அந்த "கால் லெட்டர் " எப்போது வேண்டுமானாலும் வரட்டும், வரும் போது வேலைக்குப் போகலாம்; அது வரை அதை பற்றி கவலை இல்லாமல் இருப்போம் என நிம்மதியாக இருந்தான் செந்தில்குமார். சனவரி மாதமே கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி  மே மாதம் பரீட்சையும் முடிந்து விட்டது. அந்த பெரிய நிறுவனத்திலிருந்து 'கால் லெட்டர்' வருவதற்கு ஆகஸ்டு இல்லை செப்டம்பர் மாதமும்   ஆகலாம்.  அந்த நிறுவனம் மட்டுமல்ல அநேகமாக எல்லா பெரிய நிறுவனங்களும் அப்படித்தான் செய்வதாக  ஒரு தனியார் நிறுவனத்தில் HR மேனேஜராக இருக்கும்  தன் மாமா சொன்னதாக செந்திலிடம் அவன் நண்பன் கூறியிருக்கிறான். அந்த நிறுவனங்களுக்கு வரவிருக்கும் ப்ராஜக்டுகளுக்காக முன்கூட்டியே கல்லூரிகளில்ருந்து 'ஆட்களை' தேர்வு செய்து வைத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல. வேலை இருக்கிறதோ இல்லையோ  மற்ற தன்னுடைய போட்டி நிறுவனங்கள் 'நல்ல ஆட்களை' எடுத்துக் கொள்வதற்கு முன்பே தாங்கள் 'நல்ல ஆட்களை'  எடுத்துக் கொள்வதில் நிறுவனங்கள் முனைப்பாக இருப்பதாகவும் அந்த HR மேனேஜர் கூறியிருக்கிறார். இதனால் 'கால் லெட்டர்' வருவதற்கு மூன்று மாதங்களாகும் என்று செந்திலுக்கு தெரிந்திருந்தாலும், தன் சம்பளம் "த்ரீ லேக்ஸ் பர் ஆனம்" என்று குறிப்பிடப்பட்டு வரவிருக்கும் கால் லெட்டரை மிகவும் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தான். ஆமாம்.  35 ஆண்டுகள்  TVS கம்பெனியில்  பணி புரிந்து அடுத்த வருடம் ஓய்வு பெறப்போகும் தன் அப்பாவிற்கு இப்போதுதான் மாதச் சம்பளம் 25000  ஆகியிருக்கிறது.  செந்திலுக்கு முதல் சம்பளமே 25000 ரூபாய்.   அதற்குரிய பெருமையும் சந்தோஷமும் இருக்காதா என்ன ?
 
கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகிய அன்று அவன் அடைந்த எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான். ஒரே ஒரு சின்ன வருத்தம்,  ஸ்ரீவத்சனைப் போல தானும் அந்த " 4 லேக்ஸ் பர் ஆனம் " சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தில் தேர்வாகாததுதான். இருந்தாலும் மற்ற சில விஷயங்களில் இவனை தேர்ந்தெடுத்த நிறுவனம் சிறந்ததாக இருந்தது. அவன் சம்பளத்தை நினைத்து நினைத்து பெருமிதம்  கொண்டான். அவன் குளிக்கும் போது, தூங்கி எழுந்த உடன், நண்பர்களுடன் பேசும்போது, வேலைக்கு தேர்வாகாத நண்பர்களோடு பேசும்போது, அவனது பெற்றோரிடம் பேசும்போது,  அவன் பேராசிரியரிடம் பேசும்போது - என அவன் எல்லா செயல்களின் போதும் தான் ஒரு பெரிய நிறுவனத்தின் 25000 ரூபாய் மாத  சம்பளம் வாங்கும் ஊழியன் என்பதை நினைத்துக் கொண்டே இருந்தான். அவன் செயல்களில் வார்த்தைகளில் கொஞ்சம் கர்வம் தெரிந்தது. கொஞ்சம் திமிர் தெரிந்தது. அல்லது  அப்படி தெரிவதாக மற்றவர்களுக்கு தெரிந்தது.
 
அவன் மாத சம்பளத்தை அவன் நினைத்துப் பார்க்கும் போது அவன் மனம் சிறகு விரித்து முன்னோக்கி பறந்தது.  ஒரு கனவு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். முதலில் ஒரு ஹீரோ ஹோண்டா வண்டி,  2  வருடங்கள் கழித்து ஒரு கார், அவன் அறைக்கு ஏசி, பெரிய டிவி, ஒரு நல்ல ஏரியாவில் வீடு, இணைய வசதியுடன் ஒரு மடிக் கணினி மற்றும் பெரிய ஸ்பீக்கர்கள், ஒரு லேட்டஸ்ட் மொபைல், அம்மா அப்பாவிற்கு அப்போலோ மருத்துவமனையில் மெடிக்கல் செக்கப் . . என அவன் கனவில் மிதந்தான்.  இதுதானே அவன் இஞ்சினியரிங்  படிப்பு சேர்ந்ததில் இருந்து  கனவு கண்ட வாழ்க்கை ! அது இவ்வளவு விரைவில் நனவாகும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை.

எப்பொழுது கால் லெட்டர் வரும், எப்பொழுது வேலைக்கு சேரலாம் என்று எண்ணினான். அதற்குள்,கால் லெட்டர் வரும் வரை, தான் பலமுறை ஆசைப்பட்டு செய்ய முடியாத அனுபவிக்க முடியாத சில விஷயங்களை செய்ய எண்ணினான். ஆமாம் ! பத்தாம் வகுப்பு விடுமுறையில்  கம்ப்யூட்டர் கிளாசுக்கும், 11, 12 ஆம் வகுப்பு விடுமுறைகளில்  கோச்சிங் கிளாசுக்கும் செல்லவே அவனது விடுமுறைகள் செலவாகி விட்டன. அவன் பிறந்து, ஒரு சிறுவனாய், பட்டாம் பூச்சி பிடிப்பதற்கும், திருடன் போலீஸ், கண்ணா மூச்சி  விளையாடுவதற்கும், பாட்டு பாடி களித்தாடுவதற்கும் அவனுக்கு வாய்ப்பே இருந்ததில்லை. அந்த நேரங்களை எல்லாம் physics டியூஷனும் maths டியூஷனும் coaching கிளாசும் களவாடிக் கொண்டன. கல்லூரி வாழ்க்கை சென்னையில் ஹாஸ்டலிலும் தனியார் கணினி பயிற்சி மையத்திலும்  ப்ராஜெக்டிலும் கழிந்தது. இப்பொழுது அவன் கண் முன்னால் நான்கு மாதங்கள் ; பள்ளிக் கூடத்தின் ஹோம் வொர்க் இல்லை; கோச்சிங் கிளாஸ் இல்லை ; கல்லூரியின் ப்ராஜெக்ட் இல்லை ; அவன் அவனாக இருக்க ஆசைப் பட்டான். அதனால்தான் அந்த "கால் லெட்டர்" எப்போது வேண்டுமானாலும் வரட்டும், வரும் போது வேலைக்குப் போகலாம்; அது வரை அதை பற்றி கவலை இல்லாமல் இருப்போம் என நிம்மதியாக இருந்தான் செந்தில்குமார்.
  
 ஒரு நாள் காலை மதுரையின் முக்கிய வீதிகளில் அப்பாவின் சைக்கிளில் சுற்றி வந்தான். அங்கங்கு இருக்கும் டீ கடைகள், பூ கடைகள், பெரிய நெற்றிப் பொட்டுடன் பூ விற்கும்  பெண்கள், ஆவின்  பூத்கள், செருப்பு தைக்கும் ஸ்டால்கள், கரும்புச் சாறு வண்டிகள் பரோட்டா கடைகள், என எல்லாம் புதிதாகத் தெரிந்தது. இந்த வீதிகளுக்கேல்லாம் அவன் வந்ததே இல்லை. ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா அம்மாவுடன் ஒரு முறை அழகர் திருவிழாவிற்கு வந்ததுதான் அவன் ஊரைப் பற்றிய பழைய நினைவாக இருந்தது. ஆட்டுக் குடலில் வண்ண நீர்  நிறப்பி அதை சிலர் பீய்ச்சி அடித்ததும், அப்பா  ராட்டினம் சுற்ற ஐந்து  ரூபாய் காசு கொடுத்ததும், ஜிகர்தண்டா வாங்கித் தர மறுத்ததும் இன்றும் அவன் நினைவுகளில் உள்ளன. இத்தனை வருடங்களில் இந்த வீதிகளில் பெரிய பெரிய கட்டடங்கள் வந்து விட்டன. மதுரை அவனுக்கு புதிதாகத் தெரிந்தது.
 
அவனுள் இருந்த 25000 ரூ. சம்பளக்காரன் மறுபடியும் தலை நிமிர்ந்தான். டீக் கடை ஊழியர்கள், பூ விற்கும் பெண்கள், பரோட்டா போடும் பெரியவருக் கெல்லாம் மாசம் எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்ள ஆசைப் பட்டான். அந்தந்த கடைகளில் நின்று டீ வாங்கி, பரோட்டா வாங்கி, பேச்சு கொடுத்து அதை தெரிந்து கொள்ள  முயற்சி செய்தததில் , இவர்கள் யாருக்கும் மாதம் 3500 ரூபாய்க்கு மேல் வருமானம் இல்லை என்பதை தெரிந்து கொண்டான். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இவர்கள் வாழ்வை  நடத்துகிறார்கள் என்று. அவர்களைப் பரிதாபமாக பார்த்தான். ஆனால் இம்முறை ஏனோ, இவன் சம்பளத்தை எண்ணி பெருமை கொள்ள முடியவில்லை. அன்று முழுவதும் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.
 
  பக்கத்து தெருவில்  சிவப்பு கொடிகளுடன் மதுரை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி ஒரு மாதமாக மேற்கொள்ளப் படாததால் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று சொல்லி ஒரு பத்து பதினைந்து பேர் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அந்த கட்சி தொண்டர்களே அந்த சாலையில் இருக்கும் குப்பையை நீக்கிக் கொண்டிருந்தனர்.  மாநகராட்சி மேயர் உடனே நடவடிக்கை இடுக்க வேண்டும் என்று ஒரு தாடி வைத்தவர் பேசிக் கொண்டிருந்தார். 
 
" ஓ . . பரவாயில்லையே ! இதையெல்லாம் பேசுவதற்கு கூட ஆட்கள் இருக்கிறார்களா ? பாவம் இந்த பதினைத்து பேர் என்ன செய்ய முடியும் ?"  என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றான்.
 
இரவு படுக்கும் போது தன் சம்பளத்தில் என்ன வாங்கலாம் என யோசித்தான். ஒரு ஹீரோ ஹோண்டா, லேப் டாப் , நல்ல மொபைல், lcd தொலைக் காட்சி, என பட்டியல் நீண்டுகொண்டே போனது. ஆனால் இவனுடைய தேவைகள் பெரும்பாலும் அவன்  அப்பாவினுடைய தேவைகளாக இருந்ததில்லை. அதெல்லாம் அப்பாவிற்கு ஆடம்பரம். ஆமாம். ஒரு தலைமுறைக்கு ஆடம்பரமாக இருக்கும் பொருட்கள்  அடுத்த தலைமுறைக்கு தேவையாக மாறி விடுகிறது.முந்தைய தலைமுறை பார்க்கவே பார்த்திராத பொருட்களும் அடுத்த தலைமுறைக்கு தேவையாக மாறி விடுகிறது. செந்திலின் தாத்தாவிற்கு tvs 50  ஆடம்பரம்;  செந்திலின் அப்பாவிற்கு அது தேவை. செந்திலின் அப்பாவிற்கு லேப்டாப் தேவையற்றது ; செந்திலுக்கு அது தேவை. பல பேருக்கு முந்தைய தலைமுறையினருக்கு ஆடம்பரமாக இருந்ததை தனக்கு தேவையாக மாற்றிக் கொள்ளவே வாழ்க்கை சரியாக இருக்கிறது. ஏதோ ஒரு சிலபேருக்கு தங்கள் தலைமுறையின்    ஆடம்பரத் தேவையை நிறைவு செய்வது சாத்தியமாகி விடுகிறது.
 
அப்பொழுதுதான் செந்தில் நினைத்தான், தன் 25000  சம்பளத்தில் தனக்கு வேண்டியவற்றை எல்லாம் வாங்க இந்த சம்பளம் போதாது என. இளங்கோ சார் அடிக்கடி சொல்வதும் நினைவிற்கு வந்தது. " ஏண்டா எல்லாரும் எவன்டா வேலை கொடுப்பான்னு காத்துகுட்டு இருக்கீங்க. நீங்க சொந்தமா தொழில் செஞ்சு ஆயிரம் பேருக்கு வேலை கொடுங்கடா. .  கொஞ்சம் முதலீடு இருந்தா போதும்டா. அம்பானி பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சவருடா, இன்போசிஸ் நாராயணமூர்த்தி பத்தாயிரம் போட்டு பிரண்ட்சோட ஆரபிச்சதுடா அந்த கம்பெனி. கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு மூளைய உபயோகிச்சா நீங்க கோடீஸ்வரனா ஆயிடுவீங்கடா. " அந்த வார்த்தைகள் அவனுக்கு மந்திரமாகப் பட்டது. சரி. . வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் தன்னால் முடியுமா ? எவ்வளவு முதலீடு வேண்டும் ? எப்படி வேலைக்கு ஆள் தேடுவது ? எப்படி கிளைன்ட் பிடிப்பது ?  சரி . யோசிப்போம். .முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைத்தான். டி.வி , சினிமா பார்ப்பது, தூங்குவது, தினமலர், ஆனந்த விகடன் படிப்பது என்று அவன் பொழுதுகள் கழிந்தன. அவ்வப்போது எப்படி சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.திடீரென அவனுக்கு தான் அதில் வெற்றி பெற்று விட முடியும் என நம்பிக்கை வந்தது. சாப்ட்வேர் தொழில் பற்றிய நிறைய யோசனைகள்  வந்தன. அவனது ஆசை சாத்தியமாகும் என்று நம்பிக்கை வளர்ந்து கொண்டே இருந்தது. தான் ஒரு 25000 ஊழியன் என்பதை விட தான் ஒரு சாப்ட்வர் நிறுவன எம்.டி ஆகப்போகிறவன் என்று நினைக்கத் தொடங்கினான்.      

செந்திலுக்கு பிரேமா சித்தியை அவ்வளவு பிடிக்கும். முன்பெல்லாம்  சித்தி, சித்தப்பா, அமுதாவை அழைத்துக்கொண்டு  மதுரைக்கு வருவதும், இவர்கள் விழுப்புரம் பக்கத்தில் உள்ள "ஒலையூருக்கு" செல்வதும் வழக்கமாகி இருந்தது. சித்தப்பா குடும்பத்தில் அதே ஊரில் ஸ்வீட் ஸ்டாலும் உறக்கடையும் வைத்திருக்கிறார்கள். சித்தி இவனை பத்தாம் வகுப்பு விடுமுறையிலிருந்து ஒலையூருக்கு வந்து ஒருவாரம் தங்கியிருக்கும் படி கேட்டுக்  கொண்டே இருந்தாள். சென்ற வாரம் பிரேமா சித்தி அம்மாவிற்கு போன் செய்த போது, மறுபடியும் செந்திலை ஒலையூருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறாள்.  செந்தில்  அம்மா செந்திலை ஒலையூருக்கு அனுப்பியும் வைத்தாள். 

     ஓலையூர் செந்திலுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. வயல் வெளி, ஆல மரங்கள், குறுகிய சாலைகள், அமைதியான தெருக்கள், குறுக்கும் நெடுக்கும் போகும் மாடுகள், ஆடுகள், கோழிகள் என ஓலையூர், செந்திலுக்கு ரம்யமாக இருந்தது . பிரேமா சித்தியும் செந்திலை அவ்வளவு அன்புடன் கவனித்துக் கொண்டாள். ஊரை சுற்றிப் பார்க்க ஆவலுடன் அந்த தெருக்களில், வயல் வெளிகளில் நடந்தான். ஒரு பக்கம் கரும்பும், மறு பக்கம் நெல்லும் பயிடப் பட்டு அழகான வயல் வரப்பு, பெரிய மரங்களின் நிழல்கள்; அப்படி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தான். அந்த மர நிழல்களில் அவனுக்குப் பிடித்த யாமினியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. 

 பக்கத்தில் இருந்தவர்கள் இவனிடம் " சாமி. . எந்த ஊரு சாமி நீயி ? விருந்தாளியா ? யார் வீட்டுக்கு வந்திருக்க ?" என்றனர். 
 
"ஆமாம். சித்தி வீட்டுக்கு வந்திருக்கேன். என் ஊரு  மதுரை". என்றான். "ஓ பிரேமா அக்க பையனா நீயி. எப்புடிப்பா இருக்க. அம்மா நல்லார்கான்களா ? அப்பா இந்த வருஷம் ரிடைர் ஆகராருல ?" என்றனர்.

  " ம்ம்ம்ம் . .ஆமாம்."

" உனக்கு வேலை கிடைச்சதுல பிரேமாவுக்கு அவ்ளோ சந்தோஷம் !  நல்ல இரு சாமி " 

". ம்ம்ம்ம் ...நீங்க........" 
 
இவன் பேச ஆரம்பித்தது அவர் காதில் விழும் முன்பு, பக்கத்து நிலத்தில் ஆடு மேய்வதைப் பார்த்து  பதறிப் போனவராய் " ஏ.... லச்சுமி சென ஆடு இருந்தா ஓட்டிட்டு போய்டு. அங்க எள்ளு போட்ருக்கேன். மேஞ்சிட போகுதுங்க "
 
" ஓ ஆடுகளால இந்த பிரச்னை எல்லாம் வருமா ? ஏன். . மத்த ஆடுக மேஞ்சா பறவாயில்லையா ? "
 
"பிரச்சனையை ஏதும் இல்ல சாமி. சென ஆடு எள்ளு செடிய மேஞ்சா கரு சிதைஞ்சுடும். . .அதான் சொன்னேன். அந்த சிறுக்கிக்கு நான் எள்ளு போற்றுகறது தெரியாது "
 
"....ஓ ....."
 
"சரி சாமி . . நான் வரேன்... பத்திரமா வீட்டுக்கு போய்டு. ஏதாவது பூச்சி போட்டு கடிச்சிட போகுது  " என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
 
"வாழ்க்கையை இப்படியும் வாழ முடியுமா ? பூமியில் இருக்கும் செடி கொடிகளுடன்,  மக்களுடனும் மற்ற உயிரினங்களுடனும்  தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டு அமைதியாக வாழ்கிறார்களே ! " என்னை "சாமி ..." என்று வாஞ்சையுடன் அழைத்தது அழகாக இருந்தது. தன்னுடைய படிப்பும் வேலையும் கொடுத்த அந்தஸ்துதான் "சாமி " என்று அழைப்பதற்கு காரணமோ ? எனக்கு அவர்கள் வாழ்க்கை மேன்மையாக படுகிறது. அவர்களுக்கு என்னுடைய படிப்பு மேன்மையாக படுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் வேலையும் அவர்கள் வாழ்க்கையுமே மேன்மை".... மெதுவாக வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தான்.  
 
"நானும்  விவசாயம் செய்தால் என்ன ?  நாம் சாப்பிடும் அரிசியை, பருப்பை நாமே பயிரிட்டு மற்றவர்களுக்கும் கொடுப்பது எவ்வளவு அழகான வாழ்க்கை ! சரி. . நாம் விவசாயம் செய்வதை பற்றி யோசிப்போம். அம்மாவும் அப்பாவும் என்னை அனுமதிப்பார்களா ?"
 
இஞ்சினியரிங் படித்த ஒரு IIT  மாணவர் விவசாயம் செய்யும் செய்தியை இளங்கோ சார் சொன்னதும் நினைவுக்கு வந்தது. பாசமான சித்தி வீட்டிலிருந்து அழகான  ஒலையூரிலிருந்து  இரண்டு நாட்களில் புறப்பட்டான்.
 
 தனக்கு வேலை கிடைத்தை   tvs  கம்பெனியில் அப்பாவின்  நண்பர்களெல்லாம் விருந்து கேட்டிருக்கின்றனர். ஒரு நாள் மாலை
அப்பாவின் டிவிஷனில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஒரு முப்பது பேருக்கு, பப்ஸ், மிக்சர்,ஒரு ஹனி கேக்,  பாதாம் பால், ஐஸ் கிரீம் ஆகியவையுடன் ஒரு சின்ன பார்ட்டி வைப்பதாகவும் அதற்கு செந்திலையும் மாலை ஐந்து மணிக்கு அங்கு வருமாறும் கூறினார்.  செந்திலும் ஒரு வி. ஐ.பி மிடுக்கில் அங்கு சென்றான். அனைவரும் கை குலுக்கி பாராட்டினர். "அப்பாவின் சுமையை குறைச்சுட்ட.. அப்பா அம்மாவ பத்திரமா பாத்துக்க. " என்று ஒருவரும், "ம்ம்ம்ம் ..... அப்புறம் என்ன சீக்கிரம் கார் வாங்கிடு " என்று இன்னொருவரும் கூறினார்.
 
  பிறகொரு நாள் மதுரை வீதிகளில் ' வளம்' வரும்போது அதே சிவப்பு கொடிகளுடன் அந்தக் கட்சியின் விவசாயக் கிளை தானியக் கொள்முதல் சரியாக நடை பெறாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் நியாயமான கொள்முதல் நடைபெற வேண்டும் என்று அதே தாடிக்காரர் பேசிக் கொண்டிருந்தார். ஒலையூரில் விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு அதற்கு மேலும் கொள்முதல் பிரச்சினையால் கஷ்டமா ? பிறகு அவர்கள் எதற்குதான் விவசாயம் செய்கிறார்கள் ? ஐயோ ! பாவம் ! என்று எண்ணினான். இப்பொழுதுதான் அவன் நினைவிற்கு வந்தது அந்த சிவப்பு நிறக் கொடியை சென்னையிலும் அடிக்கடி பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவர்கள் மேல் கோவமாக வரும். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மைக் வைத்து ஏதோ கத்திக் கொண்டிருப்பார்கள். அவசரம் அவசரமாக போகும் மக்களின் நேரத்தை வீண் செய்கிறார்களே என்று திட்டிய்ருக்கிறான். அவர்கள் வேறு எங்குதான் பேசுவது ? மக்கள் பிரச்சினையை மக்களிடம்தானே பேச முடியும் ?  இப்போது அவர்கள் மீது  மதிப்பு வந்தது. இவர்களாவது இந்த பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார்களே. பேசாமல் அந்தக் கட்சியில் சேர்ந்து தானும் பொது மக்களுக்கு உழைக்கலாமே என்று தோன்றியது
 
  வீட்டிற்கு வந்ததும்   " வாடா . .எங்கடா போன. உனக்கு பிடிச்ச ஆப்பம் செஞ்சிருக்கேன். நீ வேலைக்கு போய்ட்டா எப்ப  இதெல்லாம்  உனக்கு செஞ்சி போடறது ? வா... சீக்கிரம் சாப்பிடு" என்றாள்  அம்மா. அம்மா ஆசையாக செய்த ஆப்பத்தை தேங்காய்ப்  பாலில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தான் ஏன் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை ? சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிப்பது, விவசாயம் செய்வது, கட்சியில் சேர்வது என குழம்பிப் போயிருக்கிரேனே என்று நினைத்துக் கொண்டிருந்தான். 
 
"சார் கொரியர் . . . "

கையெழுத்திட்டு அந்த கூரியரை வாங்கினான். அவன் ஆவலோடு எதிர் பார்த்த கால் லெட்டர். ஆனால் முன்பு இருந்த அளவுக்கு  ஆவல், எதிர்பார்ப்பு   எதுவும்  இப்பொழுது இல்லை. பிரித்தான். அவன் நினைத்த "த்ரீ லேக்ஸ் பர் ஆனம் " என்று குறிப்பிட்டு பதினைந்து நாட்களில் அவனை வேலைக்கு சேருமாறு அந்த கால் லெட்டர் அழைத்திருந்தது. அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அளவில்லாத சந்தோஷம். அம்மா துணி மற்றும் செந்திலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள். 

ஒரு வாரத்தில் செந்தில் சென்னையில்  உள்ள அந்த நிறுவனத்தில்  சேர்ந்தான். செந்திலுடன் அவினாஷ், ஜகன், யாமினி, ப்ரியா, சங்கர நாராயணன், மைக்கேல் , பிரகாஷ்,  என்று அனைவரும் அதே மாதிரி வேறு  வேறு நிறுவனங்களில்  சேர்ந்தனர்.
 
- ஞானபாரதி
Pin It