ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் அந்த குடிசை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஊர் நாட்டாண்மைக்காரர்கள், ஆண்கள், பெண்கள், அந்த ஊர் இளசுகள் எல்லோரும் அந்தக் குடிசைக்குக் கொஞ்ச தூரம் தள்ளி நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். சவுக்குக் கொம்பிற்கு மேலே பரப்பி இருந்த ஓலைகள் எல்லாம் இற்றுக் கீழே விழுந்து கொண்டிருந்தன. சவுக்குக் கழிகள் எல்லாம் நின்று நிதானித்து எரிந்து கொண்டிருந்தன. இவையெல்லாம் எரிந்து எப்போது முடியும் அந்தக் கூரை எப்போது தரைமட்டம் ஆகும் என்பதையே எல்லோருடைய கண்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன. இன்னும் சற்றுநேரந்தான். எல்லாம் சாம்பலாகிவிடும். சரளாவின் உடம்பும் உள்ளமும்கூடத்தான் என்பதுபோல் நெளிந்துகொண்டிருந்தது தீக் கொழுந்து.

lonely lady 300            அந்த குடிசை வீட்டில் குடியிருந்த சரளா இறந்துவிட்டது மூன்று நாட்களுக்குப் பின்னர்தான் இரும்புலி கிராமத்து மக்களுக்குத் தெரிய வந்தது. அந்த வழியாகச் சென்ற சின்னதுரைதான் அதைக் கண்டுபிடித்தான். அந்த வீட்டிலிருந்து வந்த ஒருவிதமான வாடை அவன் மூக்கிற்கு வித்தியாசமாகத் தெரிந்தது. உடனே ஓடிப்போய் அந்தக் குடிசையின் கதவைத் தட்டிப் பார்த்தான் சின்னதுரை. அது திறக்கவே இல்லை. ஒருவித படபடப்போடு ஊருக்குள் ஓடியவன் தன் கண்ணில் கிடைத்தவர்களிடமெல்லாம் சரளா செத்துவிட்டாள். அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது என்று சொல்லிவிட்டு ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சரளாவின் வீட்டிற்குச் சென்றான். அந்த செய்தியைக் கேட்ட சிலர் சந்தோசப்பட்டுக் கொண்டனர். சிலர் வருத்தப்பட்டு தம் கழிவிரக்கத்தை உச்சென்னும் வார்த்தையால் தெரிவித்துக் கொண்டனர்.

            பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எங்கிருந்தோ அந்த இரும்புலி கிராமத்திற்கு வந்து சேர்ந்தாள் சரளா. பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றம். நைந்து கிழிந்து அழுக்கேறிய சேலை ஒன்று அந்த அழகை அரைகுறையாக மறைத்திருந்தது. இவள் இந்த ஊரில் யாருக்கும் சொந்தக்காரி இல்லை, ஏதோ சூழலால் இங்கு வந்திருக்கிறாள் என்பதை சிறிதுநேரத்தில் உணர்ந்து கொண்டனர் ஊர்க்காரர்கள். அன்று இரவு உணவிற்கு அந்த ஊரில் உள்ள சிலர் ஏற்பாடு செய்தனர். ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சரளா. அவள் ஒவ்வொரு பிடிச் சோற்றையும் எடுத்து வாயில் வைக்கும்போதெல்லாம் ஒரு கேள்வி அவளைச் சுற்றி நின்றிருப்பவர்களிடமிருந்து வந்தது. அதற்குப் பதிலளிக்காத அவள் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சோற்றை விழுங்கிக் கொண்டிருந்தாள். சரளாவிற்குத் தேவையானதை மட்டும் ஊராரிடம் கேட்டு வாங்கிக்கொண்டாள். ஆனால் அவளைப் பற்றிய ஒரு தகவலைக்கூட அவள் அவர்களுக்குச் சொல்லவில்லை.

            இரும்புலிக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்தில் அவள் குடிசை அமைத்து தங்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர் இரும்புலிக் கிராமத்து மக்கள். அவற்றுக்கு நன்றிக்கடனாக எல்லோருக்கும் இலவசமாக விவசாய வேலைகளையும், வீட்டு வேலைகளையும் செய்து கொடுத்தாள் சரளா. அவள் இரும்புலியில் வந்து தங்கிய நாள் முதலாய் மூன்றுவேளையும் சோறோ, கஞ்சியோ, கூழோ கிடைத்தது. சில நேரங்களில் தலைக்கு வைப்பதற்கு எண்ணெய், முகத்திற்குப் பூசிக்கொள்ள பவுடர், பிளாஸ்டிக் குடத்திற்கு போட வைத்திருந்த புடவை, ஜாக்கட்டுகள் கூட அவளுக்கு வந்து சேர்ந்தன.

            இப்படியாக அவள் இரும்புலிக்கு வந்து நான்கு ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. இப்போது இரும்புலியில் உள்ள எல்லோர் வீட்டிற்குள்ளும் சர்வ சாதாரணமாக அவளால் போய்வர முடிந்தது. அந்த ஊர் மக்களுக்கும் அவள்மீது நல்ல நம்பிக்கை வந்துவிட்டிருந்தது. அவளும் இப்போது பார்ப்பதற்கு கொழுகொழுவென்று உப்பிக் கொண்டிருந்தாள். அந்த ஊருக்கு வந்து சேர்ந்தபோது இருந்த தோற்றம் அவளை விட்டுப் போயிருந்தது. இரும்புலிக்கு ஒதுக்குப் புறமாய் அமைத்துக் கொண்ட அந்த குடிசையில் ஒற்றை விளைக்கை ஏற்றி வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். விளக்கில் எண்ணெய் தீரும்வரை அது எரிந்து கொண்டிருக்கும். அந்த வீட்டில் ஒரு குடும்பம் இருப்பதற்கான எந்த தடயத்தையும் காணமுடியாது. தண்ணீர்க் குடம் ஒன்றும் அதை மொண்டு குடிப்பதற்கு வைத்திருக்கும் ஒரு சொம்பையும் தவிர. இரவு பன்னிரெண்டு ஒருமணிவரை அவள் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருப்பாள். அவளின் பழைய வாழ்க்கையை ஒருபோதும் அவளேகூட நினைத்துப் பார்ப்பதற்கு நினைப்பதில்லை. பிறகு எப்படி மற்றவர்களுக்குத் தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுவாள். ஏதோ இந்த உயிர் தானாக பிரியும்வரை எங்கேயோ எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று எடுத்த முடிவின் விளைவே இந்த இரும்புலிக் கிராமத்தின் அடைக்கலம்.

            ஒருநாள் இரவு பன்னிரெண்டு இருக்கும். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளின் குடிசையின் தட்டியை யாரோ தட்டும் சத்தம் எழுப்பிவிட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவள் அதிர்ந்துபோனாள். அவள் எதிரே ஒரு கட்டுமஸ்தான பையன் நின்றிருந்தான். என்ன இந்த நேரத்தில் என்று கேள்வி எழுப்பியவளை மெதுவாக அணைத்துக் குடிசைக்கு உள்ளே தள்ளிக்கொண்டு போனவன் தான் வந்த காரணத்தை கண்களால் உணர்த்தினான். அவளுக்கும்கூட அந்த நேரத்தில் அது தேவையாகத்தான் இருந்தது. பகலில் ஊருக்கு உழைத்தவள். அன்றுமுதல் தனது உணர்வுக்கு உழைக்கத் தொடங்கினாள்.

            சரளாவின் சங்கதி ஊரில் உள்ள பெரிசுக்கெல்லாம்கூட அரசல்புரசலாகத் தெரிந்திருந்தது. அவர்களும்கூட அவள் குடிசையின் கதவைத் தட்ட, வேறு வழியில்லாமல் அவர்களையும் சமாதானப்படுத்தும் நிலை உருவாகி விட்டிருந்தது சரளாவிற்கு. இப்போதெல்லாம் ஏன் இரவு வருகின்றது என்று எண்ணுமளவிற்கு அவளுக்கு தொல்லைகள் சூழ்ந்துகொண்டன. அவள் தூக்கம் தொலைந்து போயிருந்தது. அவளால் யாருக்கும் மறுப்பு தெரிவிக்கவும் முடியவில்லை. அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை.

            இரும்புலி கிராமத்திற்குப் போவதை சமீபகாலமாகக் குறைத்திருந்தாள் சரளா. இரவில் அவளுக்கு ஓரளவிற்கு வருமானமும் வரத் தொடங்கியிருந்ததால் அவளுக்குச் சாப்பாட்டுத் தேவைகள் பற்றிய கவலைகள் இல்லாமல் இருந்தது. கிடைத்த பணத்தில் கொஞ்சம் சேமித்து வைத்துக்கொண்டு அதில் ஜீவனம் நடத்தத் தொடங்கியிருந்தாள் சரளா. ஊரில் உள்ள பெண்களுக்கு சரளாவின் இரவுநேரக் கூத்துக்கள் தெரியத் தொடங்கியிருந்தது சரளாவிற்கும் தெரியும். அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வசைமாரி பொழிந்துவிட்டுப் போனார்கள் அவர்கள். தான் செய்தது தவறு என்பதை உணர்ந்திருந்ததால் அவர்களின் வார்த்தைகளைச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டாள் சரளா. இவ்வளவு நடந்தபிறகும் சரளாவின் குடிசைக்கு மட்டும் பாதகம் வரவில்லை. அதில் அவளுக்கு ஒரு நிம்மதி.

            தங்கள் பிள்ளைகளையும், கணவன்மார்களில் சிலரையும் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள் இரும்புலிக் கிராமத்துப் பெண்கள். அதனால் சரளாவிற்கு இரவு நேரங்கள் ஓய்வு நேரங்களாக மாறியிருந்தன. அதனால் அவள் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாள். இருந்தாலும் தனக்கு அடைக்கலம் கொடுத்த இரும்புலி கிராமத்துப் பெண்கள் தன்னிடம் பேசாதது சரளாவிற்கு வருத்தமாகவே இருந்தது. அவள் மனதும் உடம்பும் பலவீனமாகிக் கொண்டிருந்ததை சரளாவால் சில தருணங்களில் உணரமுடிந்தது. இரும்புலிக்கு வந்த பத்து ஆண்டுகளில் இத்தனை மாற்றங்கள் அவளுக்குள் நிகழ்ந்துவிட்டன. தனிக்குடிசையில் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனது.

            ஒருநாள் ஒடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டாள் சரளா. அவளே தட்டுத் தடுமாறி எழுந்து வேலூருக்குப் புறப்பட்டுச் சென்றாள். அங்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தவளை ஒரு வாரம் அனுமதித்து, மருத்துவம் பார்த்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள். வெறுங்கையோடு மருத்துவமனைக்குப் போனவள் வீட்டிற்குத் திரும்பும்போது எக்கச்சக்கமான மாத்திரைகளுடன் வந்தாள். இரும்புலி பஸ்டாப்பில் இறங்கி நடந்து போய்கொண்டே மருத்துவர்கள் தனக்கு இருக்கும் நோய் குறித்து சொன்னதை யோசித்தாள் சரளா. துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது. இனி தான் தேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள் வாய்விட்டு அழுதுகொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றாள்.

            இரும்புலி மக்களுக்குத் தெரிந்துவிட்டது சரளாவிற்கு இருக்கும் நோய். அதனால் அவள் இருக்கும் திசையைக் கூட அக்கிராமத்து நல்ல உள்ளங்கள் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். அவளும் அவர்களைப் பார்ப்பதற்கு விருப்பப்படவில்லை. யாரோ ஒருத்தன் வந்து தனக்கு கொடுத்துவிட்டுப் போன இலவச நோயை எண்ணி எண்ணி கண்ணீர்விட்டாள் சரளா. ஊரில் கூட்டம்போட்ட நாட்டாமைகள் சரளாவிற்கு இருக்கும் நோய் குறித்து மணிக்கணக்கில் அலசி ஆராய்ந்துவிட்டு, அவளுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று உத்தரவு வேறு பிறப்பித்திருந்தனர். அதன்படியே நடந்துகொண்டார்கள் இரும்புலிக் கிராமத்து மக்கள்.

            ஆறேழு மாதத்தில் படுக்கையைவிட்டு எழுந்திரிக்கக்கூட முடியாத நிலை வந்துவிட்டிருந்தது சரளாவிற்கு. சரியான உணவு கிடைக்காமல் வாடிக்கிடக்கும் ஒரு ஓணானைப் போல் இருந்தது அவள் தோற்றம். அவள் வைத்திருந்த புடவைகள் அனைத்தும் கிழிந்து கந்தல்கோலமாகியிருந்தன. சேலை சுற்றிய ஒரு பொம்மையைப் போல் கிடந்தாள் சரளா. இப்படியே நாட்கள் நகர சரளாவின் உயிரும்கூட அவளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியிருந்தது. ஒருநாள் சூரியன் உதிக்கும்பொழுதில் அவள் உடம்பிலிருந்து உயிர் பிரிந்து போயிருந்தது. மூன்று நாட்கள் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கிடந்த சரளாவின் சாவு இன்று சின்னதுரையால் அறியப்பட்டுவிட்டது.

            அன்று முழுவதும் அந்த குடிசையிலேயே கிடந்தது துர்நாற்றம் அடித்துக்கொண்டு சரளாவின் வெற்றுடம்பு. ஊர் நாட்டாமைகளும் மக்களும் இரவு எட்டு மணிக்கெல்லாம் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டனர். சரளா இரும்புலிக்கு வந்ததுமுதல் அவள் சாவின் இறுதிவரைக்குமான சங்கதிகளை அலசி ஆராய்ந்தவர்கள் நாட்டாமைகளையே நல்ல தீர்ப்பு சொல்லுமாறு கூறிவிட்டுக் காத்திருந்தனர். நீண்ட யோசனைக்குப் பின்னர் எல்லோரையும் கலைந்து போகச்சொன்ன நாட்டாமைகள் விடியற்காலையில் சரளாவின் குடிசைக்கு வருமாறு ஆணை பிறப்பித்தனர். விடியற்காலை ஐந்து மணியிருக்கும், ஊர் மக்கள் எல்லோரும் சரளாவின் குடிசையைச் சுற்றி மூக்கைப் பொத்திக்கொண்டு நின்றிருக்க, அவள் இறந்து கிடந்த குடிசையோடு கொள்ளி வைத்தான் ஒரு பையன்.

            இப்போது அவள் உடல் முழுவதும் எரிந்து சாம்பலாகியிருந்தது. அதைப் பார்த்த எல்லோரும் தங்களின் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர், அவர்களில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்பது தெரியாமல்...! 

- சி.இராமச்சந்திரன்

Pin It