“அம்மா இந்த ரூம்ல டிவி வச்சுக்கலாம்”

புதிதாய் மாற்றிய வீட்டில் பரபரப்பான இந்த உலகில் தன்னை அர்ப்பணித்து விட்டது போல இயங்கிக் கொண்டிருந்தாள் சம்ருதி.

“நீ ஆச்சு உங்கப்பா ஆச்சு...  நான் சொல்றத கேட்கவா போறீங்க? என்னமோ பண்ணுங்க" என்றாள் ஜானகி.

 ஒரு சிறிய ஹாலும், இரண்டு சிறிய அறையுடன் கூடிய சமையல் அறையால் அலங்கரிக்கப்படுகிறது அந்த வீடு.

வீட்டின் முகப்பு ஒரு கோவிலைப் போல தோற்றம் அளித்தது .

மணி இரவு எட்டு ஆகியிருந்தது.

“இந்த வீட்டுல இதுக்கு முன்னாடி இருந்தவங்க ரொம்ப சுத்தமா வச்சிருந்திருக்காங்க இந்த வீட்ட”  என்று ஆரம்பித்தாள் ஜானகி.

“அப்படியெல்லாம் இல்ல... யாரு வீட்டை காலி பண்ணினாலும் சுத்தமா ஒப்படைக்க வேண்டியது சம்பிரதாயம். அது தெரியாம சும்மா பேசாத”

மனைவி எது பேசினாலும் அதற்கு முரணான கருத்தை சொல்லும் சுபாவம் உள்ளவன் கேசவன். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்பவன். அவனுக்கு சம்ருதி தான் உலகம்.

தந்தையும் மகளும் ஜானகியை நையாண்டி செய்வதே பொழுதுபோக்காக வைத்திருந்தார்கள்.

”சரி சரி வந்து சாப்புடுங்க... உங்க மகளுக்கு நாளைக்கு தமிழ்ப் பரீட்சை. இந்த தடவையாவது பனிரெண்டாவது நல்லபடியா பாஸ் பண்ணட்டும். என்ன சுட்டு போட்டாலும் படிப்பே வரமாட்டேங்குது …”

“சும்மா இருடி என் பொண்ணு எப்படியாவது பாஸ் பண்ணிருவா” என்ற கேசவனிடம், தான் எதுவும் படிக்கவில்லை என்பதை ஜாடையாகச் சொன்னாள் சம்ருதி.

இரவு மணி ஒன்பது ஆகியிருந்தது .

பேசியே ஓய்ந்து போன கேசவன் துயில் கொள்வதற்காக விடை பெற்றுக் கொண்டான் .

“தூங்காம போய் கொஞ்ச நேரம் படி …“ என்றாள் ஜானகி.

எதுவும் காதில் விழாதவளாய் தன் அறைக்குள் சென்றாள் சம்ருதி.

தமிழ் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தாழ்வாரத்தில் அமர்ந்து பக்கங்களைப் புரட்டினாள்.

 அவள் மனப்பாடப் பகுதிக்கு நுழைய முற்படும்போதெல்லாம் தென்றல் அவளைக் குறுக்கிட்டது.

 கண்கள் சொருகத் துவங்கியது.

தன்னை தயார்படுத்திக் கொண்டு தன் அறைக்கே திரும்ப சென்றாள்.

அறைக் கதவுகளை தாளிட்டுக் கொண்டு ஓர் இருக்கையில் அமர்ந்தாள் .

அந்த அறையில் பரவியிருந்த ஒரு விதமான அச்சு வாசனை அவளை ஏதோ செய்தது.

சற்று நேரத்தில் அவள் தூக்கம் தொலைந்திருந்தது.

இருக்கையில் இருந்தபடி தன் புத்தகத்தைத் திறந்தாள் .

அந்த நொடிப் பொழுதே தனக்கு பின்னால் யாரோ இருப்பது போல ஒரு அதிர்வு ஏற்பட்டது. திரும்பிப் பார்க்கையில் அங்கு ஓர் இருக்கை மட்டும் இருந்தது.

சம்ருதி மீண்டும் தன் பக்கங்களைத் திறக்கிறாள் .இப்பொது அவள் கவனம் புத்தகத்தில் அல்லாமல் தன்னுடைய பின்புறத்தில் இருந்தது.

தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்காததால், தன் கவனத்தை பாடப்புத்தகத்தில் வைத்தாள்.

அவள் படிக்கத் துவங்கிய சிறிது நேரத்தில் அவளுடைய புத்தக வரிகளை ஒரு புதிய குரல் மெதுவாக வாசித்தது.

இப்பொது முழுவதுமாய் அதிர்ந்து போனாள்.

தன் குரலை நிறுத்திக் கொண்டு மௌனமானாள். இப்பொது அவளது கிலி உச்சம் அடைந்திருந்தது.

தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்படுகையில், ஏதோ ஒரு பலத்த ரீங்காரம் அவளை இருக்கையில் அமர்த்தியது.

அமர்ந்த உடன் மேலே பார்த்த வண்ணம் அதிர்ந்து போனாள்.

சுவரின் உச்சியில் முரட்டு மீசையும், மிரட்டும் கண்களும் கொண்ட சித்திரம் தீட்டப்பட்டு இருந்தது.

அது ‘பாரதி’ என்று அர்த்தம் கொண்ட பின் சுதாகரித்துக் கொண்டாள்.

சற்று நேர அமைதி அவளை மீண்டும் திகிலூட்டியது.

அங்கு நடப்பது ஏதும் அவளுக்கு புலப்படவில்லை. அது அவளுக்கு ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது.

கத்தி குரலெழுப்பவும் முடியாதவளாய் திகைத்திருந்தாள்.

அவளைச் சுற்றி மீண்டும் குரல் ஓலிக்கத் துவங்கியது, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகள் கலந்த வார்த்தைகள் அந்த அறையை ஒரு முனியாய் சூழ்ந்தது. யாரோ வேதம் ஓதுவது போல இருந்தது. தன் மூளைக்குள் ஊசி முனைகள் ஏதோ எழுதுவதுபோல இருந்தது .

அறையின் நிறங்கள் மாறி, மாறி ஒளிர்ந்தது .

குரல் அறையின் எல்லா இடங்களிலும் தோன்றி மறைந்தது .

அவள் நேரெதிரே ஒரு வெள்ளை நிறம், கையில் ஒன்றை வைத்து கிறுக்குவதும் வாசிப்பதுமாய் இருந்தது.

தன் சுயத்தை இழந்து ஒரு சுழற்சியில் காணாமல் போவதில் முடிகிறது அந்த இரவு.

காலை ஆறு மணி.

“நீங்க தான் புதுசா குடி வந்திருக்கீங்களா… இந்தாங்க நேத்து இந்த வீட்ல இதுக்கு முன்னாடி இருந்த ஒருத்தருக்கு தபால் போஸ்ட் வந்துது. அவங்க புதுசா வீடு கட்டிட்டதால காலி பண்ணிட்டுப் போய்ட்டாங்க. ரொம்ப வருசமா இங்க வாழ்ந்தவங்க. நான் ஊருக்கு கிளம்பிட்டேன். நீங்க அவங்க வந்தா கொடுத்திருங்க ..”

என்று ஒரு ஒருவரின் முகவரியை சொல்லிவிட்டுச் சென்றான் பக்கத்து வீடு மூர்த்தி.

அந்த விலாசத்தில் இருந்த பெயரைப் பார்த்தாள் ஜானகி.

அதில் 'கவிஞர் புவியரசு' என்று எழுதியிருந்தது.

- சன்மது

Pin It