மாலையில் இருந்தே உள்ளே மௌனமாய் கொட்டிக் கொண்டிருக்கும் காட்சி இப்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. பனி பொழியும் இந்த இரவில்... ஒரு மரத்தடியே ஒரு மூதாட்டி குடியிருப்பது... வான்கோவின் ஓவியத்துக்கு வேண்டுமானால் பொருந்தாலும்... ஒரு சராசரி மனிதனின் கண்ணுக்கு எப்படி பொருந்தும்.

ஜம்மென்று சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கொண்ட வீட்டில்... இழுத்தடைத்த அறையில்... கம்பளி போர்த்திய கட்டிலில் படுத்துக் கிடப்பதற்கே பற்கள் படபடக்கிறதே. ஒரு மரத்தடியே... பழைய சாக்குக்குள் கிடக்கும் ஒரு கிழவிக்கு உடல் எனும் கூடு எதை தாங்கும். புரிபடாத அவஸ்தையோடு... வீட்டில் இருக்க முடியவில்லை. என்ன தான் நடக்கிறது... நடக்கும்.... பார்க்கலாம் என்று வந்து விட்டிருந்தேன்.

மரத்துக்கு அடியே இரவில் நிற்க கூடாது என்று படித்திருக்கிறேன். பெரியவர்கள் சொல்வார்கள். கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும் நேரம்... நமக்கு மூச்சு முட்டும். இந்த பாழும் கிழவிக்கு முட்டாமல் இருக்குமா என்ன. யார் இந்த கிழவி. ஏன் இப்படி தனித்து விடப்பட்டிருக்கிறாள். இந்த சுதந்திர இந்தியாவில் ஏன் இவர்களுக்கு இருக்க இடம் இல்லாமல் போனது. இவர்களும் என்ன தான் நினைத்து இப்படி இடமற்று பொருளற்று ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள். ஒன்றும் விளங்கவில்லை. அதிக யோசனைக்குள் ஆளாய் பறக்கும் கொசுக்கள் காதை கடித்தன.

எங்கு குளிக்கும்.. எங்கு பாத்ரூம் போகும்... எங்கு உடை மாற்றும்... எப்படி இந்த இருட்டுக்குள்...ஒரு மரத்துக்கு கீழ்.. தூங்க முடியும். குளிரும் கொசுவும்... என்னெல்லாம் செய்யும் என்று யோசிக்கையிலேயே செய்வதறியாத இயலாமை என்னை சூழ்ந்து கொண்டு கொக்கரித்தது.

இருளில் அசைந்து அசைந்து எதுவோ அந்த வளைவில் வருவது தெரிந்தது. நான் இன்னும் ஒதுங்கி திண்டுக்கு மறைவாக நின்றேன். அசைந்து வந்தது ஒரு பாழும் கிழட்டு உருவம். தள்ளாடிய நடையில்.. அழுக்கு சேர்ந்த உருவத்தை நொடியில் காட்டிக் கொடுத்து கரைத்துக் கொண்டது சற்று தள்ளி மினுங்கி கொண்டிருந்த ரோடு லைட்.

வந்த கிழம்.. அந்த கிழவியின் அருகே நின்றது. இருளை தின்பது போல பார்த்தது. தோளில் கிடந்த எதையோ தன்னையுமறியாமல் அங்கே விட்டு விட்டு மீண்டும் தள்ளாடி தள்ளாடி நடக்க ஆரம்பித்திருந்தது. என்ன இது காட்சி. எல்லாம் பொருளற்று நடப்பதாக தோன்றினாலும்.. உள்ளே பொருள் படும் நடத்தைகள் தானோ.. என்ன விதத்தில் என்ன விகிதத்தில் இங்கே நான் நின்று கொண்டிருக்கிறேன்... முன் நெற்றியில் பின் மண்டை முட்டுவது போன்ற சிந்தனை சுழற்சி.

இருமலும் உருமலுமாக... அது ஆணா பெண்ணா என்று கூட தெரியவில்லை. இருளை அசைத்து நசுக்கி.. பிழிந்து உதைத்துக் கொண்டே வருவது போல இருந்தது... இன்னொரு உருவம். நெற்றி சுருக்கி இன்னும் கூராக்கினேன் என்னை. மரமொட்டிய சுவரில் கையை ஊன்றி... வேண்டும் அளவுக்கு இருமியது அந்த உருவம். இருள் பழகும் கண்களில் உருமலுக்கும் வடிவம் உண்டென உணர்ந்தேன். உற்று நோக்கினேன். இருமி ததும்பி குனிந்து எழுந்து மீண்டும் அந்த கிழவி படுத்துக் கிடக்கும் மடக்கு கட்டில் பக்கம் வந்து நின்ற உருவம் மீண்டும் படு வேகமாய் இருமியது. அத்தனை பெரிய இருமல் சத்தத்துக்கும் கிழவியிடம் ஒரு சலனம் கூட இல்லை. இருமல் நின்ற நொடியில் கையில் இருந்த எதுவோ இருமல்காரரிடம் இருந்து விழுந்தது. அதே நேரம் மீண்டும் இருமல். மீண்டும் நடை. அது இருமிக் கொண்டே நடந்து கொண்டே இருந்தது.

என்ன நடக்கிறது. ஏன் நடக்கிறது... ஏதற்கு நடக்கிறது.

இத்தனை சத்தமும் ஒன்றும் செய்யாத தூக்கமா... அது துக்கமா.

மெய்ம்மறந்து சாலை கடந்து அருகே சென்று விட்டிருந்தேன். கண்கள் துழாவும் கட்டில் அருகே ஒரு நிழலைப் போல நின்றேன். அப்படி நிற்பது எனக்கே கூட பயமாக இருந்தது. பிரபஞ்சத்தின் ஜன்னலோரம் நிற்பது போன்ற ஒரு பதட்டம். காலுக்கடியே அலைபேசி ஒற்றை கண் திறக்க... சற்று குனிந்தேன்.

பிய்ந்து கிழிந்து நைந்த சால்வை ஒன்று கிடக்க... அதன் மீது பாதி கடித்த பன் ஒன்றும் கிடந்தது. நொடியில் என்னென்னவோ புரிந்தது.

ஒரு மூப்பு... ஒரு பிணி... கடந்து போய்க் கொண்டிருக்கிறது. சற்று நேரம் செய்வதறியாது நின்றேன். ஒரு பிணத்தின் ஆழ் மௌனம் என்னிடம். அப்போதுதான் உணர்ந்தேன். அந்த நொடியில் இருந்து அந்த மரத்தடியே குளிர்க்கு பதில் வெது வெதுப்பான சூடு பரவிக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்து எப்போது கிளம்பினேன் என்று தெரியவில்லை. ஆனால் அங்கு நிற்கும் வரை.... அந்த மரத்தின் மீது நட்சத்திரங்கள் பூத்துக் கொண்டே இருந்தன.

- கவிஜி

Pin It