சற்றே திரும்பி இடதுபுறமாய் ஒருக்களித்துப் படுத்தான் வீர ஜாம்புகன். நிம்மதியிழந்து, திக்கு திசை தெரியாமல் அலைபாய்ந்தன அவனது எண்ணங்கள்.

people 243உலகிலேயே முதல் பறையனாய்ப் பிறந்து, முதலில் பூணூல் தரித்து, அரிச்சந்திர மகாராஜனையே அடிமையாக்கி, யானை கட்டி, அம்பேரிகையில் ஏறி... பெருவாழ்வு வாழ்ந்ததையெல்லாம் நினைக்க நினைக்க மனசுக்குள் கசகசத்தது. உலகத்தில் உள்ள மயானங்களிலெல்லாம் அவன் பேர் சொல்லி அவன் வாரிசுகள் புதைத்ததும், எரித்ததும்... அவன் பெருமை சொல்லி பாடியதும்... அந்த புகழ் போதை தலைக்கேற மல்லார்ந்து கிடந்ததும்...

இப்போது நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது.

‘சே... என்ன பிழைப்பு இது’ என்று முனகியபடி பெருமூச்சு விட்டான். சதா சர்வ நேரமும்... மயானங்கள் தோறும் இடைவெளியின்றி எரியும் பிணங்களும், புதையும் பிணங்களுமாய் எங்கும் ஓலங்கள். ஓலங்கள். ஆதிகாலத்தில் அந்த மரண ஓலங்களையும், பிணத்தை வாரிக்கொடுத்தவர்களின் கண்ணீர்க் கதறல்களையும் கேட்கக் கேட்க போதையேறியதும், எமனுக்கு நிகராய் செருக்கித் திரிந்ததும் இப்போது பழங்கதையாய் மாறிவிட்டன.

'கனி உதிர... கனி உதிர...’ என பாறை சாற்றச் சொன்ன இந்திரனின் கட்டளையை மீறி, 'காய் உதிர... கனி உதிர...’ என மாற்றி பாறை சாற்றிய நாளில் இப்படியெல்லாம் நடக்கும் என்று இந்த வீரஜாம்புகன் மட்டுமல்ல, அந்த இந்திரனே கூட நினைத்திருக்க மாட்டானே.

மாற்றிப் பறை சாற்றவிட்டு வெள்ளித்தமுக்கை இவன் ஓங்கி அடித்த அந்த நொடியில் தானே எல்லாமே மாறியது.

மனசுக்குள் மீண்டும் இனம்புரியாத இருட்டு குடியேற... எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி மல்லார்ந்து படுத்தான்.

'சாமிகுருவே சாமிகுருவே...

அடியேன் ஒரு விண்ணப்பம் சொல்கிறேன்

பராபரமே... பரமேஸ்வரியே...

போகும்போது பொஸ்தகமும் மடிப்பொறியும்

மசானம் போய்ச் சேரும் பிள்ளை என்றானாம்.

ஜங்கும் பறையனாம்

ஜாதிக்கெல்லாம் பெரியவனாம்

ஆனைகட்டி மாலையிடும்

அரிச்சந்திர மகாராஜனையே அடிமை கொண்டவனாம்’

எங்கோ ஒரு ஊரில் ஏதோ ஒரு மயானத்தில் எவனோ ஒரு பறையன், அரிச்சந்திரன் சிலை முன்பு இறக்கிவைத்த பாடையின் எதிரே, மயானத்தின் கதவு திறக்கப் பாடும் பாடல் இப்போது வீர ஜாம்புகனின் காதில் மெலிதாய் விழுந்தது.

ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிற இந்தப் பாடலின் இம்சை தான் அவனை நிம்மதியில்லாமல் தவிக்க வைக்கிறது. இடைவிடாத இம்சை இது. இரவு, பகல், காலை, மாலை, வெய்யில், குளிர், காற்று, மழை என எந்த இடைவெளியும் இல்லாமல், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எப்போதும் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கிறது இந்தப்பாடல்.

'ஊர் தோன்றி உலகம் தோன்றி

நாடு தோன்றி நகரம் தோன்றி

ஊருக்கு மேலாண்ட உயர்ந்த ஆலமரம் தோன்றி

ஆலமரத்தின் கீழே கனுப்புற்று தோன்றி

கனுப்புற்றுக்குக் கீழே காராம் பசு தோன்றி

காராம் பசுவை கரடுகட்டி பெருவாழ்வு

வாழ்ந்து வந்தானாம் வீர ஜாம்புகன்’

பாடையில் பிணம் நாறிக்கிடக்க, பாடைக்கு முன்னே கொள்ளிச்சட்டி புகைய, சுற்றிலும் உறவுக்கூட்டம் விசும்பி நிற்க... வாலும், தோலும், கறியும், வாரும், குளம்பும், கொம்புமாய் சகலமும் பயன்படும் மாட்டின் பெருமையை மீண்டும் குரலுயரத்திப் பாடத் தொங்கினான் அந்தப் பறையன்.

'மெச்சினென் மெச்சினேன் வீரஜாம்புகா...

அந்த வாரோட பதமை யாதுக்காகும் தெரி சொல்...’ என்றானாம்.

'அந்த வாரோட பதமை... வாராகவும் வடமறையாகவும், முன்னூறு கோடி தேவர்க்கு முகப்படையாகவும், நகாராகவும் நகப்புத்தியாகவும் ஆகும்’ என்றானாம்.

'அந்தக் கொம்போட வகை யாதுக்காகும் தெரி சொல்’ என்றானாம்.

 'அந்தக் கொம்போட வகை சீப்பாகவும் சிட்டாங்கோலாகவும் ஆகும்’ என்றானாம்.

'அதன் குளம்போட வகை ஏதுக்காகும் தெரிசொல்’ என்றானாம்.

'அந்தக் குளம்போட வகை முந்திப் பிறந்த மங்கைத்தாய்க்கு மைப்புருடு மாண்புருடு ஆகும்’ என்றானாம்.

'மெச்சினேன் மெச்சினேன் வீரஜாம்புகா... அதன் வாலோட பதமை ஏதுக்காகும் தெரி சொல்’ என்றானாம்.

'அந்த வாலோட பதமை காஞ்சிபுரத்து கச்சாலீஸ்வரனுக்கு முகத்தில் வீசும் வெஞ்சாமரம் ஆகும்’ என்றானாம்.

'அதன் சாணத்தோட பதமை ஏதுக்காகும் தெரி சொல்’ என்றானாம்.

'அந்த சாணத்தோட பதமை... ஊடு மொழுக... உத்திரம் தொளிக்க... மீதியெடுத்து எக்கனம் வளர்த்தா காஞ்சிபுரத்து கச்சாலீஸ்வரனுக்கு நெத்தியில் பூசும் விபூதியாகும்’ என்றானாம்.

'மெச்சினேன் மெச்சினேன் வீரஜாம்புகா... அந்த நரம்போட பதமை ஏதுக்காகும் தெரி சொல்’ என்றானாம்.

'அந்த நரம்போட பதமை காஞ்சிபுரத்து கச்சாலீஸ்வரனுக்கு வில்லுக்கு நாணாகும்’ என்றானாம்.

'மெச்சினேன் மெச்சினேன் வீரஜாம்புகா... அதன் நீரோட பதமை யாதுக்காகும் தெரி சொல்’ என்றானாம்.

'அந்த நீரோட பதமை... காரத்தீட்டு கன்னித்தீட்டு பறத்தீட்டு பன்னிரெண்டு தீட்டுக்கும் வாரியிறைச்சா நிவாரணமாகும்’ என்றானாம்.

'ஆஹா... மெச்சினேன் மெச்சினேன் வீரபகவானே... அதன் மாமிசத்தோட பதமை யாதுக்காகும் தெரி சொல்’ என்றானாம்.

'அந்த மாமிசத்தோட பதமை... ஆகாயக் காணிக்கை ஒரு பங்கு... பூமாதேவிக்கு ஒரு பங்கு... எனக்கொரு பங்கு’ என்றானாம்.

'இப்படி வாதாடி வழக்காடிக் கொண்டிருக்கும் போது, ஆதிசேஷன் புஜம் மாற்றி புஜம் கொண்டிருப்பதால் பூமி பாரம் பொறுக்க முடியவில்லை’ என்று பூமாதேவி தேவேந்திரனிடம் முறையிட்டாளாம்! இதைக் கேட்ட தேவேந்திரன்... பூமி பாரம் குறைக்க வேண்டி 'பழம் உதிர... பழம் உதிர’ என பறை சாற்றி வர பரலோகம் சென்று வீரஜாம்புகனை அழைத்து வரும்படி கட்டளையிட்டானாம்.

பாடல் வரிகள் சன்னமாய் காதில் விழ... ஆச்சரியத்தில் எழுந்து உட்கார்ந்தான் வீரஜாம்புகன். ‘இவ்வளவு நிதானமாக... இவ்வளவு தெளிவாக... இந்தக் காலத்தில்... இப்படி ராகம்போட்டு மயானத்தில் பாடுகிற ஆட்கள் கூட இப்போது இருக்கிறார்களா?’ என யோசித்த வீரஜாம்புகனுக்குள் பரலோகம் முழுவதும் பறைசாற்றி வர தேவேந்திரன் தனக்கு அழைப்பு விடுத்த காட்சி மனத்திரையில் ஓடியது.

பிறந்தவர்கள் எல்லோரும் பூமியிலேயே தங்கிவிட, தொடர்ந்து பிறப்பு மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்க...

பூமியின் பாரம் தாங்க முடியாத பூமாதேவி கண்களைக் கசக்கிக் கொண்டு, ஓவென்று அழுதபடி இந்திரனிடம் போய் முறையிட்டாள்.

பூமிபாரத்தைக் குறைக்க என்னசெய்யலாம் என மூளையைக்கசக்கி கசக்கி யோசித்தான் இந்திரன்.

பிறந்து, வளர்ந்து... இருநூறாண்டு, முன்னூறாண்டு, ஐநூறாண்டு என பூமியில் வாழ்ந்தும் போய் சேராமல் பழுத்த பழமாய் படுக்கையில் கிடக்கிற முதியவர்களை மட்டும் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடலாம் என முடிவு செய்தான்.

'யாரைய்யா... தூதர்களே... வேகமாக ஓடிச்சென்று வீரஜாம்புகளை அழைத்து வாரும்! ‘ என்று கட்டளையிட்டான்.

தூதர்கள் எல்லாம் குதித்த நடையாக குடுகுடுவென ஓடி... கிழக்கே பாரத்தால் சூரியம்பதி, மேற்கே பார்த்தால் சந்திரம்பதி, வடக்கே பார்த்தால் வாரும்பதி, தெற்கே பார்த்தால் தேவேந்திரம் பதி... என நான்கு புறமும் நகை முகமும் ஓடி ஓடி தேடிப்பார்த்தும்... வீரஜாம்புகனை கண்டுபிடிக்க முடியாமல்... தேவேந்திரனிடமே திரும்பி வந்து காலில் விழுந்து தண்டனிட்டார்கள்.

'தூதர்களே... தெற்கும் பதியிலே ஆடும் பெண்களை கையமர்த்தி, பாடும் பெண்களை கையணைத்து... தொம்பரப் பெண்ணை கடம் மீது ஏறவிட்டு... ஆடவைத்து, வெங்கலத்தூண் மீது சாய்ந்தபடி... வெள்ளித் தமுக்கைதோள் மீது சாய்த்துக் கொண்டு கட்டிளம் பெண்களோடு கொஞ்சிக் குலாவிக்கொண்டிருப்பான். அவன்தான் வீரஜாம்புகன். ஓடிப்போய் அழைத்துவாரும்’ என்றான் தேவேந்திரன்.

தூதர்கள் மீண்டும் குதித்த நடையாக குடுகுடுவென ஓடி, தெற்கும் பதியிலே ஆடும் பெண்களும், பாடும் பெண்களும் புடை சூழ ஆனந்தமாய் வீற்றிருந்த ஜாம்புகனின் முன்னால் போய் நின்றனர்.

'வீர பகவானே... உன்னை உடனே அழைத்து வரும்படி தேவேந்திரன் கட்டளை! விரைந்து வாரும் பிள்ளாய்’ என்றனர்.

அதைக் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து கிடு கிடுவென ஓடிப்போய் அடர் தாமரை சூழ்ந்திருக்கும் பன்னீர் தடாகத்தில் நீராடி, நெற்றியில் திலகமிட்டு, நூறு மார் காவி கச்சை ஒரே சுற்றாய் வரிந்து கட்டி, இருநூறு மார் காவி கச்சை இரண்டே சுற்றாய் வரிந்து கட்டி, முன்னூறு மாரை மூன்றே சுற்றாய் வரிந்து கட்டி, நானூறு மாரை நான்கே சுற்றாய் கட்டி, ஐநூறு மாரை ஐந்தே சுற்றாய் கட்டி, அறுநூறு மாரை ஆறே சுற்றாய் கட்டி, எழுநூறு மார் காவி கச்சை ஏழே சுற்றாய் வரிந்து கட்டி, தட்டி உட்ட கட்டி, தாமரைப்பூ சுங்கம் வைத்து, இரண்டு குருணி சாராயத்தை இடுப்பு மடியிலே மறைத்துக்கொண்டு, முக்குருணி சாராயத்தை முடியடியிலே மறைத்துக்கொண்டு, எழுபது யானைகளை சமாளிக்கும் தண்டாயுதத்தைத் தூக்கி தோளில் சுமந்த படி குதித்த நடையாக குடுகுடுவென ஓடிப்போய் இந்திராணியுடன் வீற்றிருந்த தேவேந்திரனின் முன்பு நின்று தாள் பணிந்து வணங்கினான்.

'அடியேன் என்னை வரவழைத்த காரணத்தை நாவால் உரையும் சாமி’ என்று பணிவோடு வினவினான்.

 'வீரஜாம்புகா... ஆதிசேஷன் புஜம் மாற்றி புஜம் கொண்டிருப்பதால் பூமி பாரம் தாங்க முடியவில்லை என பூமாதேவி கதறுகிறாள். ஆதலால் நீ பரலோகம் போய் ‘பழம் உதிர... பழம் உதிர’ என பறைசாற்றி வாரும் பிள்ளாய்!’ என்றான் தேவேந்திரன்.

அதைக்கேட்டதும் திகைத்தான் வீரஜாம்புகன். சுதாரித்துக்கொண்டு தேவேந்திரனிடம், 'சாமி... அப்படி சாட்டி வந்தால் எனக்கு ஏது உபாயம் கிடைக்கும்?’ என்று நேருக்கு நேராய் கேட்டான்.

‘உனக்கு பொன்னுக்கு பொன்னு தருகிறேன், ரோஜனத்துக்கு ரோஜனம் தருகிறேன்; இந்த இந்த தேவேந்திரன் பட்டணத்தில் பாதி தருகிறேன்; போய் பறை சாற்றி வா’ என்றான் தேவேந்திரன்.

இதைக்கேட்ட வீரஜாம்புகன் அவசரமாய் தலையசைத்து மறுத்தான்.

'சாமி... எனக்கு பொன்னுக்கு பொன்னு வேணாம், ரோஜனத்துக்கு ரோஜனம் வேணாம். உன் பட்டணத்துல பாதிவேணாம்... இதனால் எல்லாம் எனக்கு நித்தியகாலமும் நன்மை கிடைக்காது... நான் கேட்பதை கொடுத்தால் உமது ஆணைப்படியே பறை சாட்டி வருவேன்’ என்றான்.

'சரி... என்ன வேண்டும் கேளும் பிள்ளாய்!’ என்று கேட்டான் தேவேந்திரன்.

'பொணம் போகிற வழியிலே புண்டாசோறு... பொரியரிசி... வாய்க்கரிசி... வாமூட்டு... நாலுகால் நாலு பணம்... நடுக்காட்டான் ஒரு பணம்... ஏற வாகனமும்... வெள்ளித்தமுக்கும்... வெங்களக் கனுப்பும் கொடுத்தால் சாட்டி வருகிறேன் சாமி’ என்றான்.

'சரி அப்படியே ஆகட்டும்’ என்ற தேவேந்திரன், வெள்ளியால் செய்த பெரிய தமுக்கும், அதில் அடிக்க வெங்களத்தால் ஆன கனுப்பும், வீரஜாம்புகன் ஏறிப்போக தனது வெள்ளை யானையையும் கொடுத்து 'எட்டுத்திக்கும் போய் ‘பழம் உதிர... பழம் உதிர’ எனப் பாறை சாற்றி விட்டு வா’ என்று அனுப்பி வைத்தான்.

ஊருக்கு மேற்கே உயர்ந்து வளர்ந்திருந்த ஆலமரத்தைப் பிடுங்கி, அதன் முனையை முறித்து வீசிவிட்டு, அடி மரத்தால் அம்பாரி கட்டி, யானைமேல் அமர்ந்து பரலோகம் பறைசாற்றி வர புறப்பட்டான் வீரஜாம்புகன்.

வெள்ளையானை மிடுக்காய் நடக்க, அதன் மீது கம்பீரமாய் அமர்ந்து அவன் போய்க் கொண்டிருந்த நேரத்தில் எதிரே வந்தாள் காரூர் கம்மாளப் பறச்சி.

'யாரைய்யா வீர பகவானே... தேவேந்திரனின் வெள்ளை யானை மீது சவாரி செய்கிறாயே... என்னய்யா காரணம்?’ என்று பணிவோடு கேட்டாள்.

'பூமி பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி முறையிட்டதால்... ‘பழம் உதிர... பழம் உதிர’ என பறைசாட்டி வரும்படி தேவேந்திரன் கட்டளையிட்டிருக்கிறார்... அதற்காகப் போகிறேன் பெண்ணே’ என்றான் வீரஜாம்புகன்.

'அப்படி பறைசாட்டி வந்தால் உனக்கு என்ன கிடைக்கும்?’ என்று வீரஜாம்புகனிடம் திருப்பிக் கேட்டாள் அவள்.

'பொணம் போகிற வழியிலே புண்டாசோறு, பொரியரிசி, வாய்க்கரிசி, வாமூட்டு, நாலுகால் நாலு பணம், நடுக்காட்டான் ஒரு பணம், ஏற வாகனமும், வெள்ளித்தமுக்கும், வெங்களக்கனுப்பும் கொடுத்தால் சாட்டி வருதாய்ச் சொன்னேன்... அப்படியே தருவதாய்ச் சொன்னதால் சாட்டி வரப் போய்க்கொண்டு இருக்கிறேன் பெண்ணே’ என்றான்.

'ஓ... அப்படியா... என்ன சாட்டிவரச் சொன்னார்?’ என்று கேட்டாள்.

'பழம் உதிர... பழம் உதிர... என்று சாட்டிவரச் சொன்னார் பெண்ணே’ என்றான்.

'வீர பகவானே... அப்படி சாட்டி வந்தால் உனக்கு நித்திய காலமும் நன்மை கிடைக்காது... நானொரு உபாயம் சொல்கிறேன். அப்படி சாட்டிவந்தால், தினந்தோறும் உனக்கு பிணம் உண்டு, பணம் உண்டு’ என்றாள்.

அதைக்கேட்டதும் கட்டுக்கடங்காத கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது வீர ஜாம்புகனுக்கு.

'ஏ... பெண்ணே... தேவேந்திரன் கட்டளையை மீறி வேறு விதமாகச் சாட்டி வரச்சொல்ல என்ன தைரியம் உனக்கு? என் எதிரில் நிற்காதே. ஓடிப்போ... இல்லையெனில் என் தண்டாயுதத்தினால் உன் கபாலத்தை சுக்கு நூறாக சிதறடித்து விடுவேன்’ என்று கர்ஜித்தான்.

'வீரபகவானே... உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்... நான் சொல்கிறபடி சாட்டினால் தான் உனக்கு நித்திய காலமும் நன்மை கிடைக்கும்’ என்றாள் சாந்தமாக.

முன்னோக்கிப் பாயத்துடித்த யானையை அடக்கி நிறுத்திவிட்டு, நிதானமாய் யோசித்தான் வீரஜாம்புகன்.

இவள் சொல்வதைக் கேட்கலாமா? இவள் தன்னை குழப்ப வந்திருக்கிற பிசாசா? ஒருவேளை, உண்மையிலேயே இவள் நமது நன்மைக்காகத்தான் சொல்ல வருகிறாளா?’ என்று மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

'சரி... பெண்ணே... எப்படி சாட்டி வரவேண்டும் சொல்’ என்று கேட்டான்.

'காய் உதிர... கனி உதிர... பூ உதிர... பிஞ்சு உதிர... ஆறு மாதத்துப் பிண்டம் அதிர்ந்து உதிர’ என்று சாட்டி வந்தால் உனக்கு தினந்தோறும் பிணம் உண்டு, பணம் உண்டு’ என்றாள்.

'அய்யோ பெண்ணே... அப்படி சாட்டி வந்தால் தேவேந்திரன் என்னை தண்டிக்க மாட்டாரா?’ என்றான் பதட்டத்துடன்.

'அதற்கும் நானொரு உபாயம் சொல்கிறேன் கேள்... கள்ளு குடிச்ச மயக்கத்திலே... கஞ்சா குடிச்ச மயக்கத்திலே... அபின் தின்ன மயக்கத்திலே... கள்ளும் சாராயமும் கலந்து குடிச்ச மயக்கத்திலே மாற்றிப் பறை சாட்டி விட்டேன்... மன்னித்து விடும் சாமி என்று சாஷ்டாங்கமாய் அவர்காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தேவேந்திரன் மன்னித்து விடுவார்’ என்றாள்.

'சரி... அதைப்போலவே போய் பறை சாட்டி வருகிறேன்’ என்று கூறிய வீரஜாம்புகன் வெள்ளை யானையை வேகமாக துரத்திக் கொண்டு போனான்.

காரூர் கம்மாளச் சந்தையில் போய் நின்று 'காய் உதிர... கனி உதிர... பூ உதிர... பிஞ்சு உதிர... ஆறு மாதத்துப் பிண்டம் அதிர்ந்து உதிர’ என்று சாற்றிவிட்டு வெங்களக் கனுப்பால் வெள்ளித்தழுக்கில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

அவ்வளவுதான். இரவு பகலானது. பகல் இரவானது. சூரியனும் சந்திரனும் திக்கு கெட்டு திசைமாற... தேவேந்திரனின் மனைவி இந்திராணியின் வயிற்றிலிருந்த ஆறுமாதப் பிண்டம் அதிர்ந்து உதிர்ந்தது.

அதிர்ந்து போனான் தேவேந்திரன். நீண்ட காலமாக குழந்தையே இல்லாமல் இருந்த இந்திராணி அப்போது தான் கர்ப்பமுற்றிருந்தாள். அந்த கர்ப்பமும் கலைந்து போனதால் பதறினான். கோபத்தில் அவன் கண்கள் சிவந்தன்.

'யாரைய்யா தூதர்களே...! நானொரு விதமாக சாற்றி வரச்சொன்னால் அவன் ஒரு விதமாக சாற்றி விட்டானே... உடனே ஓடிப்போய் வீரஜாம்புகனை அழைத்து வாரும்!’ என்று கோபமாகக் கத்தினான்.

தேவேந்திரனின் கோபத்தைப் பார்த்து மிரண்டுபோன தூதர்கள் காற்றாய் பறந்து போய், வீரஜாம்புகனை அழைத்து வந்தனர்.

யானை மீதிருந்து பேரிகை மீது குதித்து, பேரிகை மீதிருந்து பூமி மீது குதித்து, கைகள் நடுங்கி, கால்கள் நடுங்கி வெலவெலத்துப்போய் நின்றான் வீரஜாம்புகன்.

'ஏனய்யா வீரஜாம்புகா... நானொரு விதமாகச் சாற்றி வரச் சொன்னால்... நீயொரு விதமாகச் சாற்றி வருந்திருக்கிறாயே என்ன காரணம்?’ என்று அதட்டினான் இந்திரன்.

'சாமி... நான் பயந்து சொல்லட்டுமா...? பயப்படாமல் சொல்லட்டுமா?’ என்று கேட்டான் பயந்துகொண்டே.

'அடிக்கிற காற்றுக்கும், இடிக்கிற இடிக்கும், பெய்கிற மழைக்கும் இவை மூன்றுக்கும் தவிர வேறு எதற்கும் பயப்படாதே... தைரியமாய் சொல்லும் பிள்ளாய்’ என்றான் தேவேந்திரன்.

'சாமி... நான் கள்ளு குடிச்ச மயக்கத்திலே... கஞ்சா குடிச்ச மயக்கத்திலே... அபின் தின்ன மயக்கத்திலே... கள்ளும் சாராயமும் கலந்து குடிச்ச மயக்கத்திலே அப்படி மாற்றி சாட்டிவிட்டேன்... சாமி என்னை மன்னித்து விடுங்கள்’ என்று சாஷ்டாங்கமாக அவர் கால்களில் விழுந்து தண்டனிட்டான்.

'யார் பேச்சு பொய்யானாலும் உன் பேச்சு பொய்யாகாது. பறை சாற்றுக்கு மறு சாற்று கிடையாது... சுடலை போய் சேரும்!’ என்றான் தேவேந்திரன்.

அதைக்கேட்ட பிறகு தான் அவனது பயம் தெளிந்தது. சற்று தைரியம் வந்தது.

சுடலைக்கு போகக் கிளம்பியவனுக்கு சில சந்தேகங்கள் எழுந்தன.

'சாமி... நான் சுடலைக்குப் போய்... யாரை சொர்க்கத்துக்கு அனுப்புவது? யாரை நரகத்துக்கு அனுப்புவது? பாவம் என்பது என்ன? புண்ணியம் என்பது என்ன...? எனக்கு விளக்க வேண்டும் சாமி’ என்று வேண்டினான்.

'வீரஜாம்புகா... பாவம் என்பது... நடக்கிற வழியிலே நடைபாதை கட்டாதவனும், போகிற வழியிலே முள்ளை போட்டவனும், கோதானம் கொடுக்காதவனும், அன்னதானம் கொடுக்காதவனும், விதைக்கிற விதையிலே பதறு கலந்தவனும், எல்லையைப் புரட்டியவனும், கொல்லையைப் புரட்டியவனும், வரப்பை வெட்டியவனும்... உழுகிற மாட்டை நுகத்தடியால் அடித்தவனும், தாயை அடித்தவனும், தாய்ப்பால் நோக அடித்தவனும், கர்ப்பிணியை காலால் உதைத்தவனும், வாத்தியார் கூலி, வண்ணாங் கூலி, அம்பட்டன் கூலி. பறையாங் கூலி, செக்கிலிக் கூலி கொடுக்காதவனும்... இவங்களுக்கெல்லாம் பாம்பு குழி, பல்லி குழி, அரணை குழி, அறாக்குழி தான் கிடைக்கும். இவர்களைளெல்லாம் நரகத்துக்குப் போவார்கள்’ என்றான்.

'சரி சாமி... புண்ணியம் என்பது என்ன?’ என்று கேட்டான்.

'நடக்கிற வழியிலே நடைபாதை கட்டியவனும், போகிறவழியிலே முள்ளைப் போடாதவனும், கோதானம் கொடுத்தவனும், அன்னதானம் கொடுத்தவனும், விதைக்கிற விதையிலே பதறு கலக்காதவனும், எல்லையைப் புரட்டாதவனும், கொல்லையைப் புரட்டாதவனும், வரப்பை வெட்டாதவனும், உழுகிற மாட்டை நுகத்தடியால் அடிக்காதவனும், தாயை அடிக்காதவனும், தாய்ப்பால் நோக அடிக்காதவனும், கர்ப்பிணியை காலால் உதைக்காதவனும், வாத்தியார் கூலி, வண்ணாங் கூலி, அம்பட்டன் கூலி, பறையங் கூலி, செக்கிலி கூலி, எல்லார் கூலியையும் கொடுத்தவனும்... இவர்களெல்லாரும் சொர்க்கத்தில் போய் சேமமாய் இருப்பார்கள்’ என்றான்.

அதைக் கேட்டதும் தெளிவு பெற்ற வீரஜாம்புகன், கிளம்புகிற போது, தயங்கித் தயங்கி, தனக்குள் நெடு நாட்களாய் அரித்துக் கொண்டிருக்கிற அந்தக் கேள்வியைக் கேட்டான்.

'எல்லாம் சொன்னீங்க சாமி... என்னுடைய அப்பா யாரு... அம்மா யாருன்னு எனக்குத் தெரியவில்லை. அதையும் சொல்ல வேண்டும் சாமி’ என்று பரிதாபமாகக் கேட்டான்.

அவனை தீர்க்கமாகப் பார்த்த தேவேந்தின் புன்சிரிப்போடு சொன்னான்.

'உன் அப்பன் பெயர் வேதபிராமணன், உன் அம்மா பெயர் காரூர் கம்மாளப் பறச்சி... போய் சுடலம் சேருவாய்’ என்றான்.

அதைக் கேட்டதும் வானமும், பூமியும் கீழும் மேலுமாய் ஆனது. இரவு பகலானது. பகல் இரவானது.

திக்கெட்டும் திசைமாறி நின்றான் வீரஜாம்புகன்.

பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஒருக்களித்துப் படுத்தான் வீரஜாம்புகன். முன்னர் நடந்த இந்த சம்பவங்களெல்லாம் இப்போது அவன் கண்களுக்குள் விரிந்ததும் வேதனைதான் மிச்சமானது.

வேத பிராமணனிடம் ஏமார்ந்து தன்னைப் பெற்றெடுத்த காரூர் கம்மாளப் பறச்சிதான் தன் தாயென்று தெரியாமல் ‘தினமும் பிணம் உண்டு... பணம் உண்டு’ என அவள் காட்டிய ஆசை வார்த்தையில் சித்தம் மயங்கி பறை சாற்றி விட்டதால் தினம் தினம் நெருப்பின் மீது படுத்திருப்பதைப் போல உடல் தசிக்க... எந்நேரமும் மனம் புழுங்கித் தவிக்கிறான்.

அப்படி பறைசாற்றி விட்டு வந்த பிறகு ஆதிகாலத்தில் எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்தது. பிணத்துக்கும், பணத்துக்கும் குறைவில்லாமல், அரிச்சந்திரனையே அடிமையாக்கி சரித்திரம் புகழும் படிதான் வாழ்ந்து வந்தான்.

ஆனால் இந்தக் கலியுகம் பிறந்த பிறகு தான் அவனது நிம்மதி போனது. மகிழ்ச்சி போனது.

கலியுகம் தோன்றிய பிறகு வாதும், சூதும் நாலா புறமும் சூழ, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்தனர். ஆள் வைத்து தீர்த்துக் கட்டினர். வறுமையில் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டனர்.

போதையில் வாகனங்களில் மோதிக்கொண்டு சாவோர் ஒருபுறம் பெருக, ஒன்றும் அறியாத பள்ளிக் குழந்தைகள் முதல் பழுத்த முதியவர்கள் வரை விதம்விதமான விபத்துகளில் அநியாயமாய் மாண்டு போய் மயானம் வந்தனர்.

பிறந்த குழந்தை முதல், அப்போதுதான் தாலிகட்டிக்கொண்ட இளம்பெண்கள் வரை அநியாயமாய் செத்துப்போய் பாடைகளில் ஏறி பரலோகம் போக அரிச்சந்திரன் கல் முன்னே அலங்ககோலமாய் கிடந்தனர். விதம் விதமான நோய்களினால் மருத்துவமனைகளில் பெரிய பெரிய பிணவறைகள் கட்டப்பட்டு, எந்நேரமும் நிரம்பிக் கிடந்தன.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பதறிப் போன வீரஜாம்புகன் தான் செய்த ஒரே ஒரு தவறுக்காக இப்போது இரவும் பகலுமாய் மனசுக்குள் கதறிக் கெணர்டிருக்கிறான்.

மயானங்களில் புதைக்க இடமில்லை. எரிக்க நேரமில்லை. அரிச்சந்திரனை கதவுத்திறக்கும்படி பாடல் பாட நாதியில்லை. 'சாமிகுருவே... சாமிகுருவே’ எனப்பாடத் தொடங்கி, வீரஜாம்புகனின் பெருமைகள், பறைசாற்றிய கதை என விலாவாரியாகப் பாடி முடித்து, இறுதியாய் 'காளியாத்தா கதவத்திற... அரிச்சந்திரா வழிய விடு... முன்ன எடுத்தவங் பின்ன எடு... பின்ன எடுத்தவங் முன்ன எடு’ என்று பாடுவதற்கெல்லாம் நேரமில்லாமல், 'காளியாத்தா கதவத்தற... அரிச்சந்திரா வழிய உடு’ என்று தமிழிலும், 'காளியம்மா தளுப்பு தெறி... அரிச்சந்திரா தோ உடி’ என்று தெலுங்கிலும், 'காளியம்மா பாகிலு தெகி... அரிச்சந்திரா தாரி பிடு’ என்று கன்னடத்திலும், 'காளிமாதா தர்வாசா கோலு... அரிச்சந்திரா... ராஸ்தா சோடு’ என இந்தியிலும், 'காளியம்மே கதவுத்தற... அரிச்சந்திரா வழி விடு’ என மலையாளத்திலுமாய் அவரவவர் மொழியில் நான்கே வார்த்தைகளில் பாடிவிட்டு புதைத்த குழியிலேயே புதைப்பதும், எரித்த சாம்பலிலேயே எரிப்பதுமாய் ஓடுகிறார்கள் வெட்டியான்கள். பிணத்தை எரிக்க விறகுகளை வெட்டி வெட்டி வனாந்திரங்களையெல்லாம் அழித்துவிட்டு, வேறுவழியுமின்றி, எரியும்வரை நிற்க நேரமுமின்றி கண் இமைக்கிறநேரத்தில் மின்சாரத்தால் சாம்பலாக்கியும், எரிவாயுவால் சுட்டுப் பொசுக்கியும், அப்படியும் மாளாமல்... உண்ணவும், உறங்கவும் நேரமின்றி வீரஜாம்புகனை சபிக்கும் வெட்டியான்களின் கோபத்தையும், சாபத்தையும் எங்கே தலைமுமுகி எப்படி தொலைப்பான் இந்த வீரஜாம்புகன்.

பாவம், புண்ணியம் எதுவென கேட்டு விட்டு அங்கிருந்து வந்தவன் அதன் பிறகு இன்று வரை தேவேந்திரனைப் போய்ப் பார்க்க முகமில்லாமல் இங்கேயே கிடக்கிறான்.

உயிரை உருவிக்கொண்டு எமதர்மன் அனுப்பி வைக்கும் பிணங்களால் ஓயாமல் வந்து சேரும் இவன் பங்கு பணத்துக்கு மட்டும் எந்தக் குறையுமில்லை. ஆனால் அந்தப் பாவப்பணத்தால் இப்போது எந்தச் சுகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

‘உலகில் நிகழும் அத்தனை அநியாய மரணங்களுக்கும் நான் ஒருவனே காரணம்’ என நினைக்க நினைக்க உடல் தகிப்பு கூடிக்கொண்டே போனது வீரஜாம்புகனுக்கு.

அதற்கு மேல் அந்த தகிப்பை பொறுக்கவே முடியாது என்று நினைத்தவன் ஒரு முடிவோடு எழுந்து இரண்டு சொம்பு நீரை மொண்டு உடல் மீது ஊற்றிக்கொண்டு காவித்துணியை அலங்கோலமாய் சுற்றிக்கொண்டு இந்திரலோகத்துக்குப் பயணமானான்.

அதன் பிறகு கருவே தங்காததால் கூம்பிய தாமரை போல வாடிப்போன முகத்தோடு இருந்த இந்திராணியின் அருகே தானும் வாடிப்போய் அமர்ந்திருந்த தேவேந்திரனின் முன்னே மண்டியிட்டான் வீரஜாம்புகன். அவனைப் பார்த்ததும் உள்ளுக்குள் சுருசுருவென ஏறியது கோபம்.

'ஆசீர்வாதம் பிள்ளாய்... வந்த காரணம் என்ன?’ என்றான் தேவேந்திரன் கோபத்தை அடக்கிக்கொண்டு.

'சாமி... ஒரு கணம் மதி மயங்கி நான் செய்த பெரும் பிழையால் பூமியெங்கும் இடையறாத மரண ஓலங்கள். பூவும், பிஞ்சுமாய், அரும்பும் மொட்டுமாய் பச்சிளம் குழந்தைகள் கூட மாண்டு போவதும், பெற்றவர்கள் மண்ணை வாரி இறைத்து கதறி அழுது என்னைச் சபிப்பதும் என்னால் தாங்க முடியவில்லை சாமி’ என்று கதறினான்.

 'அதற்கு இப்போது என்ன செய்யமுடியும் ஜாம்புகா...?’ என்றான் எரிச்சலோடு.

'எனக்கு மீண்டுமொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் சாமி. நீங்கள் முன்பு சொன்னது போல ‘பழம் உதிர... பழம் உதிர’ என்று சாட்டி விடுகிறேன்’ என்றான் பரிதாபமாக.

'அது முடியாது பிள்ளாய்... பறைசாற்றுக்கு மறு சாற்று இல்லை என்று நான் முன்பே சொல்லவில்லையா?" என்றான் தேவேந்திரன்.

'அப்படி கூறாதீர்கள் சாமி... நான் செய்த பாவத்தைப் போக்க... எனக்கு ஒரு வழி காட்டும் சாமி’ என்று தேவேந்திரனின் கால்களைப் பிடித்துக்கொண்டு 'ஓ’ வென அழுதான்.

அவன் அழுத கண்ணீர் ஆறாய்ப் பெருகி, இந்திரலோகமே மூழ்கத் தொடங்கியது. தேவர்கள் எல்லாம் திடுக்கிட்டு எழுந்து அதில் நீச்சலடிக்க, பட்டத்து வெள்ளை யானை அதில் மூழ்கி தத்தளித்தது.

இந்த விபரீதத்தை உணர்ந்த இந்திரன், வீரஜாம்புகனை தூக்கி நிறுத்தினான்.

'அழாதே வீரஜாம்புகா...! இதிலிருந்து மீள ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. எனது சிறப்பு சக்தியை பயன்படுத்தி உனக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். இன்னொரு முறையும் பறைசாற்றி விட்டால் மீண்டும் அதை மாற்ற யாராலும் முடியாது. அதனால் உனது வருமானம் அடியோடு போய்விடும்... மாற்றிப்பறை சாற்ற சம்மதமா...? யோசித்துச்சொல்!’ என்றான்.

அதைக் கேட்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான் வீரஜாம்புகன்.

'சாமி... இதில் யோசிப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. வருமானம் போனால் போகிறது... இப்போதே ‘பழம் உதிர... பழம் உதிர’ என பறைசாற்றி வருகிறேன்’ என்றான்.

'பொறு வீரஜாம்புகா... மறுபடியும் தவறு செய்து விட்டதாய் மீண்டும் நீ என்னிடம் வந்து அழுதால்?’ என்று கேட்டான் தேவேந்திரன்.

'ஒரு காலும் வரமாட்டேன் சாமி’ என்றான் உறுதியாக.

'அவசரப்படாதே பிள்ளாய். ஒன்று செய்யலாம்... நீ இப்போது பறை சாற்றி வருவது மூன்று மாமாங்கம் மட்டுமே அமுலில் இருக்கும் படி செய்கிறேன். நீ விரும்பினால் மூன்று மாமங்கம் கழித்து மாற்றி சாற்றலாம், சம்மதமா?’ என்று கேட்டான் தேவேந்திரன்.

'அதற்கு அவசியமே இல்லை சாமி... இருந்தாலும் நீங்கள் சொல்கிறபடியே சாட்டி வருகிறேன். மூன்று மாமாங்கம் முடிந்த பின்பும் இதுவே தொடர வேண்டும்’ என்றான் தெளிவாக.

'சரி... மூன்று மாமாங்கம் முடிந்ததும் நீ வந்து முறையிடாத பட்சத்தில் அப்படியே தொடரும், போய் பறைசாற்றி விட்டு வா’ என்றான் தேவேந்திரன்.

வெள்ளையானை மீது ஏறி உற்சாகமாகக் கிளம்பிய வீர ஜாம்புகனை அதே இத்தில் இப்போதும் வழி மறித்த காரூர் கம்மாளப் பறச்சியைக் கண்டும் காணாததைப் போல தலையைத் திருப்பிக்கொண்டு... விரைந்து போனவன் 'பழம் உதிர... பழம் உதிர’ என்று எட்டுத் திக்கும் சாட்டி விட்டு ‘பாவம் தொலைந்தது’ என்ற ஆனந்தத்தோடு வீடு திரும்பினான்.

அதன்பிறகு ஒரு ஆண்டு கழிந்தது. இரண்டு ஆண்டுகள் கழிந்தன. வாழ்ந்து முடித்து பழுத்த பழங்களின் பிணங்கள் மட்டுமே மயானங்களுக்கு வந்தன. பிறந்த குழந்தைகள் இறப்பதும், குழந்தைகள் இறந்தே பிறப்பதும் அடியோடு நின்று போனது. புதுமாப்பிள்ளைகள் விபத்தில் சாவதும், இளம்பெண்கள் தீயிட்டுக்கொண்டு மயானம் வருவதும் இல்லாமல் போயின. இப்படியாக ஒரு மாமாங்கம் முடிந்த போது மக்கள் மகிழ்ச்சியோடு வீரஜாம்புகனை வாழ்த்தினார்கள். கடவுள்களை வாழ்த்தினார்கள். நன்றி சொல்லி நெஞ்சுருகி வணங்கினார்கள்.

வீரஜாம்புகன் மகிழ்ச்சிக் கூத்தாடினான். மயானங்களிலிருந்து வந்த பங்குப்பணம் அடியோடு குறைந்த போதிலும் நிறைவாய் இருந்தது அவன் மனம்.

இப்படியே அடுத்த சில வருடங்களும் மகிழ்ச்சியாய் கழிந்த பிறகு... அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு செடிகளாய் முளைத்த சில பிரச்சினைகள் பெரிதாய் வளர்ந்து மரமாகத் தொடங்கின.

விதவிதமான நோய்களோடு மருத்துவமனைகளுக்குச் சென்றவர்களுக்கு நோயும் தீராமல், சாவும் வராமல் ஒரு புதிய தலைவலி உருவானது. வருகிற நோயாளிகளெல்லாம் மருத்துவமனைகளிலேயே நிரந்தரமாய் தங்கி விட, இட நெருக்கடியில் தவித்தன மருத்துவமனைகள்.

சாலை விபத்துகளில் அடிபட்டவர்கள் உயிர் மட்டும் போகமல் குற்றுயிரும், குலையுயிறுமாய் வந்தார்கள்.

கை, கால்கள் நசுங்கியவர்களும், இடுப்பு ஒடிந்தவர்களும் கூட சாகாமல் படுக்கைகளில் கிடந்தனர்.

குணமானவர்களும் கையின்றி, காலின்றி, குடலின்றி, ஈரல் இன்றி எப்படி எப்படியோ உலவினார்கள்.

எதிரிகளை வெட்டியவர்கள் எத்தனை முறை வெட்டினாலும் சாகாமல் பிழைத்துக்கொள்வதைப் பார்த்துச் சலித்துப் போனார்கள். வெட்டப்பட்டவர்கள் கை, கால்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்குப் போய் மீண்டும் ஒட்டச் சொன்னார்கள். ஒருவன் வெட்டப்பட்ட தன் தலையை தானே எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போய்... தலையை பக்கத்தில் வைத்துக்கொண்டு மருத்துவருக்காகக் காத்திருந்தான். போதையில் நாக்கு உலர்ந்து விழுந்து கிடந்தவர்களும் வாகனங்களில் மோதிக்கொண்டு கவிழ்ந்தவர்களும் மறுநாளில் எழுந்து சகஜமாய் நடந்தனர்.

தூக்கு மாட்டிக்கொண்ட காதலர்கள் பல நாட்கள் வரை கயிற்றில் தொங்கிப் பார்த்துவிட்டு, சலித்துப்போய், பூச்சிமருந்து கலந்து குடித்தும் சாகமுடியாமல் வெறுத்துப் போய் வீரஜாம்புகனை சரளமாய் சபிக்கத் தொடங்கினர்.

வேன்கள் கவிழ்ந்து படுகாயமடைந்த மாணவர்களும், நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகளின் பயணிகளும் உள்ளே இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசல்களில் பல நாட்கள் வரை கதறிக் கொண்டிருந்தனார்.

'மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது... சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள்’ என்பது போன்ற செய்திகள் வருவது அடியோடு நின்று போனது, இளம் வயதில் நோய் தாக்கியவர்களும், நோய் முற்றி வலியிலும் வேதனையிலும் தவிப்பவர்களும், வாழவே முடியாதென நொந்து போனவர்களும் சாகவே முடியாமல் வீரஜாம்புகனைத் திட்டித் தீர்த்தனர்.

'இப்டி ராவும் பகலுமா வலியில சாகறதவிட பட்டுனு ஒரு நொடியில உசிறு போய்ட்டா நிம்மதியாயிருக்குமே கடவுளே’ என்று நோயாளிகள் வேண்டும் போது வீரஜாம்புகனுக்கு ‘திகீர்’ என நெஞ்சுக்குள் குத்தத் தொடங்கியது.

நாளாக நாளாக எங்கும் நிறைந்த வலிகளின் கதறல்கள் ஒருபுறம்... இறப்புகள் குறைந்ததால் பெருகிவிட்ட மக்கள் நெரிசல் மறுபுறம்! உணவில்லை, வேலையில்லை, பேருந்துகளில் நுழைய முடியவில்லை. நிம்மதியாகத் தூங்கவும் இடமில்லை. திருட்டு, வழிப்பறி, பகல் கொள்ளைகள் பெருகின. இப்படி இரண்டு மாமாங்கம் முடிவதற்குள் வீரஜாம்புகனுக்கு மனது வெறுத்துப் போனது. இதைவிட அதுவே மேல் என்று நினைத்த அவன் மீண்டும் தவறு செய்து விட்டோமே என்று உள்ளுக்குள் தவிக்கத் தொங்கினான்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறையால் பதுக்கல்கள் பெருகின. விலைவாசிகள் வானத்துக்கு உயர்ந்தன.

குழந்தைகளுக்குத் தெரியாமல் தாய்மார்கள் தின்பதும், மனைவிகளுக்குத் தெரியாமல் கணவன்கள் தின்பதும், மளிகைக் கடைகளின் பூட்டுகள் உடைவதும் நாளுக்கு நாள் அதிகமாகின.

மீண்டும் வீர ஜாம்புகனுக்கு மனது கசகசக்கத் தொடங்கியது.

அப்படியும் இப்படியுமாய் பல்லைக் கடித்துக்கொண்டு நரகமாய் நாட்களை நகரத்திய வீரஜாம்புகன் மூன்றாவது மாமாங்கத்தின் கடைசி நாளில் விழுந்தடித்து ஓடிப்போய் இந்திரனின் காலில் விழுந்தான்.

'மீண்டும் என்னை மன்னிக்க வேண்டும் சாமி... மீண்டும் நான் தவறு செய்து விட்டேன்’ என்று கதறினான்.

'இப்போது என்ன செய்யப் போகிறாய் வீரஜாம்புகா...? இதோ வெள்ளை யானை! புறப்படு... உன் விருப்பம் போல பறை சாற்றி வா’ என்றான் தேவேந்திரன்.

யானையின் மீதேறி அவசர அவசரமாய்க் கிளம்பிய வீரஜாம்புகன், நேராக காரூர் கம்மாளச் சந்தையில் போய் யானையை நிறுத்தினான். வெள்ளித் தமுக்கை தூக்கினான். வெங்களக் கனுப்பை உயர்த்தினான்.

வாயைத் திறந்தான். அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. பெருமுயற்சி செய்து 'காய் உதிர கனி உதிர... பூ உதிர பிஞ்சு உதிர... ஆறு மாத்துப்பிண்டம் அதிர்ந்து உதிர’ என்று பறைசாற்றி விட்டு, பழைய நினைவுகள் மனசுக்குள் மாறி மாறி அலையாய் அடிக்க...

தமுக்கையும், கனுப்பையும் வீசி எறிந்துவிட்டு... குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான்.

- கவிப்பித்தன்

Pin It