இக்கதை முடியும் அதே நேரம்.... மலேசியாவில்....... "ரஜூலா" என்ற பெயர் பொறித்த கப்பல் இந்தியா கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது.

அதில், நியந்தா.........கடலோடு பறக்கும் பறவை கூட்டத்தை சேர்த்து செல்பி எடுத்து முதல் முறையாக வாட்சப்பில் அனுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

முகநூல் தோழியான நியந்தாவின் புகைப்படத்தை எப்போது தன் அலைபேசி திறந்து பார்ப்பான் என்று தெரியாது. ஆனால் பார்க்கையில் அடுத்த ஆச்சரியம் ஜானிக்கு காத்திருந்தது......!

*

அவன் தேடல் அலாதியானது.

அவனுக்கு எதுவும் பற்றாமல் போவதில் தொடங்கும் நெடுந்தூரங்களை அவன் தன் கேமராவால் மூன்றாம் கண் கொண்டு தேடி அலைகிறான். தேடி தேடி தொலைவதில் காணா இன்பம் அவனின் வாழ்வு முறை என்றால் அது அவ்வகையே சாரும்.

சமீப காலமாக அவனின் சிந்தனை முழுக்க சிறு தெய்வங்கள் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.

சிறு தெய்வங்கள் என்பது வீட்டில் வாழ்ந்து மரணித்த முன்னோர்கள்தான்.

கொலையாக இருக்கலாம். தற்கொலையாக இருக்கலாம். ஆணவக் கொலையாக கூட இருக்கலாம். இறந்த ஆன்மாக்களினால் எதுவும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அந்த ஆன்மாக்களைக் கும்பிடத் துவங்குவதில் ஆரம்பிக்கிறது சிறு தெய்வங்களுக்கான விதை. அது சிலையாக, கோவிலாக, காவல்களாக உருவெடுப்பதில் காலத்தின் அடுத்த கட்ட நகர்வு காலத்துக்கும் கிடைக்கிறது. குல தெய்வங்கள் கூட இந்த மாதிரி ஏதோ காரணங்களால் உருவானவைகள்தான் என்பது வரலாற்றுக்குள் வாழ்ந்த யாரும், கூறும் உண்மைகள்.

ஜானி நிறமற்ற தூரங்களை கடப்பதற்காகவே காடு மலை சுற்றிக் கொண்டிருக்கிறான்.

அவன் முதுகிலெல்லாம்....சிறு சிறு தெய்வங்கள். அவர்களைப் பற்றிய நிஜங்கள் இப்படித்தானாவென்று அறிய முற்பட்டு 'நதிப்பதி' கிராமத்து மலையில் மூச்சிரைக்க, ஏறிக் கொண்டிருந்தான். ஆங்காங்கே கேட்ட, நண்பர்கள் பகிர்ந்த விஷயங்கள், இணைய உலகம் காட்டிய வழிகளில், "நதிப்பதி" சுற்றுப் பகுதியில் ஏராளமான சிறு தெய்வங்கள் இருப்பதாக கேள்வி பற்றதன் தொடர்ச்சியில்தான்......அதைப் பற்றி எடுக்க இருக்கின்ற ஆவணப்படத்துக்கான காரண, காரியத்தோடு அலையும் தூர தேச பறவையின் பசியோடு மலை ஏறிக் கொண்டிருந்தான். நிழல் தேசத்தில் இருப்பது போல தான் நம்ப வேண்டியிருந்தது. காண்பதெல்லாம் காட்சித் தோற்றமா.... காணாத காட்சிப் பிழையா.....? என மனம் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

தன் வீட்டு பெண் வேறு சாதிக்காரனை... காதலித்தால், கல்யாணம் செய்து கொண்டால் அவளை வெட்டி காலத்துக்கு பலி கொடுத்து விட்டு ஊருக்குள் நெஞ்சை நிமிர்த்தி நடை போடும் அறியாமையிலிருக்கும் ஒரு குடும்பம்.. பிறகு ஒரு கட்டத்தில் அந்த மரணித்த பெண்ணின் ஆன்மா, குடும்பத்தை எதுவும் செய்து விடக் கூடாது என்பதற்காக அப்பெண்ணுக்கு கோவில் எடுப்பதும்.......சிலை செய்வதுமே பெரும்பாலும் சிறு தெய்வங்கள் உருவாகக் காரணம் என்று கேள்விப்பட்டிருந்த செய்தி நிஜமாகத்தான் இருக்குமா என்ற படுபயங்கர கேள்வியோடுதான் இந்த ஆவணப் படத்துக்கான கரு அவனுள் உருவாகியிருந்தது. டைட்டிலுக்கு முன் அவன் பேசியது கூட இந்த பத்தியைத்தான்.

எதிரே வாழைத்தார் சுமந்து கொண்டு ஒரு ஆள் வந்து கொண்டிருந்தார். நெட்டும் அற்ற... பற்றும் அற்ற மலை தேசத்தில் தனித்த தானாக வரும் ஜானிக்கு... எதிரே வந்தவர்... கனம் கூட்டினார்.

"அய்யா....." என ஆரம்பித்த தயக்கம்... சிறு தெய்வங்கள் பற்றி நீட்டி முழக்கி ஏதேதோ கேட்க வைத்தது. அவர் சற்று உற்றுப் பார்த்து விட்டு..... "இப்பிடியே போனா ஒரு ஆலமரம் வரும்.. அதுக்கு பின்னால போனா.......சடை புடிச்ச ஒரு கிழவி உக்காந்திருக்கும்...... அதுக்குத்தான் இந்த ஊர்லயே ரெம்ப வயசு. ஒரு 110 இருக்கும். அதுகிட்ட கேளு.... சாமி பத்தியும் சொல்லும்... பேய் பத்தியும் சொல்லும்.." வாழைத்தார் மின்ன நகர்ந்து விட்டார்.

திக்கென்று சம்மட்டி கொண்டு புத்தியை பிளந்தது போல இருந்தது. பிளந்தது புத்தி தானா என்ற சந்தேகத்துடன் நடையைக் கூட்டினான்.

ஆலமரம் ஆவென கிடந்தது. ஆளுக்கொரு காற்றில் ஆகாயத்திலிருந்தே முளைத்தது போல விழுதுகள் அந்த இடத்தை முறுக்கிக் கொண்டு கிடந்தன. காற்றும் காற்றும் சண்டையிட்ட கனவுக்குள் நுழைத்து விட்டது போல அந்த இடமே ஒரு வகை செம்மண் நிறத்தில் அசைந்து கொண்டிருந்தது.

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த பூமியிலிருந்து முளைத்தது போல இருந்தது அந்த கிழவி. தயக்கம்....... கூட மென் மயக்கம். வேந்தனும் தள்ளாடி துவளும் ஆதி காற்றின் ஒரு வித கால முயக்கம். பேச்சற்ற வாயில் முதலில் மூச்சு வந்தது. பின் பாட்டி என்ற சொல் வந்தது.

குளத்தில் இருந்து எழும் கல் போல கண்கள் மினுங்க தலை தூக்கி பார்த்த கிழவிக்கு 110 அல்ல கூட 10 வயது சேர்ந்திருக்கும் போல. வெள்ளை வெளேரென மினுங்கிய கூந்தலில்...நட்சத்திரங்கள் பூத்திருந்தன. பனித்திட்ட கண்களில் பூனையின் சொர்க்க ராத்திரிகள் சுமையென இமைத்திருந்தன.

பார்வை........., " என்ன....?" என்பது போல இருந்தது.

கேள்வி மீண்டும் கிளை பிடித்து மரம் ஏறியது. வினோதமாக பார்த்த.... .. விவேகமாக பார்த்த....... கிழவியின் பார்வையில் நெடுந்துயரம் அப்பியிருந்தது.

திடும்மென விழும் இடி போல "சரி.... சொல்றேன்.... வா.... என்று எழுந்து மரம் அசைவது போல முன்னால் நடந்தது கிழவி. ஜானி என்ன செய்வதென்று தெரியாமல் அசையும் கிழவியை பார்த்தபடியே நின்றான். மெல்ல திரும்பிய பாட்டி... பூமியை திருப்பியது. "வா......." என்று ஜாடை காட்டியது. சிலை அசைந்தது போல சித்திரம் கண்டது கண்கள். மணதுக்குள் ஏதேதோ எண்ணம். ஒரு வகை பயம் கூட இருந்தது. முன்னால் பார்த்தபடி கிழவியின் பின்னால் நகர்ந்தான். செடி முளைத்ததாக உணர்ந்த கணத்தில் உள்ளுக்குகள் விதை விழுந்திருந்தது.

உள்ளே ஒற்றையடியில் நகர்ந்த கிழவி மரமும் உரமும் பெருத்த காற்று வெளியிடை ஒன்றில் பாறையை போல நின்றது. நின்று நீண்ட பார்வைக்கு முன் 5 அடி உயரத்துக்கு பழைய, கிட்டத்தட்ட இடிந்த ஒரு கோவில் இருந்தது. அந்த கோவிலை சுற்றி படர்ந்திருந்த மரத்தில் புற்று பூத்திருந்தது. அந்த மரம் 500 வருடங்களுக்கு முந்தைய காலத்தின் பழுப்பு நிறத்தை பதுக்கி வைத்திருந்தது.

அந்த கோவிலுக்குள் முன்னால் ஒரு பெண் சிலை கோபம் பூத்து நின்று கொண்டிருந்தது. உற்றுப் பார்த்த கண்களில்.... அந்த சிலைக்கு பின்னால் இரு கம்பீரமான ஆண் சிலைகள் வெற்றுடம்பில்......வேட்டி மடித்துக் கட்டி நின்று கொண்டிருந்தன. இடப்பக்கமும் வலப்பக்கமும்...... ஒரு அம்மாவும் ஒரு அப்பாவும் கவலை தோய்ந்த முகத்தில் பார்த்துக் கொண்டிருக்க........ அந்த சிலைகளை பாதுகாத்தபடி முன்னால் ஓரத்தில் ஒரு முகமற்ற ஆண் சிலையும் ஒரு முகமற்ற பெண் சிலையும் பரிதவித்த உடல்மொழியுடன் நின்று கொண்டிருந்தன. ஒரு குடும்பமே சிறு தெய்வங்களாக இருப்பதைக் கண்ட நொடிகளில் தலை சுற்றுவது போல உணர்ந்தான் ஜானி.

சற்று அமர வேண்டும் எனக் கூட தோன்றியது. மனதுக்குள் அப்பிய இருளின் வாசத்தில் பச்சை வாசம். காலத்தின் அடுக்கு உதிரும் மண் துகள்களில் அவன் உடல் நற நறப்பதை உணர்ந்தான் ஜானி.

தொண்டைக்குள் அறுபடும் காலத்தின் கீச்சுக் குரலில் அந்த கிழவி பேசத் தொடங்கினாள்.

"இந்த சிலைகளை பார்த்தல்ல.....இதுங்க தான் சிறு தெய்வங்கள்... இது ஒரு குடும்பத்துக்கு குல தெய்வங்கள்...செத்த ஆத்மாக்கள். ஒரு பெரும் கதை இதன் பின்னால் இருக்கிறது........"என்று ஏதேதோ பேசியது. குரல் வழியே விரியும் கதையின் இண்டு இடுக்குகளிலெல்லாம் முள் குத்திய கால் தடங்கள். முகமற்ற வேர் படல்கள்.

ஒன்றும் புரியாத படபடப்பில் மனதுக்குள் ஒளியற்ற பிம்பங்கள் கொண்டு சுமக்க முடியாத பாரத்தில், தான் சுழலுவதாக நம்பினான் ஜானி. மூச்சடைத்தால் தேவலாம். முயங்கித்திரியும் சப்தம் தாங்க இயலவில்லை.

"எனக்கு ஒன்னும் புரியல.........."என்று சொல்லிக் கொண்டே சரிந்தான்.

*

அது ஒரு பெரும் காடு. காணும் காட்டில் எல்லாம்... கனவு வளரும் போல... மரமும்.....மனமும்.

வேம்பு ஓடிக் கொண்டிருந்தாள். அதிவீரன் துரத்திக் கொண்டிருந்தான்.

மலர்குன்றுகள் மேலும் கீழும் முயல்களாகி, வெற்றிடம் வாசிக்கும் வன சாமரக் காற்றுடன் சேர்ந்து அக்காட்டில் மூங்கிலிசையை அலைய விட்டிருந்தது. சலசலக்கும் நதியில் கரையெல்லாம் செண்பகப் பூக்கள். கூட வெண் தாமரை பாக்கள். அவள் ஓட ஓட... பாதம் கொண்ட நர்த்தனங்களில்........நாட்டிய நெளிவுகள். இருக்கட்டுமென ரசிக்கும் அதிவீரனின் எட்டிப்பிடித்தல்கள் யாவும் கட்டிபிடித்தல்களுக்கான யோசனை. வாசமற்ற யாவுமே அவள் கடக்க கடக்க வாசத்தின் கூர்நாசியைக் கொண்டடைவதைக் கண்ட கண்கள் வரம் பெற்றவை. முணுமுணுக்கும் மயிலிறகு ரயில் கடப்பது போல இடம் வலம் கடத்தும் காற்று வெளியிடையில் அவள் கண்ணாம்மாவே தான்...

கவிதை தப்புமா....! அவன் காதலும் தப்புமா.....?

அவள் மீனாகி காற்று கிழித்து பாய்ந்து தலைகீழாய் தவம் கலைத்தபடி நதிக்குள் மூழ்கினாள். கணம் ஒன்று பின்னணி இசைக்க அவனும் தானொரு ஆணாய் தவம் கலைந்த மீனாய் தாவிக் குதித்தான். கிழிந்த காற்று தைக்கப்பட்டது. கண்டது சிலதில் காற்றடைத்த காட்சிகள் நதிக்குள். மூன்றாம் பால் மயக்கும்..... நான்காம் தாழ் அடைக்க நீருக்குள் ஐந்தாறு போர்கள். நிஜத்தின் மூச்சுக்குள் சில முத்தங்கள்.

பேச்சடைத்த வாயெல்லாம் முழுவதுமடைத்த மறு வாய் என இருவரும்....எழுந்து வருகையில் பெரும்மழை சொட்டிய காட்சி. எது மலை என கேட்கும் இரு வரங்கள் கழுத்திறங்கி சொட்ட.......கண்ட கண்களை கை கொண்டு மறைத்து விட்ட வேம்பு.....

"அரசே............ இது தகுமோ............!" என்றாள்.

கைகள் அனிச்சையாய் பாவாடை பிழிந்தது. பூவாடை கசிந்தது.

"அரசிக்கு தகுந்த முகமே இது" என்றான் தலை சிலுப்பி இன்னும் கிட்டத்தில் முகம் காட்டிய அதிவீரன்.

சிரித்துக் கொண்டே முதுகு காட்டி மார்பு பிழிந்தாள். "பழ ரசம்...................!" என்றான் மாயவன்.

"கள்ளா.... உன் கண்கள் என்ன கள்ளா......?" - அவள்

"கள்ளி உன் என்பும் எனக்கு வெள்ளி......!" - அவன்

"மீண்டும் நீ வரும் இடம் எனக்கு தெரியும்......சற்று பொறுமை மன்னா....! காலம் கை கூடட்டும். காதல் மலையேறட்டும். பிறகு இது உன் காடு... உன் பாடு...." கண்கள் தன்னையும் சுழன்றது. காட்டையும் சுழன்றது. அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டாள். அவளுக்கு வெட்கம் பூத்திருந்தது. அவளுள் வெற்றிலை வேர்த்திருந்தது.

முடிச்சவிழ்ந்த மனதுக்குள் சிணுங்கல். அதிவீரன் ஆசுவாசமற்ற தொட்டாச்சிணுங்கி. கெஞ்சிய முகத்தில் கொஞ்சிய தாகத்தை அடைகாத்து விட்டு அவளை மடி மீது போட்டுக் கொண்டான்.

மலர் பூத்த மாநிற காடு பெரும் போர்வையென அவர்களை மூடிக் கொண்டிருந்தது.

அவளின் கண்ணோரம் கசிவு... காதோரம் வியப்பு... இதழோரம் சுழிப்பு.

"என்ன ஆயிற்று என் இளந்தேவிக்கு" என்றான். காது தடவிய விரல்களில் வீணை இசை. நம்பிக்கைதான்.

அண்ணன்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. உன்னை நினைத்தல் பாயாசமாக இருக்கிறது. அழுது கொண்டே சிரித்தாள் அழகி.

"ஹா ஹ்ஹா... ஹா..... உன்னால் மட்டும் தான் அழவும் முடியும் சிரிக்கவும் முடியும் காதலிக்கவும் முடியும்... ஒரே நேரத்தில். முகத்தில் வெளிச்சம் ஏந்தி நதியின் பக்கம் சாய்த்து பார்த்தான்.... சாட்சாத் தாமரைதான். அயோ என இருந்தது.

ஆனந்த தாண்டவம் அக்காதலில்......ஆச்சரிய கூந்தல் காற்றில் படபடக்க....

படக்கென்று எழுந்தமர்ந்தான்.. விக்கிரமன்...... வேம்புவின் மூத்த அண்ணன்.

*

அவனுக்கு விடிந்து விட்டது. அந்த ராத்திரி அவனை காட்டேரியாய் மிரட்டியது. என்ன விதமான கனவு இது......!? ஏதோ நிஜத்தில் நடப்பது போலவே. உடல் நடுங்க......மனம் தடுமாற மெல்ல எழுந்து, அவளறையில் தூங்கிக் கொண்டிருக்கும் வேம்புவை மறைந்திருந்து பார்த்தான் விக்கிரமன். உற்றுப் பார்த்தான். திறந்திருந்த ஜன்னலில் சாமரம் வீசிக் கொண்டிருந்தது.....பின்னிரவு. அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தபடியே உற்றுப் பார்த்தான். அவள் மெல்ல புன்னகைப்பது போல தெரிந்தது. கண்களைத் தேய்ந்து கொண்டான். காட்சியும் தேய்ந்து கொண்டது. இப்போது முகம் திருப்பிக் கொண்டு முதுகு காட்டி படுத்திருந்தாள் வேம்பு. முதுகில்... அதிவீரனின் முகம் மயிலிறகால் வருடியது போல வந்து வந்து போனது.

"ஐயோ..........?" என கண்களை மூடிக் கொண்டு ஒரு குருட்டு யானையைப் போல வாசலுக்கு ஓடி வந்தான். கரும்பூனை ஒன்று எதிரே இருந்த பலா மரத்திலிருந்து கீழே சொத்தென்று குதித்தது. திடுக்கென்று நகர்ந்தான். தலையில் எதுவோ வலிப்பது போல் இருந்தது.

அடுத்த நாள் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

"அம்மா... நான் தண்ணிக்கு போறேன்" என்று குடம் எடுத்துக் கொண்டு மானைப் போல துள்ளி துள்ளி ஓடும் தங்கையை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். '

"அப்படி இருக்குமோ.. அவனைத் தேடித்தான் போகிறாளோ....?" சட்டென எடுத்த முடிவோடு அவளுக்கு முன் குறுக்கு வழி பிடித்து ஆற்றங்கரைக்கு சென்று மறைந்து கொண்டான்.

வேம்பு வந்தாள். நதி இனித்தது.

நீர் பிடித்தாள். குடம் குடமாய் காற்று வீசியதில் உடல் சுழித்து நுகர்ந்தாள். பின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள். சப்பென்று போய் விட்டது. "எங்கே தப்பு நடக்கிறது.. இது அத்தனையும் கற்பனையா.....?! நம் தங்கை அப்படி செய்வாளா...? வெள்ளிக் குடத்தில் நீர் பிடித்தாலும் வேம்பு தங்கம்...." மனது சமாதானமானாலும், திணறும் மூளைக்குள் ஒரு வித வருடலை நெருடலை அந்த காற்றும் வெளியும் தந்தன.

கடந்த ஒரு வாரமாகவே இயந்திரம் போல அவளை பின் தொடர்வதும்....... அவளை உற்று உற்று பார்ப்பதும்....." என்னாச்சுண்ணா......!?" என்று அவள் கேட்ட போது...... "ஒண்ணுமில்ல வேம்பு..... நீ நொண்டி விளையாடு..." என்று தலை தடவி விட்டு நகர்வதுமாக மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

நேற்று குடுமி மாமா........"என்ன விக்கி... தங்கச்சிக்கும் வயசாகுதுல... சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்ல... அது, அது...... கால காலத்துல நடக்கணும்.. இந்த வயசு பொல்லாததுப்பா... சொல்றத சொல்லிட்டேன்..." என்று பொடி வைத்து பேசி விட்டு போனது உள்ளே பாறாங்கல்லை உருட்டியது. ஒரு வேளை அவருக்கும் தெரிஞ்சிருக்குமோ.......? அப்றம் எதுக்கு இப்டி திடீர்னு சொல்லிட்டு போறாரு....!"

இல்லாத உலக்கை கொண்டு தனக்குள்ளே தானே தன்னை அடித்துக் கொண்டான்.

மறைந்து ஒளிந்து, தெரிந்து தெரியாமல்................அதிவீரனை வேவு பார்த்ததில்... அவன் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை. அவனுக்கும் தங்கைக்கும் காதல் மாதிரி எதுவும் தெரியவில்லை. காதலிப்பவர்கள் அப்படித்தான். மோசமானவர்கள். பயங்கரமாக நடிப்பார்கள். மனதுக்குள் சங்கு ஊதியது.

வேம்பு முதல் மாதிரி இல்லை. எப்போது பார்த்தாலும்... கண்ணாடி முன் நின்று சிரிக்கிறாள். தானாகவே கவிதை எல்லாம் வேறு எழுதுகிறாள். எப்போ கேட்டாலும் பசிக்கவில்லை என்று கூறுகிறாள். இப்போதெல்லாம் மரம் ஏறுவதில்லை. வாள் பயிற்சியோ, சண்டை பயிற்சியோ கூட எடுப்பதில்லை.

தவித்த வாயில் விக்கிரமனுக்கு பேச்சு வரவில்லை.

*

ஆலமரம்... காவலிருக்க.. அந்தி வெயில்.. அழகோவியம் வரைந்தது போல வேம்புவும்...அதிவீரனும்... இறுக அணைத்து சாய்ந்து நின்றார்கள். மரம் வளர்த்த எறும்புக்கெல்லாம் சக்கரை காட்சி.

"நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலான்டா.... அண்ணனுக்கு சந்தேகம் வந்திருச்சு போல. என்னை கண்காணிக்குதுனு நினைக்கறேன்..... பயமாயிருக்கு...!" என்றாள் வேம்பு. விரல் அவன் நெற்றில் புரளும் காற்றை முடியை ஒதுக்கிக் கொண்டிருந்தது. காற்றின் லாவகம் ஒரு வித சில்லிட்ட இருப்பை உணர்த்தியது. மூச்சிலெல்லாம் முகம் அறியா பூக்கள் வாசனை.

"எப்டியும் பொண்ணு கேட்டா உங்க வீட்ல தர மாட்டாங்க... கேட்டா நான் வேற சாதிம்பாங்க... ஒரே வழி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறது தான். "நந்தியூர்" போயிடலாம். என் நண்பன் சிவநந்தன் இருக்கான். கொஞ்ச நாள் தலைமறைவா இருக்கலாம். இந்த காட்டுக்குள்ள எவ்ளோ தேடினாலும்.. கிடைக்காத இடமெல்லாம் அவனுக்கு தெரியும். அங்க கொஞ்ச நாள் இருக்கலாம். அப்புறம் கோபமெல்லாம் குறைஞ்ச பின்னால வரலாம்....... சரியா....என் இனியா..." யோசித்த வாய் பேசியது. யோசித்த கைகள் அவளை இன்னும் இறுக்கியது.

கிளை ஒன்றை உற்று நோக்கி யோசித்த வேம்பு... "சரி.... நீ சொல்றது தான் சரி.... போய்டலாம்... வேற வழி இல்ல.... இங்க இருந்தா இவுங்க வாழ விட மாட்டாங்க....கிளம்பிடலாம்........ நாளைக்கு இதே இடத்துல இதே நேரத்துக்கு நான் வந்தர்றேன். கிளம்பிடுவோம்...." வந்த அழுகையை அடக்கிக் கொண்டு எக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள் முத்தக்காரி. நதி வேகமாய் வந்து போய் கொண்டிருந்தது. யானை ஒன்று சற்று தள்ளி நகர்ந்து கொண்டிருந்தது. பூனை நடை அது.

மூச்சடைத்து வாய் உளறி எழுந்தமர்ந்தான் வேம்புவின் சின்ன அண்ணன் சுந்தரபாண்டியன்.

*

நடுங்கிய உடலோடு எழுந்து வாசல் போக முற்பட்டவன் கண்ணில், அண்ணன் தூங்கும் தங்கையை உற்றுப் பார்த்தபடி இருந்ததை திகிலோடு காண முடிந்தது.

இருவரும் ஒருவரையொருவர் சந்தேகத்தோடு..... ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.

வெளியே வீட்டுக்கு பின்னால் இருக்கும் பனை மரத்தடியில் அமர்ந்து 120 ரூபாய் பிராந்தி குடித்துக் கொண்டே பகிர்ந்து கொண்டார்கள். போதை ஏறவேயில்லை. வெறி ஏறியது.

"அது எப்படிண்ணா ஒரே கனவு அடுத்தடுத்து ரெண்டு பேருக்கு ஒரே தொடர்ச்சியா வருது......? எனக்கு என்னமோ சரி இல்லன்னு படுதுண்ணா. தங்கச்சி ஒருவேளை நிஜமாவே காதலிக்கறாளோ என்னவோ....." தம்பி சுந்தர பாண்டியன் சொல்லி விட்டு வேக வேகமாய் மூன்று மூன்று மடக்காய் குடித்தான்.

"ஆமா தம்பி.... யாரையும் நம்ப முடியாது... நம்ம ராஜதுரை தங்கச்சி போன மாசம் இப்டி தான ஓடிப் போனா...." விக்கிரமன் வானம் பார்த்தான். நட்சத்திரம் மினுங்கி மினுங்கி கேலி செய்வது போல இருந்தது.

சற்று நேரத்தில் குடுமி மாமா வீட்டு வாசலில் நின்றார்கள்.

கனத்த இருட்டில் கரிய உருவங்களாய் தெரிந்தார்கள்.

"என்னடா, பசங்களா...........! இந்த நேரத்துல.......?" என்றபடியே வெளியே வந்த குடுமி மாமா பளிச்சென பற்கள் காட்டினார். பல்பு வரிசையாய் எரிந்தது. ஒரு ரவுண்ட் வாங்கி குடித்துக் கொண்டார்.

"கனவுல நிறைய வகை இருக்கு... அதுல உங்களுக்கு வந்த கனவு எந்த வகைனு எனக்கு தெரியல..... ஆனா... கனவுக்கும் இந்த வாழ்க்கைக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு பிராய்டு சொல்லியிருக்கான்னு மட்டும் எனக்கு தெரியும்...."

.................................!

"கனவுங்கிறது ஒரு மாதிரியான குறி சொல்றது அதாவது முன்கூட்டியே சொல்றது... இல்லனா.. அத எப்டி சொல்றது......அட, ஜோசியம் பாக்கற மாதிரி. சில கணக்குகளை வெச்சு ஒரு மனுஷனோட புத்தி தன்னையே தெரிஞ்சுக்கறது. புரிஞ்சுக்கறது. இன்னும் புரியணும்னா.......மனுஷனுக்கு எச்சரிக்கை உணர்வு கொஞ்சம் ஜாஸ்தி...அது ஆழ்மனசுல ஆழமா பதிஞ்சிருக்கும். அதுக்கு நாம வாழற வாழ்க்கையோட நேக்கு போக்கு எல்லாம் ஒரு மாதிரி குத்து மதிப்பா தெரியும். அத அப்பப்போ அதே மனசு பிரிச்சு பார்த்து... முன்கூட்டியே திட்டமிட்டு அந்த குறிப்பிட்ட மனுஷன ஜாக்கிரதையா வெச்சுக்க இந்த பூமில அவனுக்கு ஏதும் தப்பா நடக்காம இருக்க ஏதாவது ஒரு வகைல அவன காத்துக்க முயற்சி பண்ணும். அதுதான் கனவா வெளிப்படுது........! புரியலையா.... ?, அட கனவுல வர்றது எல்லாமே சரியா இருக்கும்னு சொல்ல வரல... சரியாவும் இருக்கும்னு தான் சொல்ல வரேன்..."

தலையை பிடித்துக் கொண்டு அண்ணனும் தம்பியும் எகிறி விட்டிருந்தார்கள். குமிடி மாமா இன்னும் பேசிக் கொண்டுதான் இருந்தார். கையில் மிச்ச சரக்கு.

"குடுமி மாமா ஏதோ பிராடுன்னு என்னமோ சொன்னாரே.... யாரா இருக்கும்...?" தம்பியின் மனம் தலை கீழாய் தொங்கியது.

"பெரிய சாமியாரா இருக்கும்டா...... குடுமி மாமாவுக்கு கொஞ்சம் சாமி பழக்கமெல்லாம் இருக்குல்ல..." அண்ணனின் அறிவு ஆளுயர சாத்தானாய் தங்கியது.

*

அடுத்தடுத்து சொந்தங்கள்... நண்பர்கள் என்று சிலர்... விக்கிரமனைக் காணுகையில் எல்லாம் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வது போல இருந்தது. சுந்தரபாண்டியனிடம்,.. சீதாலஸ்மி அத்தை, "எப்ப வேம்புவுக்கு கல்யாணம்......?" என்று அழுத்தமாக கேட்டதாக நம்பினான்.

"ஆமாண்ணா.... இந்த காதல் விவகாரம் ஊருக்கே தெரிஞ்சிருக்கு. அரசல் புரசலா பரவ ஆரம்பிச்சிருக்கு. குடுமி மாமா சொன்னதை வெச்சு பார்த்தாலும்.... நம்ம குடும்பத்துக்கு ஏதோ கெட்ட நேரம் இருக்கும் தான் போல... அதான்......அதோட அறிகுறி கனவுல காட்டிக் குடுத்ருச்சு..." தம்பியின் முகம் தீர்க்கமாய் புரிந்திருந்தது.

"ஆமாண்டா தம்பி... ஜோசியகாரனும் அதையேதான் சொல்றான். கெட்ட காலம்.. பொறந்திருக்கு... அது வீட்டு மானத்தை வாங்க போகுதுனு...! நாம முந்திக்கணும்ண்டா..." என்றான்... பற்கள் இறுகி இருந்தது விக்கிரமனுக்கு. கண்கள் பிளந்திருந்தது சுந்தரபாண்டியனுக்கு.

"சொந்த பந்தங்க எல்லாருக்கும் முழுசா தெரிஞ்சு மானம் போறதுக்குள்ள.......ஏதாது பண்ணும்... கண்டிப்பா அவனை இவ மறக்க மாட்டா. பிடிவாதம் நம்ம பரம்பரை புத்தி "

"பாதி நனைஞ்ச பின்னால அத எப்டி மாத்தறது.... முடியாது...அதுமில்லாம நம்ம நண்பன்... ராஜதுரை, அவன் தங்கச்சி காதல் விவகாரம் தெரிஞ்சதும் அவளை தங்கச்சின்னு கூட பாக்காம வெட்டி 'முட்டிமாய'னுக்கு பலி குடுத்து குடும்ப மானத்தை காப்பாத்தினான்ல......... அது எவ்ளோ பெருமையா இருந்துச்சு ஊருக்குள்ள. அவனுக்கு எந்த வகைல நாம குறைஞ்சு போய்ட்டோம்... அவன் வெட்டினானா... நாம் உயிரோட பொதைப்பம்டா.....தம்பி.... வேற வழி இல்ல. அப்டி தான் பண்ணனும். விட்டா இவ அந்த ..........சாதி ....... பையன் கூட ஓடி போய்டுவா..."

"என்ன யோசிக்கற..வேற வழி இல்ல.... பகிரங்கமா செய்யணும்டா.... அப்போ தான் பயம் வரும்...."

ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

மறுநாள் தங்கை நீர் பிடிக்க சென்றிருந்த போது அம்மா அப்பாவுடன் பேசினார்கள். அம்மா அயோ குயோவென அழுது புரண்டாள். அதில் அத்தனை ஆத்திரம். அப்பா...தலை குனிந்து அமர்ந்திருந்தார். கன்ன சதைகள் ஆடின... அதில் சாதிக் களை.

"என்ன பண்றது......? குடும்ப மானம் போய்டும்மா.... நம்ம பரம்பரைக்கே இது கரும்புள்ளி. நாமதான் சரி பண்ணியாகணும். அதுவும் அந்த சாதிப் பயண எப்டிம்மா மருமகனா ஏத்துக்கறது...! இவ கண்டிப்பா மனசு மாறமாட்டா...."

தம்பி தொடர்ந்தான்.

"இவள கொல்லாம விட்டா.......சொந்த பந்தமெல்லாம் இனி நம்மள ஒதுக்கி வெச்சிடும். சாதி சனமெல்லாம் இதுதான் சாக்குன்னு இளக்காரமா பாக்கும்....." அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாடு கொல்லையில் புகுந்த மாதிரி, வேம்பு உள்ளே நுழைந்து விட்டாள். பட்டென்று பேச்சு நின்றது. அனைவரின் பார்வையும் அவள் மீது பட்டு பட்டும் படாமல் வேறு பக்கம் திரும்பியது. திருட்டுப் பூனைகளின் பாவனை அது. ஏதோ சரி இல்லையே என்பதை வேம்பு உணர்ந்தவளாய் நடந்து பின் பக்கம் சென்றாள். நீரை பானையில் ஊற்றும் போதே காது முழுக்க நடுவீட்டில் விரிந்தது. நடுவீடும் மௌனமாய் ஜாடை செய்து கொண்டது.

"ஒருவேளை மாப்பிள்ளை பாக்கறாங்களோ...?"

"அப்புறம் பேசிக்கலாம்.... அப்புறம் பேசிக்கலாம்... ஷ்.... ஷ்,......" என்பது போல விரல்களும் முகங்களும் மாறி மாரி காற்றில் நடனமிட்டுக் கொண்டன. என்னமோ நடக்கிறது. மனதுக்குள் இனம் புரியாத யோசனை மெல்ல பரவத் தொடங்கியது வேம்புவுக்கு. அவள் மீண்டும் நீர் பிடிக்க மெல்ல வெளியே சென்றாள். நடை கூடும் அமைதி அது. வீட்டுக்குள் மூச்சற்ற சுவாசங்கள் பாம்பின் சுவடுகளை நெளிய விட்டுக் கொண்டிருந்தன. மனம் தொடர்பற்று ஏதேதோ சிந்திக்க... சலனமற்ற குளத்துக்குள் பெரும் கல் ஒன்று சொத்தென்று விழுந்தது போல..., "வே..................ம்பு" என்ற சொல் திக் என்று காற்றை அறைந்தது. வாசல் அகன்றது.

நின்றவள் சட்டென திரும்பினாள்.

"வேம்பு, கொஞ்சம் உள்ள வாம்மா....." விக்கிரமனின் குரலில் வேதாளம் பேசியது.

அறைக்குள் அடைபட்டவளுக்கு என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இனி என்ன நடக்க போகிறதோ என்ற பயம் உதடு துடிக்கும் கண்கள் வெடிக்கும் படபடப்பாய் நெஞ்சில் சம்மட்டி கொண்டு அடித்தது.

கனத்த அமைதி

*

கனத்த அமைதி

இவளும் சிலையோ என்று தோன்றுமளவுக்கு அந்தக் கிழவி வாயசைப்பதை நிறுத்தியிருந்தாள்.

மயக்கமா... கலக்கமா.... ஒன்றும் உணர முடியாத தூரத்தில் இருந்து கிட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜானி.

நா வறண்டது. நெற்றி சுடுங்கியது. உடல் தடம் புரண்டது. மாயக்கதைக்குள் வட்டமடித்து கழுகின் கூக்குரலையொத்த நிறத்தை அவன் சுமை தாங்காமல் தவற விட்டுக் கொண்டேயிருந்தான்.

தொண்டை விடாத சுடு சொல் கொண்டு, செருமல்.........கர்மமென கொக்கியிட.... இருந்தும், "அப்புறம்...?" என்று கேட்டான் ஜானி.

முகத்திலிருந்து கிடைமட்ட கோடு ஒலி அலைகளின் சப்தத்துக்கு மேல் கீழ் என கோடிட்டுது போல, " கதை முடிந்தது....இந்த சிலைகள்ல இருக்கறது எல்லாம் அவுங்க தான்... அவுங்க தான் சாமி ஆகி சிலையாகிட்டாங்க......." என்று பட்டும் படாமல் கதையை முடித்துக் கொண்டு காட்டுக்குள் மனித யானையாக நகர்ந்து விட்டிருந்தது கிழவி. அதன் தலைமுடி காற்றில் சடை பிடித்த ஆலமரமாய் அசைந்தது. பார்க்கவே பிசாசைப் பார்ப்பது போல பயங்கரமாக இருந்தது. அவனின் கண்கள் கூசின. காற்று வெளியில் சூனியத்தில் மறைந்ததைப் போல அந்த கிழவி நுழைந்து இல்லாமல் போனாள். மாய உலகத்தில் இருப்பது போன்ற உணர்வோடு வீடு வந்திருந்த ஜானிக்கு ஆயிரத்து எட்டு
கேள்விகள். அத்தனையிலும் சூனியங்களே நிறைந்து கொக்கரித்தன. உள்ளுக்குள் விழும் நெருப்பு துண்டுகளை அணைக்கவும் முடியாமல் ஆகிருத நிலை ஒன்றில் அவன் வேறு யாரோவாகவே இருந்தான்.

*

"தம்பி எனக்கு ஒரு சந்தேகம்....!" என்று எங்கோ தவித்த வார்த்தைகளை மொத்தமாக திரட்டினான் விக்கிரமன். அவன் முகம் குழம்பிக் கடைந்தது. வாரக்குழப்பம் வார்த்தைகளில் தடுமாறியது.

அர்த்தத்தோடு அர்த்தமற்ற பாவனைகளை விட்டு திரும்பினான் சுந்தர பாண்டியன்.

"அந்த கனவுல, அதாண்டா ரெண்டு பேருக்கு வந்த அந்த மானக்கேட்ட கனவுல, வந்தது நம்ம தங்கச்சி தானா....? எங்கையோ இடிக்குதுடா....!" விக்கிரமன் தட்டுத்தடுமாறி புத்தியை கூம்பு வடிவத்தில் ஏற்றி விட்டு செய்வதறியாது கேட்டான்.

திக்கென்று கனவுக்குள் முதலுமற்ற முடிவுமற்ற நிறமற்ற காட்சிக்குள் புகுந்தான் தம்பி சுந்தர பாண்டியன். அவனாலும் முத்தெடுக்க முடியவில்லை.

"எனக்கும் அந்த சந்தேகம் அடிக்கடி வருதுண்ணா...! யோசிக்க யோசிக்க தங்கச்சி முகமா அதுனு தெரியல. வேற ஏதோ முகமாக்கூட தெரியுது. தங்கச்சி தானான்னு நிச்சயமா சொல்ல முடியல..... வேற யாரோ மாதிரி இருக்கு..."

தம்பியும் நெற்றியை சுருக்கிக் கொண்டு கனவை திசை திருப்பினான். ஆழ்மனம் நம்பும் எல்லாமும் அதுவாகவே ஆகும் என்பதுதான் அறிவியல்.

இருவரும் ஆளுக்கொரு திசையில் மௌனித்து சூனியம் வெறித்தார்கள். கனவு சரியா.... அது கனவு தானா.... அத எப்படி எடுத்துக்கறது... என்று கனவின் கரையில் துடிக்கும் மீன்களாகி நின்றார்கள்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் "என்ன பண்றது...அதுக்காக இனி சொந்த பந்தத்துக்கெலாம் அது நம்ம தங்கச்சி இலை...ன்னு சொல்லி புரிய வைக்க முடியுமாடா....? இவ்ளோ தூரம் வந்த பின்னால எப்பிடிடா நிறுத்தறது...! கடைசி நேரத்துல தங்கச்சி மேல பாசம் வந்து கோழையாகிட்டானுங்க சொந்த பந்தங்க காறித் துப்புமேடா....?! என்ன பண்றது.........?" என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான் அண்ணன்.

தாடி தடவிக் கொண்டே தம்பி அங்கும் இன்றும் நடந்தான். மூளைக்குள் இருக்கும் மூலையெல்லாம் ரத்தம் கசிந்தன. பெரும் போராட்டம் மனதுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஒரு புள்ளியில் நின்று, "அண்ணா ஒரு யோசனை...தோணுது " கண்கள் விரிய ரகசியம் ஒன்று கூறினான் சுந்தர பாண்டியன்.

சற்று நேர ஆழந்த மௌனம். சலசலத்த ஓடைக்குள் குறுக்கு வழி செய்து கொண்டிருந்த தவளை பாம்பின் கால்களுக்கு அகப்படவில்லை. அது பாம்புக்கும் தெரியும்.

தலை ஆட்டினான் விக்கிரமன். இருவருக்கும் சரி என்றே பட்டது.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட சம்மதமே. சந்தேகத்தின் பேரில் வேம்புவை இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்.. ஆனா... திட்டமிட்டபடி அந்த பையன் இருக்கக் கூடாது... இந்த காதல் நிஜமோ பொய்யோ... எதுவா இருந்தாலும் அவன் உயிரோட இருக்கறது நம்ம பொண்ணுக்கு நல்லதில்லை... அவனைக் கொல்றது தான் சரி. அதுக்கு முன்னால போட்ட திட்டப்படி ஊர் உறவை ஏமாத்தற வேலையப் பாக்கணும்......" என்ற முடிவுக்கு பின் தான் இங்கே கிழக்கு தேச மலை அடிவார மாரப்பட்டியில் சின்னசாமியின் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.

சின்னசாமியும் அவன் மனைவியும்... கண்களில் நீர் தளும்ப......மௌனமாய், கனத்து நின்றார்கள். தலைமுறை அடிமைத்தனம் நிறைந்திருந்தது.

*

"இதுல யோசிக்க என்ன இருக்கு சின்னசாமி. உனக்கு அஞ்சு பொட்ட புள்ளைங்க...கடவுள் குடுத்தான்னு வத வதன்னு பெத்துட்ட....ஒன்னும் தப்பில்ல.... ஆனா அஞ்சும் பொட்டையா போச்சு பாரு.. அங்கதான் கடவுள் சறுக்கிட்டான். இப்பவே உனக்கு அறுபது வயசுக்கு மேல ஆகிடுச்சு. இத்தனை வருஷம் உழைச்சும் ஒன்னும் நடக்கல. எப்போ, எப்டி இந்த அஞ்சு புள்ளைங்களையும் கரை சேர்த்த போற...! அதுங்களா எவனையாது உங்க சாதில கூட்டிட்டு ஓடினாத்தான் உண்டு. அதனால நாங்க சொல்றத கேளு.....,கேட்டு நடந்துகிட்டா அஞ்சு ஏக்கர் நிலம்... கொஞ்சம் வாழைத்தோட்டம்... அஞ்சு பலா மரம்.. கொஞ்சம் ஆடுக மாடுக.. எல்லாமே தர்றோம். காதும் காதும் வெச்ச மாதிரி உன் மூத்த பொண்ண பலி குடுத்துக்கறோம். மிச்சம் நாலு பொண்ணுங்களோடு உங்க வாழ்க்கையை நீங்க பாத்துக்கலாம். வேற வழி இலை சின்னசாமி. சொந்த பந்தத் துக்கெல்லாம் எங்க பொண்ணு மேல ஒரு கெட்ட அபிப்ராயம் வந்திருச்சு. நாங்களும் வாக்கு குடுத்துட்டோம். ஆனா இப்போ அதுல ஒரு சிக்கல் வந்திருக்கு... அத சரி பண்ண தான் உன் பொண்ண கொல்ல கேக்கறோம். செத்தது உன் பொண்ணுனே யாருக்கும் தெரியாது. ஓட்டிட்டானு சொல்லி கதையை முடிச்சுக்கோங்க. உன் கஷ்டத்துக்கு ஒரு நல்ல வழி இது. புத்திசாலித்தனமா பொழைச்சுக்கோ. மிச்ச வாழ்க்கை நல்லா இருக்கும்யா.... ரெம்ப யோசிக்காத.... முதல் பொண்ண பலி குடுத்து வீட்டை காப்பாத்தறது அப்டி இப்டினு வேற வேற வழில வழக்கமா நடக்கறது தான் சின்னசாமி...

".........................................!"

"இன்னைக்கு செத்தான்னா......நாளைக்கு சாமியாகிட்டு போறா. குலதெய்வமா கும்புட்டுக்குவோம். கோயில் கட்டிடுவோம்...... என்ன சொல்ற,...?"

கனத்த மௌனம். நீண்ட பொழுது, ரெம்ப நேரம் நீடிக்கவில்லை. கலைந்தது.... கனவு போல. வீட்டின் நிசப்தம் சின்னசாமியின் இருமலுக்கு செவி சாய்த்தது.

சின்னசாமியின் மனைவி தேனீர் போட்டு பிளாஸ்டிக் டம்ளரில் கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தாள்.

 

*

கண்கள், கைகள் கட்டப்பட்டு அதிவீரனும், மூத்த பெண் ரஜூலாவும் அடித்து இழுத்து வரப்பட்டார்கள்.

ஒன்றும் புரியாத உடல் மொழியில் இருவருமே தவித்தார்கள். வாய் விட்டு கத்த இயலாத புள்ளியில்... சூனிய வெளியில் கடவுளைத் தேடியது தடுமாற்றம். உயிர் நடுங்கும் ஓசைக்குள் அதிவேகமாய் மூச்சிரைத்தது இருவருக்கும். கூட யாரோ இருக்கிறார்கள் என்ற உணர்வு மட்டும் இருவருக்குமே இருந்தது. மாரப்பட்டி முழுக்க பயந்து கூட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது வழக்கம் போல. ஊர் தாண்டி கம்பீர நடையோடு சகோதரர்கள், அவர்களின் எல்லைக்குள் நுழைந்த பிறகு இன்னும் இரண்டு அடிகள் வேகமாய் விழுந்தன.... ரஜூலாவை சுற்றி மூடப்பட்டிருந்த துணியை இன்னும் கவனமாக இழுத்து மூடி விட்டார்கள்.

"வேணும், நல்லா வேணும்........ ஓடுகாலி நாய், ஓடப் பாத்திருக்கு......! பாரு, காதலிக்க ஆரம்பிச்சதும் ஆளே மாறின மாதிரி இருக்கறத.......! எல்லாம் கொழுப்பு. கொண்டு
போய் கொல்லுங்க; அப்ப தான் இனி நம்ம சாதில யாருக்கும் இந்த கேவலமான புத்தி வராது.... அந்த ஜாதிலயும் இப்படி ஒரு தைரியம் வராது...." என்று திறந்த வாசலில் எல்லாம் பறந்தன வார்த்தைகள். கதவுகள் திறப்பதும் அடைப்பதும்.... சொந்த பந்தங்கள்.......ஊர் உறவுகள்.....கண்கள் சிவந்து 'சாதி'த்து விட்டதாக பார்த்துக் கொண்டும்.... கருத்து சொல்லியும் நின்றனர்.

"விக்கிரமா.... சாதிப் பேர காப்பாத்திட்டடா....."

"சுந்தரா... உங்கப்பன் பேர எடுத்திட்டிங்கடா.... செய்யுங்கடா.... நாங்க இருக்கோம்...."

வீதி அல்லோலகல்லோலப் பட்டது. சிறுசுகள் எல்லாம் கொய்யா மரத்திலும்.. வேப்ப மரத்திலும் ஏறி வேடிக்கை பார்த்தன. பதின் பருவத்து பிள்ளைகள் எல்லாம் வாயடைத்து மார்பு விம்ம நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

"தப்புக்கு சரியான தண்டனை தான்...." எனும் உடல்மொழியில் பெருங் கிழவிகள் சில கண்டும் காணாமல் கடந்து கொண்டிருந்தனர்.

"தப்பு பண்னினா, தங்கச்சியே ஆனாலும் தூக்கி போட்டு மிதிக்கறானானுங்க பாரு...... மனுஷனுங்க டா........." நெஞ்சு தட்டிய பெருசுகள், " சரி சரி எல்லாரும் உள்ள போங்க, அவுனுங்க பார்த்துக்குவானுங்க....சிங்கங்க ....! "என்றபடியே நகர்ந்தனர். காதில் விழுந்த 'சிங்கம்' என்ற சொல் சற்று நேரம் சுந்தரபாண்டியனின் நடையை மாற்றியது.

மாலை சூரியன் இரக்கமின்றி பார்த்துக் கொண்டிருந்தான். ஊர் கனத்த அமைதியோடு சற்று தூரத்தில் காது நீண்டு காத்துக் கிடந்தது.

இரு மரணங்கள் அற்புதமாக சற்று நேரத்தில் அரங்கேற இருப்பது உள்ளுக்குள் ஒரு விதத் திருவிழாத்தனத்தை அள்ளி வீசியிருந்தது. கண்ணுக்கெட்டா தூரங்களை காதுக்கெட்டும் மலைச்சாரலில் உடல் குளிர, இனம் புரியாத தான்தனத்தின் கொண்டாட்டம் அவ்வூர் குறுக்கு சந்துகளிலெல்லாம் குப்பைகளாக நிறைந்து கிடந்தன.
ஆதிப்பிழையென இருக்கும் வேதங்களின் ஜோதிகளில் தத்துவங்கள் நிர்வாணமாய் கிடக்கின்றன. தான்தோன்றித்தனமாக எல்லாமே நானே எனும் நிலையின் சொல் கொண்டு உடல் பூண்டு, சக உயிரை எடுக்கும் சாவகாசத்தை யார் வழங்கினார் என்று தெரியாத கூற்றை இவர்கள் கூடு கட்டி காத்துக் கொண்டிருந்தார்கள். இன்னதென்று தெரிந்தே செய்யும் தீய சக்தியின் கடவுள் கொளுத்தப்பட வேண்டும் என்பது சாத்தானாய் மாறி ஓத வேண்டிய வேதம்.

விக்கிரமனின் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வாழைத்தோட்டத்துக்கு பின் புறத்தில் இருந்த செம்மண் பூமியில் இருவரையும் மண்டியிட வைத்திருந்தார்கள்.

கீழே சரிந்து புரண்டு துடித்தாள் ரஜூலா. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தெரிந்து கொள்ளும் தடுமாற்றம் உடலெங்கும் கோபமாய் பரவியது. ஏதோ தப்பு நடக்கிறது என்ற கோபம்... கீழே புரண்டு முனங்கி கத்தினாள். வாய் விட்டு வெளியேற இயலாத ஒலியில் தொண்டை கிழிய கர்ஜனை பண்ணியது, கொல்லப்படும் பன்றியின் அடிவயிற்று குமுறலென இருந்தது.

இருவரின் முக கட்டுகளையும் வாய் கட்டுகளையும் நிதானமாக அவிழ்த்து விட்டான் சுந்தர பாண்டியன்.

"சாகும் போது கொஞ்சம் சாவகாசமா சாகட்டும்ண்ணா... ரெம்ப கொடுமை படுத்தின பாவம் வந்துடும்...." என்றான். மெல்ல சிரித்த முகத்தில் கொடூரமாய் மீசை வளைந்திருந்தது.

வாயில் வேக வேகமாய் மூச்சு விட்ட ரஜூலா...எதிரே பதிந்திருந்த கண்களை, வேகமாய் திரும்பி பக்கத்தில் பார்த்தாள். பக்கத்தில் தன்னை போலவே படபடத்துக் கொண்டிருக்கும் அதிவீரனை அர்த்தத்தோடு பார்த்தாள். அதிவீரன் தன் ஊரை சேர்ந்தவன் தான். அமைதியானவன். அத்தனை பழக்கம் இல்லை. பொதுவாக தெரிந்தவன். இவனையும் எதற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்....? ஒன்றும் புரியவில்லை. அதிவீரனும் அப்படித்தான் பார்த்தான். மலங்க விழிப்பதைத் தவிர ஒன்றும் தோன்றவில்லை அவனுக்கு. ரஜூலா பாவப்பட்ட பெண். அவளை எதற்கு இங்கே...? தன்னை எதற்கு...! அவனுக்கு உடல் வலித்தது. மூளை நகர்ந்தது.

எதிரே மிருகத்தின் வேகத்தில் அண்ணனும் தம்பியும் குழி தோண்டி கொண்டிருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் குத்துக் கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலை கருக்கல் மச மசவென சாவு மணி அடித்துக் கொண்டிருந்தது.

"எதுக்காக இப்டி பண்றீங்க... நாங்க என்ன பண்ணினோம்... ஏதோ தப்பு நடக்குது....! எங்களை விட்ருங்க....! சொன்னா கேளுங்க...." குழப்பத்தோடு பேசிய ரஜூலா.... பக்கத்தில் திரும்பி... "அதிவீரா... என்னாச்சு....! என்னதான் நடக்குது...?" என்றாள். அடிவயிற்றில் அரம் கொண்டு அறுப்பது போன்ற வலி.

அதிவீரன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். முதுகில் ஒரு மூட்டை குழப்பம்.

குழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. மாலை நேரத்தின் அடர்த்தி கூடிக் கொண்டே இருந்தது. இருவரும் புலம்பிக் களைத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்கள். ரஜூலாவின் மனதுக்குள் ஏதேதோ யோசனைகள். தவிப்புகள். சிந்தனைகள். முடிவுகள். அதிவீரனின் கண்கள் செய்வதறியாது சிந்தித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நொடியும் தோண்டப்பட்டுக் கொண்டே இருந்தன. தேனீர் குடித்துக் கொண்டும் குழியை குத்திக் கொண்டுமிருந்தார்கள் அண்ணனும் தம்பியும். அப்பாவும் அம்மாவும் மண்ணை அள்ளி அள்ளி கொட்டி உதவிக் கொண்டிருந்தார்கள்.

"அண்ணா.... சாகறதுக்கு முன்னால ஒரே ஒரு உதவின்னா...." என்று கடப்பாரையின் சத்தத்தை களைத்தது ரஜூலாவின் ஈனக்குரல்.

விக்கிரமன் குழிக்குள் இருந்து எட்டி பார்த்தான். " என்ன....?" என்பது போல நின்றிருந்த சுந்தரபாண்டியனும் கண்கள் உயர்த்தி பார்க்க....." கன்னியா சாக நான் விரும்பல...அதிய என் கழுத்துல தாலி கட்ட சொல்லுங்க.... எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க....... நீங்க எதுக்காக இப்டி பண்றீங்கன்னு தெரியல...ஆனா....இது என் கடைசி ஆசைண்ணா..... தயவு செஞ்சு பண்ணி வைங்க..." கீழே காலில் விழுவதாக மண்ணில் விழுந்து கதறினாள்.

"பேயா அலைய நான் விரும்பல. என் ஆத்மா சாந்தி அடையுனும்னா என் கழுத்துல தாலி கட்ட வையுங்க......" என்று கை கூப்பியவள், அதிவீரனை பார்த்து...."அதி, நாம ஒரே சாதிதான்டா. எந்த சாமிக் குத்தமும் வராது. தாலி கட்டு.. புருஷன் பொண்டாட்டியா செத்தற்லாம். தனியா சாக பயமா இருக்குடா......" என்று கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சி அழுதாள்.

அதிவீரன் பற்களை கடித்தான். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அதிவீரனுக்கு ஆற்றாமை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது. அவளையே உற்று பார்த்தான். அந்தக்கண்ணில் அற்புதம் பூத்தது போல உணர்ந்தான். நொடியில் பூத்திருந்தது அன்பு. வாழ வேண்டும் என்ற ஆசை மலையளவு மனதுக்குள் குடி புகுந்தது. அவனும் விக்கிரமனின் அம்மாவை அர்த்தத்தோடு பார்த்தான். முக்கூடலில் கண்கள் மாறி மாறி பார்த்துக் கொண்டன. ரகசிய காற்று மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்ததது. வந்து அப்பிக் கொள்கிற படபடப்பு காத்துக் கொண்டிருந்தது. சற்று குழி தோண்டும் வேலை அனிச்சையாய் நின்றது. மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள் சகோதரர்கள். அப்பா சாமி இருக்கும் திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டு ஏதோ வேண்டினார். சுற்றியிருந்த மரத்தில் இருந்த காக்கா குருவிகள் கூட குருக் குருக் என்று கழுத்து நீட்டி எட்டி பார்த்தது போலத்தான் இருந்தது. சாம்பல் பூத்த காற்றை உணர முடிந்தது.

வெறித்து பார்த்துக் கொண்டிருந்த விக்கிரமனின் அம்மா படக்கென்று எழுந்து சென்று பத்தடியில் தோட்டத்தில் குடி வைத்திருந்த குலசாமி கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். விக்கிரமனின் அப்பா இருவரின் கை கட்டுகளையும் அவிழ்த்து விட்டான். எட்டி பார்த்த வீர சகோதரர்கள், " சரி... பண்ணித்தொலை" என்பதாக பாவனை காட்டி விட்டு தொடர்ந்தார்கள்.

நடுங்கிய கைகளில் தாலி பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் மின்னியது. அது வாழ்வின் ஆசையை அநியாயத்துக்கு தூண்டியது. அதை ரஜூலாவின் கண்கள் பனிக்க அவளின் கழுத்தில் கட்டினான் அதிவீரன். யோசித்த விரல்களின் விழியில் கண்ணீர் கசிந்திருக்கலாம். கண்கள் ததும்ப பார்த்தாள் ரஜூலா.

தலை குனிந்து வாங்கிக் கொண்டவள் பட்டென்று எழுந்து பக்கத்தில் கிடந்த செங்கல்லை அதிவேகமாய் ஒரு காட்டு பன்றியின் விரட்டுவது போல எடுத்த கணத்தில் எதிரே நின்றிருந்த விக்கிரமனின் அம்மா செவுனியில் படு வேகமாய் தாக்கினாள். திக்கென்று அந்த இடம் செவிடாகி சுழன்றது.

புரிந்து கொண்ட அதிவீரனும் இன்னொரு கல்லை எடுத்து அவர்களின் அப்பாவின் நெஞ்சில் சுத்தியல் கொண்டு குத்துவது போல குத்தினான். கீழே விழுந்த இருவரையும் இவர்கள் இருவரும் ஏறி மிதித்து, மிதித்து, மிதித்து, மிதித்து, கிழித்து போட்டார்கள். எல்லாமே இப்படி என்பதற்குள் நிகழ்ந்திருக்க... குழிக்குள்ளும் குழிக்கு மேலும் நின்றிருந்த சகோதரர்களுக்கு ஒரு கணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களின் கையில் இருந்த கம்பும் கடப்பாரையும் இறுகியது. அதே நேரம் எதிரே வேகமாய் எட்டி எடுத்த ரஜூலாவின் கையில் இப்போது மம்பட்டி பளிச்சிட்டது. அதிவீரனின் கையில் அவன் கட்டியிருந்த பெல்ட் தலைகீழாய் தொங்கியது. இருவரும் அவர்கள் இருவரை நோக்கி அப்படி இப்படி என்று நகர்ந்து கொண்டே நின்று கொண்டு காட்டுக்கத்தல் கத்தினாள். அசைய விடாமல் நிறுத்தியது அந்த வெறித்தனமான சத்தம். அவர்கள் கொலை வெறியோடு இவர்களை நோக்கி ஸ்தம்பித்து நின்றார்கள்.

"ஏன்டா கொலைகார நாய்ங்களா.... உங்க பாவம் புண்ணியத்துக்கு, உங்க மான மரியாதைக்கு நாங்க தான் கிடைச்சமா... நாங்க எப்போ சாகணும்ங்கிறத முடிவு பண்ண நீங்க யாருடா... பணம் இருந்தா யாரை வேணாலும் என்ன வேணா பண்ணுவீங்களா.... உயிர் எடுக்கறது அவ்ளோ சுலபமா போச்சா... யார்டா இவ்ளோ தைரியம் குடுத்தது... எந்த சாமி குடுத்துச்சு...." என்று மூர்க்கமாக, சகோதரர்களை பார்த்து கத்தியவள், முகத்தை திருப்பாமல் அதிவீரனிடம் உரக்க பேசினாள்.

"எப்போலாம்... தப்பு மேல ஏறி வருதோ அப்பலாம் சாமி கீழ இறங்கி வரும்......நாம சாமி....... சாமி மாமா நாம............நான் யட்சி நீ யட்சன்....இவனுங்கள விடக்கூடாது மாமா....... இன்னைக்கு இவனுங்க ரெண்டு பேரையும் கொன்னு.....இதே குழில போட்டு மூடிட்டு, இவனுங்க குழி மேட்டுல தான் மாமா நமக்கு சாந்தி முகுர்த்தம்...."என்றவள்.... கண்களை இன்னும் கூராக்கி, ......." வா... வாடா மாமா.... வாழ்றது ஒரு தடவ தான்..." என்று கர்ஜிக்கும் போது இருவரின் கைகளும் கோர்த்திருந்தன.

எதிரே பார்த்து, "ங்கோத்தா பாத்தர்லாண்டா........வாங்கடா.... புடுங்கிகளா " என்று கத்திக் கொண்டே எதிரே வெறியோடு நிற்கும் சகோதரர்கள் மீது பாய்ந்தார்கள். உடல் மொழி பழுத்திருந்தது. அது ருத்ரதாண்டவத்துக்கு ஈடானது. அதன் பிறகு ஆடியது எல்லாம் விஸ்வரூபம்.

விக்கிரமனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் எதிர் பாராத சண்டை அது. கொஞ்சம் தடுமாறினாலும்.... ஸ்தம்பித்தாலும்.... நிலைமையை புரிந்து கொண்டு எதிர் தாக்குதல் தொடுத்தார்கள். செத்துக் கிடந்த அம்மாவும் அப்பாவும் வெறியை இன்னும் தூண்டினார்கள். கத்திக் கொண்டே உருண்டு புரண்டு முன்னேறினார்கள்.

சகோதரர்கள் ஜெயிக்க வேண்டும் என சண்டை போட்டார்கள். ரஜூலாவும் அதியும் வாழ வேண்டுமென சண்டை போட்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் கடப்பாரையும்.. அவர்கள் கத்தியுமே அவர்களை பலி வாங்க உதவியது. புருசனும் பொண்டாட்டியும் சகோதரர்களை வெட்டி கூறு போட்டு குழிக்குள் தள்ளினார்கள். வெறி அடங்க நேரமானது. பிணத்தை கூறு கூறாக்கினாள். கழுத்தில் மிதித்தே சங்கை உடைத்தாள்.

"முட்டாப்பயலுக...... நாங்க என்னடா பண்ணோம்... எதுக்குடா சாவடிக்க பாத்தீங்க...." ரத்த சகதியில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குழிக்கு பக்கத்தில் சற்று அமர... வெடித்த புயலென வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு பிசாசைப் போல பறந்து வந்து நின்றாள் இந்தக் கதை எதுவுமே தெரியாத வேம்பு.

"அயோ......என் குடும்பத்தையே பலி எடுத்துடீங்களே...." என்பது மட்டும் தான் அப்பெண்ணின் ஆவேசம். கையில் கொண்ட வாள்... அவள் கண்களை போலவே மின்னியது. எதுவும் பேச விடவில்லை. என்ன பேசினாலும்.... கேட்கும் மனநிலையும் அவளுக்கு இல்லை. 'உங்க அண்ணன் பண்ணினது பெரிய தப்பு..... உங்க வீடே கொலைகார வீடு...எங்களை கொலை பண்ண பார்த்தாங்க...' ம்ஹும்... எதுவும் கேட்கவில்லை.... அழுகையும் கத்தலும் மட்டும்தான் வேம்புவிடம். சில வெட்டுகளை வாங்கிய ரஜூலா....
தன் கணவனை தள்ளி இருக்க சொல்லி விட்டு பறையடிக்கு ஆடும் ஆட்டத்தை முன் பின்னாக ஆடினாள். அது ஆதி ஆட்டம். மனதுக்குள் பறை அடி அதிர அதிர மூளைக்குள் நரம்புகள் ஆடின. உடல், காட்டு மரத்தின் கழுத்து நீட்டம் போல... வெற்றிடத்தில் ஓவியம் பின்னியது. வாள் வந்து போகும் சுழற்சியில் எல்லாம்... வாழ்வின் வேகம் உயிரை காத்தது. பறையாட்டம்... வெறி கொண்டு சுழன்றது. ஆட்டம் பிடிபடாமல் கண்கள் சுழலும் போதெல்லாம் கை கால் நெஞ்சு என்று வாள் தாண்டி வேம்புவின் ஒவ்வொரு எலும்பும் உடைந்தது. ஒரு கட்டத்தில் கழுத்து எலும்பை உடைத்து திரும்பி விட்டு ஒரு புலியின் பசியோடு கழுத்திலிருந்து தலையை பிய்த்தெறிந்தாள்.

"எப்போ சண்டை வந்தாலும் நாங்களே சாகனுமா.... இந்த ஒரு வாட்டி நீங்க சாகுங்கடி.... "பற்கள் நற நறுக்க கத்தினாள்....... ரஜூலா.

பெரும் சமர் முடிந்த போது இரவு ஐந்து பிணங்களை சுமந்து கொண்டு குழி வயிற்றைத் தள்ளி படுத்திருந்தது. குழி மேட்டில் கால்கள் அகட்டி காடே அதிர அதிர அதிவீரனும் ரஜூலாவும் புணர்ந்தார்கள். செம்மண் பூசிய உடலில்...மண்ணும் மனதும்... வாழ்வும் சாவும் பின்னிப் பிணைய மாறி மாறி வெறி கொண்ட மிருகத்தின் அசைவென மாறி மாறி புணர்ந்தார்கள். அது உயிரின் வேகம்.. உணர்வின் தாகம். தங்களின் இருத்தல் பற்றிய நிம்மதி. குட்ட குட்ட குனிந்த தலை நிமிர்ந்து கொண்டதில் கொண்ட கிரீடம். மரணத்தை வெற்றி கொண்ட களைப்பு. அவள் கத்தினாள். அவன் பற்றினான். அந்த வதையின் கொண்டாட்டம் விடிய விடிய நீண்டது.

வேடிக்கை பார்த்த சாமிக்கு டபுள் கொண்டாட்டம்.

கனவு களைந்து படக்கென்று எழுந்து அமர்ந்தான் ஜானி. 

*

ஒவ்வொரு சிலையாக மணக் கண்ணில் தொடர்ந்தது கனவில் வந்த காட்சிகள். விக்கிரமனுக்கு வந்த கனவு சுந்தர பாண்டியனுக்கு தொடர்ந்தது. அண்ணன் தம்பிகளான அவர்களுக்கு வந்த கனவு தனக்கு ஏன் தொடர்ந்தது.... பிராய்டின் தேவை பெருமளவு தேவைப்பட்டது. அந்தக்கிழவி கதையை பாதியில் ஏன் விட்டு போனது. அப்படி என்றால் தனக்கு வந்த கனவு தான் கதையின் முடிவா....? இப்படி ஒரே கனவு ரெண்டு மூன்று பேருக்கு தொடருமா.... தலை சுற்றினாலும் பரவாயில்லை...ஜானியின் ஆழ்மனம் உந்தித் தள்ள கேள்வி பிறந்த அந்த கிராமத்துக்கே திரும்ப வந்து சேர்ந்திருந்தான்.

அதே ஆல மரம்.... அதே வழித்தடம்....அதே தான். நேற்றைக்கு பதில் இன்று.

எத்தனை தேடினாலும் அந்த கிழவியைக் காணவில்லை. எதிரே வந்த அதே வாழைத்தார்காரரிடம் மீண்டும் வினவினான். இது இன்றா நேற்றா என்ற சந்தேகம் கூட வந்தது ஜானிக்கு.

"இங்க... ஒரு கிழவி...."

அவன் கேட்டு முடிப்பதற்குள் வாழைத்தார்காரர் கை காட்டிய திசையில் ஒரு கிழவி அமர்ந்திருந்தாள்.

திக்கென்று பார்த்து விட்டு... "அயோ, இந்த பாட்டி இல்ல.. நேற்று பார்த்த பாட்டி........?" என்றான். கேள்வியினூடே அவன் கண்கள் நடுங்கின.

"நான் பாக்க சொன்ன கிழவி இது தான். இது தான்...... இங்க ரெம்ப வருசமா இருக்கு....வேற பாட்டி யாரும் இங்க இருக்கற மாதிரி தெரியலையே....?" என்றவர் பதிலுக்கு காத்திராமல் நடந்து கொண்டிருந்தார்.

பாதியில் நீச்சல் மறந்தவனைப் போல நடுங்கி கொண்டே, அந்த கிழவியை பார்க்க.........அது கண்டு கொள்ளாமல் எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது.

"என்னவோ சரி இல்லை... ஏதோ மாயம் நம்மை சுற்றி நடக்கிறது" போன்ற புரிதல்கள் அவனுக்குள் தானாகவே முளைத்து பூமி நோக்கி வளர்ந்து கொண்டிருந்தது போல இருந்தது.

"கண்டிப்பாக தெரியும் இது.......இது அந்த பாட்டி இல்லை......." அவன் யோசனைகள் கை பிடித்து அழைத்து செல்ல, அந்த கோவிலில் நேற்று கண்ட அந்த சிலைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பளிச்சிட்டது. கனவுக்கதை, அந்த பாட்டி சொன்ன கதை எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறது.... " என்ற தெளிவு மூளைக்குள்ளிருந்து தனியே பிரிந்து செல்லும் நரம்பின் ஊடுருவலாக உணர முடிந்தது.

ஒரு குடும்பமே பலி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஊர்களில் எப்போதும் இயல்பாக நடக்கும் கதை, மாறி எதிர்வினை ஆற்றியிருக்கிறது. கொல்ல வந்தவர்கள் செத்திருக்கிறார்கள். சாக இருந்தவர்கள் கொன்றிருக்கிறார்கள். அடிமை மனம் திமிறி இருக்கிறது. ஆயுதம் எவன் கையில் இருந்தாலும் தர்மமே வெல்லும் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று சிறு தெய்வங்களாகி விட்ட விக்கிரமன், சுந்தர பாண்டியன், அவர்களின் அப்பா அம்மா... நடுவில் எதுவும் அறியாத வேம்பு. ஒரு மாதிரி அடையாளம் உணர முடிந்தது. கேட்ட கதைக்கும் கண்ட கனவுக்கும் உருவம் கொடுக்க முடிந்தது. மனதுக்குள் பேரருவி ஒன்று வேகமாய், படு வேகமாய் கொட்டுவதை காண முடிந்தது.

"இந்தக்கதையெல்லாம் தனக்கு எதற்கு தெரிய வேண்டும்... தனக்கு ஏன் அந்த கனவு வர வேண்டும்..."மனம் புலம்பியது.

இந்த சிலைகள் இருக்குமிடத்தில், சற்று ஒதுங்கி காவல் இருப்பது போல நின்ற அந்த முகமற்ற பெண் சிலையை கண்கள் எடுக்காமல் பார்த்தான். அந்த முகமற்ற முகத்தில் மெல்ல மெல்ல நேற்று கதை சொன்ன கிழவியின் முகம் படியத் துவங்கி இருந்தது. உதடு நடுங்க.... குருதி சூடேற, கால்கள் தடுமாற கத்தினான். குரல் எழும்ப மறுத்தது. வேகமாய் அந்த இடத்தை விட்டு வெளியேற திரும்பினான். எங்கிருந்தோ வந்த சூறைக்காற்று அந்த இடத்தை சுற்றி வளைத்து வீசு வீசென்று வீசி... கத்தி கதறியது. அந்தக்கிழவியின் தலை முடி வாசத்தை உணர்ந்தான். அந்த வதைக்கு பின்னால் அதிவீரனும் ரஜூலாவும் காட்டுக்குள் செல்லும் காட்சி மனதுக்குள் வந்து போனது. அந்த கிழவியின் சுருங்கிய முகமும்.... கீச்சிட்ட குரலும் மீண்டும் மீண்டும் உணர முடிந்தது. அதுவும், ரஜூலாவின் குரலும் ஒரு கட்டத்தில் ஒத்து போவதை மனமும் உடலும் உணர்ந்து உலுக்கியது. காதில் நூற்றாண்டு ரகசியம் அனலாய் சொட்டியது. ஏதோ புரிந்தவனாய்.... ஏதோ ரகசியம் அறிந்தவனாய் வேகமாய் அவ் விடத்தை விட்டு வெளியேற நினைத்தவனுக்கு சட்டேன ஏதோ கண்ணில் உறுத்தியது. கணம் ஒன்றில் கனமாய் நின்று மெல்ல திரும்பி முகமற்ற அந்த இன்னொரு சிலையைப் பார்த்தான்.

அதில்............. அதில்... அந்த முகமற்ற ஆண் சிலையில் அப்படியே பதிய ஆரம்பித்திருந்தது, ஜானியின் முகம்.....! 

- கவிஜி

Pin It