ஒற்றை அடிப்பாதை வளைந்து நெளிந்து மலையேறியது. கால்கள் நடந்து நடந்து சோர்ந்து ஓய்ந்தது. நடை தடத்தைத் தவிர்த்து, மலையெங்கும் செடி, கொடிகளும், புதர்களும் ஆக்கிரமித்திருந்தது. மலை உச்சியில் கருத்த இலைகளற்ற மரக்கிளைகள், வானில் வேர்கள் விரித்திருந்தது. நடந்து நடந்து பழக்கப்பட்ட கால்களுக்கு கரடு முரடான பாதை தடையாய் இருக்கவில்லை. ஓட்டமும், நடையுமாய் சென்ற கால்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், புதிதாய் மலையேறிய கால்கள் தட்டுத் தடுமாறின. 13 பேராக நீண்ட வரிசையின் இறுதியில் நானும், ஹரியும் நடந்தோம். வாட்டி வதைத்த வெயிலால், உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது. ஒவ்வொருவர் தோள் மூட்டைகளிலும் சமையலுக்கான பொருட்களும், திண்பண்டங்களும் இருந்தன. என் தோளில் கேமரா பேக்கும், கையில் கேமராவும் தொங்கிக் கொண்டிருந்தது.

எத்தனை மலையேறி இறங்கினோம் எனத் தெரியவில்லை, இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமெனவும் தெரியவில்லை. எப்போது போய்ச் சேர்வோம் என்றிருந்தது. ஒரு மலை முடிந்தால், இன்னொரு மலை முளைத்து கொண்டே இருக்கிறது. ஆனால் நடப்பது மட்டும் நிற்கவில்லை. யானை சாணத்தின் பச்சை வாசம், மூக்கைத் துளைத்து நடையை நிறுத்தியது. யானை சாணங்கள் கூட்டு கூட்டாய்க் கிடந்தது.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் யானக் கூட்டம் போயிருக்கு" என பேசிக் கொண்டனர். கூட்டத்தை வழிநடத்திய செல்லையா, அப்படியே ஒரு நிமிடம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். திடகாத்திரமான கருத்த தேகம், சொட்டைத் தலை, அழுக்கேறிய பனியன், லுங்கியோடு பார்த்த மாத்திலேயே ஐம்பது வயதுக்காரர் எனத் தெரிந்து கொள்ளலாம்.

"ஆன பக்கத்துல தான் இருக்கும் போல, வேகமா நடங்க" செல்லையா அவசரப்படுத்தினான். இதயம் 'பட பட' எனத் துடித்தது. பயம் சோர்வை மறந்து, கால்களை வேகப்படுத்தியது. சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தேன்.

"டேய்... பயமா இருக்குடா" ஹரி காதில் முணுமுணுத்தான்.

"பேசமா வா"

யானை மறிக்குமோ என பயந்தபடி நடந்த எங்கள் பாதையை ஆடு மறித்தது. முன்னங்கால்களைத் தூக்கி இரண்டு காலில் நின்று, முரட்டுத்தனத்தைக் காட்டியது. பெருத்த வெள்ளை உடம்பெங்கும் செம்மண் அப்பியிருந்தது. ஆட்டின் கன்னங்களில் மட்டுமே இருந்த கருப்பு நிறமும், அதில் தாடி போல தொங்கிய வெள்ளை மூடியும், முதுகு நோக்கி மடங்கியிருந்த கருப்புக் கொம்பும், நீண்டு தொங்கிய காதும் பயமூட்டியது.

"ஆடு கூட பயம் காட்டுதே"

"அது ஒன்னும் பன்னாது, தைரியமா வாங்க" என்றபடி செல்லையா நடந்தான். பின்னால் சென்ற ராசு குச்சியால் ஆட்டை விளையாட்டாய் அடித்தான். கோபமடைந்த ஆடு துரத்தியது. தலைதெறிக்க ஒடியவன் எங்கு ஓடினாலும், விடாது ஆடு துரத்தியது.

"யோவ்… அது சுருட்டுக் கிடா, ஒரு சுருட்ட பத்த வைச்சுக் கொடு" ஒருவன் கத்தினான். பாக்கெட்டில் இருந்த சுருட்டைப் பற்ற வைத்து நீட்டினான். சுருட்டை வாயில் கவ்வி பிடித்த சுருட்டுக் கிடா, அதை மென்று தின்றபடி அமைதியாய் திரும்பிச் சென்றது. சிரித்து சிரித்து வயிறு வலித்தது.

"அண்ணா, ஒரு அஞ்சு நிமிசம் உக்காந்துட்டுப் போலாமா"

"இதோ வந்துடுச்சு, அந்த மேடு ஏறி இறங்குனா போதும்"

"முடியலணா, ரொம்ப டயர்டு ஆயிடுச்சு"

"சரிப்பா"

பேக்கின் சைடில் இருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு, தண்ணீரை தலையில் ஊற்றியபடி அமர்ந்தேன். வெயில் காய்ந்த தலையில் இறங்கிய நீர், இதமாக இருந்தது. தலையில் இருந்து சொட்டு சொட்டாக நீர் வடிந்தது. கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை ஹரி வாங்கிக் குடித்தான். ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, நானும், ஹரியும் ஒவ்வொரு பிஸ்கட்டுகளாக சாப்பிட்டோம். ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி செல்லையா, "தம்பிகளுக்கு வீடு எங்க?" எனக் கேட்டான்.

"கூடலூர் டவுன்ணா"

"எங்கள போட்டா பிடிச்சு என்ன பண்ணப் போறீங்க?"

"உங்க பேஸ் எதுவும் வராதுனா. கோயம்புத்தூருல படிச்சிட்டு இருக்கோம். காலேஷ் பிராஜெக்ட்டுக்காக ஒரு டாக்குமெண்டரி பண்ணுறோம்"

"என்னம்மோ தம்பி, வெளி ஆளுகள எங்களோட குழிக்கு கூட்டிட்டுப் போறதில்ல. துபாய் பாய் ஆளுகங்கறதுனால தான் ஒத்துக்கிட்டோம், பிரச்சணை வராம பாத்துக்காங்க"

"இல்லணா, எதுவும் வராது"

துண்டை உதறி தோளில் போட்டப்படி, செல்லையா எழுந்து நடந்தான். அலுப்பு தெரியாமல் இருக்க பேசிக்கொண்டே, தங்க சுரங்க ‘குழி'யைத் தேடிப் பயணித்தோம். வேண்டிய இடங்களில் போட்டோ எடுத்தபடியே நடந்தேன்.

அசாத்தியங்களை சாத்தியப்படுத்தினால் தான் நாம் யார் என கவனிக்கப்படுவோம். அப்படி என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். சட்ட விரோதமாக தேவாலா வனப்பகுதியில் நடக்கும் 'தங்க வேட்டை' பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது தான். அரசல் புரசலாய் அவ்வப்போது செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் அத்தொழிலாளர்களின் வாழ்வியலோடு சேர்த்து 'தங்கச் சுரண்டல்' பற்றிய 'ஸ்டோரி' எழுத ரிஸ்க் எடுக்கத் துணிந்தேன். ரிப்போர்ட்டர் என சொல்லி தேவாலாவிற்குள் சென்றால், வெட்டி குழியில் போட்டு விடுவார்கள். அலைந்து திரிந்து துபாய் பாய் கூட்டத்தில் ஒருவனை 'சோர்ஸ்' ஆக்கியிருந்தேன். காலேஷ் டாக்குமெண்டரிக்காக போட்டோ எடுக்கப் போறோம்னு ஹரியோடு, 'கைதக்கொல்லி'யில் இருந்து தங்க சுரங்கத்திற்கு வேலைக்காகப் புறப்பட்ட ஒரு குழுவுடன் இணைந்தோம்.

"உள்ளே போனா பொணம், வெளியில வந்தா பணம்" என்ற செல்லையா, தினந்தினம் உயிரைப் பணயம் வைத்து பிழைக்கும் கதையைச் சொன்னான். குழிக்கு முன்பு அடுப்பு மூட்டப்பட்டு, கட்டன் சாயா ரெடியானது. சூடான டீ தொண்டைக்குள் இறங்க, இறங்க புத்துணர்வு தந்தது.

"எனக்கு பூர்வீகம் புதுக்கோட்டை பக்கம்பா, பிரிட்டிஸ் பீரியட்ல பஞ்சம் பொழைக்க தாத்தா சிலோனுக்குப் போனாராம். நா பொறந்து, வெவரம் தெரியுற வரை சிலோன்ல தான் இருந்தோம். முப்பது, நாப்பது வருசத்துக்கு முன்னால இங்க வந்திட்டோம். எஸ்டேட்டு வருமானம் வாயிக்கும், வயித்துக்குமே பத்தல. குழி வேலைக்கு வந்து பத்து, பதினஞ்சு வருசமிருக்கும். என்ன மாரி சிலோன்ல இருந்து வந்தவங்க இங்க அதிகம்"

"குழியில எத்தன பேரு வேல பாப்பீங்க?"

"ஒரு குழிக்கு பத்து, பதினஞ்சு பேரா ஷிப்ட் பிரிச்சு வேல பாப்போம். அதிர்ஷ்டத்தை நம்பி தான் தொழில் ஓடுது. ஒருக்கா ஒரு குழியில 11 பேர் வேலை செஞ்சாங்களாம். அவங்களுக்கு ஒரே நாளுல ஆளுக்கு 11 இலட்சம் கிடைச்சுசாம். அப்படி ஒரு நா பணக்காரங்க ஆகோம்னு தான், இவ்வளவு ரிஸ்க் எடுக்குறோம்"

"அவங்களப் பாத்திருக்கீங்களா?"

"இல்லப்பா, எனக்குச் சொன்னவருக்கு வேறொருத்தர் சொன்னராம்"

"தெனமும் காசு கிடைக்குமா?"

"ஒரு நாள் பாடுபட்டா நூறோ, ஆயிரமோ கிடைக்கும். ஆனா கிடைக்காம வெறும் கையோட போறது தான் அதிகம், பத்து பேரு வேல பாக்குற குழியில பத்து ரூபாய் கிடைச்சா, ஆளுக்கு ஒரு ரூபானு கிடைக்கும்"

"இங்க தங்கம் இருக்குறதா யாரு கண்டுபிடிச்சா?"

"பிரிட்டிஸ் கம்பெனிக்காரங்க தங்கம் எடுத்திட்டு இருந்தாங்க. பெருசா இலாபம் வாரலனு, மூடிட்டுப் போயி எம்பது வருசமாயிருக்கும். திருட்டுத்தனமா இன்னும் சுரண்டிட்டு தான் இருக்காங்க"

குழிக்குள் உள்ள ‘டோனா'வில் (குழியில் பிரிந்து செல்லும் சுரங்க வழி) உள்ள தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே தொடர்ந்து பணியில் ஈடுபட முடியுமென்றனர். அதற்கான ஓஸ் பைப்களை 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு டோனாவில் இருந்து எடுத்து வர வேண்டுமெனவும், அதற்கு முன்பு மதிய உணவு சமைக்க குழிக்குள் இறங்கி டோனாவிற்குள் நுழைந்து தண்ணீர் எடுத்து வர வேண்டுமென்றனர்.

"உள்ளே வர தைரியம் இருக்கா?"

'அதுக்கு தானே வந்தேனு' மனதில் நினைத்தபடி, "ரெடி" என்றேன்.

ஜீன்ஸ் பேண்ட், சர்ட் ஆகியவற்றைக் கழற்றிவிட்டு, அவர்கள் கொடுத்த கைலி, பனியனை உடுத்திக் கொண்டேன். குழிக்குள் இறங்க பயந்த ஹரி சமையலுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். விருந்தினரான எங்களுக்கு மாட்டுக்கறி வாங்கவும், தண்ணீரை வெளியேற்ற மோட்டரை எடுக்கவும் 4 பேர் தேவாலாவிற்குப் புறப்பட்டனர்.

"யாரோட வற்புறுத்தலாலும் இறங்க வேணாம், முடியும்னு நினைச்சா மட்டும் இறங்கு" என்றான் ராமு. அவனிடம் பிராந்தி வாடை வீசியது. அழுக்கேறிய தலைக் குல்லா, டீசர்ட், கிழிந்த ஜீன்ஸ் என மெலிந்த தேகத்தோடு இருந்தான். முப்பது வயதிருக்கும். கயிற்றின் உதவியோடு கேமரா பேக் குழிக்குள் அனுப்பப்பட்டது.

"நா இறங்குறதா நல்லா கவனிச்சுக்க, அதே மாரி இறங்கணும்" என்றபடி டார்ச் லைட்டினை தலையில் கட்டியபடி, மெல்ல மெல்ல குழிக்குள் இறங்கினான். இரண்டுக்கு இரண்டு அடி அளவில் சதுர வடிவில் கிணறு போல குழி இருந்தது. பயம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறங்கத் துணிந்தேன். சுவற்றின் இருபுறமும் கைகளையும், கால்களையும் வைத்து இறங்க சிறிய பிடிமானம் இருந்தது. தரையில் கைகளை ஊன்றியபடி, இடது காலை குழிக்குள் இறக்கினேன். பிடிமான குழியில் கால்கள் வைத்ததும், மண் உதிர்வதை உணர முடிந்தது. அடுத்த அடி வைத்ததும் மீண்டும் மண் உதிர்ந்தது. தலையைக் குனிந்து குழியைப் பார்த்தேன். ஆழம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. பயமும், பதட்டமும் தொற்றிக் கொண்டது. கால்கள் நடுக்கம் கண்டன.

பிடிமான குழியை கைகளால் அழுத்திப் பிடித்தபடி நிதானமாக கால்களை இறக்குவதும், பிடி கிடைத்ததும் கைகளை இறக்குவதுமாய் இறங்கினேன். உள்ளே வெளிச்சம் குறைந்து, இருட்டு அதிகரித்தது. பாதி குழி இறங்குவதற்குள் மூச்சிரைத்தது. பூச்சி போல சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்தேன். ராமு கீழே இறங்கியிருந்தான். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. வியர்வையில் பனியன் நனைந்தது. தலையில் இருந்து சொட்டு சொட்டாய் கொட்டிய வியர்வைத் துளிகள், முகமெல்லாம் படர்ந்தது. முகத்தில் வடியும் வியர்வையைத் துடைக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் விழ நேரிடுலாம் என்பதால் கைகளை எடுக்க மனம் வரவேயில்லை. ஒரு வழியாய் சமாளித்து மீண்டும் இறங்கத் துவங்கினேன்.

குழியில் இறங்கியதும் லூங்கியில் முகத்திலும், கையிலும் இருந்த வியர்வையைத் துடைத்தேன். இப்போது கொஞ்சம் ஆசுவசமாக இருந்தது. கேமராவை எடுத்து தேவையான படங்களை எடுத்துக் கொண்டேன். டோனாவில் தேங்கியிருந்த தண்ணீரை குடத்தில் நிரப்பிய ராமு, கயிற்றில் கட்டி மேலே அனுப்பினான். மேலே இருந்து கயிற்றை சிலர் இழுக்க, குடம் மேலே போனது. குழியில் ஊற்றுத் தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாய் ஊறும். அதை வெளியேற்றினால் தான் வேலை செய்ய முடியும் என்று சொன்ன ராமு, என்னை வேறு ஒரு டோனாவிற்குள் அழைத்துச் சென்றான். எலி பொந்து போல நீண்ட டோனாவில் பாம்பு போல ஊர்ந்து சென்றேன். சுவற்றில் இருந்த குறிப்பிட்ட பகுதியில் தென்பட்ட ‘ரீப்'பில் தான் தங்கம் இருக்கும் எனக் காண்பித்தான். கருப்பும், பழுப்பும் கலந்திருந்த பாறையில் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே படிந்திருந்த தங்கம் மின்னியது. பாறைகள் உளியால் கொத்தி உடைத்து தங்கம் எடுக்கப்பட்டிருந்தது.

வேறொரு டோனாவில் குத்துளி, சுத்தி மூலம் பாறையை ஒருவன் உடைத்துக் கொண்டிருந்தான். கல்லும், மண்ணுமாய் விழுந்தவற்றை, இன்னொருவன் சிமெண்ட் சாக்கில் எடுத்துப் போட்டான். சாக்கை பல்லால் கடித்தபடி குழி சுவரைப் பிடித்தபடி மேலே தூக்கிச் சென்றான்.

"ப்ப்பபா… எப்படி தான் இப்படி எடுத்திட்டுப் போறாங்களோ?"

"இறங்குனா மாரியே நிதானமாக ஏறுனா போதும்" என்றவாறு ராமு குழியில் இருந்து மேலே ஏறினான். இப்போது பயம் இல்லை என்றாலும், இறங்கியதை விட ஏறுவது கடினமாக இருந்தது. வியர்வை கொட்ட இடையிடையே நின்று நின்று, ஏறி வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றிருந்தது. செல்லையா கையைக் கொடுத்து மேலே தூக்கி விட்டான். "அட… எங்களுல ஒருத்தனாவே மாறிட்டாயே" என சிரித்தபடி கட்டி அணைத்தான். அதில் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறிவிட்டதை உணர முடிந்தது.

பசி வயிற்றைக் கிள்ளியது. சமைத்து வைத்திருந்த கஞ்சி, கருவாடு, தக்காளி சட்டினியை ஒரு பிடி பிடித்தோம். பாறைக்கட்டிகளை சுத்தியால் அடித்து, சிறு சிறு கட்டிகளாக நான்கைந்து பேர் உடைத்துக் கொண்டிருந்தனர். ஓஸ்களை எடுக்க மீண்டும் நடைபயணம் தொடர்ந்தது. ஹரியும் சேர்ந்து கொண்டான். வழியெங்கும் ஆங்காங்கே பாம்பு பொந்து போல பராமரிப்பு அற்ற பழைய குழிகள் இருந்தன. அவை கோரைப் புற்களால் மூடப்பட்டிருந்தது. புதிய குழிகளில் மும்முரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. கரடு முரடான கற்கள், கோரைப் புற்கள் நிறைந்த தடத்தில் இரண்டு மணி நேரம் நடந்து சென்றோம். குழிக்குள் இறங்கிய இருவர், டோனாவிற்குள் சென்று ஓஸ்களை மேலே அனுப்பினர். ஓஸ்களை எடுத்துக் கொண்டு மீண்டும் குழிக்கு நடையைக் கட்டினோம்.

வழியில் தென்பட்ட ஒரு நீரோடையில் முகத்தை கழுவியபடி, தண்ணீரில் கால்களை வைத்து அமர்ந்தேன். சிறு, சிறு கருப்பு மீன்கள் கூட்டங்கூட்டமாய் மொய்த்தன. மீன் கடியை அனுபவித்தபடி, வேடிக்கை பார்த்தேன். வயது முதிர்ந்த பெண்களும், ஆண்களும் தலையில் துண்டு, அழுக்குத் துணிகளோடு காட்சியளித்தனர். பின்னால் சிமெண்ட் சாக்குகளும், குவியல் குவியலாய் கற்களும் கிடந்தன.

"யாருப்பா புதுசா இருக்கு?" ஒருத்தன் கேட்டான்.

"தெரிஞ்ச பைய தான்" என்றான் செல்லையா.

சிறு, சிறு கட்டிகளாக உடைக்கப்பட்டு தங்கப் பாறைகளை எடுத்து வந்து கழுவி சல்லாடையில் ஜலித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் அனுபவத்தில் எதில் தங்கம் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருந்தனர். அக்கட்டிகளை மாவு அரைக்கும் மில்லில் அரைத்து அதில் பாதரசம், மெர்குரி கலக்கும் போது தங்கம் தனியாகப் பிரிந்து வருமெனவும், 10 கிலோ மண்கட்டியில் 1 கிராம் தங்கம் கிடைக்கலாம், சில நேரத்தில் அதிகமாகவும் கிடைக்கலாமெனவும் விளக்கினர். குறிப்பிட்ட அளவு தங்கம் கிடைத்ததும், தேவாலா, நாடுகாணி நகைப் பட்டறைகளில் விற்பனை செய்து விடுவோம். அதிகம் கிடைக்கும் பட்சத்தில், கேரளா சென்று விற்பனை செய்வோம் என்றனர்.

குழியை அடைவதற்குள் மாலை மங்கி இருட்டு கட்டியது. அடர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து உருவமிழந்தது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த டார்ச் லைட்கள் வெளிச்சமிட்டன. அகங்கரமாய் வீசும் காற்றில் குளிரின் கடுமை கூட, உடல் நடுங்கி பற்கள் அடித்தது. பொறுக்கி வந்த விறகுகளால், குளிர் காய தீ மூட்டினர். இரண்டு கைகளையும் தேய்த்தபடி குளிர் காய்ந்தேன். சிலர் சரக்கில் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். பிராந்தி வாசமும், பீடி வாசமும் சூழ்ந்திருந்தது. மாட்டுக்கறி அடுப்பில் வெந்து கொண்டிருந்தது. சாப்பிட்ட பின் டவுனுக்கு செல்பவர்களுடன் கிளம்பி விடுகிறோம் என்று சொன்னபோது, "இன்னிக்கு ஒரு ராத்திரி எங்களோட இருந்திட்டுப் போங்களேன்" என செல்லையா கேட்ட தொனியில், மறுநாள் கிளம்ப மனம் தயாரானது.

டோனா தண்ணீரை வெளியேற்ற குழிக்குள் கயிற்றால் மோட்டாரை இறக்கினர். குழிக்குள் இறங்கிய இரண்டு பேர் மண்ணெண்ணையை ஊற்றி, மோட்டரை இயக்க முயன்றனர். மோட்டார் கோளாறு காரணத்தால், அம்முயற்சி தோல்வியில் முடித்தது. "இன்னிக்கு பொழப்பு போச்சு" என புலம்பியபடி சாப்பிட அமர்ந்தனர். செல்லையா கோட்டர் பிராந்தி பாட்டிலைத் திறந்து, ஒரே மூச்சில் உள்ளே இறக்கினான். வாயை கையால் துடைத்தபடி, பாட்டிலைத் தூர எறிந்தான். போதையில் உளறிய வார்த்தைகளில், சொல்லப்படாத கதைகள் கொட்டின.

"ஏமாறது ஒன்னும் புதுசு இல்ல, தெனந்தினம் ஏமாத்தம் தான்… நகை பட்டறைக்காரங்க தங்கம் ஏதும் இல்லானும், தரம் இல்லானமும் ஏமாத்துறதும், பணம் கம்மியா கொடுக்கறதும் நடக்கும், அது எங்களுக்கே தெரியும்னாலும், எங்களா என்ன பண்ண முடியும்?"

"போலீசு, பாரெஸ்ட்காரங்க யாரும் வர மாட்டாங்களா?"

"கட்டிங் வாங்குறதுல கரட்டா இருந்தாலும், பெரச்சணை ஆகாத வரைக்கும், எந்த பெரச்சனையும் இல்ல. ரெண்டு வருசத்துக்கு முன்னால குழியில பாறை சரிஞ்சு ஒருத்தன் செத்தது, பெரிய பெரச்சனையாகிடுச்சு. அப்போ எங்கள மேல போலீசு கேசு விழுந்துச்சு. அரெஸ்ட் பண்ணுன போட்டோ பேப்பர எல்லா வந்துச்சு"

"எதுக்குணா இவ்வளவு ரிஸ்க்கு?, வேற வேலைக்குப் போலாம்லா?"

"இந்தா ராமு ரெண்டு டிகிரி படிச்சிட்டு, லாரி டிரைவர் வேல பாக்குறான். எஸ்டேட்டு வேல, கூலி வேல, இத விட்டா இந்த காட்டுல என்னயிருக்கு?" என்ற செல்லையா சிறு இடைவெளி விட்டு, "நாங்க தா இல்லாதப்பட்டவங்க, இந்த துபாய் பாய்க்கு என்ன கேடு?... கோடிகோடியாய் பணத்த வைச்சிட்டு, இன்னும் சம்பாதிக்கணும்னு குழியில பணத்த போட்டிட்டு இருக்கான்."

"போதையில கண்டதையும் உளறாத" மணி குறுக்கிட்டு, பேச்சைத் திசை திருப்ப முயன்றான்.

"நீ சும்மா கெட, இல்லாததையா சொல்லுறோம்?, நம்ம பசங்க தானே" என்ற செல்லையா பேச்சைத் தொடர்ந்தான்.

"15 குழிய துபாய் பாய் வாங்கிருக்கான். அதுல வாங்குன கடனுக்கு குழிய கொடுத்திட்டு, கூலிக்கு வேல பாக்குறவங்க ஜாஸ்தி. எப்போ காசு கிடைக்கும்னு தெரியாமா, குழி தோண்ட காசு இல்லாம இருக்கறதுக்கு, கெடைக்குற காசுக்கு குழிய கொடுத்தறாங்க. அப்புறம் தங்கத்துல பத்து ரூபா கிடைச்சா அஞ்சு துபாய் பாய்க்கு, மிஞ்ச அஞ்சுதா வேல செஞ்சவங்களுக்கு"

"நாங்க தங்கத்த சுரண்டுறோம், மத்தவங்க எங்கள சுரண்டுறாங்க" என உளறியபடி செல்லையா போதையில் சரிந்தான்.

காலை விடிந்ததும் டவுனுக்குக் கிளம்பினோம். "உங்களப் பாத்ததுல ரொம்ப சந்தோசம்பா, அப்பப்போ வந்திட்டுப் போங்க" என்றபடி செல்லையா வழி அனுப்பினான். வழிகாட்ட ராமு உடன் வந்தான். வழியில் சிலர் ஜலித்த தங்க மண் மூட்டையை தலையில் சுமந்தவாறு, 'என்றோ ஒரு நா லட்சாதிபதி ஆயிவேன்கிற நம்பிக்கையில' வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

‘சுரண்டப்படும் தொழிலாளர்கள்', 'பணத்திற்காக பணயம் வைக்கப்படும் உயிர்கள்' என வீட்டிற்கு வந்ததும் ஸ்டோரி அடித்து, போட்டோக்களுடன் அனுப்பினேன். அதைப் படித்து பார்த்த ஹரி, "சூப்பர் ஸ்டோரிடா, நல்ல நேம் கிடைக்கும்" எனப் பாராட்டினான். ஹரியின் பாராட்டு உயிரைப் பணயம் வைத்து எடுத்த ரிஸ்க்கிற்கு நியாயம் சேர்ப்பதாக இருந்தது. ஏற்கனவே சீப் ரிப்போர்ட்டரிடம் சொல்லியிருந்ததால், காலையில் நாளிதழில் வந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருந்தது. சாதித்த நிம்மதியோடு தூங்கப் போனேன்.

காலையில் எழுந்ததும் கதவிற்கருகே பேப்பர் கிடந்தது. ஆர்வத்தோடு பேப்பரைப் புரட்டினேன். என் முழுப் பக்க ஸ்டோரி வந்திருந்தது. 'தங்க மலை மர்மங்கள், ஒரு எக்ஸ்குளுசிவ் கள ரிப்போர்ட்' என தலைப்பு மாற்றப்பட்டு இருந்தது. வரிக்கு வரி எழுத்து மாறாமல் என் எழுத்து அப்படியே இருந்தது. கூடுதலாக ஆபிசர்ஸ் வெர்சன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் 'பைலைனில்' என் பெயர் இடம்பெறவில்லை. சீப் ரிப்போர்ட்டர் சுதர்சன் என இருந்தது. பேப்பரை கசக்கி எறிந்து விட்டு, கோபமும், ஆத்திரமும் பொங்க அலுவலகத்தை நோக்கிக் கிளம்பினேன்.

"அவிங்க உழப்பு சுரண்டலப் பத்தி நா எழுதுனேன், என் சுரண்டப்பட்ட உழப்ப யார் எழுதுறது?" என்ற வார்த்தைகள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது. வடியும் கண்ணீரில் வலி அதிகமிருந்தது.

- பிரசாந்த்.வே

Pin It