நகர வாழ்க்கைக்கும், நடுத்தர பட்ஜெட் வாழ்க்கைக்குமிடையே விசை குறைந்த பம்பரம் போல தடுமாறிச் சரியும் நபர்களில் நானும் ஒருவன். பெரு நகரங்களில் இதைப் போன்ற விசை குறைந்து தடுமாறிச் சரியும் பம்பரங்களை பல வடிவங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு வேளை அவர்களைச் சந்தித்து உடன் பயணித்தும் இருக்கலாம். அவர்களின் சுய சரித்திரங்களை ஒரு பொழுது போக்கு நிமித்தம் அரை மனதுடன் நீங்கள் கேட்டு, தலையசைத்தும், உச்சுக்கொட்டியும் இருக்கலாம். அல்லது சிலரைப் போல வெறும் பார்வையாளராகக் கடந்தும் சென்றிருக்கலாம். இந்த பம்பரங்களே இப்படித்தான். சில சமயங்களில் வேண்டிய விசை கொடுத்தும் சில பம்பரங்கள் தடுமாறும். சில நொடிகளில் வேகம் நிலைப்பட்டு ஓரே இடத்தில் சுற்ற ஆரம்பிக்கும். அதற்குப் பிறகுதான் தன் தடுமாற்றத்தின் முதல் நிலையாக சிறிது தடுமாறுவதும், சிறிது நிலைப்படுவதுமான நடிப்பில் தோற்றுப் போய் இறுதியில் தரையில் சரியும். அந்த நேரம் சக மனிதர்களின் சிறிய உதவியால் மீண்டும் சுற்ற ஆரம்பிப்போம் என்பது அந்த பம்பரங்களுக்கே தெரியாது.

காலை மணி எட்டு. புற நகர் மின்சார வண்டியில் வழக்கமான கூட்டம். இருக்கைகளைப் பிடிக்க முதியவர், இளைஞர்களைப் பார்க்கிலும் நடுத்தர வயது மக்கள்தான் மிகவும் உற்சாகமாகச் செயல்பட்டார்கள். செல்லமான குலுங்கலுடன் கடற்கரையிலிருந்து மின்சார ரயில் கிளம்பியது. வேகம் சற்றே சூடு பிடிக்க, மின்சாரக் கம்பங்கள் சீரான ராணுவ ஒழுக்கத்துடன் எதிர் திசையில் அணி வகுத்தது.

“ஏதாவது சாப்பிட்டையா? இல்லை பசியை அடக்கிட்டு இருக்கையான்னு தெரியலை? என்னோட நயினாவும் உன்னை மாதிரித்தான். விசுக்கு விசுக்குனு எங்ககிட்டே கோவிச்சுக்கிட்டு ரயிலேறிக் கிளம்பிடும். ரெண்டு நாளைக்கு மேல எங்களைப் பாக்காம அதுக்கு தாங்காது. ஒரு சமயம் போனவரு போனவருதான்….!”.

சட்டென்று பார்வையை மங்கலாக்கிய கண்ணீரை யாருக்கும் தெரியாமல் இருக்க முகத்தை ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள் அந்த நடுத்தர வயது யுவதி. முந்தானையால் அழுத்தமாக முகம் துடைத்து, ஜன்னல் வழியாக இழந்த எதையோ தேடுபவள் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் . தன் சிறிய மணிபர்ஸின் ஜிப்பை ஒரு சிறிய போராட்டத்துடன் திறந்து, நான்காக மடித்து வைத்த இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டில் ஒன்றை எடுத்தாள். “இந்த வயசிலே வெறும் வயத்தோட இருக்காதேய்யா. முதல்லே ஏதாவது வாங்கி த் துன்னு” என்று கூறி முதியவரின் சட்டைப் பையில் உரிமையுடன் ஐம்பது ரூபாயைத் திணித்து சேத்துப்பட்டில் இறங்கிக் கொண்டாள்.

கூடையின் மேல் வாடிக்கையாளர்களின் பார்வை படுமாறு கனிந்த கொய்யாப் பழங்களை பரவலாக மாற்றி வைத்து அந்தப் பெண் தன் வியாபாரத்தை தொடங்கினாள். மூன்று பத்து ரூபாயில் ஆரம்பித்த வியாபாரம், ஐந்து பத்து ரூபாயிற்கு சரியும் போதுதான் அந்த நடுத்தர வயதுக்காரர் தானே முன் வந்து நல்ல பழங்களாக மூன்றை மட்டும் எடுத்துக்கொண்டு பத்து ரூபாய் கொடுத்தார்.

விற்பனைக்காக கைக்குட்டைகளை வைத்திருந்தான் அந்தச் சிறுவன். “தம்பி, ஒரு கர்சீப்” என்று கேட்ட அந்தக் கல்லூரி இளைஞன் வாயிலில் கம்பியை பிடித்தபடி அலட்சியமாக நின்றிருந்தான். அவனின் துள்ளலான இளமை என்னை கனவு காண வைத்தது. எதிர் காற்றில் முடி கலையாமல் இருக்க ஒரு ராஜாவின் கிரீடம் போல கைக்குட்டையை தலையில் இறுக்கமாக கட்டியிருந்தான். அவன் நெற்றியில் அனல் தெறிக்கும் சே குவாராவின் இரண்டு கண்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்தது. “ஒரு துவைப்புக்கே இந்த கர்சீப் ஜல்லடையா போயி நிச்சயம் பல்லைக் காட்டிடும் தம்பி” என்று எச்சரித்தார் அந்த இளைஞனின் அருகில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர். அருகில் வந்த சிறுவனிடம் “ நீ ஒன்னு கொடு தம்பி” என்று கேட்டு வாங்கிக் கொண்டான் அந்த இளைஞன்.

கைக்குட்டையை மடித்துக்கொண்டே “ரெண்டு வாரத்துக்கு ஒன்னு கண்டிப்பா இந்த தம்பி கிட்டே வாங்கிடுவேன். எவ்வளவோ செலவாகுது. ஒரு ஆளு ஹோட்டல்லே சாப்பிட்டா ரெண்டு ஆளுக்குப் பணம் கொடுக்கறோம். இதையெல்லாம் பாத்தா ஒரு கைக்குட்டைக் காசு அவ்வாளவு பெரிசில்லை சார்” என்றான் அந்த இளைஞன். அவனின் பக்குவமான பதில் அந்தப் பரிந்துரையாளரின் மனதை சிறிது அசைத்திருக்க வேண்டும். அவரும் ஒரு கைக்குட்டையை வாங்கிக்கொண்டே அந்த இளைஞனைப் பார்த்துச் சிரித்தார்.

திடீரென்று ஒரு குழந்தையின் அழுகைக் குரல் அனைவரது கவனத்தையும் ஒரே சமயத்தில் திரும்பிப் பார்க்க வைத்தது. எவ்வளவுதான் போராடியும் குழந்தையின் அழுகையை அந்த இளவயதுத் தாயால் நிறுத்தவே முடியவில்லை. அவளின் அருகில் நின்று கொண்டிருந்த அந்தத் திருநங்கை குழந்தையை வாங்கி கைகளால் வயிற்றை மெதுவாகத் தடவி விட குழந்தை அழுகையை நிறுத்தியது. “வயித்து வலி சரியாயிடுச்சா?” என்று கேட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடமிருந்து பால் பாட்டிலை வாங்கி பால் கொடுத்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தையை தாயிடம் நீட்டினாள். திருநங்கை அமர அந்தப் பெண் நகர்ந்து இடம் கொடுக்க முயற்சிக்க "நான் சைதாப்பேட்டையிலே இறங்கிடுவேன். நீ நல்லா உக்காருடா" என்று அந்தத் தாயின் தோளினை உரிமையுடன் அழுத்தி உட்கார வைத்தாள்.

அடுத்த மாதம் ஓய்வு பெறப் போகும் அந்த முதியவர் அடுத்து வரும் ஓரிரு வருடங்களுக்கு தான் கட்ட வேண்டியிருக்கும் வீட்டுக் கடனிற்கான இ.எம்.ஐ தவணையை நினைத்து மனதிற்குள் மருகிக் கொண்டிருந்தார். உரிமையுடன் மகனிடம் கேட்பதற்கு அவரின் போலியான தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவருடைய மகன் அவரை மீண்டும் வேலைக்குப் போக வேண்டாமென்று எவ்வளவுதான் தடுத்துக் கூறியும் கேட்காமல் தலைமை அதிகாரியிடம் ரெண்டு வருஷத்திற்கு எக்ஸ்டென்ஷன் கேட்டு மனு கொடுத்திருந்தார். அவரின் அருகில் இருந்த வேலை தேடும் இளைஞன் தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான். “ஏங்கேட, எல்லா ஆபீசிலும் செக்கா அறுபதுக்கு மேலே ஒரு பெரிசு நகரவே மாட்டென்னு அடம் பிடிக்குது. இதுலே நமக்கு எங்கேடா வேலை கிடைக்கும்”. அவன் நண்பனும் அதை ஆமோதித்தான். “ஆமாண்டா, ஒரு காயை நகத்துனாதானே பத்து காயி கூடவே நகரும். ஆனா அந்த ஒரு காயை நகத்ததறதுக்குள்ளே நமக்கு வயசாயிடும் போல” என்று ஒருபாடு புலம்பித் தீர்த்தான். நம்பிக்கை இழந்து அந்த இளைஞர்கள் பேசிக்கொண்டதை கேட்ட பெரியவர் மகனிடம் கைபேசியில் தான் அடுத்த புதன் கிழமை ஓய்வு பெறப்போவதாகக் கூறினார்.

“சார், தாம்பரத்திலே இருந்து குபேரப் பட்டியணம் எப்படி சார் போறது?” கட்டம் போட்ட சட்டைக்காரர் அருகில் இருப்பவரிடம் கேட்டார். “குபேரப் பட்டிணமா” என்று ஒரு முறைக்கு இரு தடவை கேட்ட அவரைக் கடந்து அடுத்து இருந்த நடுத்தர வயதுக்காரரிடம் மனைப் பிரிவு வரை படத்தைக் காட்டி மீண்டும் கேட்டார். மாதம் ஐநூரு ரூபாய்த் தவணையில் பத்து வருடங்கள் பணம் கட்டினால் நீங்களும் ஒரு குபேரர்தான் என்ற விளம்பரத்தைப் பார்த்து ஒரு வருடம் பணம் கட்டி, எப்படியும் இன்று தன் குபேர பட்டிணத்தைக் காண ஆவலுடன் வந்திருந்த அவரை மேலும் குழப்பியது அந்த மற்றொருவரின் மிக நீளமான பதில். மனம் சேர்வுற்று லேசான அச்சம் படருவதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருக்க அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் அதிகம் போராட வேண்டியிருந்தது.

பல்லாவரத்தில் நின்ற வண்டி பத்து நிமிடங்களாகக் கிளம்பவில்லை. அலுவலகம் செல்பவர்களுக்கிடையே பல விதமான கற்பனையான விவாதங்கள். “அங்கே பாருங்க சார், ஒரே கூட்டமா இருக்கு” என்று கூறியவர் நிலைமையை கண்டறியக் கீழே இறங்கினார். திரும்பி வரும்போது அனைவரது கவனமும் அவரிடம் திரும்பியது. “பாவம் யாரோ ஒரு பையன் அடிபட்டிருக்கான். நல்ல வேளை! லேசான காயம்தான். மயக்கமாயிட்டான். ஆம்புலன்ஸ்லே ஏத்திக்கிட்டு இருக்காங்க” என்று அவர் கூறியவுடன் பலர் பல விதமாக பேச ஆரம்பித்தார்கள். வண்டி மெதுவாகக் கிளம்பியது. ஜன்னல் வழியாக அனைவரும் விபத்து நேர்ந்த இடத்தைப் பார்த்தோம். தண்டவாளத்தின் அருகில் இருக்கும் சரளக்கற்களில் ஆங்கங்கே சிறிது ரத்தம் தோய்ந்திருந்தது. அனைவரது மனதிலும் அந்த இளைஞனைக் குறித்து இனம் தெரியாத சோகம். அந்த இளைஞன் பிழைக்க நம்பிக்கையுடன் மனதார அனைவரும் ஒரு சேர வேண்டிக்கொண்டோம். விபத்து நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் சே குவாராவின் ஒரு ஜோடிக் கண்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது.

- பிரேம பிரபா

Pin It