செந்தில் டீ - காபி ஸ்டால். மாலை நான்கு மணி.

"டேய் .. மதியம் சாப்டியாடா ?"

 "கைல காசு இருக்கா ?"

 "இன்னைக்கு எங்கடா போன ? "

"சரிடா .. நைட்டு நான் வர லேட் ஆகும். நீ சாப்ட்டு ரூமுக்கு வந்துடு" என்று தன் தம்பி ஸ்ரீகாந்த்திடம் பேசிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தான் ஸ்ரீநாத். ஸ்ரீகாந்த் ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ , எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடுவதற்காக சென்னையில் தன் அண்ணனுடன் ஒரு வாரமாக தங்கி உள்ளான். ஒவ்வொரு நாளும் தன் சுயவிவரப் படிவத்தை எடுத்துக் கொண்டு வேறு வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வேலை தேடி வருகிறான் ஸ்ரீகாந்த்.

ஒரு கையில் பற்ற வைத்த சிகரெட் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து கொண்டிருக்க, மறு கையில் செல்போனில் " சார் ... இப்பதான் ராஜகோபால் டாக்டரப் பாத்துட்டு வரேன். கண்டிப்பா எழுதறேன் னு சொல்லியிருக்காரு சார்... நேத்திக்கே கிரிதரனப் பாத்துட்டேன் அவருதான் கொஞ்சம் பிடி கொடுக்கல. அந்த கம்பெனில அந்தமான் 2 டேஸ் பேக்கேஜ் காம்ப்ளிமெண்ட் தரா.. உங்க கம்பெனில அந்த ஸ்கீம்லாம் இல்லையானு கேட்டார். நாங்க ஏதாவது கான்பரன்ஸ்க்கு வேணா பண்ணித் தரோம்னு சொல்லிருக்கேன் சார். அது மட்டும் கொஞ்சம் அப்ரூவல் வாங்கி பண்ணிக் குடுக்கணும் சார்." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்த நண்பர்களின் சிரிப்பு சத்தம் கேட்டதால், சிகரெட் கையை தன் உதடுகள் மீது வைத்து புருவங்களை உயர்த்தி சத்தம் போட வேண்டாம் என்று சமிக்ஞை செய்து விட்டு பிறகு தொடர்ந்தான்.. "அப்புறம் அவரும் கண்டிப்பா எழுதிடுவாரு. இன்னைக்கு காத்தால டாக்டர் சுப்ரமண்யம் அப்பாயிண்ட்மெண்ட் சார். ஆனா அவரு ஒரு எமர்ஜென்சி கேஸ்க்கு தியேட்டர் போய்ட்டார். அதான் பாக்க முடியல.. அடுத்த வாரம் பாத்துடறேன் சார். இன்னைக்கு நைட் 9 மணிக்கு டாக்டர் நாச்சியப்பன் அப்பாயின்மென்ட் ... பத்தரை மணிக்கு டாக்டர் ஜோசப் அப்பாயின்மென்ட் சார்... அவரு எப்பையுமே நமக்கு நல்ல சப்போர்ட் சார் . கண்டிப்பா எழுதிடுவாரு.. பாத்துட்டு உங்களுக்கு சொல்றேன் சார்.. " என்று அவசர அவசரமாக தன் உயரதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தான் ஸ்ரீநாத்.

ஸ்ரீநாத் எழுதுவது என்று சொல்வது டாக்டர் நோயாளிக்கு மருந்துச் சீட்டில் எழுதும் மருந்துகளைப் பற்றி. ஸ்ரீநாத் வேலை பார்க்கும் மருந்துக் கம்பெனி இருதய நோய் சம்மந்தப்பட்ட மாத்திரைகளை தயாரிக்கிறது. அதை ஸ்ரீநாத் விற்க வேண்டும். மருந்து விற்பனைப் பிரதிநிதிக்கு மருந்து விற்பதுதானே வேலை. டாக்டர்கள் இவர்கள் விற்கும் மாத்திரையை எழுதி அதை நோயாளிகள் வாங்கினால்தான் மருந்து கம்பெனிகளுக்கு வருமானம். அதனால்தான் டாக்டர்களை இந்த மருந்தை எழுதச் சொல்லிவிட்டு வருகிறான் ஸ்ரீநாத்.

பேசி முடித்தவுடன், வெங்கடேசன் கேட்டான் " மச்சான் .. எப்படி உன்னால இப்டி சிரிக்காம பொய் பேச முடியுது ? எல்லா டாக்டரும் எழுதிடுவாங்களா ?? " என்று கிண்டலாகக் கேட்டான். வெங்கடேசன் ஒரு ஒரு இன்சூரன்ஸ் விற்பனைப் பிரதிநிதி. வெங்கட்டும் ஸ்ரீநாத்தும் கடலூரில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். வெங்கட் எட்டாம் வகுப்பு தேறாமல் ஸ்ரீநாத்துடன் எட்டாம் வகுப்பை இரண்டாம் முறை படித்தான். அப்போதிலிருந்து இருவரும் நண்பர்கள். பொறியியல் படித்தால் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அவனுக்குக் கிடைத்தது இன்சூரன்ஸ் விற்பனைப் பிரதிநிதி வேலைதான்.

"டேய் நீ மட்டும் அப்படியே உண்மைதான் பேசறியாக்கும். ஒரு லட்சம் போட்டா 5 வருஷத்துல ரெண்டு லட்சம் ஆகும்னு பொய் சொல்லி நீங்க கமிஷன் அடிக்கறீங்க இல்ல.. அது மாதிரிதான் . " என்று சொல்லிவிட்டு இருவரும் சத்தமாகச் சிரித்துக் கொண்டார்கள். செந்தில் டீக் கடையில் தேநீர்க் கோப்பையும் சிகெரெட்டுமாக இருந்த அனைவருமே அவர்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விற்பனை பிரதிநிதிகள்தான். மொபைல் சிம் கார்டு விற்பவர்கள் , தண்ணீர் சுத்தப் படுத்தும் இயந்திரம் விற்பவர்கள், பத்திரிகைகளில் விளம்பரம் விற்பவர்கள், மளிகைக் கடைகளுக்கு புதிய பொருட்கள் விற்பவர்கள், CC TV கேமரா விற்பவர்கள். கட்டிய வீட்டை விற்பவர்கள், வீட்டுக் கடன் விற்பவர்கள், பெர்சனல் லோன் விற்பவர்கள், இன்சூரன்ஸ் விற்பவர்கள், இரு சக்கர வாகனம் விற்பவர்கள் என்று அந்த இடம் முழுக்க இவர்கள் நிரம்பி இருந்தார்கள். இவர்களின் உலகு ஒரு மாய உலகு. அந்த உலகில் எப்போதும் யாராவது எதையாவது விற்றுக் கொண்டே இருப்பார்கள். யாராவது எதையாவது வாங்கிக் கொண்டே இருப்பார்கள் .

 விற்பனை பிரதிநிதிகளை, அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றாலும்... மேல் சாதி- கீழ் சாதி, நிலக்கிழாரின் வாரிசு- ஏழையின் வாரிசு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் - கலை அறிவியல் பட்டம் பெற்றவர்கள், இளையராஜா ரசிகர்கள் - ஏ. ஆர். ரகுமான் ரசிகர்கள், ஆத்திகன் - நாத்திகன், அரசுப் பள்ளியில் படித்தவர்கள் - தனியார் பள்ளியில் படித்தவர்கள் என்று அவர்களின் அடையாளம் எதுவாக இருந்தாலும், இந்த உலகில் அவர்களின் அடையாளம் வேறு. இருசக்கர வாகனமும், பெல்ட் அணிந்து இறுக பேண்டில் சொருகப்பட்ட சட்டையும், காலில் அந்த ஊரின் எல்லா தெருக்களின் தூசி படிந்த ஷூக்களுமே இவர்களின் அடையாளம். அது மட்டுமல்ல, நீங்கள் இவர்களை சுலபமாக இரண்டே பிரிவாகப் பிரித்து விடலாம். - அந்த மாத விற்பனை இலக்கை எட்டியவர்கள் - விற்பனை இலக்கை எட்டாதவர்கள். அவர்கள் வாழ்வைத் தீர்மானிப்பது இரண்டே எண்கள் தான் - அந்த மாத விற்பனை இலக்கு, அவர்கள் எட்டிய விற்பனை. அவர்கள் என்ன பொருள் விற்றாலும் இந்த இரண்டே எண்களில் அவர்களின் வாழ்வை அவர்களின் முதலாளிகள் சுருக்கி விடுவார்கள். அந்த இரண்டு எண்கள் தான் அவர்களின் மாத வருமானத்தை நிர்ணயிக்கும்.

 இவர்களின் உரையாடலைக் கேட்டு கேட்டு இவர்களின் உலகம் டீக் கடை செந்திலுக்கு நன்கு பரிச்சயம். சிலர் புன்னகையுடன் இருந்தால் "என்னப்பா.. இந்த மாசம் டார்கெட்லாம் முடிச்சிட்டியா ? சந்தோஷமா இருக்க ?" என்று விசாரிப்பார். ஸ்ரீநாத்தை அப்படி ஒரு முறை விசாரித்திருக்கிறார். சுந்தர மூர்த்தியையும் விசாரிப்பார். சுந்தரமூர்த்தி தன் சொந்த ஊரான மேலூர் பையன் என்பதால் அவனிடம் கொஞ்சம் அன்போடும் அக்கறையோடும் பேசுவார். அவருக்குத் தெரிந்த தெருக்களில் புதிதாக ஏதாவது அலுவலகம் திறந்தாலோ, தொழில் தொடங்கினாலோ, சுந்தர மூர்த்தியிடம் சொல்வார். சுந்தர மூர்த்தி அந்த அலுவலகத்திற்குச் சென்று தங்கள் கம்பெனி CC TV கேமராவை வாங்கிக் கொள்ளுமாறு பேசி விட்டு வருவான். சிலர் வாங்குவார்கள். சிலர் விரட்டியடிப்பார்கள். விரட்டியடிப்பதெல்லாம் இந்த வேலையில் இருப்பவர்களுக்கு, சில நாட்களிலேயே பழகியிருக்கும்.

ஸ்ரீநாத் சென்னை வந்த சில மாதங்களிலேயே வெங்கட்டும் சென்னை வந்துவிட்டான். வின்சென்ட் ராஜ் வரும் வரை இருவரும் திருவல்லிக்கேணி ராமநாதன் மேன்ஷனில்தான் தங்கி இருந்தார்கள். பிறகு எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் மாத வாடகைக்கு ஒரு சிறிய வீடெடுத்து அடையாறுக்கு மாறினார்கள். வீடென்றால் அது வீடு இல்லை. இரண்டு சிறிய அறைதான். அதில் ஒரு மேடையும் தொட்டியும் கட்டப்பட்டு சமையலறை போல் காட்டப்பட்டிருந்தது. வின்சென்ட் ராஜ் இவர்களுக்கு ஒரு வருடம் பள்ளியில் ஜுனியர். பத்தாம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமா படிக்கப் போய்விட்டான். கடலூரில் வேலை ஏதும் கிடைக்காததால், சென்னைக்கு வந்து, இணையதளத்தில் விற்கப் படும் பொருட்களை டெலிவரி செய்யும் வேலைக்குச் சேர்ந்தான். ஒருவாரமாக தம்பி ஸ்ரீகாந்த் பற்றித்தான் அவர்கள் அறையில் பேச்சு. எம்பிஏ படித்திருக்கிறான். அவனுக்கு எந்த மாதிரி வேலை கிடைக்கும். அதை எப்படி தேட வேண்டும். சிபாரிசு செய்ய யாரேனும் இருக்கிறார்களா என்று தம்பிக்கு நல்ல வேலை கிடைப்பதற்காக ஸ்ரீகாந்த் வந்த நாள் முதல் சதா ஆலோசனை செய்து கொண்டே இருந்தனர். மூவரும் ஒன்றை மட்டும் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்திக் கூறிக்கொண்டே இருந்தனர். அதாவது அவனுக்கு நிச்சயம் இந்த விற்பனை பிரதிநிதி வேலை வேண்டாம். வேண்டவே வேண்டாம். அவனுக்கேற்ற வேலை கிடைக்க தாமதமானாலும் பறவாயில்லை. ஆனால் இந்த வேலை மட்டும் வேண்டாம் என்று அவனுக்கு அறிவுரை கூறினர்.

வெங்கட் எட்டு மணிக்கு அறைக்கு வந்து விட்டான். "ஸ்ரீகாந்த் .. வா .. சாப்ட்டு வரலாம்.... அவன் வர லேட் ஆகும் ." வழக்கமாக இவர்கள் சாப்பிடும் மெஸ்ஸிற்கு செல்லாமல் பெரிய உணவத்திற்குச் சென்று ஸ்ரீகாந்த் 2 தோசையும், வெங்கட் 4 இட்லியும் சாப்பிட்டு வந்தனர். பில் வந்தவுடன் தனது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டான் ஸ்ரீகாந்த். "டேய் .. உள்ள வெய்டா.." என்றான் வெங்கட். "இல்லண்ணா .. அண்ணன் காசு குடுத்திருக்கான்"... "அப்ப நான்லாம் அண்ணன் இல்லையா ??. வெய்டா உள்ள" என்று சொல்லிக் கொண்டே கார்டை குடுத்து பில் கட்டினான் வெங்கட். தன்னை இப்படி பார்த்துக் கொள்கிறார்களே என்று ஸ்ரீகாந்த் மனம் நெகிழ்ந்தான்.

ஸ்ரீநாத் வருவதற்குள் வின்சென்ட், ஸ்ரீகாந்த் இருவரும் உறங்கி விட்டனர். வின்சென்ட் எப்போதும் சீக்கிரம் உறங்கி விடுவான். நாள் முழுவதும் ஒரு மூட்டையை முதுகில் சுமந்து இருசக்கர வாகனத்தில் அலைந்து ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது டெலிவரி செய்து, ஒவ்வொரு முறையும் அந்த பெரிய பையில் இருந்து ஆர்டர் செய்தவருக்கான உரிய பொருட்களை தேடி எடுத்து, சிலரிடம் பணம் வாங்கி சிலரிடம் கிரெடிட் கார்டு வாங்கி, அவர்களிடம் கையொப்பம் வாங்கி முடித்து அன்றாடக் கணக்கை முடித்துவிட்டு வருவதற்குள் சோர்வாகி தூக்கம் வராமல் எப்படி இருக்கும்? அப்படி சோர்வாகி உறங்கியதில் நிறைய இரவுகள் அவன் சாப்பிடாமல் பசியிலேயே தூங்கியிருக்கிறான்.

அடுத்த நாள் இரவு. "த்தா ... சாவடிக்கறானுங்கடா. இவ்ளோ நாள் நான் பாத்த ஏரியாவத் தூக்கி புதுசா வந்தவனுக்கு குடுக்கறானுங்க. இவ்ளோ நாள் நான் பண்ண வேலை எல்லாம் வேஸ்ட் டா... நான் எல்லா டாக்டர்கிட்டயும் நல்லா பேசி வெச்சிருந்தா அந்த பிஸினெச தூக்கி லட்டு மாதிரி புதுசா வந்தவன் வாய்ல வெப்பாங்களாம் .. த்தா ....." என்று விரக்தியில் வெங்கட்டுடன் பேசிக் கொண்டிருந்தான் ஸ்ரீநாத். "சரி மச்சி.. விடு . உன்னால முடியும்னுதான் புது ஏரியா கொடுக்கறாங்க. இதெல்லாம் சகஜம் மச்சி நம்ம வேலைல.. எவ்ளவோ பண்ணியாச்சு.. இதப் பண்ண மாட்டோமா ?" என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் வெங்கட். பேசிக்கொண்டிருந்த போதே வின்சென்ட்டும் வந்து விட்டான்.

எப்போதாவது வின்சென்ட் அனைவருக்கும் சேர்த்து பீர் வாங்கி வருவான். "மச்சான் கோவமா இருக்கான். பீர் வாங்கி வா", என்று வின்சென்டுக்கு வெங்கட் வாட்சப்பில் செய்தி அனுப்பி இருந்தான். மூன்று பீர் பாட்டில்கள் வர, 'அம்மாவாண்ட அப்பாவாண்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்காதடா " என்று ஸ்ரீகாந்தை எச்சரித்துக் கொண்டே தன் பூணூலைக் கழட்டி ஆணியில் மாட்டினான் ஸ்ரீநாத். 'உங்கண்ணன்.. பூணூலோட பீர் குடிக்க மாட்டான்..தெரியுமா.. அவ்வளவு பக்தி".. என்று சொல்லி விட்டு வின்சென்ட்டும் வெங்கட்டும் சத்தமாகச் சிரித்தனர். பிறகு அவர்கள் மூவர் வாயிலும் வந்த வார்த்தைகள் இவன் அதுவரை கேளாதவை.

கையில் பஞ்ச பாத்திரத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லிய ஸ்ரீநாத்தை இப்படி பீர் பாட்டிலுடன் பார்ப்பது ஸ்ரீகாந்துக்கு இதுவே முதல் முறை. பிறகு நால்வரும் ரமணா மெஸ்ஸில் சாப்பிடச் சென்றனர்.

"அண்ணா.. உனக்கு ப்ரமோஷன் குடுத்தா என்ன போஸ்ட்நா குடுப்பாங்க ? "

" சீனியர் எக்சிக்யூட்டிவ்"

"அப்புறம் .. ? "

"அசிஸ்டென்ட் மேனஜர்"

"அப்புறம்?"

"சீனியர் மானேஜர். அப்புறம் ஏரியா மேனேஜர், அப்புறம் .. ரீஜினல் மேனேஜர் . "

"அந்த போஸ்டுக்கு போய்ட்டா என்ன வேலைண்ணா இருக்கும்? இந்த டார்கெட் பிரச்சினை எல்லாம் இருக்காது இல்லண்ணா?"

".. அப்பயும் இந்த மாத்திரையைத்தான்டா விக்கணும்!" என்று வெங்கட் குறுக்கிட்டு ஒருவித எரிச்சலோடு பதில் சொல்லிவிட்டு, நான்கு தோசை ஆர்டர் செய்தான்.

"அண்ணா .. இன்னைக்கு அந்த பேங்க்ல ஹோம் லோன் சேல்ஸ்ல இன்டெரெஸ்டடானு கேட்டாங்க..... இல்லனு சொல்லிட்டேன்".

"வேணாம்டா .. வேலையே இல்லேன்னாலும் பர‌வாயில்ல . சேல்ஸ் வேணாம்டா".. என்றான் ஸ்ரீநாத்.

"அப்புறம் நீயும் இவன மாதிரி பொலம்பனும்" என்று ஆமோதித்தான் வெங்கட். வின்சென்ட் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 "அண்ணா.. அடுத்த வாரம் வேணா ஊருக்குப் போய்ட்டு வரட்டா ? ஒரு வாரம் கழிச்சு வரேன்".

 "சரிடா.. ஒரு பிரேக் எடுத்து வேல தேடனா நல்லதுதான். போய்ட்டு வா"

அந்த மதிய நேரத்தில் வீட்டு வாசலில் அப்பாவின் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. அதில் முகப்பு விளக்கின் மேலே ஸ்ரீகாந்த என்று ஒரு பக்கத்திலும் ஸ்ரீநாத என்று மற்றொரு பக்கத்திலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. புள்ளிகள் மறைந்து விட்டன. அல்லது கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு தேய்ந்து விட்டிருந்தன. அந்த இரு சக்கரவாகனம் பத்து வருடங்களுக்கு முன் வாங்கியபோது இந்த பெயர்கள் ஒட்டப்பட்டன. "என்னடா.. இளைச்சிப் போய்ட்ட.." என்று அம்மா விசாரிக்க, 'ஏண்டா . வேலை ஏதும் செட் ஆகலையா?" என்று அப்பா சீனிவாசன் விசாரித்துக் கொண்டிருந்தார். சீனிவாசன் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குப் பக்கத்தில் பத்திர எழுத்தர் தண்டபாணியிடம் இருபது ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தண்டபாணிக்கு வலக்கை, இடக்கை எல்லாம் சீனிவாசன்தான். பதிவாளர் அலுவலகத்தில் "அயிரு" என்றால் அனைவருக்கும் பரிச்சயம். அவரைக் கூப்பிடுவது அப்படித்தான். பத்திரப் பதிவு செய்பவர்களிடம் தானாக ஏதும் காசு கேக்க மாட்டார். கொடுத்தால் வாங்கிக் கொள்வார். தண்டபாணி இத்தனை வருடங்கள் அயிரை உடன் வைத்திருப்பதற்குக் காரணம் அவர் நேர்மை, தொழில் சுத்தம். 'அயிரு' தயார் செய்யும் பத்திரங்களில் தண்டபாணி கையெழுத்து இருந்தால், எந்தக் கேள்வியும் கேட்காமல் பதிவாளர் கையெழுத்துப் போட்டு விடுவார். அவருக்குக் கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைத்து விடும். கடந்த ஒரு வருடமாக நிலம், வீடு விற்பனை அப்படியே படுத்து விட்டது. நாளொன்றுக்கு சுமார் நாற்பது பத்திரப் பதிவு நடந்த அலுவலகத்தில் இப்போதெல்லாம் ஐந்தோ பத்தோதான் நடைபெறுகிறது. அப்பா வருமானம் குறைந்து வருவதை பலமுறை வீட்டில் சொல்லி வருந்தியிருக்கிறார்.

தன் நண்பர்கள் சிலர் கடலூரிலேயே வேலைக்குச் சேர்ந்து விட்டார்கள். கார் சர்வீஸ் சென்டரிலும், இன்சூரன்ஸ் கம்பெனியிலும், சிலர் பக்கத்தில் உள்ள புதுவையில் ஏதோ மார்கெட்டிங் வேலையிலும் சேர்ந்திருந்தனர். அவன் கேட்ட ஒருவர் கூட விற்பனை அல்லாத ஒரு வேலையில் சேரவில்லை. இந்த உலகில் விற்பதை த் தவிர‌ வேறு வேலையே இல்லையா என்று எண்ணினான். தான் படித்த எம்பிஏ படிப்பிற்கு தனக்கு நிர்வாகத்தில் சிறந்த வேலை கிடைக்கும், அது வரை தேடுவோம், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை கொண்டான். ஒரு வாரம் கழிந்தது. அப்பாவிடம் தான் மறுபடியும் நாளை சென்னைக்குப் போவதைத் தெரிவித்தான். கிளம்பும் வேளையில் ' என்னடா .. அண்ணன் உனக்கு காசு குடுத்திருக்கான் இல்ல.. " என்று கேட்டுக் கொண்டே முன்னூறு ரூபாய் கையில் கொடுத்து 'செலவுக்கு வெச்சிக்க' என்றார்.

அண்ணன் கொடுத்த காசு எதுவும் இவனிடம் இல்லை. அப்பா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, சென்னை புறப்பட்டான். டிக்கெட் இருநூறு ரூபாய். ரூமுக்கு வந்தடைந்த ஆட்டோ செலவு அறுபது ரூபாய். வீட்டில் வெங்கட் மட்டும் இருந்தான். யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். இந்த மாதம் அவன் இன்சூரன்ஸ் எதுவும் பிடிக்கவில்லை என்றும், இன்னும் பத்து நாட்களில் 5 பாலிசி எடுக்காமல் போனால், அவனுக்கு அடுத்த மாதம் வேலை இல்லாமல் போகும் என்றும் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். அன்றிரவு ஸ்ரீநாத் பணி முடிந்து திரும்பியிருக்கவில்லை. "வெங்கட் அண்ணா .. சாப்டிங்களா " என்றான். "நான் சாப்ட்டேண்டா .. நீ போய் சாப்ட்டு வந்துடு. காசிருக்கடா கைல ..." "இருக்குண்ணா ...". இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு வந்து படுத்து விட்டான்.

மறுநாள் காலை, வேலை தேடுவதில் புதிய யுக்தியைக் கையாள வேண்டும் என்று குளிப்பதற்கு முன் அனைவரும் பேசிக்கொண்டனர். வின்சென்ட் ஒரு யோசனை கூறினான். தான் தினந்தோறும் டெலிவரி செய்யும் ஓ.எம்.ஆர் சாலையில் நிறைய கம்பெனிகள் இருப்பதாகவும், அதில் உயர் பதவிகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் தான் டெலிவரி செய்வதாகவும் அவர்களிடம் தம்பியின் சுயவிவர படிவத்தைக் கொடுத்து வைத்தால் ஏதேனும் வேலை இருந்தால், அவர்கள் சொல்வார்கள் என்றும் கூறினான். போன மாதம் இன்ஜினியரிங் படித்த டெலிவரி பாய் ஒருவன் அவ்வாறுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகவும் சொன்னான். மிகவும் சரியான யோசனையாக அனைவரும் கூறினர்.

"சரிடா .. அப்பா காசு குடுத்தாரு இல்ல? உன்கிட்ட காசு இல்லன்னா என்கிட்ட கேளு ' என்று சொல்லி விட்டு ஸ்ரீநாத் கிளம்பிவிட்டான்.

அன்று காலையிலேயே வின்சென்டுடன் ஸ்ரீகாந்த் கிளம்பி விட்டான். அந்த பெரிய மூட்டைப் பையை வண்டியின் முன்னால் வைத்துக் கொண்டு ஸ்ரீகாந்த் பின்னல் அமர்ந்து கொள்ள, இவர்கள் புறப்பட்டனர்.

 "அண்ணா .. உங்களுக்கு எவ்ளோண்ணா சம்பளம் ?"

"சம்பளம்லாம் இல்ல. எல்லாம் டெலிவரி கணக்குதான். ஒரு டெலிவரிக்கு பதினாறு ரூபா. பெட்ரோல் செலவுல்லாம் நம்மதான் பாத்துக்கணும்"..

 "ஓ .. ஒரு நாளைக்கி எவ்ளோ டெலிவரி குடுப்பீங்கண்ணா?"

"குறைஞ்சது நாப்பது. சில நாள் அம்பது.. தீபாவளி சீசன்லாம் எண்பது கூட வரும். ஆனா அந்த ஒரு மாசம் மட்டும்தான்'

" ஓ .. சூப்பர்ணா ."

" என்னா சூப்பரு...இதைவிட மாதவரம் ஏரியாவுல தினம் அறுபது டெலிவரி. அந்த ஏரியா எனக்கு கிடைக்கல. "

"ஓ ..'

"மத்த ஏரியாலாம் முப்பது கூட தாண்டாது. அப்புறம் பெட்ரோல் செலவு வேற. இங்கன்னா நூறு ரூபாய்க்கு போட்டா ஒரு நாளைக்கு போதும். ஒரே ரோடு. பக்கத்து பக்கத்துலயே கஸ்டமர்ஸ் இருப்பாங்க. மத்த ஏரியா தெருத் தெருவா அலையனும். பெட்ரோல் செலவும் அதிகம். கைல கொஞ்சம்தான் நிக்கும்"

"அப்டி என்னண்ணா வாங்குவாங்க?"

"லேடீஸ் போடற ட்ரெஸ், மேக்கப் ஐட்டம், செருப்பு, ஷூ, குழந்தைங்க விளையாட்ற பொம்மை, மொபைல் போன், லேப் டாப்பு, படிக்கற புக்கு, கிட்சன் ஐட்டம் எல்லாம் வாங்குவாங்க... லேடீஸ் ப்ரா கூட இதுலதான் வாங்குவாங்க" என்று இருவரும் பேசிக்கொண்டே ஓ.எம்.ஆர். வந்தடைந்தனர். பொருட்களை எடுக்க ஸ்ரீகாந்த் உதவி செய்தான். அப்படியே அவன் சுய விவரப் படிவத்தை சிலரிடம் கொடுத்து உதவி வேண்டினர். "இங்க அட்மின் வேலைலாம் இல்லையே" என்று சிலர் சொன்னபோதும் சுயவிவரப் படிவத்தை வாங்கி தங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் கொடுப்பதாகக் கூறினர்.

நடுவில் அவ்வப்போது வின்சென்ட்டும், ஸ்ரீகாந்தும் பேசிக் கொண்டனர். இந்த வேலையில் பதவி உயர்வு எல்லாம் இருக்குமா என்று ஸ்ரீகாந்த் விசாரிக்க, அப்படி எதுவும் இல்லை என்று வின்சென்ட் பதிலளித்தான். ஸ்ரீகாந்த் இவனுடன் வந்தது வின்சென்டுக்கு உதவியாகவே இருந்தது. பொருட்களை அவன் எடுத்துக் கொடுக்க, எடுத்துக் கொடுக்க ஒரு பத்து டெலிவரி கூடுதலாகவே செய்ய முடிந்தது. மூன்று நாட்கள் ஸ்ரீகாந்தும் வின்சென்ட்டும் இப்படியே தொடர்ந்தார்கள். நட்பாய் பேசுபவர்களிடம் சுயவிவரப் படிவத்தை கொடுத்து வந்தனர். அந்த நாட்களில், ரோட்டோரக் கடைகளில் அவர்கள் சாப்பிட்ட உணவுச் செலவை வின்சண்ட்டே பார்த்துக் கொண்டான்.

மறுபடியும் அவன் தன் சுயவிவரப் படிவத்தோடு வேறு வேறு இடங்களுக்குச் சென்று வேலை தேடச் சென்றான். ஒரு கார் விற்பனை மையத்தில் கார் விற்பதற்கான சேல்ஸ் எக்சிக்யூட்டிவாக வாய்ப்பு தர முன் வந்தனர். விற்பனை சம்மந்தப்பட்ட வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டான். வின்சென்ட்டும் வெங்கட்டும் எட்டு மணிக்கே அறைக்கு வந்து விட்டனர். வந்தவுடன் வின்சென்ட் படுத்து விட்டான். வெங்கட் அண்ணன் எதுவும் பேசவில்லை. வந்ததிலிருந்து மொபைலில் மூழ்கிக் கிடந்தான் வெங்கட். ஸ்ரீநாத் இன்னும் அறைக்கு வரவில்லை. எப்போதும் 'சாப்டியாடா' என்று கேட்கும் வெங்கட் இன்று அமைதியாக இருக்கிறான். ஸ்ரீநாத் வருகைக்காக பசியுடன் காத்திருந்தான் ஸ்ரீகாந்த். வெங்கட் உறங்கி விட்டான்.

இரவு பத்தரை மணிக்கு ஸ்ரீநாத்திடம் இருந்து வாட்சப்பில் தான் ஒரு ஹோட்டலில் பார்ட்டியில் இருப்பதாகவும், இரவு அந்த ஹோட்டலிலேயே தங்கி விடுவதாகவும் செய்தி வந்தது. ஸ்ரீகாந்துக்கு நல்ல பசி. தன் பர்ஸை எடுத்துப் பார்த்தான். இரண்டு ஒரு ரூபாய் நாணயமும் வேலை வாங்கித் தருவதாக சொன்ன சிலரது விசிட்டிங் கார்டுகளும் இருந்தன‌. சில வினாடிகள் அமைதியாய் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். பசியில் சோர்வாகி அப்படியே உறங்கி விட்டான்.

எப்போதும் 8 மணிக்கு விடியும் நாள், ஸ்ரீகாந்திற்கு மறுநாள் காலை நான்கரை மணிக்கே விடிந்திருந்தது. வயிறு வலித்தது. வாய் கொப்பளித்து விட்டு பிளாஸ்டிக் கேனிலிருந்த தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் பாட்டில் நிறைய பிடித்து அதைக் குடித்தான். வயிறு ஒரு பக்கம் பிடித்து இழுப்பது போல் இருந்தது. மெதுவாய் கதவைத் திறந்து செருப்பணிந்து தெருவில் நடக்க ஆரம்பித்தான். மிகவும் எரிச்சலுடனும், கோபமான மனநிலையிலும் இருந்தான். யாரிடம் கோபம் ? யாரிடம் அதைக் காட்டுவது எதுவும் அவனுக்குப் புரியவில்லை.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் கொஞ்சம் ஆங்கில பேப்பர்களையும் நிறைய தமிழ் பேப்பர்களையும் ஒரு சிறுவன் அடுக்கிக் கொண்டிருந்தான். இன்னொருவன் அந்த பேப்பர்களில்வேறு சில துண்டுப் பிரசுரங்களை வேகமாக வைத்துக் கொண்டிருந்தான். சிறிது தூரத்தில் காலையில் வந்திறங்கிய மல்லிகைப் பூவையும், ரோஜாப் பூவையும் அடுக்கி தன் கூடையில் வைத்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பாக்கெட் பால் டப்பாக்கள் உயரமாக நின்றிருக்க, வருபவர்களுக்கு சில்லறையுடன் பாக்கெட் பால் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் எதையோ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே விற்பவர்களுக்குத்தான் வாழ்க்கையா என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, தன் கல்லூரிப் பேராசிரியர் நினைவு வந்தது. அவனுக்குத் தெரிந்து விற்காமல் இருக்கும் ஒரே வேலை ஆசிரியர் அல்லது பேராசிரியர் வேலை தான். தான் ஏன் அதற்கு முயற்சிக்கக் கூடாது என்று எண்ணினான். ஆனால் தன் பேராசியர் குணசேகரன் ஒரு முறை மாணவர்களிடம் தங்களுக்குத் தெரிந்த குடும்பங்களில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இருந்தால் அவர்களை அந்தக் கல்லூரியில் எம்பிஏ படிப்பில் சேர தன்னிடம் அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார். கல்லூரி முதல்வர் பத்து மாணவர்களை பேராசிரியர் குணசேகரனை எம்பிஏ படிப்பில் சேர வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக கூறியது ஸ்ரீகாந்த் நினைவிற்கு வந்தது. தானும் இரண்டு மாணவர்களை குணசேகரன் சாரிடம் அழைத்து வந்ததும் நினைவிற்கு வந்தது.

இப்போது அவ்வளவாக வயிறு வலி இல்லை. அல்லது வலி பழகி இருந்தது. அன்று காலை பத்து மணிக்கு அந்த கார் விற்பனை மையத்தில் சேல்ஸ் எக்சிக்யூடிவ்வாக சேர்ந்தான் ஸ்ரீகாந்த்.

அடுத்த மாதம் ஒரு மாலை வேலையில் செந்தில் டீக் கடையில் ஸ்ரீகாந்த் கையில் ஒரு தேநீர்க் கோப்பையுடன் உதட்டில் ஒரு சிகரெட்டுடன் நின்று கொண்டிருந்தான்.

- ஞானபாரதி

Pin It