திருச்செங்கோடு என்றவுடன் நம் அனைவரின் மனதிலும் முதலில்  தோன்றுவது,  எழுத்தாளர் பெருமாள் முருகன், அவருடைய மாதொருபாகன் நாவல், அதில் வரும் உயிர்ப்பான  கதாபாத்திரங்கள்,  அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில், வரட்டிப் பாறை. எனக்கு மட்டும் கூடுதலாக ஒன்று. அவன்தான் போத்தலை.

boy poor 344“நான் குளிக்கப் போறேன். வண்டி வந்துச்சுன்னா சொல்லுடா” என்ற அம்மாவின் எச்சரிக்கையை  துளியும்  காதில் போட்டுக்கொள்ளாமல் வீட்டிற்கு எதிரில் இருக்கும்   தாலுக்காபீஸ் மைதானத்தில்  விளையாடிக் கொண்டிருந்தேன். தாலூக்காபீஸை  சுற்றி நெடிய மலைப்பாம்பு தன் வாலை கௌவிக் கொண்டிருப்பது போல நீண்ட மதில் சுவர் இருக்கும். உயரம் குறைவாக இருக்கும் சுவரின் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அதனருகில்  கற்களை  அடுக்கி  தாண்டிக் குதிப்பதற்கு ஏதுவாக குறுக்கு வழி  அமைத்தது நானும் என் நண்பர்களும்தான்.  முதலில் எங்களின்  தனிப்பட்ட  வழியாக இருந்தது,  பின்னாளில் அலுவலகம், பள்ளிக்கூடம் செல்பவர்களின்  பொது வழியாகவும் மாறியது.

சாலையில் சலங்கையின் ஒலி  கூடிக்கொண்டே வந்தது. கொஞ்சம் கூட களைத்துப் போகாமல்  கன்றுக்குட்டியின் துள்ளலுடன் தெரு முனை  வீட்டில் தலையை ஆட்டிக்கொண்டு கோமதி  மிகவும்  சாதுவாக  நின்றது. போத்தலை வண்டியில் இருந்து கீழே இறங்கினான். தலையில் கட்டியிருக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் தலையில் இறுகக் கட்டிக்கொண்டான். கோமதியின் முதுகை ஒரு தடவை வாஞ்சையாக தடவிக் கொடுத்து விட்டு, வண்டியில் பொருத்தி இருந்த மர பீப்பாயின்  மேல் கவிழ்த்தி இருந்த இரண்டு தகர வாளியை எடுத்து  கீழே வைத்தான். பீப்பாயின் கீழே மடித்து வைத்த சைக்கிள் ரப்பர் குழாயை பிரிக்க உடனே நீர் கொப்பளித்து வேகமாக தகர வாளியை நிறைத்தது. யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் அந்த வீட்டிற்குள் நீர் நிரம்பிய இரண்டு தகர வாளியை தன் இரண்டு கைகளால் தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே போனான். அடுத்து எங்கள் வீடுதான். இன்னும் ஐந்து நிமிடத்தில் எங்கள் வீட்டிற்கு போத்தலை வந்து விடுவான். குரலெழுப்பி அம்மாவிடம் கூறினேன்.

நாங்கள் வசித்த வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் இருந்து கொண்டே மலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை நன்றாகப் பார்க்க முடியும். மலையில் தனியாகத் தெரியும்  வரட்டிப்பாறையைப் பற்றி பாட்டியின் கைவசம் ஏராளமான கதைகள் இருந்தது. அந்தத் தெருவில் இருந்த அனேக  வீடுகள் மலையைப் பார்த்த வண்ணம்தான் இருக்கும். எல்லா வீடுகளிலும்  கிணறு இல்லாததால் தண்ணீருக்கு போத்தலையின் வண்டியை நம்பித்தான் இருந்தார்கள்.

தினமும் காலை எட்டு மணிக்கு போத்தலை ஆஜராகி விடுவான். நான்கடி உயரத்தில் கட்டு மஸ்தான உடம்புவாகு. ஒழுங்கு படுத்தாத  அடர்த்தியான மீசை. முகத்தில் ஒரு வாரத்திற்கான முடி  எப்போதும் நிரந்தரமாக  இருக்கும். ஓரடி விட்டத்தில் இருக்கும் சதைக்கோளத்தை சரிபாதியாக அரிந்து வயிற்றில் ஒட்டியது போல இருக்கமான தொந்தி. அவன் வாய் விட்டுச் சிரிக்கும் போது மட்டும் கொஞ்சம் நெகிழ்ந்து அசைந்து கொடுக்கும். மற்ற நேரங்களில் இறுகிய பந்துபோல் நிரந்தரமான விறைப்புடன் இருக்கும். வீட்டினை அவன் நெருங்கும் போது மீண்டும் அம்மாவிற்குக் குரல் கொடுத்தேன்.

அம்மா வாசலைத் திறக்க  போத்தலையின் வண்டியும் வந்தது. வேகமாக இறங்கியவன்  ”என்னாம்மா ஐயா வந்திருக்காரா?” என்றான். நேற்று இரவில் வந்தவரைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும் என்று வியந்து  தலையை மட்டும் ஆட்டினாள் அம்மா. “இல்லைம்மா கதவைத் திறந்ததும், சிகரெட் வாடை குப்புன்னு அடிச்சுது, அதுதான்னு” தலையைச் சொறிந்தான். பதிவாகக் கொடுக்கும் பத்து பக்கெட்டுடன், கூடுதல் மூன்று பக்கெட் தேவை என்று அவனுக்குத் தெரியும்.  பழைய தகர எண்ணை டின்னில் குறுக்காக பொருத்திய கட்டையின் தளர்வை வண்டிச் சக்கரத்தில் தட்டி இறுக்கி மர  பீப்பாயிலிருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டே நான்கு திசைகளிலும் கண்ணை சுழல விட்டான். என்னைப் பார்த்ததும் தலையை வேகமாக ஆட்டி அழைத்தான். நான் வராதது கண்டு தன் தலையை தாழ்த்தி அவன் அணிந்திருந்த பட்டையான கான்வாஸ் பெல்ட்டில் இருக்கும் மணி பர்ஸை ஒரு முறை சரி பார்த்து விட்டு மீண்டும் என்னைப் பார்த்து வேகமாகத் தலையாட்டினான். அவனை நோக்கி நான் ஓடி வந்தேன். நான் அருகில் வந்ததும், ஏதோ ஒரு புதையலைத் திறப்பது போல, என்னைப் பார்த்து சிரித்தபடி, இடுப்பு பர்ஸில் இருந்து  கைநிறைய தேன் மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தான்.

அடுத்தநாள் ஞாயிறு. போத்தலை காலையிலேயே வந்து விட்டான். பாதித் தூக்கத்தில் கண்களை கசக்கிக்கொண்டே வெளியே வந்தேன். அம்மாவும்  போத்தலையும்  ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். “அவன் அப்பா வந்திருக்காரு. அவன் எங்கேயும் வெளியே வரமாட்டான். அடுத்த தடவை  பாத்துக்கலாம்” என்று அம்மா கண்டிப்பாகக் கூறினாலும், போத்தலை பிடிவாதமாக “இன்னைக்கு ராத்திரி ஊரிலே திருவிழாம்மா. தீமிதி, தொருக்கூத்து, கரகமெல்லாம் இருக்கும்மா.  தம்பியை அனுப்பினா, நாளைக்கு காலையிலேயே கொண்டு வந்து விட்டுடறேன் ” என்று கெஞ்சினான். அப்பாதான் வெளியே வந்து அம்மாவை சமாதானப் படுத்தி போத்தலையுடன் என்னை அனுப்பி வைக்க சம்மதித்தார். நான் குளித்து சாப்பிட்டு முடியும் வரைக்கும் திண்ணையிலேயே காத்துக் கொண்டிருந்தான் போத்தலை. என்னைக் கண்டவுடன் ஒரே மூச்சில் என்னை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றி  வண்டியில் அவனுக்கருகில் உட்காரவைத்தான். மிகவும் மகிழ்ச்சியாக  கோமதியைப்பார்த்து ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். புரிந்தது போல கோமதியும் அடிக்கடி தலையை ஆட்டிக் கொண்டே நடந்தது.

அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, நாட்டு ஓடு போட்ட ஒரு வீட்டிற்கு முன்பு  வண்டி நின்றது. வண்டியிலிருந்து குதிக்கப் போன என்னை, மீண்டும் ஒரு தடவை தூக்கி தட்டாமலை சுற்றி கீழை இறக்கினான். எங்களைக் கண்டவுடன், அவனின் மகன் ஐய்யனார் தன் இரண்டு கைகளில் இருக்கும் தண்ணீர் நிறைந்த   தகர டப்பாவை கீழை வைத்துவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான். அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். அரைக் கை பனியன் அணிந்திருந்தான். இடது தோள் பட்டையில் தையல் விட்டிருந்தது. அதை வலது கையால்  அடிக்கடி மேலே இழுத்து விட்டுக்கொண்டான்.  எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததைப்  பார்த்த  போத்தலை “ஏண்டா, இப்படி டின்னை தடால்னு வைச்சே. எவ்வளவு தண்ணி சுத்தியிலும் சிந்தி இருக்கு  பாரு” என்று கூறிக்கொண்டே  தண்ணீரை  வீட்டிற்கு முன் இருக்கும் பெரிய சிமெண்ட் தொட்டியில் ஊற்றினான். ஐய்யனார் என்னைப் பார்த்தவுடன், என் கைகளைப் பிடித்துக்கொண்டே “அப்பா  உன்னைப் பத்தி சொன்னாரு. என்னா கிளாஸ் படிக்கிறே?’ என்று கேட்டான். என் கைகளில் இருக்கும் தமிழ் புத்தகத்தை வாங்கி வேகமாகப் புரட்டிப் பார்த்தான். வீட்டுக் கூடத்தில் இருக்கும் தூணின் மேல் ஒளித்து வைத்த  ஒரு நோட்டை எடுத்து என் கைகளில் திணித்தான். “எனக்கு எழுதக் கத்துக் கொடுக்கிறீயா?” என்று கண்களில் ஆவலைத் தேக்கிக் கேட்க சரி என்று ஒரு பக்கம் முழுவதும் நிறைத்து பெரிதாக  “அ” என்று அவன் கொடுத்த விரலளவு முனுக்கிப் பென்சிலால் எழுதினேன். அதை ஆவலுடன் பார்த்தவன்,  போத்தலையைக் கண்டவுடன் அந்த நோட்டை மறுபடியும் அதே தூணிற்கு மேல் அவசரமாக ஒளித்து வைத்தான்.

அன்று மாலை திருவிழா முடிந்து வீட்டிற்கு வர நீண்ட நேரம் ஆனது. வெந்தயக் களியில் குழி செய்து வழிய வழிய நல்லெண்ணை விட்டு கொஞ்சம் வெல்லமும் வைத்திருந்தார்கள். ஐய்யனார்தான் எப்படி சாப்பிடுவது என்று விளக்கம் கொடுத்தான். முதலில் கொஞ்சம் களி உருண்டை எடுத்து நல்லெண்ணையில் ஒற்றி எடுத்து பிறகு  அந்த உருண்டையின் வடிவம் மாறாமல்  மெதுவாக வெல்லத்தில் தொட்டுப்ப்புரட்டி   வாயில்  போட்டுக் கொண்டு,  நான் செய்வதை  உன்னிப்பாகக் கவனித்தான். இரவு அதிக நேரம் என் நண்பர்கள், வகுப்பு ஆசிரியர், பள்ளிக்கூடம் பற்றி ஐய்யனார் அதிக ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.  வெகு நேரம் கழித்துத்தான் இருவரும் தூங்கப் போனோம்.

திருவிழா முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. என்றாலும்  திருவிழா பற்றிய நிகழ்வுகள் ஒரு தொடர் கதை போல எங்கள் வீட்டுத் திண்ணையில் நேரலை சேவையாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தேன்.  பாட்டிதான் ஓரே நிகழ்வை எத்தனை தடவை கூறினாலும், புதிதாகக் கேட்பது போலவே முகத்தை வைத்துக்கொள்வாள்.  

ஒரு வாரமாக  போத்தலை தண்ணீர் கொண்டு வரவே இல்லை. விசாரித்துப் பார்த்ததில் போத்தலையின் வீடு பூட்டி இருப்பதாகவும், குடும்பத்துடன் அவன் கிராமத்திற்கு போய்விட்டதாகவும் சொன்னார்கள். பாட்டிதான் புலம்பிக்கொண்டே இருந்தாள். ஒரு நாள் வரமுடியவில்லை என்றாலும்,  பாட்டியிடம் முன்பே கூறாமல்  போக மாட்டான். அம்மாவும் தண்ணீருக்காக  மாற்று ஆளைத் தேடிக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் காலை நான் திண்ணையில் படித்துக் கொண்டிருந்தேன். பாட்டியும் என் அருகில் உட்கார்ந்து கொண்டு விளக்கிற்கு பஞ்சுத்  திரி சுற்றிக் கொண்டிருந்தாள்.  மணியின் சத்தம் கேட்டது.  நிச்சயம் அது   போத்தலையின் வண்டிதான். வேகமாக வாசல் பக்கம் ஓடினேன்.  ஆனால் போத்தலையைக் காணவில்லை. ஐய்யனார்தான் வண்டியில் உட்கார்ந்திருந்தான். என்னை பார்த்த உடனே கீழே இறங்கி என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு அப்பா இறந்து விட்டதாகக் கூறினான். எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக் காத்திருந்த கண்ணீர்த் துளிகளுடன் அழுகையை அடக்க முயன்று  தோற்றுப் போனான். பாட்டிதான்  அவனுக்கு ஆறுதல் கூறினாள். நாளையிலிருந்து பதிவாக வருவதாக பாட்டியிடம் கூறி மறுபடியும் வண்டியில் ஏறிக்கொண்டான். சிறிது தூரம் சென்றவுடன் வண்டியை  நிறுத்திவிட்டு பீப்பாயின் ஓரத்தில் சொருகி வைத்திருந்த  நோட்டை  எடுத்துக் கொண்டு என்னை நோக்கி  ஓடிவந்தான் ஐய்யானார். அவன் கொடுத்த நோட்டுப் புத்தகத்தின் எல்லா  பக்கங்களிலும் நிறைந்திருந்தது நான் கற்றுக் கொடுத்து அவன் முதன் முதலில் எழுதிய “அ” என்ற உயிர் எழுத்து.

Pin It