விரிந்து பரந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பரப்பு முழுவதும் வெள்ளியாக பிற்பகல் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னியது. ஏரியின் மெல்லியதான நீர் அலைகளின் மீது எண்ணெய்ப் படலமாக இளம் மஞ்சள் ஒளி மெல்ல, மெல்ல ஊர்ந்து படர்ந்து ஒளிரத் தொடங்கியது. பொன்னிற ஒளியாய் சிறிது நேரத்தில் ஏரி மாறியது. பெரிய செம்பழம் ஒன்று அடிவானில் அந்தரத்தில் கருமேக பெரும் மரங்கிளையில் தொங்கிகொண்டு இருந்தது.

“அந்த செம்பழம் எனக்குதான்..”

thookkanankuruvi koodu“இல்ல…இல்ல …நா தான் முதல்ல பாத்தேன். யனக்குதான் அந்த பயம்……”

ஏரியின் பெரிய மதகில் இருந்து வலது பக்கம் பிரிந்து சென்ற மாங்காடு கால்வாய்க்கும் இரண்டு பர்லாங் தூரத்தில் இருந்த கோண மதகு கால்வாய்க்கும் இடையில் இருந்த பூதராஜா கொல்லையின் கரையை ஒட்டி வானுயர்ந்த பனை மரத்தில் இருந்த தூக்கணாங்குருவிக் கூடுகளில் இருந்த இரண்டு குஞ்சுகளும் இடையில் தான் மேற்கு அடிவானில் இருந்த செஞ்சூரியன் யாருக்குச் சொந்தம் என்ற வாய்ச் சண்டை வழக்கம் போலவே நடந்து கொண்டிருந்தது.

“தொணத் தொணன்ன்னு வாயாடாதீங்க…. மூடுங்கடா ..”

என்று அப்பொழுதுதான் பறந்து வந்து அமர்ந்த பெருமூதாட்டி தூக்காணாங் குருவி செல்லமாகத் தன் கொள்ளு பேரப்பிள்ளைகளை கடிந்து கொண்டது. ஒன்றை ஒன்றை பார்த்துக் கொண்ட இரண்டு குஞ்சுகளும் கண்களை சிமிட்டின.

“நாங்க கம்முன்னு இருக்கனும் முன்னா…. நீ ஒரு கத சொல்லுங்க.. நீ ஒரு கத சொல்லு ” என சேர்ந்திசைத்தன.

“ம்ம்..”

“நா வாழ்ந்த கதையை சொல்லவா… நம்ம குலத்தோட கதையை சொல்லாவா….. அழிந்து கொண்டிருக்கும் பூதராசா கொல்லையின் கதைய சொல்லவா…” என்றது பாட்டி குருவி.

“அது யென்ன பூதம்….. ராஜா.. “

“அதெல்லாம் மனுசங்களுக்குத்தான் நமக்கு இல்ல… சும்மா வாட்டியும் அடையாளம்தான். பூதராசா மனுசங்கோட சாமி.. நமக்கு அந்த எரிந்து கொண்ட போகின்ற சூரியனும்…. விளைகின்ற இந்த பூமியும், பொழிகின்ற வானமும் தான் சாமி” என்றது

இந்த உரையாடல் நடக்கும் பொழுது ஏரியின் நீருக்குள் விழுந்த சூரியன் கரைந்து போனான். வண்ணக் கலவைகளின் மேகங்களின் ஓரங்கள் பளபளத்தன. சில நிமிடங்களில் பல நூறு வண்ண வண்ண ஒவியங்களை வானில் வரைந்து தள்ளிவிட்டு மெல்ல, மெல்ல இருள் சூழ்ந்தது. இதையெல்லாம் ஏரியும் பிரதிபலித்தது.

இருபதிற்கும் மேலாக இருந்த கூடுகளில் எல்லாம் குருவிகளும் வந்து அடைந்தன. இரண்டு வகையான கூடுகள் அங்கு இருந்தன. தொப்பி போன்ற அமைப்பில் இரண்டு நுழைவாயில்கள் உடைய வீடுகள் பெரும்பான்மையாக இருந்தன. நீண்ட சுரை குடுக்கைகக்குக் கீழே ஒற்றைக் குழல் நுழைவாயிலைக் கொண்ட பல கூடுகளும் இருந்தன. அந்தப் பெண் பனைமரம் பெரியதாக உயர்ந்து வளர்ந்து விட்டதால் மனிதர்கள் அதில் பனங்காய் பறிக்க ஏறுவதில்லை. இதை அறிந்த கொண்ட பின்புதான் இங்கு தங்கள் குடியிருப்பை துக்கணாங்குருவிகள் கூட்டம் அமைத்துக் கொண்டன.

குளிர்ந்த பசுமை ஒளியை சிதற விட்டு இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு மின்மினிப் பூச்சி அந்தப் பனைமரம் அருகே பறந்து சென்றது. சட்டென்று பாய்ந்து, பறந்த பெருமூதாட்டி தூக்கணாங்குருவி அதை லாவகமாகப் பிடித்து வந்தது.

“எங்க வீட்டிற்கு கொடுங்க பாட்டீ…..”

“இல்லயில்ல…எனக்கு தான் முதல்ல….”

மீண்டும் குஞ்சுகள் கொஞ்சல்களும் கூவுதல்களைத் தொடங்கின.

“பொறு.. பொறு எல்லாருக்கும் எல்லா வீட்டுக்கும் மின்மினிகள் கிடைக்கும்” என்று ஒரு கூட்டில் இருந்த ஈரக் களிமண் உருண்டையில் தான் பிடித்த வந்த மின்மினிப் பூச்சியை அந்தக் குருவி பதித்தது. அந்த கூட்டினுள் பசுமை ஒளி ஒளிர்ந்தன.

ஆங்காங்கே செடி, கொடிகளில் பறந்து கொண்டு இருந்த மின்மினிப் பூச்சிகளை குருவிகள் இலாவகமாக கவ்விப் பிடித்து தந்தம் கூடுகளில், வீடுகளில் இருந்த களி மண்ணில் பதித்தன. இப்பொழுது அந்த இருபது கூடுகளிலும் ஒருங்கே மின்மினிகளின் பசுமை ஒளி சிதறி சிந்தின.

ஓர் அற்புதக் காட்சி.

பசுமைப் பொன்னுலகமாய் அந்தப் பனைமரம் மிளிர்ந்தது.

“ம்ம்ம்... கதை சொல்லுங்க….”

“முன்னொரு காலத்தில் பெரும் காடாக இந்த இடம் இருந்தது. மழைக் காலங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. ஒடைகளும் ஒயாமல் சலசலத்தன. கால்வாய்கள் எங்கும் நீரை விரித்துக் கொடுத்தன. இங்கு எல்லாரும் எல்லா உயிர்களும் வளர்ந்தோம், வாழ்ந்தோம், வரலாறு படைத்தோம்”

“.. மனுசங்க கூட இருந்தாங்க…. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு ராஜா தன் குடிபடைகளுடன் இங்கு வந்து குறுக்கும் நெடுக்கும் போனாரு… ஆராய்ச்சிகளை அவங்க செய்தாங்க.. அவரு கூட வந்த குடிபடைகள் கிழக்கே பார்த்த மாதிரி இந்த ஏரிக்கரைய சின்னதாக கட்டினாங்க.. அது அதோ தெரியுதே அந்த பிறைநிலா வடிவத்தில் இருந்திச்சி...”

பனைமரத்தில் இருந்த எல்லா குருவிகளும் ஒருமுறை பிறைநிலாவை எட்டிப் பார்த்து குதூகலித்துக் கூவின.

“அவங்க காட்டை அழிச்சாங்க.. காவாய்கள் வெட்டினங்க… நிலத்த பண்படுத்தினாங்க ஓயாது ஒழைச்சாங்க அந்த மனுசங்க.. நெல்லு, கெவுரு, கம்பு, உளுந்து, எல்லாம் பயிரிட்டாங்க.. மனுசங்க சாப்பிட்டாங்க, நாங்களும் அவங்க கூட சேர்ந்து சந்தோசமாக சாப்பிட்டோம். வயல், கொல்லை, வீடு, கால்வாய் எங்கும் பனைமரங்கள நட்டார்கள்… ஈச்சமரங்கள் தானாக வளர்ந்தன. இந்த மரங்களில் நமது குலம் வாழையடி வாழையா தழைத்துப் பெருகி பூரித்து பல நூற்றாண்டுகள் வாழ்ந்தது... இந்த பூதராஜா கொல்லைக்கு சாலை வழி ஏதும் கிடையாது. மாங்காட்டான் கால்வாய் ஆறு மாதிரி பெருசா நீர் நுரைத்துக் கொண்டு ஓடும். அதன் கரையில் குட்டியாக இருந்த நம்ம பன மரத்தினுடைய அம்மா மரத்தை வெட்டினாங்க.. கால்வாய் குறுக்க போட்டு அதில் நடந்து பூதராஜா கொல்லைக்கு வர முடியும். அது ஒருகாலம்..”

பெருமூச்சு விட்டது.

“பின்னால செங்கல் சூளை போட்டாங்க.. சேம்பர் கட்டினாங்க … அப்பத்தான் எல்லா மரங்களையும் கண்டமேனிக்கு வெட்டினாங்க.. சேம்பர்கள் புதுசு புதுசா முளைச்சது… மேட்டு மண் எல்லாம் கரைஞ்சு போச்சு… காடும், மரமும், வயலும் காணமால் போச்சு….சில பத்தாண்டுகளில்..”

மவுனமாக இருந்த மூதாட்டி குருவியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அதன் கூட்டில் இருந்த மின்மினி கடைசியாய் பிரகாசமாய் குளிர்ந்த ஒளியை வீசி விட்டு அணைந்தது. அந்தக் கூட்டில் இருள் சூழ்ந்தது கொண்டது. சோகத்துடன் குஞ்சுகள் அதைப் பார்த்தன.

“ம்ம்…. அப்புறம்…”

“பத்து… பாஞ்சு வருசம் இருக்கும்….. சினிமாக்கார ரியல் எஸ்டேட்காரன் ஒருவன் வந்து ஆசை இல்ல.. பேராசை காட்டினான். பூதராசா கொல்ல உழவர்களின் வயல்களை ஒவ்வொன்றாக வாங்கிப் போட்டான்…”

அதன் சுர ஒலி குறைந்து.. பெருமூச்சு வெளிப்பட்டது.

“அவன் புல்டோசர் கொண்டு எல்லாத்தையும் நாசம் செய்தான்…. கருங்கல்லுகள கழனி பூரா நட்டான்.. பிளாட்டுனு விளைநிலத்தை கூறு போட்டு கூவிக் கூவி வித்தான்.. இப்படி பலரும் வித்தாங்க… பச்சைக் காடும் வயலும் சிமெண்ட் கான்கீரிட் வனமாச்சு. அப்பதான் இந்த நானுறு அடி ரோடு போட்டாங்க… எல்லாம் ஒரேயடியாக முடிஞ்சு போச்சு…. காவாய்கள் தூர்ந்து விட்டன. செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணி குடிக்க முடியாம குழகுழ என்று கஞ்சித் தண்ணிமாதிரி மாறிச்சு. காத்து, நிலம், மண்ணு, தண்ணி எல்லாம் விசமாச்சு…. கூட்டம் கூட்டமாய் அகதிகளாய் மாறி இங்கிருந்து நம்மாளுங்களும் மத்த உயிர்க் கூட்டமும் சேர்ந்து எங்கெங்கோ போனாங்க….. நானூறு அடி ரோடு பக்கம் ஒரு ஈச்ச மரத்திலும், இங்க இந்த பனைமரத்திலும்தான் நாம் மிஞ்சி இருக்கோம்..”

“குர்ர்…குர்ர்….குர்ர்ர்…”

மூதாட்டி குருவி கதைகளைப் பேசிக் கொண்டு இருக்கும்பொழுதே குழந்தைகள் தூக்கி விட்டார்கள்.. அதை கவனிக்காமால் நடந்த கதை தொடர்ந்து கொண்டிருந்து.

“பெர்ரிசு….. அவங்க தூங்கி ரொம்ப நேரம் ஆச்சு… இன்னும் வாய் ஒயாம பேசிக்கிட்டு இருக்க நீ… என்னாட்டும் வாலிபப் பசங்களுக்கு ஒன்னும் புத்தி சொல்லுமாட்டாங்கிறாயே”

“தூங்கிட்டானுங்களா…. சரி சரி. உம் சங்கதி என்னடா..”

“ஓடியாடி ஒழைச்சு… எங் காதலிக்கு ஒரு வசந்த மாளிகை கட்டினா… அவ வந்து கூடுக்குள்ளே அப்படி போனா.. சிலித்துக்கிட்டா.. இப்படி போன… டொக் டொக்கின்னு தட்டிப் பார்த்தா…”

“குக்கூ…… குக்கூன்னு பழிப்பு காட்டி ஓடியே ஒடிட்டா அவ..”

“துரத்திப் பிடிச்சு என்னம்மா கண்ணுன்னு கேட்டா, இந்த கார்த்திகைக்கு மழைக் காத்து வீசுகிற பக்கமா வீட்டு வாசல் வைச்சு இருக்க … சூடு சொரணை உணர்ச்சியற்ற ஜன்மம் நீ… உங்கிட்ட சேர்ந்து புள்ளய பொத்துகிறதுக்குப் பதிலா.. மழைக் காத்து குளிருலே அடிப்பட்டு நாங்க சாக வேண்டியதான் என்று கோவித்துக் கொண்டு சென்று விட்டாள்.”

“பெரியம்மா… வந்து.. என் வீட்டை பார்த்துச் சொல்லு நா சரியாத்தானே பிளான் பண்ணி கட்டியிருக்கேன்….?”

நுணுக்காய் பின்னப்பட்டு நேர்த்தியாய் தொங்கிய சுரைக்குடுகை கூட்டினுள் நுழைந்தது பெரியம்மா குருவி.

மின்மினிப் பூச்சியின் பசுமை ஒளி புதியாக கிழிக்கப்பட்ட பசுமை மாறாத நார்களில் பட்டு கூடு முழுக்க வெளிச்சத்தைத் தந்து கொண்டிருந்தது. பச்சைத் தாள்களின் கிழிக்கப்பட்ட சுகமானதொரு வாசனை இன்னும் கமகமவென்று வீடு முழுக்க நிறைந்திருந்தது. கிழக்கு நோக்கி நுழைவாயில் இருந்தது.

முன்னும் பின்னும் நடந்து பரிசோதனைகளை செய்தது. வெளிய வந்து கூட்டின் மேல் அமர்ந்து கண்களை மூடி மூச்சிறைத்து சுற்றுச் சூழலை ஆழமாக உள்வாங்க அந்தக் குருவி முயன்றது. மீண்டும் மீண்டும் பல முறைகள் இதைச் செய்தது.

சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்த பெரியம்மா குருவி.. பெருங் குழப்பத்துடன் சுற்று முற்ற்றும் பார்த்தது.

“முடிவு பண்ண முடியல்ல… குழப்படியாக இருக்கே.. மேற்கு திசை.. கிழக்கு திசை எந்தப் பக்கம் இந்த ஆண்டு மழை வருன்னுன்னு சொல்ல முடியல்ல”

“பெரிசு .. யு டூ புரூட்டஸ்..”

அந்த இளம் காதல் குருவி கத்தியது.

“நா எந்தத் திசையில் இருந்து மழை காத்து வீசுன்னு சொன்னா எப்பவும் தப்பாது…. இந்த தடவை தடுமாற்றமா இருக்கு..ஏன்ன்னு புரியல்ல..”

“இப்பவெல்லாம் பருவ நிலைய… மழைய…. வெயில் கணிக்கவே முடியல்ல.. மனுசங்க எதை எதையோ செஞ்சு…. எல்லாத்தையும் குழம்பி விட்டிட்டு இருங்காங்க… கார்த்திகை மாசத்தில ஒரு பாரல் மழை கூட இன்னும் பெய்யல்லை பாரு… என்னத்தச் சொல்ல பேராசை பெரு நட்டம்”

“ஆனா….. பலவித எறும்புகள் கூட்டங்கள் வரிசை வரிசையாக…. கூட்டமா தங்கள் இருப்பிடங்கள் மழை பெய்யாத பாதுகாப்பான இடங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. மாமழை வந்தால்தான் அப்படி இடம் இப்படி பெருசா இடம் பெயரும்... என்னால் கணிக்க முடியல்ல.. மழையும் காத்தும் கலங்கி மயங்கிக் கிடக்கு..”

மறுநாள் பூத ராசா கொல்லையிலும் செம்பரம்பாக்கம் ஏரி சிறு வனப்பகுதியிலும் காற்று சலனமற்று இருந்தது. செடி, கொடி, மர இலைகளில் சிறு அசைவு கூட இல்லாமல் இருந்தன. ஊமை வெயில் கொளுத்தியது. உயிரினங்களை வாட்டி வதக்கியது.

திடுமென மேகங்கள் தோன்றின. காற்று பலமாய் வீசியது. சில நிமிடங்களில் மேகங்கள் கலைந்து சுள்ளென வெயில் அடித்தது. தும்பிகள் சில மணி நேரம் தாழ்வாய்ப் பறந்தன. பின்னர் அவைகள் காணமல் எங்கோ ஓடிப் போயின. சூழலும், உயிர்களும் கலங்கித் தவிக்கின்றன.

பூதராஜா கொல்லையில் இருந்த வயலின் நெற்கதிர்கள் முற்றும் வாசனையை தூக்கணாங்குருவிகள் மூக்குகளைத் துளைத்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு வெட்ட வெளியில் அம்பாய்…. வட்டமாய்… கோணல்மாணலாய் விதவிதமான வடிவங்களில் கூட்டாக கும்மாளமிட்டு மகிழ்ச்சியாய் பறந்து திரிந்து வயலில் அமர்ந்தன.

“கீட்சி… கீச்ச்….. கீட்ச்… கீட்சி…..”

மகிழ்ச்சியாக பால் வாசனை மாறாமலும் அதே சமயம் முற்றியும் உள்ள நெல்மணிகளைக் கொத்தித் தின்பதில்தான் என்ன ருசி! வயலில் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் வில்லாய்… தாவித் தாவியும் விதவிதமாகப் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொத்தின.

அப்பொழுது பயிரிடும் விவசாயி கும்பலாய் சில மனிதர்களுடன் வந்தார். வயலில் குறுக்கு நெடுக்குமாய் வந்தவர்கள் நடந்து நூல் பிடித்து அளந்து கொண்டிருந்தன. சிலர் ஓயாமால் சத்தமாய் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். குருவிகள் அப்படியும் இப்படியும் பறந்தன. சிலர் கடும் கோபத்துடன் மண்ணாங்கட்டிகளை அவைகள் மீது வீசி எறிந்தனர். பல குருவிகள் தப்பி, கூடுகளுக்குச் சென்றன. மூதாட்டிக் குருவி சில குருவிகளுடன் நெல்தாள்களுக்கு அடியில் மறைந்து பதுங்கிக் கிடந்தன. அவர்கள் பேசுவதைக் கேட்டு திடுக்கிட்டது.

அந்த நிலத்தை நான்கு துண்டுகளாக பாகப்பிரிவினைகள் செய்யப் போகின்றனர். அதில் இருவர் தங்கள் பங்கை உடனடியாக ரியல் எஸ்டேட்காரருக்கு விற்கப் போகின்றனர்.

அதில் நக்கலாக ஒருவர், “நீயும் சேர்ந்து விக்க வேண்டியதானே.. இந்தத் துண்ட வெச்சிருந்து பயிரா பண்ண முடியும்… வர்தா புயல் வரப் போகுது….. இந்தப் பயிரே தேறுமா என்று பாரு..” என்றார்

கடுகடுவென. அவரை விவசாயி முறைத்தார்.

அனைவரும் சென்று விட்டனர். அந்த உழவர் வயலின் குறுக்கு நெடுக்குமாக இறுகிய முகத்துடன் எந்த சுயவுணர்வும் இன்றி வரப்புகளில் நடந்து கொண்டிருந்தார். அவர் காலில் மாட்டிய குட்டித் தவளை பரிதாபமாக கத்தியதைக்கூட அவரால் கவனிக்க இயலாமல் போனது. தூக்கணாங்குருவிக் கூட்டம் மீண்டும் பறந்து வந்து வயலில் அமர்ந்தது.

வழக்கமாக செல்லமாக அதட்டும் அந்தக் குரலை கூட அந்த விவசாயி செய்யவில்லை. நிர்மலமாக தூக்கணாங்குருவிகளையும், வயலையும் பார்த்தார். அவரிடம் ஆழ்ந்த பெருமூச்சு எழுந்தது. சவக்களை அவர் முகத்தில் படர்ந்திருந்தது.

அதை காணச் சகிக்காமல் மூதாட்டி குருவி வயலை விட்டுப் பறந்தது.

“வர்தா புயல்.. வர்தா.. வருமா வராதா” என்று ஆழ்ந்து மூதாட்டி குருவி சிந்தித்துக் கொண்டிருந்தது.

புயலுக்கான அறிகுறிகள் இயற்கையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் சூழல் முயங்கிக் கிடந்தது. மழைக்காலத்தில் இயல்பாக நீர்தளும்பும் பூதராசா கொல்லை இந்த ஆண்டு வறண்டுபோய் இருந்தது.

வெயில் காய்ந்து கொண்டிருந்தது. காற்று வீசுவதும் நிற்பதுமாக இருந்தது. தனது குழப்பத்தைத் தவிர்க்க ஏரிக் கரை ஓரமாகப் பறந்தது. ஏரியின் நீர் தெளிவாக இல்லாமல் குழகுழப்பாக இருந்தது. நெடுந்தூரத்தில் மறுகரையின் சிப்காட் தொழிற்சாலைகளில் எழுந்த இரசாயனப் புகை மூட்டக் காற்று மூச்சு முட்ட மீண்டும் பனைமரத்தில் வந்து அமர்ந்து கொண்டது.

ஏன் புயலுக்கான அடையாளங்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று முதிர்ந்த அந்த குருவி புரியாமல் தவித்தது. திடீரென்று முளைத்த கருமேகக் கூட்டம் மாலை கதிரவனை கவ்விப் பிடித்து விழுங்கியது.

நள்ளிரவில் மேற்கில் ஏரிக்கரையில் இருந்து கிழக்காக குளிர்ந்த காற்று வேகமாக வீசத் தொடங்கியது. படிபடியாக சீராக ஒவ்வொரு மணிக்கும் வேகம் அதிகரித்தது.

விடிற்காலை கண்விழிந்தவுடன் பலமாக வீசும் காற்றில் பனைமரம் தவிர எல்லா மரங்களும் நடனமாடிக் கொண்டு இருந்தன. வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. கிளைகளற்ற மரங்கள் கூத்தில் கட்டியங்காரனாட்டம் வணங்கி வணங்கி எழுந்தன. விரிந்து பரந்த புளியமரம், கொரிக்கலிக்கா மரங்கள் தட்டாமலை சுற்றின.

நெல்வயலை நோக்கி தூக்கணாங்குருவி கூட்டம் பறந்தன. லேசான தூறல் மழையில் அவைகளின் இறகுகளை நனைத்தன. ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் காற்றின் வேகம் அதிகரித்தது. காலை எட்டு மணிக்கு காற்று மரங்களுடன் இணைந்து சீழ்கை ஒலிக்க விசிலடிக்க ஆரம்பித்தது. எறும்புகள் புற்றுகளின் வாயை மூடின. மழை விழாத இடங்களைத் தேடி சாரை சாரையாய் விரைந்தன. தவளைகள் வயலில் இடைவிடாது இழுத்து இழுத்து இராகம் பாடி கத்தின.

“வர்தா வர்தா புயல் வந்தாச்சு… வந்தாச்சு..” என்று கூவிக்கொண்டே மூதாட்டி குருவி வயலைத் தொட்டுக் கொண்டே பறந்தது.

தூக்கணாங்குருவிகள் அதைப் புரிந்து கொண்டு நெல்மணிகளை வேகவேகமாக அலகுகளால் உருவி விழுங்கின. காற்று பலமாக வீசியது. தாவித் தாவி பறக்கையில் சில குருவிகள் தடுமாறி வயலில் வீழ்ந்து மீண்டும் சுதாரித்துக் கொண்டு பறந்தன. காற்றின் வேகத்திற்கு பறக்க முடியாமல் காற்றின் திசை வேகத்திற்கு ஒத்திசைவாக வளைந்து பறந்துதான் குருவிக் கூட்டம் பனைமரத்தை அடைய முடிந்தது. குருட்டு கொக்குகள், சிறிய வெண் கொக்குகளைத் தவிர அனைத்துவகைப் பறவைகளும் தம்தம் கூடுகளில், பொந்துகளில் அடைத்தன. எருமைகளைத் தவிர அனைத்து கால்நடைகளும் தமது இருப்பிடங்களுக்கு நாலுகால் பாய்ச்சலில் ஓடின.

இப்பொழுது மரங்கள் தலைவிரித்து போட்டுக் கொண்டு பேயாட்டங்கள் ஆடத் தொடங்கின. எங்கோ ஒரு மரம் சடசடவென வேரை கிளப்பி விழுந்தது கேட்டது. தொடர்ந்து மாடிவீடுகள் முன்பு அழகுக்காக நட்டு வைத்த அசோகா மரங்கள் பொலபொலவென்று வீழ்ந்தன. எல்லா பப்பாளி மரங்கள் பப்பரப்பாவென்று வேர்களை கிளப்பி சாய்ந்தன. ஏரிக்கரை பங்களாவில் இருந்த சிறு காட்டினுள் இருந்த புளிய மரங்கள், வேப்ப மரங்கள், புங்க மரங்கள், கொரிக்கலிக்கா மரங்களின் கிளைகள் படீர் படீர் என்று முறிந்தன. மரக்கிளைகள் பின்னிப் பிணைந்து சரசமாடி வீழ்ந்தன.

தொபுகடீர்…

டமால்..

படீர்..

சட சட சட..

நாலா பக்கமும் மண்ணில் வேர்களைப் பரப்பி ஊன்றி நின்ற பெரும் மரங்களும் வர்தா புயலுக்குத் தப்பவில்லை. வீழ்ந்தன பெரும் மரங்கள். பூமித் தாய்க்கு பேரதிர்ச்சியை உண்டு பண்ணியது. அதிலிருந்த புள்ளினங்கள்..?

வர்தா புயல் தனது உச்ச கட்டத்தில் எல்லா ஜீவராசிகளையும் மிரட்டியது.. உருட்டியது… பயமுறுத்தியது. எல்லாவற்றையும் பிய்த்து வீழ்த்தி காற்றில் பந்தாட நினைத்தது. பலவற்றை சாதித்தது. அந்தக் குடிசையின் மேற்கூரையை முழுவதுமாக தூக்கி எடுத்து, காற்றில் உருட்டி உருட்டிச் சென்று, பிய்த்து ஆங்காங்கே போட்டது. அஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போட்ட வீட்டின் கூரையைப் பிரித்து தனித்தனி துண்டுகளாகத் துண்டாக்கி நொறுக்கி பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் வீசியது.

மேய்வதற்காக ஏரிக் கரைக்கும், கால்வாய்களுக்கும் வந்த எதற்கும் அசைந்து கொடுக்காத எருமைகள் கூட காற்றின் ஆளைத் தூக்கி சூறையாடும் வேகத்திற்கு மிரண்டு போய் வீடு திரும்பின. வானில் இருந்து வீழும் மழைநீர் தாரைகளை காற்று தனது அசுரவேகத்தால் நுண் நீர்திவலைத் துகள்களாக சிதறடித்து எங்கும் புகை மண்டல மழையாய் பெய்ய வைத்தது. எதிரில் வரும் ஆள் அம்பு ஏதும் தெரியவில்லை.

உச்சகட்ட புயலுக்குப்பின் பகல் இரண்டு மணி அளவில் திடுமென்று துளிகூட காற்று வீசாமல் நின்றது. எப்பொழுதும் அசைந்தாடும் மரங்களின் இலைகள் கூட சில நிமிடங்கள் நின்றன.

பின்பு தாறுமாறாக எல்லா திசைகளிலிருந்தும் புயல் காற்று மாறிமாறி வீசியது. மேற்கில் இருந்து கிழக்கில் சாய்ந்து கிடந்த மரங்களை, புதர்களை, செடிகளை உரலில் மாவை ஆட்டுவதுபோல் திருப்பி திருப்பி போட்டு ஆட்டின. தூக்காணங்குருவி பனைமரமும் ஆட்டம் காணத் தொடங்கியது. கூடுகள் காற்றில் தட்டாமலை சுற்றியது. அந்த நெல் வயலில் இருந்த நெல்மணிகளை காற்று உருவி கீழே வீசியது. காய்ந்த இரண்டு பனை ஒலைகள் பிய்ந்து கொண்டு காற்றில் எங்கோ பறந்து சென்றன. அதில் அடிபட்டு ஒரு தூக்காணாங்குருவி கூடு பிய்த்துக் கொண்டு எங்கோ பறந்தது. அதில் இருந்த குருவிகள் அதிர்ச்சி அடைந்தன. சுதாரித்துக் கொண்டு கூட்டை விட்டு வெளியேறி காற்றின் வேகத்திற்கு இப்படியும், அப்படியும் தடுமாறி திசைமாறி உறவுகளிடம் புகலிடம் அடைந்தன.

மாலை நெருங்கவும் இருள் சூழத் தொடங்கியது. இப்பொழுது கிழக்கில் இருந்து காற்று மேற்கே திசைமாறி வேகமாக வர்தா புயல் வீசியது. மரங்களின், செடிகளின் அடிப்பகுதி மாவாட்டுவது போல ஈர மண்ணை ஆட்டி வட்டமாக தள்ளி இருந்தன. எங்கிருந்தோ படீரென்று ஒரு மரக்கிளை முறிந்து காற்றில் வீசப்பட்டு பறந்து வந்து பனைமரத்தை பலமாகத் தாக்கியது. ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த பனைமரம் அடியோடு சல்லி வேர்களை கிளப்பி விழுந்தது.

பெரும் துயரம் சூழ்ந்தது அந்த தூக்கணாங்குருவி குடியிருப்பில்… எழுந்த மரண ஒலங்கள் புயலின் வேகத்தில் அமுக்கப்பட்டன.

பொறிக்க வேண்டிய முட்டைகள் உடைந்து உயிர்ச் சதைகள் துடிதுடித்து உயிரை விட்டன. சிறிய குஞ்சுகள் பயத்தில் அலறின. தாய்க் குருவிகள் செய்வதறியாது பரிதவித்தன, பயந்து அலறின.

அந்த இருளினுள்ளும் பெருமூதாட்டி குருவியின் தைரியமான குரல் கம்பீரமாக எழுந்தது.

“எல்லாரும் கூட்டுக்குள்ளேயே இருங்கள்.. இப்ப அதான் பாதுகாப்பு.. சரியானது.. யாரும் வெளியில வராதீங்க.. வந்தா வீசுற காத்துல காணாமல் போய் விடுவீங்க.. ஜாக்கிரத..”

சிறிது நேரக் கூச்சல், குழப்பத்திற்குப் பிறகு வலிகளின் முனகல்கள் மட்டும் தொடர்ந்து விட்டு விட்டு கேட்டன. அதுவும் காற்றின், மழையின் இரைச்சலில் கரைந்து போயின.

மெல்ல மெல்ல விடிந்தது.

புயலும் அடங்கிப் போனது. மழை காணாமல் போனது.

“எல்லாரும் கிளம்புங்க.. குழந்தைகளை தூக்கிக் கிட்டு கண்காணாத இடத்துக்குப் போவோம் வாங்க... இந்த பூதராச கொல்லை நமக்கில்ல.. இனி இங்கு நாம வாழமுடியாது..” என்று பெருமூதாட்டி குருவி அதட்டலாய் ஓங்காரமாய் இட்டது.

இருள் விலகியும் மாறாத விடியலில் தூக்கணாங்குருவி குடியிருப்பு முழுவதும் பறக்கத் தயாராயின. ஆனால் பெருமூதாட்டியைக் காணவில்லை. அனைத்து சோடிக் கண்களும் தங்கள் பெரும்தாயைத் தேடின.

அங்கே… … இரத்தமும் சதையுமாக காயப்பட்டிருந்த பெருமூதாட்டி குருவி சிதைந்த பனைமரத்தின் சிதறிய துண்டிற்குள் இருந்து வலி-வேதனையுடன் முனகி முயற்சித்து வெளியே வந்தது.

“என்னால பறக்க இயலாது.. என்னைத் தூக்கிக் கொண்டு ரொம்ப தூரம் பறக்க உங்களால முடியாது.. மூச்சு விட சிரமாக இருக்குது..” என்று ஏதோ சொல்லத் துடித்தது.

எங்கிருந்தோ பாய்ந்து வந்த சிறு கழுகு காயப்பட்டிருந்த பெருமூதாட்டியை தூக்கிச் சென்றது. பயந்து அலறி அனைத்து தூக்கணாங்குருவிகளும் கண்காணாத தொலை தூரத்தில் உள்ள பசுமை தேசத்தை நோக்கிப் பறந்தன.

கழுகின் வாயில் இருந்த பெருமூதாட்டியின் மங்கிக் கொண்டிருந்த கண்களுக்கு சிதைந்த வயலுக்கு நடுவில் தலை மீது கைவைத்து பெருந்துயரத்தில் புலம்பிக் கொண்டிருந்த பூதராசா கொல்லையின் கடைசி உழவனின் துன்பம் அதன் மரணத்தை விடப் பெரிதாகத் தெரிந்தது.

பூதராசா கொல்லையின் பெருவெளியில் உயிரற்ற ஊதக்காற்று வீசிக்கொண்டிருந்தது….

கி.நடராசன்

Pin It