"கதை ஓகே தான....?"

"ஓகே தான்.... ஆனா கிளைமேக்ஸ்ல ஏதோ மிஸ்ஸிங்..."

"ஏதோன்னா.....?"

"ஒரு ..... ஒரு.... கிரிஸ்பி இல்ல.... ஒரு ஷாக்கோட முடிச்சாத்தான கதைல ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்...."

"நீங்க தெரிஞ்சவர்ங்கறதுனால தான் இந்த விபத்தை கதையா எழுத கேட்ட போது சம்மதிச்சன். நீங்க கற்பனையா எதையாவது எழுதி பிரச்சனை பண்ணி விட்றாதீங்க..." என்றவள் கண்கள் கலங்க அருகே படுத்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள்.

பிணத்தைப் போல படுத்திருக்கும் அவள் கணவனுக்கு மருத்துவ சேவைகளை செய்து கொண்டிருக்கும் செவிலிக்கு எல்லாமே மறத்து போன காட்சியாக இருந்திருக்கும். எதுவும் இயல்பே என்பது போல அனிச்சையாய் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அந்த அறையே மருத்துவ வாசத்தில் 20 வருடங்களை அடைத்துக் கொண்டிருந்தது.

அவளுக்குள் இருக்கும் ஆற்றாமை இந்தக் கதை சம்பந்தமாக வந்து போன எல்லா சந்திப்புகளிலும் ஒரே விதமாகத்தான் இருந்தது. IIT பிரைன். ஜீனியஸ். ஆஸ்திரேலியாவில் பெரிய வேலை. புதுப் புது சிந்தனைகளின் மூலமாக இந்த மானுட குலத்துக்கு செய்ய வேண்டிய வேலைகள் அத்தனை இருந்த சமயத்தில் தான்... அந்த விபத்து நிகழ்ந்தது.

பெரிய பெரிய சாதனைகளை செய்யவிருந்த நேரத்தில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவன்... பாத்ரூமில் வழுக்கி விழுந்து, பின் மண்டையில் அடிபட்டு... படுத்தவன் தான்..... இதோ 20 வருடங்கள் ஓடி விட்டன. கண்கள் மட்டுமே அசையும். பேச்சு இல்லை. பார்வை மட்டுமே. உடல் அசையாது, பேருக்கு உயிர் இருக்கிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான். அப்படித்தான்.. அவள் அமைந்தது. மனைவி மட்டுமல்ல செவிலி அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான். அதிகமாக யாரிடமும் பேச மாட்டாள். ஒரு நாள் கூட சலித்துக் கொண்டது இல்லை.

மனைவி அம்மாவைப் போல கவனித்துக் கொண்டாள். செவிலி மனைவியைப் போல கவனித்துக் கொண்டாள். பெரிய பெரிய விஷயங்களை லாவகமாக கையாளும் அவன், டைல்ஸ் போட்ட பாத்ரூமில் குளிக்கிற அந்த சின்ன விஷயத்தை கவனத்தில் கொள்ளவில்லை. டைல்ஸில் கால் பிசகினால் காவு வாங்கி விடும். 20 வருட காலத்தை வாங்கி விட்டது.

சிறு குழந்தையைப் போல கண்ணை கசக்கினாள்.

என்னவோ போல ஆகி விட்டது. நான் அந்த சூழ்நிலையை கடக்க எண்ணி ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரி அழுதது போதும் என்று நினைத்தாளோ என்னவோ....."சரி.... கிளைமேக்ஸ்ல உங்களுக்கு என்ன தேவையோ அதை சேர்த்துக்கோங்க.... பாத்ரூமில் கவனம் தேவைங்கிற அவேர்னெஸ் வெளி வந்தா போதும்.... பார்த்து பண்ணுங்க" என்றாள்.

"நிறைய யோசிச்சு இந்த க்ளைமேக்ஸ் புடிச்சிருக்கேன். சொல்றேன்.... எப்படி இருக்குனு பாருங்க" என்று சொல்ல ஆரம்பித்தேன்.

கதை கேட்டலில் விருப்பமே இல்லாமல் தன் கணவனையே சோகம் ததும்பும் முகத்தோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். செவிலி தன் வேலையை செவ்வனே பார்த்துக் கொண்டிருந்தாள். மின்விசிறி அதன் போக்கில் சீராக சுற்றிக் கொண்டிருந்தது. பிணத்துக்கு புன்னகை வந்தது போன்ற பாவனையில் அவன் படுத்திருந்தான்.

நான் க்ளைமேக்ஸ் சொல்ல ஆரம்பித்தேன்.

"இப்போ..... பாத்ரூம்ல தானா வழுக்கி விழுந்த உங்க கணவர் தானா வழுக்கி விழல. நீங்க தான் தள்ளி விட்ருக்கீங்க. உங்களுக்கு உங்க கணவன் மீது எந்த ஈடுபாடும் இல்லை. உங்களுக்கு இதோ இந்த செவிலி மீது தான் காதல் காமம் எல்லாம். இந்த செவிலி ஒரு லேடியே இல்லை. இது ஒரு ஆண்.. உங்க காதலர். உங்களுக்கு உங்க கணவன்கிட்ட இருக்கற பணம் மட்டும் வேணும். அதுக்கு தான் உங்க காதலருக்கு செவிலி வேஷம் போட்டீங்க. உங்க கணவனை பாத்ரூம்ல தள்ளி விட்டீங்க...."

ஜன்னலைப் பார்த்து சொல்லிக் கொண்டே இருந்த நான் கதையின் போக்கில் மெல்ல திரும்பி அவர்களை எதேச்சையாகப் பார்த்தேன்.

செவிலியும் அவளும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த பார்வையில் இருந்து ஏதேதோ ரகசியங்கள் உடைந்து கொண்டிருந்தன.

- கவிஜி

Pin It