இந்தக் கதை நிச்சயமாக புறவழிச் சாலை சுங்கச்சாவடி பற்றியோ, அங்கு நீங்கள் எதிர்கொண்ட நீண்ட வரிசையினால் பொறுமையிழந்து மௌனமாகக் கதறும் அலறலைப் பற்றியோ, ,அந்த இடத்தைக் கடந்து போகும் வாகனங்களின் பக்கவாட்டுக் கண்ணாடி பற்றியோ அல்லது குறைந்தபட்சம் வீறிட்டு விரைந்து கடந்து போகும் வாகனகங்களை ஏக்கமுடன் பார்க்கும் பஞ்சர் ஒட்டும் சிறுவனைப் பற்றியோ நிச்சயம் இல்லை.

உங்கள் அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் ஒரு ஆசை இருந்தது. எனக்குள்ளேயே துளிர் விட்டு மனத் தொட்டியில் வளர்த்த ஆசை இப்போது பெருமரமாக கண் முன்னே வளர்ந்து இருக்கிறது. முதலில் என் ஆசையைக் கேட்ட சிலர் என் முகத்திற்கு நேராகவே கேலி செய்தார்கள். பலர் மனதிற்குள்ளாகவே என்னைப் பற்றிய விகாரமான கற்பனையில் என்னிடம் எதுவும் கூறாமல் கடந்து போனார்கள். யார் என்ன கூறினாலும் நான் துளியும் கவலைப்படப் போவதில்லை. எனக்கான நீண்ட பயணத்தைப் பற்றி வீட்டில் உள்ள அனைவரிடமும் பக்குவமாகச் சொல்லிவிட்டுத்தான் பிரியாவிடை பெற்றேன்.

பல மாதங்களுக்கு முன்பு கோயில் வீதியில் பார்த்த அந்தப் பெரியவரின் வீட்டிற்குத் தான் முதலில் சென்றேன். அவரின் வீடு ஊருக்கு அப்பால் சிறிது தொலைவில் இருந்தது. பூச்சு உதிர்ந்த திண்ணையில் அவர் அமர்ந்திருந்தார். நான் வருவதை தூரத்தில் இருந்து பார்த்த அவர், வேகமாக என்னை வரவேற்க எழுந்து வந்து, என் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டார். “வா பெருமாள், இன்னைக்குத்தான் என்னப் பார்க்க வழி தெரிஞ்சதா? கடைசியிலே நீயும் மத்தவங்களைப் போல என்னைத் தேடிக்கிட்டு வரமாட்டையோன்னு பார்த்தேன்” என்று மர்மமாகச் சிரித்தார். “பாராட்டுக்கள் பெருமாள். எதற்கும் கவலைப் படாதே. உனக்கான பாதையே உன்னை வழி நடத்தும். எங்கும் வழி மாறாமல் நம்பிக்கையுடன் செல். நேரான பாதையை தேர்ந்தெடு. உன் தேடலிற்கான விளக்கங்கள் வழி நெடுக உனக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று எனக்கு தைரியம் வளர்த்தார்.

பத்து மாத நடைப்பயணத்திற்குப் பிறகு, கடவுளின் பாதையை கண்டடைந்தேன். கண்ணிற்கெட்டிய தூரம் வரை நேரான புறவழிச் சாலை சாலை. மனதில் புது உற்சாகம் பெருகியது. பயணக் களைப்பும் ஓரளவிற்கு குறைந்தது போலத் தோன்றியது. இனி என் பயணத்தை நேராக தொடர வேண்டியதுதான்.

அரை மணி நேரத் தொடர் பயணத்திற்குப் பிறகு, இடது புறம் ஒரு கிளைச் சாலை பிரிவதைப் பார்த்தேன். சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து சாலையின் சந்திப்பில் இருக்கும் எல்லைக் கல்லில் சாய்வாக அமர்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டேன்.

“ஐயா, தாங்கள் கடவுளை பார்க்கத்தானே வந்திருக்கிறீர்கள்” என்ற குரலைக் கேட்டு கண் விழித்தேன்.

“கடவுளை விரைவில் காண என்னால் நிச்சயம் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் செல்லும் புறவழிச் சாலை உங்களின் மன உறுதியை விரைவில் தளரச்செய்து விடும். ஒரு வேளை நீங்கள் மனம் மாறி எங்களின் கிளை வழிச்சாலை வழியாகப் பயணித்தால் பசுமையான மரநிழலிலேயே மேற்கொண்டு உங்கள் பயணத்தை தொடரலாம். பறவைகளின் ஒலி உங்களின் களைப்பை போக்கி உற்சாகப்படுத்தும். கூடுதலாக ஒன்று. இந்த இளைஞன் உங்களுடனேயே வழித் துணைக்கு கடைசி வரை வருவான். உங்களின் தேவைகளை கவனித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், பயண அசதி தெரியாமல் இருக்க வழி நெடுக புராணக் கதைகளை சொல்லிக் கொண்டும், கடவுளின் புகழ் பாடும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டு வருவான்” என்று கூறிக்கொண்டே அவரின் அருகில் நிற்கும் இளைஞனை அருகில் அழைத்தார். “ராம் இங்கே வாப்பா. இவருக்கான வசதிகளை உடனே செய்து கொடு. இவர் நம்முடைய முக்கியமான அதிதி” என்று அவனிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

அவரின் வேண்டுகோளை உடனே என்னால் மறுக்க முடியவில்லை. தயக்கத்துடன் அவரிடம் “உங்களின் உபசரிப்பிற்கும் வழிகாட்டலுக்கும் மிகவும் நன்றி. நான் புற வழிச் சாலையிலேயே செல்ல விழைகிறேன்” என்று என் கருத்தினைப் பதிவு செய்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு என் வலது பக்கம் மற்றுமோர் கிளைச் சாலை பிரிந்தது. சில மக்கள் அந்தச் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். “எனக்கு மிகவும் அன்பானவர்களே என் அருகில் வாருங்கள். உங்களுக்கான பாதை இங்கிருந்துதான் தொடங்குகிறது” என்று தன் இரு கரங்களையும் மக்களிடம் நம்பிக்கையுடன் நீட்டி அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் ஒருவர் . அவர் என்னை நோக்கி “கடவுளை காணத்தானே நீங்களும் வந்திருக்கிறீர்கள். புத்திசாலியான நீங்கள் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். ஒரு வேளை நீங்கள் புறவழிச் சாலையைத் தேர்ந்தெடுத்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டு இருப்பீர்கள். இதுவரை நீங்கள் கடந்து வந்த புற வழிச்சாலை இனிமேல் கரடுமுரடான முட்பாதையாகத்தான் இருக்கும். எங்கள் கிளைப்பாதை வழியாக நீங்கள் வந்தால் கடவுளை விரைவில் காண உங்களுக்கு நாங்கள் உதவ முடியும்” என்றார்.

“இந்த இளைஞன் உங்களுடனேயே வருவான். பயணக் களைப்பு தெரியாமல் இருக்க உங்களின் பாதங்களை அடிக்கடி குளிர் ஓடை நீரால் கழுவி வாசனைத் திரவியங்களை பூசிடுவான். உங்களுக்கு பசி எடுக்கும் போதெல்லாம் உங்களுக்குப் பரிமாற உப்பிட்ட மீனும், அப்பமும் கொண்டு வருவான்.” என்று அந்த இளைஞனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

“சாலமன், இங்கே வா, வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு இவருடனே செல்” என்று கூறியவர் என் இரு கைகளையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அதில் ஆழ்ந்த முத்தம் பதித்தார். அவரின் அன்பான பேச்சும், என் பயணக் களைப்பும் ஒருசேர எங்கே நான் அவர்களின் பாதையை தேர்ந்தேடுத்து விடுவேனோ என்று தடுமாறிய முதல் தருணமாய் இருந்தது அப்போது. எனினும் என் பயணம் புறவழிச் சாலையிலேயே தொடர்ந்தது

சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மீண்டுமோர் கிளைச் சாலை.

“ஐயா, நீங்கள் பல தடைகளைக் கடந்து கடவுளைப் பார்க்கப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என் தனிமையைப் போக்க சிறிது நேரம் நீங்கள் இங்கேயே ஓய்வெடுத்து என் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு உங்களின் பயணத்தைத் தொடரலாமே” என்று எனக்கு அன்புடன் ஆலோசனை கொடுத்து மயிலிறகால் என் உடல் முழுவதையும் வருடினார்.

“அமீது, இங்கே வாப்பா. சாச்சாவிற்கு ஒரு குவளையில் கஞ்சியும், அதனுடன் இனிப்பான பேரீச்சம் பழங்களையும் உடனே கொண்டு வந்து கொடு. பசியாறிவிட்டு வெகு நீண்ட பயணத்தை அவர் மேற்கொள்ள வேண்டும்” என்று என் தோள்களை உரிமையுடன் அழுத்தி அவரருகில் உட்காரவைத்தார். அவரின் அன்பான உபசரிப்பால் என் களைப்பு பெருமளவு குறைந்தது போலத் தோன்றியது.
“மன்னிக்கவும் ஐயா, தங்களின் அன்பான உபசரிப்பிற்கு மிகவும் நன்றி. தயவு செய்து நான் புறவழிச் சாலையிலேயே மேற்கொண்டு பயணிக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கூறி அங்கிருந்து விடைபெற்றேன்

வழி நெடுக ஏராளமான கிளைப் பாதைகள் குறுக்கும் நெடுக்கமாக இருந்தது. கிளைப் பாதையில் தங்களின் பயணத்தைத் தொடர்ந்த எவரும் மீண்டும் திரும்பி வருவதை நான் பார்க்கவே இல்லை. பொதுவாக அனைத்து மதமும் அன்பையே போதித்தது, பசியாற்றியது. கிளைச் சாலையில் பயணித்த மக்களின் தேவைகள் ஏராளம். சிலர் செய்த பாவத்தைக் கழுவ, சிலர் புண்ணியத்தைத் தேட, சிலர் நிரந்தர மன அமைதி பெற, பலர் பொருளைத் தேட, சிலர் இழந்த பொருளை மீட்க, சிலர் உடல் உபாதைகளைப் போக்க என்று அவர்களின் தேவைகள் நீண்டுகொண்டே போனது.

அதிகமான வெய்யில், தாங்க முடியாத குளிர், தொடர் மழை, ஊழிக்காற்று என்று மாறி மாறி வழிநெடுக தொடர்ந்து கொண்டே இருந்தது. என் பயணமும் நீண்டு கொண்டே போனது. உடல் தளர்ந்து கண்கள் இருண்டது. எப்போது மயங்கி விழுந்தேன் என்று தெரியவில்லை. யாரோ ஒருவர் என் முகத்தில் தெளித்த நீரின் குளுமை என் கண்களை திறக்கச் செய்தது. “ஐயா, கடவுள் உங்களைக் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்” என்று என்னைக் கைத்தாங்கலாக பிடித்து நிற்க வைத்தார். பல நிறங்களிலான திரைச் சீலைகளை விலக்கிக்கொண்டே இருவரும் கடவுளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தோம். கடைசியாக “ஐயா, இங்குதான் கடவுள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். என்னைப் போக அனுமதியுங்கள்” என்று கையசைத்து என்னை தனியாக அங்கேயே விட்டுச் சென்று விட்டார்.

என் மனம் படபடத்தது. உடனே திரையை விலக்கி கடவுளைக் காணத் துணிவில்லை. கடவுள் என்னை எப்படி அழைப்பார் என்று யோசித்துக்கொண்டே திரைக்கு வெளியே பொறுமையின்றி நீண்ட நேரம் காத்திருந்தேன். அங்கு நான் ஒருவன்தான் இருந்தேன். ஒரு வேளை கடவுள் இந்த நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால்...!! சட்டென்று திரையை விலக்கி அவரின் துயிலை கலைக்கக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்தேன். எனினும் கடவுளை நேரடியாகக் காணப்போகிறேன் என்ற என் தவிப்பு காத்திருப்பின் பொறுமையை மெல்ல தின்று தீர்த்தது. சிறிது நேரம் கழித்து வேண்டுமளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு திரைச் சீலையை விலக்கி உள்ளே நுழைந்தேன்.

கடவுள் என்னைப் போலவே உடை அணிந்திருந்தார். வியப்பிலாழ்ந்தபடி தலை நிமிர்ந்து முதன் முறையாகக் கடவுளை நேருக்கு நேர் பார்த்தேன். கடவுள் அச்சு அசலாக என்னைப் போலவே தோற்றமளித்தார். நான் சிரித்தால் கடவுளும் சிரித்தார். பேரானந்தத்தால் நான் அழுதால் கடவுளும் உடன் அழுதார். இப்போது கடவுளுக்கும் எனக்குமான இடைவெளி கண்ணாடி இழைத் தூரம்தான் இருந்தது

- பிரேம பிரபா

Pin It