"ஏலே பெருமாளு எந்திரிடா பொழுது விடுஞ்சுடுச்சுடா மாட்டுக்கு கொழுத்தாடைக்கு போனும்டா என்ன பெத்தவனே எந்திரிடா..."

"போம்மா டெய்லி ஒனக்கு இதே வேலையாப் போச்சு.. என்னய தூங்கவே விடமாட்டுக்க..."

"நல்லாத் தூங்குற பொறப்பாடா வாங்கி வந்திருக்கோம் வா கௌம்பு..."

ஒரு வழியா பெருமாளக் கௌப்பி ஊரு எல்லையத் தாண்டி கொஞ்சூண்டு தண்ணி கெடக்கும் ஆத்தக் கடந்து பொட்டல் களம் தாண்டி ஒத்தையடிப் பாதை வரப்புல ஏறும் போது பொழுது பொலபொலனு கருப்ப வெலக்கிட்டு நீலக் கலருல வானம் தெருஞ்சுச்சு ....

"பாத்து வரப்புல நட.. அப்புறம் காலுல சுளுக்கிக்கிடப் போதுடா பள்ளிக்கொடம் போவ முடியாதுடா பெருமாளு.." என்று சொன்ன வாத்தைய காதுல கேட்காம... வரப்ப ராஜபாட்டையா நெனச்சுப்புட்டு கைய ஆட்டி ஆட்டி ராஜா போல நடந்தான்...

அதிகாலைக் குருவியான வாலாட்டிக் குருவி க்கீ க்கீ என சத்தமிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பறந்துக்கிட்டே எங்கோ அவனுக்கு முன்னால போய்ட்டே இருந்துச்சு..

"யம்மா ஆளுக நெறைய அப்பவே போயி நெற புடுச்சுட்டாளுக போல வாம்மா சீக்கிரம்" என அம்மாவின் நடையை வெரசப்படுத்திட்டே ஓடினான் ..

"பெருமாளு ஓடிப் போயி ஒரு நெறயப் புடிடா" என அவனம்மா சிட்டு வெரட்டினாள்.

பெருமாளு ஓடிப் போயி வெட்டப்பட இருக்கும் கரும்புக் காட்டுல ஓரமா நின்னு "இது என் நெற"னு சொல்ல..

அஞ்சு மணிக்கே காத்துக் கெடந்த மருதையன் பொண்டாட்டி வீராத்தா "ஏலே அது எவன்லே நான் காத்துப் போட்ருக்கேன் இப்ப வந்து என் நெற ஓன் நெறனு சொல்லிட்டு அங்குட்டுப் போலே.."னு தூக்கக் கலக்கத்துல சத்தமிட ...

சத்தத்த அடயாளம் கண்டுட்ட பெருமாளு "சின்னாத்தா நான் தான் சிட்டு மக"னு சொல்ல..

"ஏலே அடுத்த குண்டுல ஆளு இல்லனு நெனைக்கிறேன். அங்க போடா மவனே"னு சொல்ல இருட்டுல குண்டு தெரியாம வழக்கம் போல ஒரு காணிப் பக்கம் போயி நின்னுட்டு அவுக ஊரு வைரவன் சாமி போல காத்துக்கிட்டு நின்னான்.

ஒரு வழியா சிட்டு வந்து சேர்ந்தாள்.. "ஏலே பெருமாளு எங்கடா இருக்க..?"

"ஏத்தா இங்கா வா"னு அம்மாள கூப்பிட்டு அவன் திசை நோக்கி வர வச்சான்.

தோட்டக் காரன் "ம் வெட்டுங்க"னு சொன்னது தாமசம் "ஏத்தா அருவாளக் குடு"னு வாங்கி... பட படனு வெட்ட ஆரம்புச்சான்...

கண்ணு தெரியுர அளவு வெளிச்சம் படும் நேரம் அவன் நாத்த நெறைய வெட்டிச் சாச்சுப்புட்டு... மொழக் கரும்ப கையில எடுத்துட்டு குத்த வச்சு திங்க ஆரம்புச்சான்...

"ஏலே பெருமாளு இந்தக் கரும்பெல்லாம் உருச்சுட்டு அப்பறம் திங்கலாண்டா ராஜா"னு சிட்டு சொல்வதைக் காதுல கேட்காம சொகமா தொண்டையில சீனித் தண்ணி இறங்குவது போல ரசுச்சு ருசுச்சு தின்னாரு...

நெறக் கரும்ப உருச்சுப்புட்டு அவன் ஆத்தா கரும்ப ஒரு திக்கும் கொழுத்தாடைய ஒரு பக்கமும் போட்டுட்டே வந்தாள்..

"ஏலே இங்க வா கொழுத்தாடைய அள்ளி வெச்சுக் கெட்டு பள்ளிக்கொடம் வேற போனும்ல"னு சொன்னதும் தா தாமசம்...

"யம்மா வெயிலு சுள்ளுன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சும்மா வா போவோம்... லேட்டாயிடும்.." சொல்லிட்டே கொழுத்தாடையை அள்ளி வெச்சுக் கெட்டினான்..

"ஏலே ஒழுங்காக் கெட்டு எடயில அவுந்து போயிடுச்சுன்னா இன்னும் லேட்டாயிடும்"னு சொல்ல அவனும் சரி னு சொல்லிட்டு ..

ரெண்டு ரெண்டு கொழுத்தாடைகளை முடுச்சுப் போட்டு கயிறு போல தரைகிடத்தி அதுமேல உரிச்ச தோகையெல்லாம் அள்ளி வச்சு இழுத்து அமுக்கிக் கெட்டும் போது டுப்புன்னு அந்து போக...

"யம்மா கொழுத்தாடையை முடுச்சுப் போட்டுக் குடும்மா"னு கேட்டான்...

"எத்தன வருஷமானாலும் ஒன் கைக்கு இந்த முடுச்சு அடங்காதுடா கருவாப்பயலே"னு முணுமுணுத்துட்டே முடுச்சுப் போட்ட தோகையை அவன நோக்கி எருஞ்சா சிட்டு...

ஒண்ணுகூட்டிக் கெட்டி அவனுக்கொரு சின்னக் கெட்டு சிட்டுக்கொரு பெரிய கெட்டுனு கெட்டி தலையில சும்மாடு கூட்டி தூக்கி வைத்தார்கள்..

அந்தா அந்தானு வீடு வந்து சேர்ந்து கொழுத்தாடைய வீட்டு மாட்டுத் தொழுவத்துட்ட டப்புன்னு போட்டான் தலைக் கனம் தாங்காம பெருமாளு...

கீழ வீழுந்த வேகத்துல முடுச்சு அவுந்து தெருச்ச சத்தம் கேட்டு... பாத்தரம் வெளக்கிட்டு இருந்த அவனக்கா வேளாங்கண்ணி...

"ஏலே மெதுவா எறக்க வேண்டியது தானலே"னு சொல்ல... "ஒன் வேலையப் பாரு"னு சொல்லிட்டு தலையைப் புடுச்சுட்டு வீட்டு முன்னால கெடந்த பருத்திக் கொட்ட அரைக்கும் அம்மி ஒரலுல ஒக்காந்தான்..

அவன் ஒக்காந்ததுக்கு அப்புறம் தான் சிட்டு வந்து டப்புன்னு கொழுத்தாடைக் கெட்ட கீழ போட்டுட்டு... "ஏலே பெருமாளு அய்யா நீ பள்ளிக் கொடம் கௌம்பலயா..."னு கேட்க "தலை வின்னு னு வலிக்குமா"னு சொல்லிட்டு துண்ட எடுத்துட்டு குளிக்க கௌம்பினான்...

மகனின் தினசரி தலைவலியை நெனச்சு "இப்படி வக்கத்தவ வீட்டுலையாடா வந்து பொறந்த என் செல்ல மகனே"னு சொல்ல..

"ஒனக்கு வேற வேல இல்ல"னு சொல்லி கௌம்பிப் போனான்...

- முனைவர் பெ.இசக்கிராஜா, உதவிப் பேராசிரியர், திருநெல்வேலி

Pin It