கேரளாவின் வயநாடு பகுதியில் மண்சரிவால் நிகழ்ந்துள்ள பேரிடரின் கொடுமையைத் தொலைக் காட்சியில் பார்ப்பவர்கள் நெஞ்சம் பதறாமல் இருக்க முடியாது.

அடுத்தநாளே மக்களவையில் இதுகுறித்துப் பேசிய எதிர்கட்சியினர் உடனடியாக முதல்கட்ட நிவாரணமாக ரூபாய் 5,000 கோடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு அமித்ஷா, கனமழை மற்றும் பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவித்தும் கூட, கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

எதை எப்போது பேசவேண்டும் என்பது ஒரு நாட்டின் உள்துறை அமைச்சருக்குத் தெரியாதா?

270 இக்கு மேலும் உயிரற்ற உடல்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு இருக்கிறது. வாழ்வா சாவா என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வயநாடு துயரத்தை அரசியல்படுத்திப் பேச வேண்டாம் என அமைதியாக அமித்ஷாவை மறுத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் பேரிடர் பாதிப்புக்காக தமிழகம் ரூபாய் 37,907. 21 கோடி நிவாரணத் தொகை கேட்டும் வெறும் 276.10 கோடி மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்தது.

இது போல கேரளப் பேரிடர் நிவாரண நிதியை இழுத்தடிக்காமல்உரிய காலத்திற்குள், கேரள அரசு கேட்கும் பேரிடர் நிவாரண நிதியைக் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒன்றிய அரசுக்கு இருப்பதோடு, பிற அத்தியாவசிய உதவிகளையும் தாமதமின்றிச் செய்து தரவேண்டும்.

அரசுக்கும் மக்களுக்குமான ஒப்பந்தத்தை அரசு மீறக்கூடாது. மீறினால் அந்த அரசு அங்கே இருக்கக்கூடாது என்று 'சமுதாய ஒப்பந்த' த்தில் சொல்கிறார் ரூசோ.

இதையும் கவனத்தில் எடுத்துக். கொள்ளட்டும், ஒன்றிய அரசு!

- கருஞ்சட்டைத் தமிழர்