க்கையில் இன்னும் தெளிவாகவே தெரிந்தது... அந்த காட்சி.

அது அருகே இருக்கும் அணையில் இருந்து மின்சார உற்பத்திக்காக... அணுமின் நிலையத்துக்கு நீர் செல்லும் டன்னல். அந்த டன்னலின் முகப்பை எத்தனையோ முறை எட்டி பார்த்திருக்கிறான் சாமிதாஸ். பகலிலும் இருள் சூழும் எக்கோ எதிரொலிக்கும்... செங்குத்தாய் கீழ் நோக்கி உருளும் கிணறு போன்ற வடிவம். ஒரு பெரும் முறுக்கு கம்பி சுழன்று கொண்டு நடுவில் நிற்கும். அது கண்ணுக்கெட்டும் தூரத்திலேயே கீழே நீரை தொட்டுக் கொண்டு நிற்கும். அது தான் நீரைத் திறந்து விடும் திருகாணி.

அதற்குள் குதிக்கிறாள் என்றால்... வேறென்ன தற்கொலை தான். டன்னலில் தற்கொலைகள் அடிக்கடி இப்படி நிகழ்வது கவலைக்குரியது. பக்கத்தூர்க்காரி மாதிரி தான் தெரிகிறது. தன் ஊருக்குள் இப்படி ஓர் உடல்மொழியை அவன் பார்த்தது இல்லை. நொடியில் பதறியவன்... ஓடோடி தடுப்பு சுவரில் சாய்ந்து கத்தினான். காட்டுப் பூனையின் சத்தம் இப்போது அருகே எங்கோ புதருக்குள் இருந்து படுவேகமாய் சுழன்றது.

"ஏய்... என்ன பண்ணற....!? ஒரு கையில் இருந்த பந்தம்.. சிவப்பும் மஞ்சளுமாக... படர்ந்திருந்த ஈரத்தின் இடையே... பல்லை கடித்துக் கொண்டு நாக்கை சுழற்றிக் கொண்டிருந்தது.

மூச்சும் கதறலும் முழி பிதுங்கி தொண்டையில் அடைத்துக் கொண்டது போல... சக்கரத்தில் சிக்கிக் கொண்ட தொடையை போல... தொண்டையில் கிரீச் கிரீச் சத்தம் மட்டும் தான்.

"படுபாவி குழந்தையுமா இப்பிடி பண்ணுவ....?"

கண்களை விரித்து துழாவினான். திருகாணிக்கும் உள் சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டவளின் ஒரு கால் திருகாணி சுழற்சியில் மாட்டிக் கொள்ள... இன்னொரு காலை சரித்து பாதி உடல் கிடுகிடுவென ஆடிக் கொண்டிருந்தது. பாதியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள். இடது கை பிள்ளையை பிடித்த பிடியில் இறுகி அழுகை நின்றிருந்தது பிள்ளைக்கு. புடவை கிழிந்து தொங்க ஆங்காங்கே உடலின் சதையும் பிய்ந்து தொங்க...பந்தம் பிடித்த கை... தானாக நடுங்க.. உடலும் உள்ளமும்... உள்ளேயும் வெளியேயும் துள்ள தொடங்கி விட்டிருந்தது.

டேய்... என்று பின்னால் திரும்பி கத்தினாலும்... கேட்கும் தூரத்தில் மனிதர்கள் யாரையும் காணவில்லை. விட்டு விட்டு போய்... அழைத்து வருவதற்குள்...திருகாணி தாண்டி நீருக்குள் போய் விட்டால்... யோசிக்க நேரமில்லை. தடுப்பு சுவரில் ஏறி குனிந்தவாறே வலது கையை நீட்டி அவள் தலை மயிரை கொத்தாக பற்றி உயிர் நோக மேலே இழுக்க ஆரம்பித்தான்.

மேலே நடுங்கும் ஒவ்வொரு அசைவும் உள்ளிருந்து ஒலியாகி மேலே வந்து கொண்டிருந்தது. மரணம் வெகு அருகே வாய் திறந்து கிடப்பதை காண அச்சம் மேலோங்கியது. எங்கிருந்து வந்ததோ தைரியம்... எகிறி பிடித்த மூச்சின் அழுத்தத்தில் வெறி கொண்ட வேங்கை போல நடந்து கொண்டான். எட்டப்பன் வெச்ச வேட்டு இங்க ஒருத்தியை காப்பாத்த முடிஞ்சிருக்கு. தடுப்பு சுவர் தாண்டி கீழே இழுத்து போடுகையில் நெஞ்சாங்கூட்டில் குளிர் கொப்பளித்தது. அந்த குழந்தை கண்களில் உலகை தொலைத்த வெறுமை. அந்த பெண்ணின் முகத்தில் இருள் வெடித்து காய்ந்த நட்சத்திரத்தின் சாயம் போன நிறம். படபடப்பு அடங்கவில்லை. பேச்சுக்கு மொழி இல்லை. மூச்சுக்கு வழி தேடினான்.

ஊர் கூடி இழுத்தும் வராத தேரில் எட்டப்பனை காணவில்லை. எதன் நோக்கத்தில் பலி எடுக்கப்பட்டதோ... ஊரே சோர்ந்திருந்தது.

"சரி படுங்க... காலைல போலீஸ் ஸ்டேஷன் போவோம்" என்றது ஒரு சேஃப் குரல்.

"எங்க தான் போயிருப்பான்... அண்ணன் சொன்ன மாதிரி புலி சிறுத்தைகிட்ட சிக்கி இருப்பானோ... இல்லயே.. அந்தளவு சூதானம் இல்லாதவன் இல்லயே... கரடி கூடயே சண்டை போட்டு தப்பிச்சு வந்த பய இல்ல...!"

வீதியில் எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் ஆங்காங்கே குறுகி... கோழி குஞ்சுகளை போல அமர்ந்திருந்த வீதி மக்களுக்கு செய்ய காரியம் ஒன்றும் இல்லை. ஆங்காங்கே தேட போனவர்கள் ஒவ்வொருவராக.... இரண்டு மூன்று பேராக... கூட்டமாக வந்தார்கள். பெருமூச்சும்... ரகசிய பேச்சுமாக... ஒரு துக்க வீட்டின் வாசலை நிறைக்க ஆரம்பித்திருந்தார்கள். பாதி பேர் வாசலிலேயே சாக்கை போர்த்திக் கொண்டு சரிய... எட்டப்பனின் அம்மாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. விடிய சாபம் இட்டாள்.

முதல் கோழி கூவி விட... மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டு தேட வேண்டும் அவளுக்கு.

பின் கட்டிலிருந்து எட்டப்பனின் பாட்டி கத்துவது கேட்டது.

"ஏய் ஓடியாங்க... ஓடியாங்க... இங்க கிடக்கான் பாருங்க.... கூறு கெட்டவன இங்க பாருங்க" என்று கத்தி ஊரை கூட்ட.... வாசலில் சுருண்டிருந்தோர்... வீட்டுக்குள் கிடந்தோர் என்று ஆங்காங்கே கிடந்த கூட்டம் அலறி அடித்து.... ஓடி சென்று பார்க்க.. கோழி கூட்டுக்குள் சுருண்டு படுத்து கிடக்கிறான் எட்டப்பன்.

ஒளிந்து விளையாட்டில் ஒளிந்து கொள்ள தோதான இடம் தேடியவன்... கோழி கூட்டை தேர்ந்தெடுத்திருக்கிறான். அப்படியே தூங்கி போயிருக்கிறான். கோழி கூட்டு சூட்டில் தூக்கம் சீக்கிரத்தில் பத்திக் கொண்டிருக்கிறது. ரெண்டு முட்டையை வேறு உடைத்து குடித்திருக்கிறான்.

லூசு பயல உசுப்புங்க என்று ஆளாளுக்கு கோபம் கோபமாய் பாவித்தார்கள். சரியான கிறுக்கு பய...அவனை என்று குமட்டில் குத்த எகிறினார்கள்.

என்னவோ ஏதோ என்று சடாரென விழித்தவனுக்கு காலை மயக்கம்... பனி விலகாத நடுக்கமாக என்ன இது என்பது போல ஒரு பார்வை ஒரு பதற்றம் ஒரு பரவசம்...

உட்கார வைத்து ஊரே வைய ஆரம்பித்திருந்தது. கட்டிக் கொண்டு அழுதாள் பாட்டி. முதுகில் ஓங்கி ரெண்டு சாத்து சாத்தினாள் அம்மா. நாடகத்தில் கோமாளி வேஷம் கட்டி கொண்டு நிற்பவனை பார்ப்பது போலவே இருந்தது... பனி வடிஞ்சு தூங்கி வழிந்த அவனை காண.

"நான்கூட டன்னல் பக்கம் போய்ட்டானோன்னு பயந்துட்டேன்..." என்ற பெருசு தன் நெஞ்சில் தானாகவே கும்பிட்டுக் கொண்டது.

சரி சரி... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு... ஆளாளுக்கு சிரிப்பும் பேச்சுமாக.. அந்த காட்சியே மெல்ல மெல்ல ஒரு நகைச்சுவை காட்சியாக மாறி விட்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்தது போல...எதிர் எதிர் புன்னகையில்... ஐயோ ஐயோ என்பது போன்ற பாவனை.

"யப்பா எட்டப்பா... ஒரு கலக்கு கலக்கிட்டியேடா... ஊரையே தூங்க விடாம..." என்று பேசிக் கொண்டே வந்த சின்னப்பன்.. "ஆமா சாமிதாஸ் எங்க...?' என்றான்... சுற்றும் முற்றும் தன் தோஸ்துகளிடையே பொதுவாக பார்த்துக் கொண்டே.

"உன் கூட தான வந்தான்..." என்றான் இன்னொருவன்... தீர்க்கமாக.

"என்னது சாமிதாஸ் எங்கய்யா.... டேய்.. கண்ணு கெட்டவங்களா.... இங்கதான உக்காந்துட்டு இருக்கேன்..." என்று நடுவில் அமர்ந்திருந்த சாமிதாஸ் கண்கள் விரிய கத்தினான்.

ஒரு பயலுக்கும் கேட்கவுமில்லை. அவனை கண்ணுக்கு தெரியவுமில்லை.

காட்டு பூனையின் சத்தம் படுவேகமாய் டன்னல் இருக்கும் திசையில் இருந்து மேலெழும்பிக் கொண்டிருந்தது.

- கவிஜி

Pin It