அவர் வந்திருந்தார். ஆச்சரியத்துடன் அவரை வரவேற்று சோபாவில் அமரச் சொன்னேன். மறுத்துவிட்டு தரையில் அமர்ந்து கொண்டார்.

"காபி சாப்பிடறீங்களா"? என்றேன்.

"பிளாக் டீ போதும்" என்றார்.

தேநீர் தயாரித்தபடி ஹாலிலிருந்த அவரைக் கவனித்தேன். சுவரோரம் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளையே பெரிய அதிசயம்போல ரசித்துக் கொண்டிருந்தார். தேநீரை ஒருவாய் உறிஞ்சிவிட்டு மிகவும் நன்றாயிருப்பதாகப் பாராட்டினார்.

எறும்புகளில் சில சுவரிலேறி சாளரம் நோக்கி நகரத் தொடங்கியிருந்தன. பிள்ளையை அழைத்துவர பள்ளிக்குச் சென்ற மனைவியின் தாமதம் பற்றி என் மனதில் சிந்தனை வந்து போனது.

"நீ ரொம்ப குடுத்துவச்சவன்... உன் வீட்டுல இதுங்க எத்தனை சுதந்திரமா சுத்திட்டிருக்குங்க" என்றார், ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளைக் காண்பித்து.

எனக்கு அவர் பேசியது அவ்வளவாகப் புரியவில்லை. அவர் எழுத்துக்களைப் போலவே.

"எறும்புல என்னங்க இருக்கு"? என்றேன் அசட்டையாக.

அவர் எனக்குப் பதிலளிக்காமல் காற்றிலாடும் சாளரத்தின் திரைச்சீலையை கவனித்துக் கொண்டிருந்தார். பொம்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்பாத குழந்தைகளை ஒத்திருந்தது அவரது அருகாமை. வார்த்தைகளை வலியத்தான் பிடுங்க வேண்டியிருந்தது அவரிடமிருந்து.

"எழுதறியாமே" என்றார்.

அவர் குரலில் கேலியிருந்ததோ என்று சந்தேகித்தேன்.

"இல்லங்க... சும்மா அப்டியே".... என இழுத்தேன். என் குரலில் எனக்கே தெளிவில்லை.

"எழுதலாம்.. தப்பில்ல"... என்றபடி,

கோப்பையின் இறுதித்துளிகளில் ஒன்றிரண்டை சுவரோரம் கவிழ்த்தார். சற்றைக்கெல்லாம் சில எறும்புகள் அதைநோக்கி நகரத் துவங்கின.

"சார்த்தர் வாசிச்சிருக்கியா? ரஸ்ஸல்... டால்ஸ்டாய் ஹெமிங்வே"?

"இல்லங்க.. அவ்வளவா வாசிக்கலங்க... இன்னும் தமிழையே தாண்டல" என்றபோது சற்று அவமானமாக உணர்ந்தேன்.

"என்ன எழவைத்தான் வாசிச்சிருக்க? " என்றார் கடுமையாக.

கொஞ்சம்போல வாசித்தவை பற்றி அவருடன் பகிர்ந்து கொண்டேன். துளியும் சலனமற்ற முகத்துடன் மறுபடி எறும்புகளை கவனிக்கத் துவங்கிவிட்டார். அவராக தொடங்கட்டுமென நான் காத்திருந்தேன்.

"விடு... அதுனால என்ன? எத்தனை வாசிச்சாலும் எழுதப்போறது என்னவோ..." என பாதியில் நிறுத்தினார்.

"புரியலங்க" என்றேன்.

இப்பொழுது அவர் ஒரு குழந்தைபோல புன்னகைத்தார்.

"ஒவ்வொருத்தரும் ஒரே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப எழுதறாங்க. வேற வேற தளங்கள் கட்டுமானங்கள் எல்லாம் இருந்தாலும்கூட... சொல்றதுக்கான ஆழ்விருப்பத்துல இருக்கிறது ஒரே விஷயந்தான்"

இது சற்று ஆழமாயிருப்பதாகத் தோன்றியது எனக்கு. என் முகத்திலிருந்த குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

"புரியறமாதிரியே சொல்றேன். நீ உன் வாழ்க்கை முழுக்க எத்தனை எழுதித் தள்ளினாலும் அதுல இருக்கிற ஆதார அடிநாதம் ஒண்ணுதான். ஒரே விஷயம்தான். அந்த ஒரே செய்தியைத்தான் எல்லாவிதமாவும் சொல்லுவ"

"அது எப்புடிங்க... வாழ்க்கைதான் ஒரு ஆறுமாதிரி ஓடிக்கிட்டே இருக்கே. அப்பப்ப ஒரு கை அள்ளிக் குடிக்கிறாப்ல குடிச்சிட்டு அதை அப்டியே மத்தவங்களோடயும் பகிர்ந்துகிட்டு...." எனக்கே என் பேச்சு உளறலாகத் தோன்றவே நிறுத்திவிட்டேன்.

"மொத ஒரு விசயத்தை புரிஞ்சிக்கோ. எழுத்துன்றதே வாழ்க்கையை நீ என்னவிதமா பார்க்கிற.. புரிஞ்சிக்கிற... அதாலதான் உருவாகுது. அதை தரிசனம்னு சொல்வாங்க. அது ஒரு மாதிரி சிறைதான்னு வச்சிக்கயேன். இந்த வாழ்க்கைல ஒனக்கு புதுசா என்ன கெடைச்சாலும் அதை எல்லாத்தையும் அந்த தரிசனதை வச்சிக்கிட்டுதான் எடைபோடுவ. அது சரின்றதை சரின்னும், தப்புன்றதை தப்புன்னு ஏத்துப்ப. அதாவது அந்த தரிசனம்தான் உன் எஜமானனா இருக்கும். அந்த தரிசனத்தையும் ஒடைச்சிக்கிட்டு உன்னை நீ புதுப்பிச்சிக்கலன்னா அந்த தரிசனத்திலயே தேங்கிடுவ. ஒரு கட்டத்துல உனக்கான நிகழ்காலப் பார்வைன்னு ஒண்ணு இல்லாமலே போயிடும். நிறையப்பேரு அப்டி தேங்கிருக்காங்க"

நான் அதிர்ந்துபோய்விட்டேன். அவர் கூறியதன் சாத்தியம் குறித்த அதிர்ச்சி அது.

இப்பொழுது இன்னும் நிறைய எறும்புகள் தேநீர்த் துளிகளைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருந்ததை பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"உங்க கவிதைகள் நிறைய புரியலங்க" என்றேன் மெலிதான தயக்கமுடன். அவர் முறுவலித்தார். பிறகு,

"எனக்குந்தான்" என்று சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.

"சிலதெல்லாம் புரியற சமாச்சாரமில்ல... உணர்ற விஷயம்" என்றார் சிரிப்பின் இறுதியில்.

நான் ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லை. பிறகு திடுமென அந்தக் கேள்வியை கேட்டார்.

"எதுக்கு எழுதனும்"?

நான் தடுமாறினேன். இதற்கு என்ன பதிலளிப்பதென்று யோசித்தேன். மவுனமாயிருந்தேன்.

திடீரென்று அவர் பலமாக சிரிக்கத் துவங்கினார். தோள்கள் குலுங்க, கண்ணில் நீர்வர சிரித்தார். ஒரு பார்வைக்கு மனம் பிறழ்ந்தவர் போல தென்பட்டார். அந்த நினைவே எனக்குள் பெரும் பீதியைக் கொடுத்தது.

"சரி போயி சாக்பீஸ் எடுத்திட்டு வா" என்றார்

dark room lightபுழக்கடைக்குச் சென்று தேடியதில் கும்முட்டி அடுப்பில் கொஞ்சம் கரித்துண்டுகள் கிடைத்தன. அருகிலிருந்த ஒரு பசு வாயில் நுரையொழுக "ம்மா"... என்றது. அடுக்குமாடி வளாகத்தில் எப்படி புழக்கடை வந்தததென யோசித்தபடியே, எடுத்துவந்த கரித்துண்டை அவரிடம் கொடுத்தேன்.

அவர் சுவரில் பித்தாகரஸ் தேற்றம் ஒன்றை எழுதிவிட்டு எனக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். சட்டென அவர் என் எட்டாம் வகுப்பு கணக்காசிரியரைப்போல தோன்றினார்.

அப்படியே அச்சில் வார்த்ததுபோல.

“காரணமில்லாம ஒரு குருவியைக்கூட பறக்கவிடக் கூடாது எழுத்துல” என்றார்.

“ஏன் பறந்தா என்னவாம்?” என்றேன். அவரை நன்றாக மடக்கிவிட்டதான பெருமிதத்துடன்.

“முட்டாள்.. அப்பறம் அந்தக் குருவி செத்துடுச்சின்னா என்ன செய்வ?”

நான் பதிலறியாமல் விழித்துக் கொண்டிருக்க, வெளியிலிருந்து வாசற்கதவு திறக்கப்படும் அரவம் கேட்டது.

வீட்டுக்குள் நுழைந்த மனைவி என்னையும் அவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு தனது தலையிலடித்துக் கொண்டாள். என் முழங்காலிலிருந்த புண்ணில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதைக் கழுவிவிட்டு மருந்திட்டாள். எனக்கு என் மகனைக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. அவன் சற்று தொலைவில் என்னை அசூசையாகப் பார்த்தபடி பள்ளிச் சீருடையை களைந்து கொண்டிருந்தான்.

அவர் மறுபடி என்னிடம் கேட்டார்.

"எல்லாம் சரி. எதுக்கு எழுதனும்"?

"நம்ம அனுபவத்தை எல்லாரோடயும் பகிர்ந்துக்க" என்றேன்

"புல்ஷிட்"

"ஏன்"?

"பகிர்ந்துகிட்டு"?

நான் பதில் கூறாமல் நகரும் எறும்புகளை கவனித்தேன். தேநீர்த் துளிகளின் விளிம்புகள் இப்பொழுது காய்ந்து விட்டிருந்தன.

“வாழ்றது ஒரு அர்த்தமில்லாத மடத்தனம். மனுசன் என்னவாச்சும் செஞ்சு அதுக்கு ஒரு அர்த்தம் குடுத்திடலாம்னு பேராசைப்படுறான். காலம் எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு அவனை ஏமாத்திடுது” எனக் கூறி பயங்கரமான சிரிப்பொன்றை வெளிப்படுத்தினார்.

“காலம்னு எதும் இருக்கிறதா எனக்கு தோனலை. அது நம்மளோட வெத்துக் கற்பனை “

நான் கூறியதை துளியும் பொருட்படுத்தாதவராக அவர் தொடர்ந்தார்.

“இத்தனை காலமா யாராரோ என்னென்னவோ எழுதிமட்டும் என்னாகிடுச்சி ? வலியும் துயரமுந்தான் மனுசனோட நிஜமான நிழல்”

"நீங்க மட்டும் எதுக்காக எழுதுனீங்களாம்"? என்றேன் ஆத்திரத்துடன். எனது விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஒரு பேரழுகைக்கான ஆயத்தங்களுடன் எனது உதடுகள் கோணிக் கொண்டன.

அவர் என்னைக் கொன்றுவிடுவதுபோல ஒரு பார்வை பார்த்தார். பிறகு சில விநாடிகள் தனக்குள் எதையோ முணுமுணுத்தார்.

"எல்லாம் பைத்தியக்காரத்தனம்.. ஆமா.. எல்லாமே தான்"

"இந்த வாழ்க்கை மாதிரியா"?

"ம்... நீ எல்லாத்தையும் சரியா புரிஞ்சிக்கிற" என்றபொழுது அவரது கண்கள் ஒளிர்ந்தன.

எனக்கு திடீரென்று மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. சாளரத்தையொட்டிய மேஜையில் அமர்ந்து கொண்டு ஒரு சிறிய காகிதத்தில் மளமளவென சிலவரிகள் கிறுக்கிவிட்டு அதை அவரிடம் காட்டினேன்.

"குப்பை.. ஒன்றுக்கும் உதவாத பெருங்குப்பை" என்று அதைக் கசக்கி எறிந்தார். எனக்கு நிரம்ப வருத்தமாயிருந்தது.

"உங்களுக்கு என்ன பைத்தியமா"?

"ஆமா"

"அப்பச்சரி"

என் மனைவி தட்டில் எதையோ எடுத்து வந்தாள். நான் சரியாக எடுத்து சாப்பிட்டபோதும் என் மேலெல்லாம் சோற்றுப் பருக்கைகள் சிதறியது. டீவியில் யாரோ நடனமாடினார்கள்.

"சரி நேரமாச்சு நா கெளம்பறேன்"

"இருங்க என்ன அவசரம்? கொஞ்சநேரம் இருந்திட்டுப் போங்க" என்றேன்.

அவர் துளியும் சட்டை செய்யாமல் அவசரமாக சுவரினுள் நுழைந்து காணாமற் போனார்.


நான் எனது கணுக்காலிலிருந்த சங்கிலியைப் பிடித்திழுத்தேன். அது அறுபடவேயில்லை. பலநூறு எறும்புகள் என் திசைநோக்கி மெதுவாக நகர்ந்து வந்தன.

ஒரு கைப்பிடி நிறைய எறும்புகளை அள்ளி வாயிலிட்டு மென்றபடி, சுவரிலிருந்த பித்தாக்கரஸ் தேற்றத்தை அழித்துவிட்டு அல்ஜீப்ராவை எழுதத் துவங்கினேன்.

- ஶ்ரீரங்கம் மாதவன்

Pin It