பௌர்ணமி நிலவு வெளியே ஒளிர்ந்து கொண்டிருந்தது. யன்னல் ஓரத்திலே நாற்காலியில் சாய்ந்து கொண்டே சூடான தேனீரையும் FM வானொலி அலைவரிசையையும் கேட்டுக் கொண்டிருப்பது என்பது எப்போதும் எனக்கு அதீத சுகம் தருவது.

வானொலியில் நள்ளிரவு நேரம் தாண்டி பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“சிந்துநதியின்மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே…..”

அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாட்டு. அவர் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் இந்த பாட்டைப் பாடுவது வழக்கம். முழுவதுமாய் திறந்திருந்த யன்னலினூடாக பால் போன்ற நிலவு வெளிச்சமும், மிதமான குளிர்ந்த காற்றும் உள்ளே நுழைந்து அறையை நிரப்பின. சில நேரங்களில் மட்டுமே வாய்க்கும் அத்தகைய அரிதான தருணம் நெடுங்காலத்துக்கு முன் ஒளிர்ந்த அந்த நள்ளிரவுப் பௌர்ணமி நிலவை எனக்கு நினைப்பூட்டியது.

அன்றொரு நாள் பரித்தீவில் ஒரு பௌர்ணமி காலம். நானும் அப்பாவும் சிதைவடைந்த கோட்டையின் வளாகத்தில் நின்றிருக்கிறோம். சூழவும் ஏகாந்தமான பெரு வெளி. சற்றுத் தொலைவில் மெல்லிய இரைச்சலுடன் ஒலித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகள். கடலின் கரைப்பகுதியில் இருந்து கோட்டையை சூழவும் பின்னர் கோட்டைக்கு அப்பாலும் பல நூறு மீட்டர்கள் தூரம் மிக அகலமான சிதைவடைந்த கால்வாய் சென்று கொண்டிருந்தது. அது வெகுதூரம் சென்று வெட்டவெளியான தரவையில் மறைந்து விடுகிறது. வெட்டவெளி முழுவதும் பரவிக் கிடக்கும் சிறிய கற்பாறைகள் நிலவொளியில் பட்டுத் தெறித்து மின்னிக் கொண்டிருந்தன. இடையிடையே சில குதிரைகள் கூட்டம் கூட்டமாகப் படுத்து அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த சூழல் ஒரு மந்தகாசமான உணர்வினை உருவாக்கிக் கொண்டிருந்தது. அப்பா மகிழ்ச்சியில் சீட்டியடித்தபின் பாடினார்.

“சிந்துநதியின் மிசை நிலவினிலே

சேரநன்னாட்டிளம் பெண்களுடனே

………………………………………………………………….”

"அப்பா இங்கே கற்பாறைகள் எல்லாம் நிலவு வெளிச்சத்தில் வளருமாமே?"

"ஏன்டா இப்பிடி அறிவு கெட்டத்தனமாகக் கதைக்கிறாய்? அது எப்பிடி வளரும்?"

"ஏன் அவன் சொல்லுறது சரிதானே...வடிவாக் கவனிச்சிருக்கிறான்" கூட வந்திருந்த அப்பாவின் நண்பர் குறுக்கே புகுந்து என் பக்கம் பேசினார்.

நீண்ட நேரம் அப்பா மௌனமாக இருந்தார். அந்த சூழ்நிலை அவருக்குள் அதீதமான உணர்வுகளை கிளப்பி விட்டிருக்க வேண்டும். இவ்வாறான நேரங்களில் நான் மிகவும் அமைதியாக இருந்துவிடப் பழகியிருந்தேன். ஏனெனில் இத்தகைய தருணங்களின் பின்னர் சுவாரசியமான பல கதைகள் வெளிவரும் என்பது எனது அனுமானம். இந்த விடயத்தில் எனது அனுமானம் எப்போதுமே பொய்த்ததில்லை.

நீண்ட காலத்துக்கு முன்னர் இராமநாதபுரத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு தயிருடியர், சங்கட வாயர், ஊசிப்பல்லர் என்று மூன்று பெயர்கள். தயுருடியர் என்றால் தயிரை மிகவும் விரும்பிக் குடிப்பவராம். சங்கடவாயருக்கு அகன்ற வாயாம், ஊசிப்பல்லருக்கு ஊசி போன்ற பல்லாம்.

மூன்று பேரினதும் தகப்பனார் வீரபாகு ஒரு பெரிய பண்ணையார். விலங்குப் பண்ணை வைப்பதும், பசுக்களை இனப்பெருக்கம் செய்து விற்பதும் அவருக்கு முக்கிய தொழில். ஆனால் மறந்தும்கூட பசுக்களையும் காளைகளையும் இறைச்சிக்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. அவர்களது வீட்டில் நாள்தோறும் பெரிய அண்டா முழுவதும் பால் சேர்ந்து கொண்டிருந்தது. எந்த அளவுக்கு சேர்ந்தது என்றால் மன்னர் சேதுபதி ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து குளிப்பதற்கு முன்னர் குடம் குடமாக பாலால் முழுகுவது வழக்கம். ஏனென்றால் சேதுபதி மன்னர் ஸ்ரீராமனின் அவதாரமாம். அவரின் மூதாதையரை தான் கட்டிய சேதுவைப் பாதுகாத்து வரும்படி ராமரே ஆணையிட்டாராம். அவருக்கான பால் முழுவதும் தினமும் வீரபாகு வீட்டில் இருந்துதான் வந்து சேரும். திரும்பி வரும்போது மீதிப்பாலை சிவன் கோவிலுக்கு கொடுத்துவிட்டு வருவார்கள்.

மன்னர் கடவுளின் அவதாரம் என்றாலும் மன்னருக்குத்தான் முதல் நைவேத்தியம் வைக்க வேண்டும் என்பது வீரபாகுவின் நம்பிக்கை. மூத்த வாரிசு தயிருடியர்தான் தனக்குப்பின் இந்த கடவுளினதும் கடவுள் அவதாரத்தினதும் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வீரபாகு மனக்கணக்கு வைத்திருந்தார். ஆனால் தயிருடியரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையும் இரவும் ஒரு சட்டித்தயிரை உப்பு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மிக அரிதாக சேதுபதியின் உடல்நிலை சரியில்லாமல்போய் மன்னருக்கும் கடவுளுக்கும் பாலாபிஷேகம் இல்லாமலிருந்த சில நாட்களில்கூட தயிருடியர் தயிர் குடிப்பதை நிறுத்தவில்லை. அதைவிட அவருக்கு இருந்த ஒரே வேலை கடலுக்குச் சென்று நீந்துவது, மட்டி பொறுக்குவது, நண்பர்களுடன் கட்டுமரச் சவாரி செய்வது.

யாருக்கும் சொல்லாமல் சூரியன் மறைந்ததும் தயிருடியர் ஊரைவிட்டு நான்கு நண்பர்களுடன் கட்டுமரத்தில் ஏறி தெற்குத் திசை நோக்கிப் பயணத்தை தொடங்கியபோது அவருக்கு வயது பதினைந்து மட்டுமே.

தயிருடியருக்கு ஊரைவிட்டு ஓடிப் போகும் எண்ணம் முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பட்ட ஒன்றல்ல. திடீரென்று கடற்கரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஓர் எண்ணம். அந்த எண்ணம் ஏன் அன்றைய செக்கல் நேரத்தில் ஏற்பட்டது என்று அவருக்குப் புரியாமல் இருந்தது. அது எந்த அளவுக்கு திட்டமிடப்படாமல் இருந்தது என்றால், அவருக்கு அன்று இரவு தயிர் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே அப்போது தோன்றவில்லை. நண்பர்கள் ஐந்து பேரும் கட்டுமரத்தில் ஏறி வெகுதூரம் பயணம் செய்து மிகப் பெரிய சமுத்திரத்தை ஊடறுக்கும்போது தெற்கே கரிய மேகங்கள் திரளத் தொடங்கியிருந்தன.

மூத்த மகன் வீட்டைவிட்டு ஓடிப் போனதை மறுநாள் அதிகாலை கேள்விப்பட்டதும் வீரபாகு எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. சேதுபதியின் அரண்மனைக்கு புறப்படத் தயாராக இருக்கும் பால் நிரப்பிய குதிரை வண்டியை பார்த்துவிட்டு தீர்க்கமான குரலில் சொன்னார்.

"அவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை பின்னொரு காலத்தில் நிச்சயம் நிறைவேற்றுவான்".

மூன்று நாட்களாக கரையைக் காண முடியாமல் நண்பர்கள் தத்தளித்தனர்.

மிக மோசமான புயலில் சிக்கிய கட்டுமரம் மூன்று இரவுகளும் மேலும் கீழுமாக சுழன்று கொண்டிருந்தது. நண்பர்கள் தூங்காமல் இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டனர். பின்னர் இருவர் இருவராக முறைவைத்து உறங்கினர். தூக்கம் ஏற்பட்டபோதெலாம் தயிருடியரைத் தவிர மற்றையோர் எல்லோரும் கடல் நீரை மொண்டு விழுங்கினார்கள். அடுத்த நிமிடமே தாகம் பல மடங்கு அதிகரித்தது. பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டனர்.

தயிருடியருக்கு அப்போது தயிர் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது. இந்த மூன்று நாட்களும் அவர்கள் சூரியனைக் காணவில்லை. ஒருவேளை பூமியின் ஒளி புகாத இடத்துக்கு வந்து விட்டோமோ என்று அவர் நினைத்தார். நான்காவது நாள் வானம் வெளித்து சூரியன் தென்பட்டதும் வெகு அருகாமையில் வெண்ணிற மணல் கொண்ட மிக அழகான கடற்கரை ஒன்றை நண்பர்கள் பார்த்தனர். நண்பர்கள் நால்வருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தயிருடியர் இந்த நாலு நாட்களும் தனக்கு சிறிதளவு கூட பயம் இருக்கவில்லை என்பதை உணர்ந்தார்.

கட்டுமரம் கரையை அண்மித்ததும் நால்வரும் வெண்மணலில் ஓடிச் சென்று மல்லாக்கப் படுத்தனர். அழகிய மெத்தை போன்ற மணல்பரப்பு. நான்கு நாட்களாக முறையான தூக்கம் இல்லை. கடற்குளிரிலும் உப்பு நீரிலும் உடல் விறைத்துப்போய் இருந்தது. மிக மென்மையான இள வெயில் உடனே தூக்கத்தை வரவழைத்தது.

தயிருடியர் கண் விழித்து எழுந்தபோது சூரியன் நடு உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. நண்பர்களுக்கு பசி தாங்கவில்லை. சற்று தூரம் நடந்ததும் கடற்கரை முழுவதும் கற்றாழை மரங்களும், நாகதாளி மரங்களும் செறிந்து கிடந்தன. எல்லோரும் கற்றாழையின் சோற்றுப்பகுதியையும், உட்புறம் ஆபத்தான நட்சத்திர முள் நீக்கப்பட்ட நாகதாளிப் பழங்களையும் உண்டனர். மேலும் சிறிது தூரம் நடந்ததும் அவர்கள் தமது மீதி வாழ்க்கையை தீர்மானிக்கப் போவதும், அந்தத் தீவின் முதல் குடியேறிகளான இவர்களின் கலாச்சார அடையாளமாக மாறப் போவதும், மிகப் பெரிய வாழ்வாதாரமாக விளங்கப் போவதுமான ஒரு காட்சியைக் கண்டனர்.

” அது மிகப் பெரிய பனந்தோப்பு”

தயிருடியரின் முகம் மலர்ந்தது. கண்கள் விரித்து ஆச்சரியத்தில் சொன்னார்.

"இனிமேல் நாம் தினசரி காலையில் கள்ளினை உண்போம்". அந்த கணத்தில் அவருக்கு தயிரின் ஞாபகம் மறைந்து போனது. அன்றிலிருந்து அந்த ஆளில்லாத தீவில் குடியேறிய முதல் மனிதர்களுக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் கள் பிரதான உணவாகியது.

02

பரித்தீவில் குடியேறிய அவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. கடலைச் சூழ மீன்களும், தீவினுள் ஆடுகளும், பனைகளும் மிகையாக இருந்தன. கடற்கரையில் உட்புறமாக வளைந்து செல்லும் கற்பாறைகளுக்குள் நீந்தும் மீன்களை அவர்கள் உணவாக்கிக் கொண்டனர். தயிருடியரின் நண்பர்களில் ஒருவர் கீழே விழுந்த பனம் பழங்களை உண்டது போக, மீதியை பிசைந்து உலர்ந்த பாறைகளில் ஊற்றி சில நாட்களுக்கு காய வைத்தார். இறுதியில் அவர்களுக்கு பழுப்பு நிறத்திலான மிகவும் சுவையான திடப்பொருள் கிடைத்தது. அவர்கள் அதற்கு பனாட்டு என்று பெயர் வைத்தனர். அது தவிர கொழுத்த வெள்ளாடுகளை இறைச்சியாக்கி உப்பு நீரில் ஊற வைத்து பாறைகளில் காய வைத்து பதப்படுத்தும் முறையை சிறப்பாகக் கற்றுக் கொண்டனர்.

தீவு முழுவதும் கற்பாறைகள் மீந்து கிடந்தன. அவற்றைப் பயன்படுத்தி வீட்டு சுவர்களை அமைத்துக் கொண்டனர். வீடுகளுக்கு அமைக்கும் வேலிக்கும் கரும் பாறைக்கற்களை எல்லையாக பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறாக பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் காலப்பகுதியில் தீவின் மறு பக்கத்தில் கடலுக்குச் சற்று அண்மித்ததாக சிதைவடைந்த கோட்டைப் பகுதிகளை கண்டனர். இது இப்போதுதான் ஆளரவமற்ற இடம். முன்பு யாரோ ஒருவர் இதை ஆட்சி செய்திருக்கிறார். ஆட்சி செய்ய மனிதர்கள் வேண்டுமே. அவர்கள் எங்கே போனார்கள்? நீண்ட காலத்துக்குப் பின்னர் இவர்கள் குடி வந்திருக்கிறார்கள். தயிருடியருக்கு தான்தான் இந்த தீவின் அரசன் என்ற ஒரு வினோதமான, வேடிக்கையான புதிய எண்ணம் கற்பனையில் தோன்றி சிறிய சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அன்று அதிகாலையில் கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தயிருடியர் அந்தத் தீவின் மிக முக்கியமான ஓர் உண்மையைக் கண்டறிந்தார். அதாவது இந்தத் தீவில் சூரியன் மேற்கில் உதிக்கிறது. ஒரு கணம் அந்தப் பிராந்தியம் முழுவதும் அதிரும்படி கூச்சலிட்டார். அப்போது மெல்ல மெல்ல சூரியன் மேற்கிலிருந்து எழுந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் இரவு முழுப்பௌர்ணமி நிலவு நாள். கடல் அலைகளில் பட்டுத் தெறித்த சந்திர ஒளிவெள்ளம் அந்தப் பிராந்தியம் முழுவதும் இறைந்து கிடைக்கும் பாறைக் கற்களில் பட்டுத் தெறித்து பனை ஓலைகளுக்கூடாக பாய்ந்து அவற்றை லேசாக அசைத்தது. நண்பர்களுக்கு சற்று மூச்சுத் திணறியது. அப்போதுதான் அந்த மர்மத் தீவின் இன்னொரு மிக முக்கிய இயல்பினை தயிருடியர் கண்டுபிடித்தார்.

"இங்கே சில பாறைகள் நிலவினை உறிஞ்சி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பாறைகள் ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறி சுற்றுப்புறம் முழுவதும் சிறு பாறைக்கற்களை விசிறுகின்றன. அப்போது வெளிவரும் உறிஞ்சப்பட்ட முழு நிலவும் அங்கேயுள்ள பனைமரங்களையும் முட்செடிகளையும் சாம்பலாக்கி விடுகிறது. அதன் பின்னர் அங்கே புற்கள் மட்டுமே வளரும்."

பரித்தீவு முழுவதும் கற்கள் இறைந்து கிடப்பதன் காரணத்தைக் கண்டறிந்து அவர் சொன்னதன் பின்னர் நண்பர்கள் தயிருடியரைப் பார்த்தனர். அவரது கண்கள் நிலவில் ஒளிவீசும் பூதத்தின் கண்கள் போல மின்னின.

அங்கு குடியேறிய ஒரு வருட முடிவில் ஓர் அமாவாசை நள்ளிரவில் நண்பர்கள் அந்தத் தீவின் அடுத்த மர்மத்தைக் கண்டறிந்தனர். அந்த தீவுக்கு நாற்பது அடி உயரமுள்ள ஒரு மனிதன் வந்து செல்கிறான். அவனது மிகப் பெரிய கால்த்தடம் பாறைகளில் மிக அழுத்தமாகப் படிந்திருந்தது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் அச்சத்தில் ஒட்டிக் கொண்டு நின்றனர். தயிருடியருக்கு ஒருவேளை அவன்தான் இங்கே அரசு புரிந்தவர்களையும், வாழ்ந்தவர்களையும் கொன்றிருக்க வேண்டும் என்று தோன்றியது. தூரத்தில் தெரிந்த சிதைவடைந்த கோட்டையை திகிலுடன் பார்த்தார்.

ஒரு கோடை காலம் தொடங்கியபோது தீவில் இருந்து நண்பர்கள் கட்டுமரம் மூலம் அருகில் உள்ள நிலங்களுக்குப் பயணம் செய்தனர். அப்போதுதான் அவர்கள் ஒரு விடயத்தை உணர்ந்தனர். பரித்தீவைத் தவிர மிச்ச எல்லா இடங்களிலும் அரசு இருக்கிறது. மக்களும் இருக்கிறார்கள். விவசாயமும் செய்கிறார்கள். வேற்று மொழி பேசும் ஆட்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்தப் பயணங்களில் தயிருடியர் ஈடுபாடு காட்டவில்லை. அவர் தீவின் மர்மங்களை ஆராய்வதில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆறு மாதங்களின் பின்னர் நண்பர்கள் திரும்பி வந்தனர். சில விவசாயக் கருவிகளுடனும், தாங்கள் கடற்கரையோரம் சந்தித்த பெண்களுடனும். அவர்களில் ஒருவர் சொன்னார்.

"தெரியுமா? இப்போது அங்கெல்லாம் மன்னர் இல்லையாம். யாரோ வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களே ஆட்சியும் செய்கிறார்கள். கோவில்களுக்குள் எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்களாம். நாளும் கிழமையும் பார்க்காமல் மாடு சாப்பிடுகிறார்களாம். இந்த இரண்டு விஷயத்தில்தான் சனங்கள் அவர்கள் மீது கடுப்பில் இருக்கிறார்கள்."

தயிருடியர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். "கலிகாலம், நல்லவேளை நமது தீவில் அந்நியர் ராஜாங்கம் வரவில்லை" என்று முணுமுணுத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக பரித்தீவுக்கு அண்மையிலுள்ள தீவுகளில் இருந்து மக்கள் குடியேறத் தொடங்கினார்கள். அதிகளவு மீன் கிடைக்கிறது என்பது ஒரு காரணம். பெரும்பாலும் சில நாட்கள் தங்கியிருந்து தொழில் செய்துவிட்டு கள்ளும் அருந்திவிட்டு போய் விடுவார்கள். பின்னர் சில வாரம் கழித்து வேறு சிலருடன் திரும்பி வருவார்கள். ஆனால் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த தயிருடியரும், அவரது நண்பர்களின் குடும்பமும் பரித்தீவில் வேறு முக்கியமான ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதுதான் மழை.

நண்பர்களுக்கு தீவின் பரந்த வெளிகளில் விவசாயம் செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவர்கள் இங்கே குடியேறி பல வருடங்கள் கழித்தும் மழையைக் காணவில்லை. ஒருவேளை மழை கிடைக்காத பகுதியோ? உண்மையில் நண்பர்களுக்கு இந்த உணர்வு சற்று தாமதமாக ஏற்பட்டு அவர்களைத் துணுக்குற வைத்தது. தயிருடியர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தீவின் உள்ளே கிடைக்கும் அதிசயத் தாவரங்களையும், 6 மூலிகைகளையும் ஆய்வு செய்து மருந்துகள் தயாரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சிறிய நோய் வரும்போதும் நிறைய மூலிகைகளை தனக்குத் தானே பாவித்து பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அவரது உடல் இளைத்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தது. கண்கள் குழி விழுந்து காணப்பட்டன. ஆனால் அவற்றில் இன்னும் ஒளி மிகுந்து கூர்மையாக விளங்கியது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கழித்து பரித்தீவில் புயலுடன் கூடிய மழை பொழிந்தது. அது வடகீழ் பருவக்காற்று மழை. அத்தோடு அங்கே நிலவிய நீண்டகால வறட்சி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து தீவில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மழை பொழிந்து கொண்டிருந்தது.

மழை தொடங்கியதும் எல்லோரும் மண்ணை உழுது பயிர் செய்யத் தொடங்கினார்கள். வெகு விரைவிலேயே அவர்கள் கண்டுகொண்டார்கள். அந்த நிலத்தில் மூன்று அங்குலத்துக்கு கீழே மண் இல்லை. கடும் பாறையாக இருந்தது. மேலும் பயிர்பச்சைகள் வயல்வெளிகள் உருவாக வழியே இல்லை. பருவ மழை முடிந்ததும் தீவு முழுவதும் ஆளுயரப் புற்கள் மண்டிக் கிடந்தன. தயிருடியர் சிரித்தபடி சொன்னார்;

"நான் தான் அப்போதே சொன்னேனே! இங்கே புற்களுக்கு மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாம் பசுக்கள் வளர்ப்போம்".

கோடைகாலம் தொடங்கியதும் புற்கள் வளரும் இடங்களாகப் பார்த்து எல்லோரும் கற்களால் அணைகட்டி மண்ணால் நிரவினார்கள். இந்த மழைக் காலத்தின்போது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் எல்லாம் அவர்களுக்கு நன்கு பரிச்சயமாகி விட்டிருந்தது. சிறிய குளங்கள் ஏராளம் உருவாகின. சனத்தொகை மெல்ல மெல்ல கூடிக்கொண்டு வந்தது. பக்கத்து தீவுகளில் இருந்து நிறைய பசுக்களையும் காளைகளையும் கொண்டு வந்தனர். தேவைக்கு அதிகமாகவே பால் சில வருடங்களில் பெருகியது. அதோடு கூடவே கருவாடும், புழுக்கொடியாலும், ஓடியலும், கள்ளும் பெருகின. தயிருடியருக்கு நடுத்தர வயது தாண்டி விட்டது. அவரை நாம் இனி பெரியவர் என்றே அழைக்கலாம்.

பெரியவருக்கு மீந்துபோன பாலையும் மிச்சப் பொருட்களையும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லவற்றையும் தொலை தூரத்தில் இருக்கும் பட்டணத்துக்கு அனுப்பலாம். பாலை என்ன செய்வது? படகுகள் மூலம் பொருட்களை தொலைவில் உள்ள பட்டணத்துக்கு அனுப்பினார்கள். அப்போதுதான் அங்கே தொலைவில் உள்ள பிரபலமான ஒரு கந்தசாமி கோவிலுக்கு பால் அனுப்பலாம் என்று பெரியவருக்குத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் அங்கே அபிஷேகத்துக்காக பால் அனுப்பத் தொடங்கினார்கள். கூடவே தயிரும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பரித்தீவில் இருந்து பால் நிரம்பிய குடங்களுடன் படகுகள் பட்டணத்துக்கு வந்தன. இப்போதெல்லாம் அவர்களுக்கு கடலை இலகுவாக கடக்கும் நுட்பம் கைவந்து விட்டது. காற்றின் திசைக்கேற்ப பாய்மரங்களை ஒழுங்கு செய்வதில் வல்லவர்களாயிருந்தனர். பாய்ந்து வரும் ராட்சத அலைகளை மீறி படகுகளை வெட்டி வெட்டி ஓட்டுகிறார்கள். திறமையான படகோட்டிகள் பலர் அங்கே உருவாகியிருந்தனர்.

ஒவ்வொருநாளும் காலையும் மாலையும் கந்தசாமி கோவிலுக்கு பரித்தீவின் பால் மூலம் அபிசேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இடையில் கடவுளின் அவதாரங்கள் எவரும் இருக்கவில்லை. பல்லக்குகளுக்குப் பதிலாக பெரிய குதிரை வண்டிகளில் ராணுவ சீருடைகளுன் கூடிய “வெள்ளைத்தோல் மகாராஜாக்கள்” ஆட்சி செய்து கொண்டிருந்தனர்.

காலங்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால் பெருகியிருந்த இந்த வியாபாரமும் வெளித்தொடர்புகளும் வெகு விரைவில் ஆபத்தை கொண்டு வரப் போகிறது என்று பெரியவருக்கும் தீவுவாசிகளுக்கும் ஆரம்பத்தில் தெரியவில்லை.

03

ஒரு வெள்ளை இயந்திரப் படகோட்டியும், அமெரிக்க இளைஞனும் ஓர் அதிகாலையில் ஒரு சில பட்டாளங்களுடன் பரித்தீவுக்கு வந்து இறங்கியபோது பெரியவருக்கு எண்பது வயது நடந்து கொண்டிருந்தது. அந்த வெள்ளை இயந்திரப் படகோட்டி தன்னை கப்டன் நோலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மற்றைய அமெரிக்க இளைஞன் தன்னை டேவிட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரும் வரும்போது அவர்களின் பட்டாளங்கள் சிறியவகை மட்டக்குதிரைகளை கூடவே கூட்டி வந்திருந்தார்கள். தீவின் கரையில் இறங்கி இயந்திரப் படகை ஒரு பாறையில் கட்டிவிட்டு அனைவரும் மட்டக்குதிரைகளில் ஏறி தீவினுள் நுழைந்தனர்.

தீவின் உட்புறத்தில் வெகுதூரத்துக்கு புல் வெளிகள் நிறைந்து கிடந்தன. வழியெங்கும் பனம்தோப்புக்கள். இடையிடையே கடற்கரையோரம் நிறைந்து கிடைக்கும் ஒருவித அச்சத்தை தரக்கூடிய அழகுடைய கரும் கற்கள். பேரிரைச்சலுடன் பொங்கும் கடல் அலைகள். டேவிட் இந்த நிலத்தோற்றத்தை தனது முதல் கடல் பயணத்தின்போது பார்த்திருக்கிறான். அவனது முதலாவது கடல் பயணத்தில் கப்பல் ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டிருந்தபோது கப்பலில் காலரா கண்டது. அவனுடன் வந்த பெரும்பாலானவர்கள் மாண்டனர். அவர்களை உடனடியாக கடலுக்குள் தள்ளிவிட்டனர். அண்மையில் தெரிந்த நிலப்பகுதியில் கப்பலை நிறுத்தினர். அங்கே வசித்த சற்று முரட்டுத்தனமான பழங்குடிகள் அந்த நிலத்தை மடகஸ்கார் என்று அழைத்தனர்.

அப்போது இவன் மடகஸ்காரின் கடற்கரையோரம்தான் கப்பல் புறப்படும் வரை பொழுதைக் கழித்தான். அவனுக்கு உணர்ச்சி ததும்பியது. கப்டன் நோலனிடம் சொன்னான்;

"இந்தத் தீவு உங்கள் மாட்சிமை தங்கிய மகாராணியாருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல! இது இந்தப் பிரபஞ்சத்துக்கே சொந்தமானது".

இவர்களின் வருகை பற்றி மக்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பெரியவருக்கு முகத்தில் கவலையின் ரேகைகள் மெதுவாகப் படர்ந்தன. அவர் கவலை கொண்டது வீண் போகவில்லை. கப்டன் நோலன் அன்று ஊர் பொது வெளியில் எல்லோரையும் கூட்டி ஒரு பொது அறிவிப்பை செய்தான்.

"இன்றிலிருந்து இந்தத் தீவு மாட்சிமை தங்கிய மகாராணியாரின் ஆட்சியின் கீழ் வருகிறது. அரச நிர்வாகங்களை கவனிக்க இங்கே ஒரு ஆளுநர் வெகுவிரைவில் வருவார். அவரிடம் நீங்கள் உங்கள் குறைகளைக் கூறலாம்".

அவர்கள் மக்களின் கருத்துக்கள் எதனையும் கேட்கவில்லை. பெரியவருக்கு இங்கே என்ன குறை இருக்கிறது என்று விளங்கவில்லை. அவர்கள் யாரையும் அங்கே எதிர்பார்த்து இல்லை. வந்தவர்கள் திரும்பிச் செல்லும்போது, கொண்டு வந்த மட்டக்குதிரைகளை அங்கேயே விட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

கப்டன் நோலனைத் தொடர்ந்து தீவுக்கு நிறைய படகுகள் அங்கே வந்து கொண்டிருந்தன. கூலி ஆட்களுடனும், நிறைய ஆயுதங்களுடனும், கட்டுமானப் பொருட்களுடனும். கிழக்கு கடற்கரையை ஒட்டிய வெளியில் ஒரு வதிவிடம் ஒன்று உருவாகிக் கொண்டு இருந்தது. கடற்கரைக்கும் வதிவிடத்துக்கும் இடையே ஏறத்தாழ ஐநூறு மீட்டர்கள் தூரம் இருந்தது.

வதிவிட வேலைகள் ஓரளவு பூர்த்தியானதும் கடற்கரையில் இருந்து வதிவிடத்துக்கு மிகப் பெரிய கால்வாய் ஒன்று வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளூர் மக்களும் அந்த வேலையில் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். கடற்கரையிலிருந்து ஆளுநரின் வதிவிடத்துக்கு நேரடியாக இயந்திரப் படகு உள்ளே வருவதற்கு ஏற்றதாக அந்தக் கால்வாய் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

மிகவும் குறைவாக வட கீழ் பருவக்காற்று மூலம் கிடைக்கும் நல்ல நீரை அணைகட்டி தேக்கி வைத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக தேக்கி வைத்திருந்து இப்போது நிலத்தின்கீழ் நல்ல நீர் ஓரளவுக்குப் பெருகி விட்டது. கடல் நீர் உள்ளே வந்தால் சிறிது காலத்தில் தீவில் உள்ள நல்ல நீரெல்லாம் உப்பு நீராகி விடுமே என்று பெரியவர் கவலைப்பட்டார். அவரது கவலையை மக்கள் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை.

"தொலைவில் உள்ள பட்டணத்தில் மக்கள் ஒரு அரசுக்கு கீழ் இருக்கிறார்கள். பிள்ளைகள் பலர் சீமைக்குப் போய்விட்டார்கள். எங்கும் புதுமைகளும் வசதிகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. நாமோ இங்கே பனம் கூடைகளையும், ஓடியலையும், கருவாட்டையும் விற்று எந்தவொரு புதுமையையும், சந்தோஷத்தையும் காணாமல் பரதேசிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று இளவட்டங்கள் பலர் விரக்தியுடன் கூறிக் கொண்டிருந்தார்கள்.

பெரியவருக்கு தொண்ணூறு வயது நெருங்கியபோது பரித்தீவில் வரி அறவிடும் முறை விரிவாக்கப்பட்டது. இவர்கள் உற்பத்தி செய்யும் இடத்தில், படகுகளில் சுமையேற்றும் இடத்தில், பின்னர் விற்பனை செய்த இடத்தில் என்று மூன்று முனைகளில் அரசு வரி அறவீடு செய்து கொண்டிருந்தது. ஒரு சில தேவாலயங்கள் உருவாகின. முன்பு போல இல்லாமல் காளைகளும், வயதான கைவிடப்பட்ட பசுக்களும் இறைச்சிக்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. புதிதாக சில சிறிய பள்ளிக்கூடங்கள் ஓலைக்குடிலில் உருவாகியிருந்தன. அங்கே புதிதாக குழந்தைகள் படிக்கத் தொடங்கியிருந்தனர். அவற்றை நீண்ட வெள்ளை உடை உடுத்த நெடிய சிவந்த மனிதர் நடத்திக் கொண்டிருந்தார். மக்களுக்கு வரிச்சுமைகள் இருந்தாலும், ஏதோ ஒரு அரசுக்குக்கீழ் இருக்கிறோம் என்று தோன்றியது. குறைகள் தீருகின்றனவோ இல்லையோ, குறைகளை யாரிடமாவது சொல்ல வேண்டுமே? கடவுளிடம் அல்லது அரசாங்கத்திடம்.

பெரியவர் இவற்றைப் பற்றி அபிப்பிராயம் ஒன்றும் சொல்லவில்லை. "எல்லோரும் மாடு வளர்ப்பை விட்டு விட்டு படிக்கத் தொடங்கிவிட்டால் வேறு வேலைகளை ஊரில் யார் பார்ப்பது" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெரியவரை அவருடன் வந்த நண்பர்களின் மகள் ஒருத்தி கவனித்துக் கொண்டிருந்தாள். அவருடன் வந்த நண்பர்களில் இவர் மட்டுமே இப்போது உயிருடன் இருக்கிறார்.

நண்பர்களின் பேரப்பிள்ளைகள் பலர் பட்டணத்துக்குப் படிக்க சென்று விட்டார்கள். எவருக்கும் தமிழ் சரியாக பேச வராதாம். ஒரு சிலர் வேறு கடவுளை வணங்குகிறார்களாம். மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களாம். பட்டணத்திலும் இப்போது மனிதர்கள் ஓரளவு முன்னேறி விட்டார்கள். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் கப்பலேறி தொலைதூர குளிர் சீமைக்கு செல்கிறார்களாம்.

இப்போது பட்டணத்து கந்தசாமி கோவிலுக்கு பால் அனுப்பும் அளவும் குறைந்து விட்டது. அதற்கு அதிக வரி கட்ட வேண்டுமாம். பெரியவருக்கு சொந்தமான நிறையப் பசுக்களைப் பராமரிக்க இப்போது ஆட்களும் கிடைப்பதில்லை. தனக்குப் பின் யார் இந்த வேலையைத் தொடர்ந்து செய்யப் போகிறார்கள் என்று ஒரு நாள் பெரியவருக்கு திடீரென்று கவலை ஏற்பட்டது. தான் திருமணம் செய்யாமல் இருந்தது அப்போதுதான் அவருக்கு உறுத்தலைக் கொடுத்தது. பதினைந்து வயதில் ஏதோ ஓர் உந்துதலில் கட்டுமரத்தில் ஏறி இங்கே வந்து சேர்ந்தார். இந்தத் தீவின் ஒவ்வொரு ஓலைக்குடிலிலும், வாழ்விலும், பழக்க வழக்கங்களிலும், பண்பாட்டிலும் அவரது உழைப்பும் ஆத்மாவும் உறைத்திருக்கின்றன. மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் அவருக்கு தனது தந்தையின் நினைவு வந்தது அவருக்கே வேடிக்கையாக இருந்தது.

உலகப் பெரும் யுத்தங்கள் எல்லாம் முடிவடைந்து மாட்சிமை தங்கிய மகாராணியாரின் அரசு உலகெங்கும் முடிவுக்கு வந்து கொண்டிருந்தபோது பெரியவருக்கு நூற்று இருபது வயது ஆகியிருந்தது. அவரை ஓரளவு காற்றோட்டமான அறையில் வீட்டு உத்தரத்தில் ஒரு பெரிய உறி ஒன்றில் கட்டித் தூக்கியிருந்தார்கள். பெரியவர் சூரிய ஒளியைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளில் ஒரு வேளை மட்டும் மலசலம் சுத்தம் செய்வதற்கு என்று கீழே இறக்குகிறார்கள். உணவு பெருமளவு குறைத்து விட்டது. கூழும், பனம் கள்ளும், சிறிதளவு தயிர் சேர்த்த வரகரிசி சோறும் நாளாந்த உணவுகளாகி விட்டிருந்தன. கால்கள் முழுவதும் மெல்ல மெல்ல படுக்கைப்புண்கள் தோன்றி லேசாக சீழ் வடியத் தொடங்கியிருந்தது.

அவருடன் இந்த ஊருக்கு வந்தவர்களும் சரி பட்டணத்தில் இருந்து அங்கே வந்து குடியேறிய அவரை ஒத்த வயதினரும் சரி எவருமே உயிருடன் இல்லை. ஒருவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வது நல்லதுதான். ஆனால் மிக நீண்ட ஆயுளுடன் வாழ்வது கொடிய வேதனையும் தனிமையும் தருவது என்று பெரியவர் நினைத்துக் கொண்டார். மிக நீண்ட ஆயுளுடன் வாழும்போது நாம் வாழும்போதே காலத்தால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறோம். புறக்கணிப்பு என்பது மரணத்திலும் கொடியது.

இறுதியாக மாட்சிமை தங்கிய மகாராணியாரின் ஆட்சி முடிவுக்கு வந்த கணத்தில் பரித்தீவு மக்களுக்கு அந்தச் செய்தி கந்தசாமி கோவிலுக்கு பால் கொண்டு போய்விட்டு திரும்பி வந்த படகோட்டி மூலம் தெரிய வந்தது. ஜனங்கள் அதிர்ச்சி அடைத்தார்கள். இனிமேல் நமக்கு ஓர் அரசு இல்லாமல் எப்பிடி வாழ்வது? பெரியவருக்கு இந்த விடயம் சொல்லப்பட்டபோது அவர் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.

"நான் இங்கே குடியேறியபோது எந்த அரசும் இருக்கவில்லை.” என்று அசுவாரஸ்யமாக சொன்னார்.

அந்நியர் ஆட்சி முடிவுக்கு வந்து புதிய அரசு அமைந்த ஒரு கோடைகாலத்தில், காலைப் பொழுதில் பெரியவரின் நண்பரின் பூட்டப்பிள்ளை பரித்தீவுக்கு வந்திருந்தான். அவன் குளிர் சீமையிலே படித்துவிட்டு விடுமுறையில் வந்திருக்கிறானாம். அவன் அங்கே வந்த போது அவனின் பேத்தி பெரியவரை உறியில் இருந்து கீழே இறக்கிக் காண்பித்தாள். பெரியவர் உள்ளே ஒடுங்கிப் போயிருந்தார்.

"அப்பா உங்கள் பூட்டன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறான்"

"இந்த தாத்தாவும், உனது கொள்ளுத் தாத்தாவும்தான் முதன் முதலில் இங்கே குடியேறியவர்கள் தெரியுமா?" என்று தனது பேரனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

பெரியவரின் கண்களில் திடீரென்று ஓர் ஒளி வீசியது.

"இந்தத் தீவிலே சூரியன் மேற்கில் உதிக்கிறது; நிலவை உறிஞ்சி பாறைகள் வளர்கின்றன" என்றார்.

சிறுவனின் கண்கள் சுருங்கின. பேத்தி பெரியவரின் தலையை மிகுந்த பரிவுடன் வருடிவிட்டு உறியை மேலே விரைவாக உயர்த்தினாள்.

உறி மேலே செல்லும்போது சிறுவன் கூறியது பெரியவருக்கு கிணற்றில் இருந்து கேட்பதுபோல கேட்டது.

"வயசாகி விட்டதல்லவா? அதுதான் மூளை பிசகி விட்டது; முட்டாள்போல உளறுகிறார்" என்றான்.

பெரியவர் உறியின் உள்ளே தலையைத் திருப்பிக் கொண்டார். கண்களில் கண்ணீர் கசிந்தது.

இந்த உலகிலேயே தயிருடியருக்கு மட்டுமே தெரிந்த, அவர் கண்டுபிடித்த ஓர் உண்மை. இந்த நூற்று இருபது ஆண்டுளில் அவருக்குத் தெரிந்த மகத்தான உண்மை இனி அடுத்த தலைமுறைகளுக்கு சென்று சேரப் போவதில்லை. அவர்களால் ஏற்கப்படப் போவதும் இல்லை. எந்த ஒரு மகத்தான தத்துவமும் சரி, பெரும் ஞானமும் சரி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டால் மட்டுமே அதற்குரிய மகத்துவத்துடன் நீடிக்கும். இன்னும் எழுபது ஆண்டுகளில் இந்தத் தீவு வனாந்தரமாகிவிடும். இங்கே பெரியவரின் காலத்திய தலைமுறைகள் எவரும் அப்போது சீவித்திருக்கப் போவதில்லை. நிலங்கள் புற்கள் வளரக்கூட தகுதியற்றவை ஆகிவிடும். கப்டன் நோலன் கொண்டுவந்த மட்டக்குதிரைகளின் பின்னைய தலைமுறைகள் புற்களும் நீரும் இன்றி வாடிச் செத்து மடியப் போகின்றன. கள்ளக்கடத்தல்காரர்களும், சட்டவிரோதக் குடியேறிகளும், போதை மருந்துக் கும்பல்களும், துப்பாக்கிதாரிகளும் தான் இதனை ஆட்சி செய்யப் போகிறார்கள். அப்போது பெரியவரையோ அவரின் 'கண்டுபிடிப்புகளையோ' இங்கே வரும் எவரும் அறிய மாட்டார்கள். கடந்த நூற்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இந்த பரித்தீவை கண்டறிந்த முதல் மனிதன், அங்கே மனிதர்களை குடியேற்றி வாழ வழி செய்தவர், தனது ஆயுள்காலம் வரைக்கும் பரித்தீவைவிட்டு வெளியே செல்லாதவர், கடவுளின் அவதாரமான சேதுபதி மன்னரின் ஆட்சி நிலவிய மண்ணிலிருந்து புறப்பட்டு வந்து மாட்சிமை பொருந்திய மகாராணியின் ஆட்சிக்காலத்தின் முடிவுவரை வாழ்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பு அவருடனேயே முடிந்து போனது.

- அலைமகன்

Pin It