01

ஆனைக்கோட்டையில் பத்தமடை வைரவர் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. உயர்ந்த கோபுரமும், வருடாந்த மஹோற்சவமும் இல்லாத கோவில்கள் பொதுவாக இங்கே கோவில்களே இல்லை. யாழ் நகரில் இருந்து ஏறக்குறைய ஆறு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது ஆனைக்கோட்டை. ஆனைக்கோட்டை ஆண்டு தோறும் Hot, Hotter and Hottest எனும் மூன்று பருவங்களால் செழிப்பூட்டப்படும் ஊர். ஆனைக்கோட்டையின் பிரதான வீதியில் இருந்து கிளைத்துச்செல்லும் ஒரு வீதியின் ஓரத்திலே இருக்கிறது அந்த கோவில். இப்போதெல்லாம் அந்த கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மனிதர்களே இல்லை. அங்கொன்றும்   இங்கொன்றுமாக வெகுதூரத்தில் பழைய வீடுகள் தென்படுகின்றன. மிகப்பெரிய வீடுகள். சில யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நாற்சதுர வீடுகள். எல்லா வீடுகளுக்கும் வௌவால்கள் குடிவந்து சில தசாப்தங்கள் ஆகிவிட்டன. எல்லாக்கோவில்களையும் விட பத்தமடை வைரவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த கோவில் மேற்கு நோக்கியபடி அமைந்திருக்கிறது. பொதுவாக கோவில்கள் மேற்கு நோக்கி அமைவதில்லை. அத்துடன் வீதியை ஒட்டிய நெல் வயலில் வீதிக்கு அருகாமையில் இருக்கிறது கோவில்.

கோவில் மிக சிறியது. வேப்ப மரத்துக்கு கீழே இருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் சின்ன சீமெந்து அறை அமைத்து அதிலே வைரவரை வைத்திருக்கிறார். அத்துடன் பூசை புனஸ்காரங்களும் அந்தக்கோவிலுக்கு இல்லை. ஏன் வருடாந்தம் இடம்பெறும் மடை பொங்கல் கூட கோவிலுக்கு இல்லை. இவற்றை விட கோவிலுக்குள்ள சிறப்பு என்னவென்றால் மழை காலங்கள் தவிர்த்தும் பெரும்பாலும் வருடம் முழுவதும் கோவிலைச் சூழ தண்ணீர் கணிசமாக நின்றுகொண்டிருக்கும். அதை விடவும் கோவிலின் தெற்குப்பக்கமாக நெல்வயல்களை   பிரித்து வலுவான கிளுவம் கதியால் வேலி பல்லாண்டு காலம் வேரூன்றி நிற்கிறது. அது ஒன்றும் இரு வருடங்களுக்கொருமுறை புதுப்பிக்கப்படும் வேலி போல தெரியவில்லை. கால காலமாக நிலையூன்றிப் போனதால் கிளுவம் கதியால்களின் அடிப்பாகங்கள் ஒரு பெரும் சீமேந்து தூணைப்போல பெருத்து கறுத்து நிற்கின்றன.  பல தசாப்த காலங்களுக்குப்பிறகும் இலங்கையில் நடந்த வெள்ளையரின் ஆட்சி மாற்றம், இலங்கையர்கள் தங்களை தாங்களே ஆள முடிவு செய்தது, ஸ்ரீமா காலத்துச்சீர்திருத்தம், பிறகு வந்த யாழ் நூலக எரிப்பு, இடப்பெயர்வு, குடிபெயர்வு, 2003ல் முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமான அதிநவீன தொழில் நுட்பமான பிளாப்பி டிஸ்கில் தரவுகளை சேமிக்கும் Desktop கம்ப்யூட்டர் என்று பல புரட்சிகள், பழக்க வழக்கங்கள் மாறிவிட்ட போதும் கதியால்கள் எந்த பாதிப்புக்கும் இடம் கொடாமல் பெருத்து வளர்ந்து தாக்குப்பிடித்து நின்றிருக்கின்றன. இந்த பத்தமடை வைரவருக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில் எனக்கும் சிறு இடமிருக்கிறது.

இந்த கதை தொடங்கும்போது போது இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தது. வெள்ளையர்கள் இலங்கையை விட்டு போகலாமா விடலாமா என்று அல்லாடிக்கொண்டிருந்தனர். தூக்கிகொடுத்துவிட்டு செல்வது ஒன்றும் கடினமில்லைதான். ஆனால் பிரச்சினை இவர்களை இப்பிடியே விட்டு விட்டு செல்வதா அல்லது முன்பு தனது தாத்தாவின் காலத்தில் இருந்தவாறு இலங்கையை பங்கு போட்டுக்கொடுத்துவிட்டுப்போவதா என்றுதான் சார் ஹென்றி மொங்குக்கு* பெரிய யோசனையாக இருந்தது. அவர் அப்படி  சிந்தனையில் இருந்தது பற்றி யாழ்ப்பாணத்தார் எவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களை பொறுத்தவரை மிஷனரி பள்ளிக்கூடங்களும், ஆங்கிலப்படிப்பும், அரசாங்க உத்தியோகமும், கொழும்பில் இருந்து வரும் Money Orderம் அப்பிடியே கிடைத்துக்கொண்டிருந்தால் போதும். வருடாவருடம் புகையிலை செய்வது, கோவில்களில் திருவிழா நடத்துவது, கொழுத்த சீதனத்தோட கலியாணம் செய்வது எல்லாம் அவர்களைப்பொறுத்தவரை சொந்த, தனிப்பட்ட விஷயங்கள். யாரும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது. 

ஆனைக்கோட்டையில் சபாபதி என்றால் மிகப்பெரிய மரியாதை. யாழ் கச்சேரியில் காணிப்பதிவாளராக இருந்தவர். அந்த காலத்திலேயே வட்டுக்கோட்டை Jaffna College இல படிச்சவர். அந்தக்காலத்திலேயே கல்லூரிக்கு வாற வெளிநாட்டு பாதிரிமார் இவற்ற ஆங்கிலத்தை கண்டு லண்டனுக்கு வந்து இறை பணி ஆற்ற வேண்டும் என்று சொன்னார்களாம். ஆனால் படித்தது என்னவோ வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியாக இருந்தாலும் ஆள் கடும் சைவமான். விடிய நாலு மணிக்கு எழும்பி ஐயாவோட வயலிலே துலா மிதித்து விட்டு பக்கத்தில இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு போய் விபூதியை பூசிவிட்டுதான் சைக்கிள்ல கல்லூரிக்குப்போவார். எனவே இந்த இறைபணிக்கு எடுபடுகிற வேல சபாபதியிட்ட பலிக்கவில்லை. சபாபதியிண்ட ஐயாவைப் பொறுத்தவரை மகன் படித்து ஒரு அரசாங்க வேலை எடுத்தால் போதும் என்ற நிலைமை. மகன் கச்சேரியில் பதிவாளர் ஆனதும் ஊரில இருக்கிற எல்லா இன சனங்களுக்கு வீட்டில தலைவாழையிலையில சாப்பிடு போட்டார். பிறகு இரண்டு நாள் கழிச்சு குடி மக்கள் யாரும் குறை சொல்லக்கூடாது என்று கள்ளும் ஆட்டு இறைச்சியும் சமைச்சு சாப்பாடு கொடுத்தவர்.

சபாபதியின்ர மகன் ராகவனும் நானும் ஒண்டாதான் பள்ளிக்கூடம் போய் வாறது வழக்கம். ஒவ்வொரு புகையிலை வெட்டு முடித்த பிறகும் புது புது சைக்கிள் வாங்கிறது அவன்ட வழக்கம். சில வேளை வெட்டின புகையிலை மோதிரமாகவும் மாறி இருக்கும். இரண்டாம் தவணை சோதனை நேரம் சில வேளை பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டு விடுவான். இரவில புகையிலை உலர்த்துற வேலை இருக்கெண்டு டீச்சருக்கு சொல்லிப்போடுவான். ஆனால் அவன் இரவில புதுசா தகப்பன் வாங்கின ஜெனரேட்டரை இயக்கி அப்போது வந்த படங்களை பார்க்கிறது எனக்குத் தெரியும். எப்பிடியும் இரண்டு மாதத்துக்கு ஒருதடவை இரவு கண்விழித்து படம் பார்த்துபோடுவான். அப்போது ஆனைக்கோட்டையில் மின்சாரமே இல்லை. பெற்றோ மாஸ் வெளிச்சத்திலதான் கல்யாண வீடெல்லாம் நடக்கும். ராகவன் வீட்டையோ ஒவ்வொரு நாளும் பெற்றோ மாஸ் தான்.

எங்கட அப்பாவுக்கு ஒரு பெரிய மூட நம்பிக்கை இருந்தது. ஒழுங்காப் படிச்சாத்தான் பின்னாளில் வாழ்க்கையில முன்னுக்கு வரலாம் எண்டதுதான் அது. இந்த மூட நம்பிக்கையால் ராகவனோட நான் திரிஞ்சாலும் படம் பார்க்க விடுகிறதே இல்ல.

மாவட்ட காணிப்பதிவாளர் ஆனதும் சபாபதியின் முதல் வேலை பதிவு பண்ணாமல் கிடந்த சகல பிள்ளையார் கோவில் நிலங்களையும் முறையாக பத்திரம் எழுதி பதிவு பண்ணியதுதான். அடுத்த முக்கியமான வேலை உரிமை கோராத காணிகளை முறையாக பதிவுபண்ணி சபாபதியின் பெயருக்கு சட்டப்படி மாற்றி முறைப்படுத்தி பேணியது. ஆனைக்கோட்டையின் முத்தலடி வீதியிலிருக்கிற காணியை பதிவு செய்யும்போது தான் பிரச்சினை வந்தது.

காணியோட 20 பரப்பிலே வீதியோரமா இருந்த 10 பரப்பு கந்தனுக்கு சொந்தமானது. கந்தனுக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. இந்தக் காணியும் அவனோட அப்பா முந்தின யாழ்ப்பாணத்து அரச அதிபருக்கு பியூனா இருந்தபோது அவரோட விசுவாசத்தை பாராட்டி எழுதிக் கொடுத்தது.  காணியோட வடக்கு பக்கம் இருக்கிற பெரிய வேப்ப மரத்துக்குக்கீழதான் அவனோட குல தெய்வம் வைரவரை வைச்சு அவனும் மனுஷியும் மகளும் கும்பிட்டுக்கொண்டு   வந்தவை. 

சபாபதி 20 பரப்பையும் கதியால் போட்டு அடைக்க வெளிக்கிடேக்க கந்தன் சண்டைக்கு வந்திட்டான். சபாபதியருக்கு இது புதுசு. மாவட்டப்  பதிவாளரா இருக்கிற தன்னை இவன் எதிர்த்து கேள்வி கேட்கிறதோ? கொதித்து போனார்

“ஏன்டா கந்தா உங்களுக்கு எப்படா இந்த பக்கம் காணி இருந்தது? பொய் சொல்லி சண்டித்தனம் செய்யிறாயோ. இப்ப அறிவிச்சன் எண்டால் பத்து நிமிசத்தில  ரிமாண்ட் பண்ணுவான் தெரியுமோ?” 

“இல்லை ஐயா என்னோட அப்பாவுக்கு பழைய GA** கொடுத்த காணி”

“என்னது பழைய GA கொடுத்தவரோ? அவர் சும்மா சொன்ன கதையை வச்சுக்கொண்டு என்னோட கொழுவிறையோ?

“இல்லை ஐயா எங்கட வைரவரை இங்கதான் நாங்கள் வைச்சு கும்பிட்டுக்கொண்டு வாறம். என்ர ஐயாவும் இங்கதான் வச்சுக்கும்பிட்டவர்.”

“அப்ப வைரவர் கோவில் பக்கம் இருக்கிற ஒரு பரப்பு மட்டும்தான் உன்ரை   என்று சொல்லு. எனக்கு ஏன் உந்த கோவில் பாவத்தை.”

கச்சேரியில் தேடியபோது கந்தன் சபாபதிக்கு அவர் யாழ்ப்பண கல்லூரியில படிக்கும் போதே காணியை அவருக்கு வித்திருந்தது தெரிய வந்தது. மறுநாளே வைரவர் இருந்த வேப்ப மரத்துக்கு தெற்கே அருகாமையில் சபாபதியால் கிளுவம் வேலி போடப்பட்டது.

நாள் முழுவதும் கந்தனும் மனைவியும் வைரவர் கோவிலில் இருந்து அழுதுகொண்டு இருந்தார்கள். நானும் ராகவனும் வேடிக்கை பார்க்கப் போயிருந்த போது கந்தனின் மனைவி ராகவனை மண் வாரி தூற்றினாள். அவன் பரம்பரையே நாசமாகப் போக வேண்டும் என்பதற்கான கடைசி பிரம்மாஸ்திரம் அது. 

நாளை புகையிலை வெட்டுக்கு கந்தைனையும் மனுஷியையும் தேடி வருகிறவர்களுக்கு இனி அவர்களை ஆனைக்கோட்டையில் காண முடியாது என்பது தெரிய வரும்.

02

யாழ்ப்பாண கல்லூரியில நாங்க படித்து முடித்தபோது ஒட்டிப்பிறவாத ரெட்டைப் பிறவிகளாக இருந்த எங்களை காலம் பிரித்துப்போட்டது. யாழ்ப்பாணத்திலே இடம்பெயர்வு துவங்க ஆறு மாதத்துக்கு முன்னரே சபாபதி குடும்பத்தோட கொழும்புக்கு போய் விட்டார். போனவர் ராகவன் குடும்பத்தையும் இழுத்து கொண்டு போனார். அப்பவே அப்பாவிட்ட நாமளும் கொழும்புக்கு போய் விடலாம் என்று சொன்னனான். என்னோட உத்தியோகத்தையும் கொழும்புப்பக்கம் மாத்தி விட்டால் பேசாம கொட்டஹேனா பக்கம் ஒரு வீட்டை எடுத்துக்கொண்டு இருந்து விடலாம். அப்பாவுக்கு டெல்மனில மாதா மாதம் கிளினிக் போக வசதியா இருக்கும். ஆனால் அப்பாவுக்கு இன்னொரு மூட நம்பிக்கை இருந்தது. கொழும்புக்குப்போய் அல்லது வெளிநாட்டுக்குப்போய் நிம்மதியா இருக்க முடியாது எண்டதுதான் அது.

இடப்பெயர்வு என்னை தென்மராச்சி, வன்னி, வவுனியா என்று துரத்தியடித்தது. உயிர் போகும் எண்ட நிலையிலும் அப்பாவுக்கு கிணத்தடியையும் வேப்பமரத்தையும் விட்டு வாற நோக்கமே இல்ல. படாத பாடுபட்டு ஒரு மாதிரி அப்பாவையும் அம்மாவையும் வவுனியாவில் செட்டில் பண்ணினான். 

ஐம்பத்தைந்து வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டேன். மேலும் பத்து வருடம் பதவி நீடிப்பு பெற்று வேலைசெய்ய முடியும் எண்ட போதும் நான் ஓய்வு பெற்றதுக்கு காரணம் இருந்தது. வழக்கமா அப்பாவிடம்தான் மூட நம்பிக்கைகள் அதிகம் இருக்கும். தீர்வு வரப்போகிறது. நிறைய பொதுப்பணிகள் செய்யலாமே என்று நான் தீர்மானித்தபோது அப்பா சொன்னார்.

"தம்பி இலங்கையில இனப்பிரச்சினை ஒருகாலமும் தீராதடா" 

நான் ஓய்வு பெற்ற பிறகு தான் அப்பாவோட மூட நம்பிக்கை முதல் முதலில் எங்களோட வாழ்க்கையில பலித்தது. புயலுக்குப்பின் அமைதிதான். ஆனால் அந்த அமைதிக்கு பிறகு கொடிய சைக்கிளோன் காத்திருந்தது எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

03

வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக Need Assessment செய்யும் ஐநாவின் குழுவில் இருந்தேன். மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் Profile எனது மேசையின் மேல் இருந்தது. அப்பிடியே பிள்ளைகளை வரிசையாக விசாரித்து பதிவு பண்ணி எனது பரிந்துரைகளை கொழும்பிலுள்ள ஐநாவின் Country Representativeக்கு அனுப்ப வேண்டும். கடைசியில் நின்ற சிறுவனுக்கு இரண்டு கண்களும் இல்லை. ஒரு காலும் ஒரு கையும் செல் வீச்சில் துண்டாடப்பட்டிருந்தது. ஆனால் சரியான சுட்டியாக இருந்தான். தாயுடன் வந்திருந்தான்.

தம்பிக்கு என்ன பெயர்? கனிவுடன் ஆரம்பித்தேன். என்னால் அது மட்டும் தான் முடியும். தாய் வெறித்த முகத்துடன் மகனின் தலையைக் கோதிக் கொண்டு இருந்தாள்.

"மதுசன்"

"அம்மாவோட பேர் என்ன?"

"சுமத்திரா கந்தன்"

எனக்கு திடீர் என்று உடல் சில்லிட்டது.  குரல் கம்மியது. நிச்சயம் தோற்கப் போகும் மிக முக்கியமான சோதனையில் முடிவை எதிர்பார்க்கும் ஒரு முதல் வகுப்பு மாணவனின் நிலையில் இருந்தேன்.

உனது தாத்தா பெயர் சுப்பன் கந்தனா?

‘ஓம் சேர்’……ஒரு வெள்ளைக்காரத்துரைக்கு பதில் சொல்லும் குடியேற்ற அகதியின் தொனியில் குரல் ஒலித்தது. 

 

04

வாஷிங்டன் நகரில் மார்ச் மாத கடைசி வாரத்திலும் குளிர் இன்னும் குறைந்து விடவில்லை. உலக வங்கியின் நிலம் மற்றும் வறுமை தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்தேன். எனக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்த கிரேசி அருமையான வசந்தத்தை இங்கே அனுபவிப்பீர்கள் என்று வாழ்த்தியிருந்தாள். என்னை டல்லஸ் விமான நிலையத்துக்கு வரவேற்க வந்திருந்த இலங்கை தூதரக அதிகாரி பெரேரா

“Sir, Here, Spring officially starts at 20th of March” என்றார்.

ஆனால் வசந்த காலத்துக்கு கிரேசியின் மின் அஞ்சல் பற்றியோ, பெரேராவின் Official Declaration பற்றியோ இன்னமும் தெரிந்திருக்கவில்லை. குளிர் ஊசியாக குற்றிக்கொண்டு இருந்தது. எனது சிரமங்களும் Complainகளும்   பெரேராவுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். அவர் நுவரெலியாவில் பிறந்து கண்டியில் படித்து வாஷிங்டனில் நீண்ட காலம் இலங்கை தூதரகத்தில் பணியில் இருந்தவர்.  

ஒருவாரம் மாநாட்டு பணிகளிலேயே சென்றுவிட்டது. மாநாட்டில் எல்லா கூட்டத்தொடரிலும் ஆப்பிரிக்கா பற்றிய விவாதம் உச்சத்தில் இருந்தது. ஆப்பிரிக்காவின் வறுமை சர்வதேசத்துக்கு எட்டுவதற்கு இருபத்தோராம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆப்பிரிக்காவின் வறுமையை ஒழிக்க இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். எனது உரை இரண்டாம் நாளில் முடிந்ததும் ஒரு சில குழு விவாதங்கள். அவை முடிந்ததும் எனக்கு பொறுமை இல்லை. இலங்கைத்தூதரின் வாசஸ்தலத்தை காலி செய்து விட்டு ராகவனின் வீட்டுக்கு வந்து விட்டேன்.

ராகவனின் வீடு மிகப்பெரிய விஸ்தாரமான நிலப்பரப்பில் இருந்தது. எனக்கு நிலக்கீழ் பகுதியை வசதியாக ஒதுக்கித்தந்திருந்தான். நிலக்கீழ் பகுதிவரை பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி யன்னல் ஊடாக அருகில் ஊசியிலை காடுகள் வெகுதூரத்துக்கு தெரிந்தன.

ராகவன் அமெரிக்கா வந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்ஆகிவிட்டன. மகனும் மகளும் வளர்ந்து சொந்த வீட்டிலேயே ரூமில் தங்கியிருந்தார்கள். அந்த பகுதியில் ராகவனின் வீடும் அதற்கு மேற்கு புறமாக ஒரு அமெரிக்கனின் வீடும் தான். தெற்குப்புறமாக பெரிய ஊசியிலை காடுகள். உண்மையில் அந்த பகுதியில் தனியே இருக்க ஒரு தைரியம் வேண்டும் போல பட்டது.

அன்று ஞாயிற்று கிழமை.  நான் வெகுநேரம் தூங்கிவிட்டிருந்தேன். எனக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த காபி ஓரளவுக்கு ஆறிப்போயிருந்தது. அன்றுதான் வசந்தம் தலை காட்டத் தொடங்கியிருந்தது. ஒரு மாதத்துக்கு பிறகு சூரிய ஒளியை பார்க்கிறேன். தொலைவில் உள்ள பிரதான வீதியில் மனித நடமாட்டமே இல்லை. இடையிடையே பைன் மரங்களுக்கூடாக குளிர் காற்று உடலை வருடிக்கொண்டு சென்றது அற்புதமான அனுபவமாக இருந்தது. உண்மையில் அந்த காலை பொழுது மிகவும் ரம்மியமாக இருந்தது. காபியுடன் மேல்தளத்துக்கு வந்தேன். மேற்கு பக்க அமெரிக்கன் என்னை பார்த்ததும் ஒரு இளம் சிரிப்புடன் காலை வணக்கம் சொல்லி விட்டு புல் வெட்டும் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தான். மெல்ல மெல்ல அந்த பகுதி முழுவதையும் வெட்டிக்கொண்டிருந்தான். அது எங்கள் வீட்டின் சுவர் வரையும் வந்து வெட்டியது.

மேலே காபியுடன் வந்த ராகவனிடம் நான் கேட்டேன்.

“ஏன் அவர் உனது பகுதிக்குள் வந்து புல் வெட்டுகிறார்?”

“அவர் அப்பிடித்தான். இங்கே அப்பிடி எல்லாம் சீரியஸாக பார்ப்பதில்லை. அவர்களுக்கு இந்த பகுதி முழுவதும் அழகாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்”.

“அதுசரி உனது காணியின் தெற்கே ஏன் இவ்வளவு சின்ன இடம்தான் இருக்கிறது?”

"இல்லை. எனது காணிக்கு தெற்கே இருப்பது பெரிய Reserve பகுதி. ஆனால் எனது காணியின் எல்லை Reserve பகுதிக்குள்ளே வருகிறது. உண்மையில் எனக்கு அந்த தெற்கு எல்லை எது என்று இன்னமும் சரியாக தெரியாது. கிட்டத்தட்ட அங்கே இருக்கும் மர இருக்கைக்கு கிட்டவாக இருக்கலாம்”.

நான் தொலைவில் தெரிந்த மர இருக்கையை உற்று நோக்கினேன். அது அடர்ந்த பைன் மரங்களுக்கிடையே இருந்தது. மாறி மாறி வரும் பருவங்கள் அதனை பெருமளவு உக்க வைத்துக் கொண்டிருந்தன.

- பார்த்திபன்

Pin It