துரோகம்
(வாலாட்டிப் பிழைப்பது புலிகளின் குணமல்ல)

ஒளி தோன்றுகிறது. சிலர் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்கள். விளக்கு அணைகிறது.

மீண்டும் ஒளி வருகிறது. பலத்த காயங்களுடன் கஷ்டப்பட்டு, சிலர் நடந்து செல்கிறார்கள். ஒளி அணைகிறது.

மீண்டும் ஒளி. குழந்தையின் சதையை கையில் எடுத்துக்கொண்டு இங்குமிங்கும் ஓடுகிறாள் ஒருத்தி. விளக்கு அணைகிறது. இருட்டு.

பின்னணியிலிருந்து ஒரு குரல்: "உலகநாடுகளின் சதுரங்க ஆட்டத்தில் இது ஒரு வினோதமான கட்டம். நேற்றுவரை நாடு முழுக்க நலங்கள், முகங்களெல்லாம் மலர்கள். வான்முழுதும் நறுமணங்கள். ஆண்டு முழுக்க வசந்தம்..."

(சற்று நேரம் கழித்து உரத்த குரலில்)

  இன்று... நிழல் தரவும், நிலத்திற்கு நீர் தரவும் மட்டுமே தவழ்ந்த மேகங்கள், தீயின் தாகங்களாக நோயின் கோபங்களாக மாறியுள்ளன. மரண அலைகள் மண்ணின் சாதனைகளை அரித்துக் கொண்டிருக்கின்றன... (சற்று நேரம் கழித்து உரத்த குரலில்)

  இனி... வேதனையே வாழ்க்கையாகிவிட்டது... வாழ்க்கை ஒரு காத்திருத்தலாகிவிட்டது... கவலைக்கு மருந்தாக மரணம் மட்டுமே உள்ளது... இது நம் நாடு., இது நம் மக்கள்., இது நாம்., இது நம் நாளை., இன்று, நாம் என்ன செய்யப் போகிறோம்?

மெல்ல மெல்ல ஒளி கூடுகிறது. தலைவன் கோபமாக எழுந்து நிற்கிறான். குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பவர்களும், காயம் அடைந்தவர்களும், குழந்தையின் சதையை கையிலெடுத்து திரிந்து கொண்டிருக்கும் அவளும் தலைவனருகில் வருகிறார்கள். தலைவரின் பக்கத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான்

 தலைவன்: என் கைகள் மனிதக் கரங்கள்... முன்னூறு காதம் வரை கணை வீச முடியும் என்னால். ஆனால்... நான் மனிதன்... உங்களைப்போல நானும் மனிதன்தான்.

 ஒருவன்:  மனிதரில் தலைவன்.

 தலைவன்: ஆக்கிரமிக்கும் காடையர்களை என் வாழ்நாள் முழுதும் விரட்டினேன்! அப்பணியைத் தலைமையேற்று, செவ்வனே செய்தேன். நான் மனிதன். எமக்கெதிராகப் போரிடுவது பெரும் சக்திகள்.

 ஒருவன்:  இல்லை, துரோகம்

 தலைவன்: (கோபமாக) அது எதிர் வரட்டும் சந்திக்கிறேன். வெல்கிறேன் அல்லது மடிகிறேன்.

தூரத்தில் குதிரை ஒன்று வரும் சத்தம் கேட்கிறது. ஒருவர் தள்ளாடிய படி உள்ளே வருகிறார். தலைவனை வணங்குகிறார்.

 தலைவன்: உன்னுடன் இருந்தவர்களெல்லாம் எங்கே?

 அவர்:  இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான் விரைந்து வந்தேன்.

என்று சொல்லிக்கொண்டே விழுழுகிறார். முதுகில் கட்டாரி சொருகப்பட்டிருக்கிறது. தலைவர் அவனைதூக்குகிறார்.

 தலைவன்: மெதுவாய் எழு மருதா. கட்டாரியை உன் முதுகில் பாய்ச்சி, பகைவன் வீரக்கயமை புரிந்துவிட்டான். சற்றுப் பொறு தம்பி...

கட்டாரியை எடுத்து எறிகிறார்.

 அவர்:  துரோகிகளும் ஒற்றர்களும் செய்த சதியின் விளைவுதான் என் ரணங்கள். என் உடலிலிருந்து வழியும் குருதியைப் போல துரோகதிட்டத்திலிருந்து எதிரிகள் பொங்கி வந்தார்கள்.

 தலைவன்: சற்று பொறு! காயங்களுக்கு மருந்திடலாம்.

 அவர்:  துடிக்கும் என் ஆவிச் சுடரை தூண்டாதீர்... போர் உச்சக்கட்டத்தில் திசையின்றி தடுமாறியபோது மின்னல் போல் வந்தன கணைகள். மற்றையோர் மாய்ந்தனர். உன் மகனும் தான் காவலனே... உம் கையால்   என்னை தொட்டீர். அதிலே நான் சொர்க்கசுகம் கண்டேன்.

என்று சொல்லிவிட்டு இறக்கிறான். தலைவரைச் சுற்றி இருந்தவர்களில்

 ஒருவன்:  உங்கள் மூத்த மகன் சொல்லப்பட்டானா?

 தலைவர்:   நாம் நின்று நிலைக்க வேண்டுமெனில், இழப்புகளைச்  சந்திக்கத்தான்வேண்டும்.

 ஒருவன்:  பெற்றமகனை இழந்த போதும் உளமதிரவில்லையா, உறுதி குலைய  வில்லையா?

 தலைவன்: நானிதனை எண்ணி நவிலவில்லை.

 ஒருவன்:  வான்பெற்று வட்டநிலா இழந்தால் ஏதபயன்? தங்களிடம் தயவாகக் கேட்கிறேன்.

 தலைவன்: தங்கு தடையின்றிச் சாற்றும்...

 ஒருவன்:  இளையவனை காக்கும் பொருட்டு அவனை நகரத்தினுள் குடி பெயரச் சொல்.

விளக்கு அணைகிறது. ஒலித்துக் கொண்டிருந்த இசையும் மெல்ல மெல்ல ஓய்கிறது. அரங்கில் சில வினாடிகள் இருளில் அமைதி... மெல்ல ஓர் ஒளிவட்டம் மேடையின் முன்புறம் வருகிறது. முக்காடிட்ட ஓர் உருவம் அதில் வந்து அமர்கிறது. அந்த உருவத்தின் முகமோ கைகளோ தெரியாத ஒரு பெரிய போர்வை சுற்றப்பட்டிருக்கிறது. பின்னணியிலிருந்து நாடகத்தின் சிறப்பான இசை ஒலிக்கிறது.

  ஒரு கம்பீரமான குரல் : “இன்று“

என்று சொன்னவுடன் இசை நிற்கிறது. அமர்ந்த உருவம் தன் தலையை இடமும் வலமுமாகத் திருப்பிப் பார்க்கிறது. மெல்ல எழுந்து நிற்க முயலும் போது மீன்டும் குரல் “இது நிஜம்“ உருவம் மண்டியிட்டு அமர்கிறது.

 குரல் :   கனவுகள் சிதைந்து கண்திறக்கும் இன்று இது நிதர்சனம் - இது வாழ்க்கை  இருள் நிழல்கள் கவிழ உருவிழந்து உடைந்தாலும் இன்னும் சிதறாது நாளைக்கு காத்திருக்கும் கால தாமதத் தருணம். ஓடிய நாட்களின் ஓய்வுக்   காலம் நாளையின் நம்பிக்கைகள்! நேற்றைய எதிர்பார்ப்புகள்!!  நியாயங்களை ஆலோசிக்காத நிமிடங்கள்!!! இஃது ஒருவேளை உன்  கதையும் ஆகலாம்.

குரல் ஓய்ந்து சில வினாடிகள் இருள் மேடையின் முன்புறம் மேலும் கீழும் பலர் நடக்கிறார்கள். பீரங்கி குண்டின் ஓசை ஒலித்ததும் எல்லோரும் ஓடி வெளியேறுகிறார்கள்.

முன்னால் அமர்ந்த உருவம் அதை நோக்கி மண்டியிடுகிறது. திரையை விலக்கி அந்த அகோரமான உருவம் முன் வந்து நின்று இரு கைகளையும் உயர்த்துகிறது. மன்டியிட்ட உருவம் மெல்ல எழுந்து குனிந்து திரைக்குள் சென்று விடுகிறது. மத்தள ஒளியுடன் அறிவிப்பு

  ___________ நாடகக்குழு வழங்கும் துரோகம்
மத்தள ஒலி நின்றவுடன் இந்த உருவம் கைகளை இறக்கி, குனிந்து இடப்புறம் திரும்பிப் பார்க்கிறது. திரையை விலக்கி இதே போல் இரண்டாவது உருவம் வந்து முன் நின்று மேல் நோக்கிப் பார்க்கிறது. மூன்றாவதாக இன்னொரு உருவம் வந்து இருவருக்கும் எதிராய் முக்கோண அமைப்பில் நிற்கிறது.நாடக இசை ஒலிக்க ஆரம்பிக்கிறது. இந்த மூன்று உருவங்களின் மேல் ஒளி வருகிறது.

 உருவம் - 1:  உரிமைக்காக குரல்கொடுப்போம்

  உருவம் - 2: மழையில் மனிதச்சங்கிலி, இடியில் ஆர்ப்பாட்டம், மின்னலில்  பொதுக்கூட்டம்

 உருவம் - 3:  தோல்வியின் வெற்றிக்கு

 உருவம் - 1:  குழப்பமான முடிவிற்கு

 உருவம் - 2:  தெளிவான அழிவிற்கு

 உருவம் - 3:  அஸ்தமனத்தின் ஆரம்பத்திற்கு

  மூன்று  உருவமும்:  எம்வேலில் கூருண்டு! பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை...

துப்பாக்கி, பீரங்கி குண்டுகளின் ஓசை பின்னணியில் ஒலிக்கிறது.

 உருவம் - 1:  பாம்பிடமிருந்து வல்லூறு காத்த மணிப்புறாக்கள்

 உருவம் - 2:  வீரத்தால் தேல்விதான் கிட்டுமெனில் அவ்வீரம் யாருக்கு வேண்டும்

 உருவம் - 3:  வெஞ்சமரில் வெற்றி விளைவிக்கும் அத்தகையை வஞ்சகம்தான்  என்றால் அதையே வரவேற்போம்.

 மூவரும்:  எம்வேலில் கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை...

விளக்குகள் அணைகின்றன. இருளில் ஒரு குரல்

  “இனி ஈழ நாடு வாளாயுதங்கள் தாங்கிய மறவர் திரிந்த நாடு. கிழப்புலிகள் கத்தநாடு”

இருள் மூன்று உருவங்களும் மேடையின் வலப்புறம் அமர்ந்து கொள்கின்றன. மேடையின் இடது ஓரத்தில் ஒளிவட்டம் அங்கு சிங்கராஜாவும் அவன் பக்கத்தில் இரண்டுபேர்.

 சிங்கராஜா:  யார் அவன்? எங்கே இருக்கிறான்?

 ஒருவன்:  உங்கள் முன் மண்டியிட வந்துகொண்டிருக்கிறான்

 சிங்கராஜா:  சீக்கிரம் வரசொல்

 ஒருவன்:  ரத்தத்தால் கதிர் காய்த்துச் சாய்தாடும் நாட்டரசே! சிங்கத்தின் முன்  சிறுநரியாய் ஆவேன் என்று உறுதி அளித்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் வருவான்.

 இருவர் ஓடி வரும் சத்தம். எல்லோரும் அத்திசை நேக்கிப் பார்க்கிறார்கள் புதியவன் ஒருவன் ஓடிவருகிறான். சிங்கராஜாவை வணங்குகிறான்.

 சிங்கராஜா:  ம் ம்

 ஒருவன்:  இது கடைசி அத்தியாயம். அவர்களின் கதை முடியப்போகிறது. நம் படைகளின் மரணவேதனை மகிழ்ச்சியொலியாய் மாறப்போகிறது. நாம் வெல்வது உறுதி.

 சிங்கராஜா:  கோள்விக் குறியுடன் பார்க்கிறான்.

 ஒருவன்:  இப்போரில் உச்சக்கட்டமாய் நமக்கு உதவியாய் புயலாகத் திசையின்றி  தடுமாறி மின்னல்போல் ஒருவாள் கிளம்பியுள்ளது. தாக்க வருபவர் தடுத்துக் கொண்டு சிதறுவர்... சில காலங்களில் தோல்வி மேகம் விலகி  நம் வெற்றிவானம் பளிச்சிடப்போகிறது

 சிங்கராஜா:  யார் அந்த வீரன்?

விளக்குகள் அணைகின்றன. வலப்புறத்தில் மெல்ல ஒளி வரும்போது படியில் இருவர் இறங்கி வருகின்றனர்.

  ரா:  கருணா

 கருணா:  அவனை நோக்கித் திரும்புகிறான்

  ரா:  அடையப்போகும் வெற்றிக்கு இவன்தான் காரணமாய் இருப்பான்

 கருணா:  புன்னகைக்கிறான்

  ரா:  உன் வீரம் என்னை அதிசயிக்க வைத்த்து... சிங்கராஜாவின் பரிசுகள் உனக்குக் காத்திருக்கப் போகின்றன.

 கருணா:  பரிசு பதவியும் நாடி நான் நிற்கவில்லை. இந்த நாடும் அதன் நலனுமே  எனக்கு முதன்மை. சிங்கராஜாவின் ஆட்சி மேலும் செழிக்கவே என்  மரணத்தை உதாசினப்படுத்தி வந்திருக்கிறேன்... வெற்றி என்பது  அவருக்காக...

விளக்குகள் கருணா மீது அணைந்து சிங்கராஜா மேல் எரிகிறது.

 சிங்கராஜா:  என்வெற்றிக்காக உயிரையே பணயம் வைத்தவனுக்கு என்ன செய்தால் தகும். வெற்றியை வழங்கிய வெற்றிக்கு வெகுமதி உண்டா?

  ரா:  அந்தத் துரோகி இப்போது நம்மிடையே அமைதி ஒப்பந்தம் நாடுகிறான். கருணா இல்லாதிருந்தால் நாம் மீண்டும் அவனிடம் தோற்றுப்போக  வேண்டி இருந்திருக்கும்

 சிங்கராஜா:  துரோகம் தண்டனைக்குரியது, வெற்றி வெகுமதிக்குரியது. அவன் உயிர்  நிச்சயம் பறிக்கப்படும். அந்த உயிர் வாழ்ந்த உடல் இது நாள்வரை தரித்த  புகழ் அனைத்தும் இந்த வெற்றி வீரனுக்கு சேரட்டும்.

விளக்குகள் அணைகின்றன. அரையிருட்டில் மூன்று பேய் உருவங்கள் மெல்ல எழுந்து ஒரு முக்கோணமாய் நிற்கின்றன.

 உருவம் - 1:  உள்ளிருக்கும் பாவங்கள்

 உருவம் - 2:  வெளிவருகிற நேரம்

 உருவம் - 3:

 மூவரும்:  விதி அமைக்கும் பத்ம யூகத்தில்

 உருவம் - 1:  நாம் மனத்தின் பிம்பம்

 உருவம் - 2:  நாளைக்காக இன்று ஆடும் நிஜம்

 உருவம் - 3:  உள் புதைத்ததை வெளிக் கொணர

 மூன்றும்:   தினம் பயிலும் பாவம்

 உருவம் - 1:  வானக் கருமையிலே

 உருவம் - 2:  மறைந்திடுமோ விண்மீன்கள்?

 உருவம் - 3:  ஊனக் கண்மூட

 மூவரும்:  உறங்கிடுமோ கற்பனைகள்?

 உருவம் - 1:  உள்ளாடும் ஆசைகளை

 உருவம் - 2:  ஊர் சொல்லும் தப்பென்று

 உருவம் - 3:  தள்ளாமல் கணக் கெடுத்தால்

 மூவரும்:  மிஞ்சிடுமோ நேர் வழிகள்?

 உருவம் - 1:  ஆட நினைக்கின்ற

 உருவம் - 2:  அத்தனையும் கால்பழக

 உருவம் - 3:  போடும் தடைகளெல்லாம்

 மூவரும்:  தப்பென்னும் அடைமொழிகள்

 உருவம் - 1:  மனம் சரியாய் ஏற்குடிமன

 உருவம் - 2:  மனிதரெல்லாம் காத்திருந்தால்

 உருவம் - 3:  தினசரியின் நடைமுறையில்

 மூவரும்:  திறந்திடுமோ புது வழிகள்?

 உருவம் - 1:  இனியும் பொய்யாக

 உருவம் - 2:  இயல்பென்று நடிக்கின்ற

 உருவம் - 3:  இனிமை போகட்டும்

 மூவரும்:  இதயம் தெரியட்டும்

 உருவம் - 1:  கறுப்பும் நிஜமென்று

  உருவம் - 2: வெண்திரையில் தெரியட்டும்

 உருவம் - 3:  விருப்பம் நிறைவேற்ற வழிவகைகள் புரியட்டும்

 மூவரும்:  எம்வேலில் கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை...

மூன்று உருவங்களின் மேல் ஒளி குறைகிறது. ரா, கருணா மீது ஒளி வருகிறது. இருவரும் களைத்து இருக்கிறார்கள். மூன்று உருவங்களும் அமர்கின்றன. இவர்கள் அந்த இடத்தில் உருவங்களுக்கு முன்னால் நிற்கிறார்கள்.

 கருணா:  இது என்ன நாள் - இருளும் ஒளியும் ஒன்றாய் இருப்பது போல...  குழப்பமான மந்தாரத்தில் உள்ளம் ஒடுங்கி வெளி வரும் போல் ஒரு கனத்த சூழல்

  ரா:  ம்...ம்.. இன்னும் போக வேண்டிய தூரமும் அதிகம்.

 கருணா: போவதற்குள் அடியில் இருக்கும் அத்தனையும் பூகம்பமாய் வெளிவரும்  போல ஒருநிலை... அதிர்ச்சியான திதானம்...

  ரா:  கருணா இது என்ன?

 கருணா:  எது? (சுற்றும் பார்க்கிறான்)

  ரா:  உடலும் உயிரும் சம்பந்தமில்லாத உருவங்கள்... கனவு போல  மனத்தரையின் அடியில் ஓடும் எண்ண நதி போல...

 கருணா:  (சுற்றிப் பார்த்தவாறு) இது என்ன (என்று வாளை உருவுகிறான்)

  ரா:  எது? (சுற்றிப் பார்க்கிறான்)

புயல் போல சப்தம். நாடக இசை ஊடுருவி வருகிறது. மூன்று உருவங்களும் குனிந்தவாறு இவர்களைச் சுற்றி வருகினற. ரா இரண்ட்டி பின்னேநகர்கிறன். கருணா உறைகிறான்.

  மூன்று உருவங்களும்: தளபதி வாழ்க, முதல் அமைச்சர் வாழ்க. தலைவர் வாழ்க

  பின்ன்ணிக் குரல் முதல் அமைச்சர் வாழ்க கருணா: வாழ்க

  ரா:  ஏய்... நீங்கள் யார்? உருவங்களைப் பார்த்தால் உயிரில்லை... உயிர் போன்ற  ஓட்டத்துக்கும் உடலுக்கும் பொருத்தமில்லை. உங்களிடம் கேள்விக்கு விடைகள் வருமா?

  மூன்று உருவங்களும்: உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

  ரா:  என் பேச்சு புரிகிறதா... பதில் தரத் தெரியுமா... அருவங்களே நீங்கள் யார்? மூன்று உருவங்களும் எழுந்து நிற்கின்றன. கருணாவை நோக்கி

  மூன்று உருவங்களும்: தளபதியே வணக்கம். முதல் அமைச்சரே வணக்கம். தலைவரே வணக்கம்

  கருணா:  உறைந்த நிலையிலிருந்து திடுக்கிடுகிறான்.

  ரா:  கருணா. என்ன உடலில் நடுக்கம். நான் கேட்ட வார்த்தைகளை நீயும் கேட்டாயா? இது நிஜமென்றால் நலம் தானே. நலமென்றால்  நடுக்கம் ஏன்? (உருவங்களைப் பார்த்து) நீங்கள் யார்?  வார்த்தைகளா எண்ணங்களா. பதுக்கிவைத்த ஏக்கங்களின்   பூகம்பமா? அவனது ஆசையா எனது அச்சமா? என் அச்சத்தின்  ஒலியினடியில் என் ஆசைகள் கிடையாதா...

  மூன்று உருவங்களும்: வாழ்க நீ... வசதிகள் கிடைக்கும் வாழும் நாளின் வரையறை முடிந்தால் சந்ததிக் கெல்லாம் சரித்திரம் இருக்கும் அவன் தான் தேசியத்தலைவன்.  நீயில்லை அவனது மகிழ்ச்சி உனக்கு கிடையாது உன் மகிழ்ச்சி பெரியது   உனக்கே மணிமுடி வாழ்க நீ

ரா, கருணா இருவரும் உறைய உருவங்கள் மெல்ல நகர்கின்றன.

 கருணா:  நில்... சொன்ன தெல்லாம் என்ன நிகழ்கால நிலை மீறிய வருங்காலமா.  காதில் விழுந்தவை கனவு சிதறல்களா நாளையின் நிச்சயங்களா?

மூன்று உருவங்களும் ஓடி விடுகின்றன. கருணா, ரா இருவரும் உறைகிறார்கள். மெல்ல நாடக இசை ஓய்கிறது.

  ரா:  என்ன நடந்தது?

 கருணா:  காற்றைப் போலக் கனவுகள் கரைந்தன. நடந்து முடிந்தது நிஜம்தானா?

  ரா:  நம் முகதின் குழப்பங்கள் தான் இப்படி தெரிந்ததா...

 கருணா:  உன் சந்ததிகளுக்கு ராஜயோகம்.

  ரா:  உனக்கே ராஜயோகம்

இருவரும் சிரிக்கிறார்கள் விளக்கு அணைகிறது. சிங்கராஜா மீது ஒளி விழுகிறது.

 சிங்கராஜா:  வா கருணா. (கருணா வந்து மண்டியிடுகிறான்) இன்று முதல் உனக்கு  இரண்டு வேலைகள் ஒன்று இப்போது மற்றது நாளை (கருணா  நிமிர்கிறான்) இன்று முதல் நீ ஓர் அமைச்சர். உன் விசுவாசத்திற்கு வெகுமதியாக ஒரு சிறு பதவி.(கருணா எழுந்து வணங்குகிறான்

 கருணா:  நன்றி சிங்கராஜா போனவுடன் ரா வருகிறான்

  ரா:  கருணா

 கருணா:  நேற்று தளபதி. இன்று அமைச்சர். நாளை வருமா...

  ரா:  இது சந்தர்ப்ப சாரல்... இந்த ஈரம் காய்ந்தவுடன் நிஜம் நிறம் மாறும்

 கருணா: உன் குழந்தைகளும் பிற்காலம் பதவி ஏற்பார்கள்.

  ரா:  ஜோதிட மென்றாலும் சத்திய மென்றாலும் நாளைத் தெரிந்து கொண்டால்  நிம்மதி போய்விடும்.

 கருணா:  இரண்டு வாக்கியங்கள் உண்மையென்றால் மூன்றாவது முழுதாய் பொய்க்குமா?

  ரா:  அமைதிகொள். ஆசைகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்.   நேர்வழியைவிட்டு விலகுவதற்காகவே நாளை என்றொரு கானல். இன்று தரையில் இரு. நாளைய விண்மீனை நாட வேண்டாம்.

 கருணா:  நேற்று தளபதி இன்று நான் அமைச்சர்.

  ரா:  அதற்குரியது போலவா நடந்து கொள்கிறாய். வீணாய் மனம் முழுக்க கோட்டை கட்டக் கற்களை அடுக்காதே. நிம்மதிப் பூ மலர இடமிருக்காது.  பதவி என்பது புதுச் செருப்பு போல பழகப் பழகத்தான் பொருந்தும். அமைதியாய் இன்று வாழ சிந்தித்து கொள். நான் போகிறேன்.

விளக்கு அனைகிறது. மீன்டும் எரிகிறது. ஒருசிறுவன் நின்று கொண்டிருக்கிறான். கருணாவை பார்த்து மாமா என்கிறான். கருணா அவனருகில் செல்கிறான்.

 கருணா:  உன் பெயர் என்ன?

 சிறுவன்: பாலச்சந்திரன்

 கருணா:  நெஜமாவா? (சற்றுநேரம் கழித்து) ஆடு பகை குட்டி உறவாடுதோ... (சற்றுநேரம் கழித்து) உனக்கு சண்டைனா பிடிக்காதில்ல

 சிறுவன்: இப்ப பிடிக்கும் மாமா. கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்

 கருணா:  அப்படியா? உனக்கு ரொம்ம பிடிச்சது எது?

 சிறுவன்: கப்பல்

 கருணா:  நெஜ கப்பலா? பொம்மைக் கப்பலா?

 சிறுவன்: ரெண்டுமெ பிடிக்கும்

 கருணா:  ரெண்டுமேவா? (சற்றுநேரம் கழித்து) ஏன் உனக்கு கப்பல் பிடிக்கும்?

சற்று நேரம் கழித்து

 சிறுவன்: ஏன்னா... அது தண்ணில மிதந்துகிட்டே போகும். தண்ணிய கிழிச்சிகிட்டு   வேகமா போகும். நெஜகப்பல் அப்படித்தான் போகும்.

  கருணா: பொம்மைக் கப்பல்?

 சிறுவன்: அதுவும் நெஜகப்பல் மாதிரியே வேகமாப் போறதா நான் வௌயாடறப்ப  நெனச்சுக்குவேன் மாமா.

சற்றுநேரம் கழித்து

 கருணா:  உனக்கு உன் மம்மி, டாடியை ரொம்ப பிடிக்குமா? (அமைதியாய் இருக்கிறான் சிறுவன்.) உனக்கு உன் அப்பா அம்மாவை பிடிக்குமானு  கேட்டேன்?

 சிறுவன்: பிடிக்கும்

 கருணா:  ஏன்? (சிறுவன் அமைதியாக இருக்கிறான்) ஏன் பிடிக்கும்? (அமைதி) அதுக்கு  பதில் சொல்ல அவ்வளவு கஷ்டமான கேள்வியாவா இருக்கு?

சற்று நேரம் கழித்து

 சிறுவன்: என் அம்மா எங்க மாமா?

 கருணா:  உனக்கு டாடியப் பிடிக்காதா?

 சிறுவன்: இல்ல, பிடிக்கும்

 கருணா:  ஏன்? (சிறுவன் அமைதியாய் இருக்கிறான். அவன் கண் கலங்குகிறது)  பெரியவனா ஆனப்பறம் நீ உன் அப்பா மாதிரி ஆவியா?

 சிறுவன்: ஆகனும்னா ஆகலாம்...

 கருணா: ஓ... அப்படியா? குட் உனக்கு அப்ப ஆமிக்காரங்கள பிடிக்கும். குட்... ஆனா,  நீ என் சிப்பாய்கள கல்லெடுத்து அடிச்சியிருக்கே. அவங்கமேல காறி  துப்பியிருக்கே. கோஞ்சம் விட்டு இருந்தா எட்டி உதச்சியிருப்பியாமே?

 சிறுவன்: அவங்க உங்க சிப்பாய்ஙகளா?

 கருணா:  அவங்க உன் தேசத்தோட சிப்பாய்கள்

 சிறுவன்: எனக்கு அவங்களப் பிடிக்கல.

 கருணா:  கண்ணா... அவங்களுக்கும் உன்ன பிடிக்கல.

விளக்கு அணைகிறது. இருள் சூழ்கிறது. கருணாவும் இராணுவவீரனும் நடக்கும் போது இந்த மூன்று உருவங்களும் நடந்து மேடையுள் போகின்றன. அவை அவனைச் சுற்றி அமர்ந்து கொள்கின்றன. கருணா கம்பீரமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க அவன் மனைவி அவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். படியில் மூன்று உருவங்களும் உட்கார்ந்திருக்கின்றன. அழைப்பு மணி. இராணுவ வீரன் வருகிறான்.

  இராணுவவீரன்:  வாழ்க அமைச்சர்

  மூன்று உருவங்களும்: நாளை உன் சந்ததிகளே ராஜாக்கள். (இராணுவ வீரன் திடுக்கிடுகிறான்)

 கருணா:  ஏய் நீ போ! நான் பிறகு அழைக்கிறேன்.

  இராணுவவீரன்:  சரி

இராணுவவீரன் வெளியே போகிறான். மூன்று உருவங்களில் ஒன்று நிற்கிறது.

 கருணா:  இன்று நான் அமைச்சர்

  இரண்டு உருவங்கள்:  நாளை அவனது சந்ததிகள் ராஜாக்கள்

 கருணா:  அது கூடாது...

 உருவம் - 1:  அதற்கு

 உருவம் - 2:  அவன் கூடாது

 கருணா:  அவர்கள் சாக வேண்டும் அவர்கள் சவக்குழியில்தான் என் மனதுக்கு உகந்த மகிழ்ச்சி மலர் பூக்கும்... சரித்திரம் எனக்கு மட்டும்தான்.

   இரண்டு உருவங்கள்: சந்தோஷமும் உனக்கு மட்டும்தான்.

 கருணா:  அவனைக் கொல்லுங்கள்... பிணத்துக்கு மாலையும் மனதுக்கு  நிம்மதியையும் அளியுங்கள்.

மூன்று உருவங்களும் மெல்ல மேடை ஓரம் போகின்றன. கருணா நிற்கிறான். ஒருவீரன் வருகிறான்.

 கருணா:  நீ எப்படியாவது அவனைக் கொல்ல வேண்டும்

  இராணுவவீரன்:  வணங்குகிறான்.

 கருணா:  இது கொலைதான் ஆனால் குற்றமல்ல. தவறுதான் ஆனால் தண்டனை  இல்லை. அவனைக் கொல்வது எனக்கு மிக எளிது ஆனால் என் கையில் கறை படியும்... ஆதிகாரம் படைத்த கைகள் சிவப்பாக்க் கூடாது... அவன் இருக்கக் கூடாது... இறப்பு யாருக்கும் புரியக் கூடாது புரிகிறதா?

  இராணுவவீரன்:  தலையை ஆட்டுகிறான்.

 கருணா:  போ... இன்று முதல் வருத்தம் நிறைந்த உலகிலிருந்து அவனுக்கு  விடுதலை... என் நண்பனின் மகன் சொர்க்கத்துக்கு போக வேண்டும். அதுவும் இன்றே...

  இராணுவவீரன்:   போகிறான்

 கருணா:  அதை அவன் தந்தைக்கு தெரியப்படுத்துங்கள்.

மெழுகுவர்த்தியை ஏற்றி அமர்கிறான். சிங்கராஜா வருகிறான்.

 சிங்கராஜா:  என்ன நடந்தது என்பது தெரியும் என்ன நடக்கிறது என்பதும்   எதிர்ப்பார்த்த்துதான். இடையில் எங்கே தவறு? ஆட்சி வந்த பிறகு ஆசைகள் நிறைவேறிய பிறகு நிம்மதி எங்கே... இறந்தவனை விட  இறப்பிற்கு காரணமானவர்கள் கஷ்டப்படுவது ஏன்?

மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கிறான் ஏன் இப்போதெல்லாம் தனிமையிலேயே இருக்கிறாய்.

 கருணா:  நிம்மதி இல்லை... சதி என்பது பாம்பு போல அடித்துக் கொன்று விடவேண்டும்... அல்லது ஓடி ஒதுங்கிவிட வேண்டும். நாம் ஆரம்பித்து விட்டு அமைதியாய் இருக்க முடியாது. அன்று இறந்தவன் ஒருவன். அவனுக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் எனக்கும் நண்பர்கள்தான்.  என்குற்றமே என் தண்டனை. என் சதியே இன்று சந்தேகமாக  விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

 சிங்கராஜா:  போதும். இப்படிக் குழம்புவதால் ஒரு பயனும் கிடையாது. இன்று என்ன   விருந்து?

 கருணா:  நண்பர்கள்... நேற்று வரை உறவினர்கள். இன்று... பிரஜைகள். மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்களா? ஏற்ற மாதிரி நடிக்கிறார்களா தெரியவில்லை. நாம்   நம்மை நம் உயிரை கவனமாக பாதுகாக்கவேண்டும். சிலர் இன்னும் சீக்கிரமாகச் சாவதுதான் நல்லது.

 சிங்கராஜா:  மீத மிருப்பவர்களும் மனிதர்கள் தானே... மரணம் அவர்களுக்கும் உண்டு.

  கருணா: நேற்று என் மனதில் ஒரு தீபத்தை தூண்டினாய். இன்று அது கொழுந்து  விட்டெரியும் தீ... அது பலரையும் பொசுக்கித்தான் அனையும். அதுவரை   உதடுகளில் தேன் தேக்கி உள்ளத்துக் கசப்பை மறைத்து. காட்டவேண்டி இருக்கிறது.

 சிங்கராஜா:  முதலில் மதுவை அருந்து மற்றவை பிறகு.

 கருணா:  இல்லை இதுதான் நல்ல சந்தர்ப்பம். அவன் குடும்பத்தையே அழிக்கப் போகிறேன்.

விளக்கு அணைகிறது. மீண்டும் எரிகிறது. சிதறிக்கிடக்கும் பொருட்களுடன் புலிக்கொடி சரிந்து கிடக்கிறது.

 ஒருவர்:  பன்னாட்டு படைகளோடு திரண்டு நிற்கிறானே!

 மற்றொருவர் : இனம் வெவ்வேறு என்றாலும் அவர்களின் இலக்கு ஒன்றுதான்.

 தலைவன்: ஆம் சரியாக சொன்னீர். நம் இனம் ஒன்றுதான்! ஆனால் இலக்கு வெவ்வேறு. ஒருவனுக்கு சாதி, மற்றொருவனுக்கு மதம், பதவி, குடும்பம்,  ஆட்சியதிகாரம்...

 ஒருவர்: நம் அசைவுகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்து விடுகிறது. தலைவன் மேலும்கீழும் நடக்கிறான். பிறகு “ஒருயோசனை” என்றதும் ஒப்பாரி சத்தம் கேட்கிறது. இருவரும் திரும்பி நிற்கிறார்கள். ஒருவர் வருகிறான்.

 தலைவன்: என்ன?

 அவர்:  உங்கள்... பாலச்சந்திரன்...

 தலைவன்: சொல்

 அவர்:  உங்கள் குழந்தையை கொன்று விட்டார்கள்

கனத்த மௌனம்.

 தலைவன்: குழந்தையை கூடவா?

 அவர்:  (ஆம் என்று தலையாட்டுகிறார்) மௌனம். மெல்ல விளக்கு அணைகிறது.

பின்னணியில் கவிதை வாசிக்கப்படுகிறது.


பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை

ஒரு பாலகனாகவே இருந்தைத்தவிர
வேறெதையும் செய்வில்லை
ஒட்டிய வயிறுடன்
நிராயுதமான களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும்
முடியிருந்த போர்வையையும் தவிர வேறெதுவுமில்லை.

இனியொரு பாலகரின் கண்களை எப்படிப் பார்ப்பது?

ஏதுமறியாப் பாலகர்கள்
இம்மண்ணில் பிறந்திருந்தைதவிர
வேறெதையும் செய்திருக்கவில்லை.

தனித்துப் பிடிபட்ட சிறுவனிடம்
ஏக்கம் மிகுந்த இரண்டு கண்கள்மட்டுமே இருந்தன.

குற்றங்களால் நிரம்பியிருந்த வானத்தில்
ஒரு பறவையும் இல்லை
பதுங்குகுழியில் பிறந்த குழந்தை
பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில்
எஞ்சியது ஒன்றுமில்லை.

இப்பூமியில் மீண்டும் புற்கள் முளைக்குமா?

நெஞ்சில் இரும்புத் துப்பாக்கிகள்
அப் பாலகன் இறுதிக் குரலெடுக்கையில்
உடைந்த நிலவைத்தவிர
எந்தச் சாட்சியுமில்லை.

 - இரா.பாலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,  9043521678)

Pin It