அப்துல் ரவூப் சட்டென விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். யாரோ கதவைத் தட்டியது போல இருந்தது. மங்கலான பச்சை ஒளியில் அவரது மனைவியும், குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். குழந்தையின் உடலிலிருந்து இனிய பால்மணம் அந்த அறை எங்கும் தாய்மையை நிரப்பிக் கொண்டு இருந்தது.

அப்துல் ரவூப் மணியைப் பார்த்தார். நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி இருந்தது. அப்பொழுது கடப்பாறை கொண்டு வீட்டின் கதவை இடிப்பது போல் பலமாக பலர் சேர்ந்து தட்டுவது கேட்டது.

இந்த நடுநிசியில் யார் இப்படி…?

கதவை திறக்காவிடில் உடைத்து விடுவார்களோ என்ற பயத்தில் விரைந்து சென்று திறந்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அப்துல் ரவூப்.

ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே அங்கே நின்று கொண்டிருந்தது.

“என்ன..” என்று கேள்வி கேட்க வாயைத் திறப்பதற்க்குள் அந்த கும்பல் அப்துல் ரவூப்பை தள்ளிக் கொண்டு வீட்டின் நடு கூடத்திற்குள் நுழைந்தது.

அவரின் வயதான பெற்றோர்கள், தங்கை, மனைவி என்று அனைவரும் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறைந்து போய் இருந்தனர். ஆனால் குழந்தை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. குழந்தையின் கனவில் யாரோ கிச்சுகிச்சு மூட்டி விட்டு இருப்பார்கள் போலும், அது அழகாக‌ சிரித்துக் கொண்டிருந்தது.

“எல்டிடி சிடி….க்கல போட்டு…பிரபாகரன் படங்களை அச்சிட்டு நீ எல்லாருக்கும் கொடுக்கிறதா இன்பர்மேஷன் எங்களுக்கு வந்திருக்கு.. வீட்டை சர்ச் பண்ணப் போறோம்… பாய்ஸ் சர்ச்…” என்றார் அந்த இன்ஸ்பெக்டர் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல்.

ஒரு சிறு வியாபாரியான அப்துல் ரவூப் தமிழ்நாட்டின் உள்ள அந்த சிறிய நகரத்தில் தனது அரசியல் நடவடிக்கைகளால் நன்கு அறிமுகம் ஆனவர்.

“இன்ஸ்பெக்டர்… இது சரியில்ல… சர்ச் வாரண்ட் ஏதும் காட்டாமல்..நடுராத்திரியில் இப்படி செய்வது சட்ட விரோதம்….” என்றார் அப்துல் ரவூப்.

அதற்கு அலட்சியமான புன்னகை உதிர்த்த அவர், “இது மேலிடத்து உத்தரவு பாய்..” என்றார்.

போலிஸ் கும்பல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த வீட்டையே கலைத்து, குலைத்து, புரட்டி, வீசி எறிந்து குப்பை கூளமாக்கியது. அவர்கள் தேடி வந்த விடுதலைப் புலிகள் பற்றிய சிடிக்கள், பிரபாகரன் படங்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை… ஏராளமான புத்தகங்கள் பிரித்து தரையில் இரைந்து கிடந்தன.

இன்ஸ்பெக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. சில நாட்களாக சுப்பிரமணி அய்யரும் அவனுடைய ஆட்களும் அடிக்கடி போலிஸ் ஸ்டேசனுக்கு நொய்ய்..நொய்ய் என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். ஆனால் இங்கு பிரபாகரன் பற்றி சின்ன துண்டறிக்கை கூட காணவில்லை.

போலிஸ்காரர்களில் யாராவது கறுப்பு ஆடுகள் தகவல் தந்து விட்டதோ என்று இன்ஸ்பெக்டர் தனது ஆட்கள் மீதும் சந்தேகப்பட்டார்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்த குழந்தை தனது பொற்கனவை கண்டு கொண்டு இருக்கும் போல … …மீண்டும் கெக்கலியிட்டு உரக்கச் சிரித்தது!

“சாரி பாய்… யாரோ தவறாக தகவல் தந்து விட்டார்கள்… எல்லாரும் கிளம்புங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.

அந்த வீட்டையை அலங்கோலப்படுத்தி விட்டு எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் ‘கடமை வீரர்கள்’ மாதிரி அவர்கள் கிளம்பினார்கள். கடைசியாக இன்ஸ்பெக்டர் வெளியே சென்றார்.

அப்பொழுது குழந்தை பசியில் விழித்துக் கொண்டு அழுதது.

“பிரபாகரன் முழிச்சிக் கிட்டான் போல.. போய் தூக்கும்மா ஸ்டெல்லா….” என்றாள் அப்துல் ரவூப்பின் அம்மா.

ஜீப்பில் ஏறத் தயாராக இருந்த இன்ஸ்பெக்டர் காதில் அந்த வார்த்தை விழுந்து விட்டது. அவர் தயக்கத்துடன் ”பிரபாகரனா..??” என்று கேள்விக்குறியுடன் திரும்பிப் பார்த்தார்.

அதற்கு அப்துல் ரவூப் அலட்சியமும், மனஉறுதியும் கலந்த ஒற்றைப் புன்னகையை அவருக்குப் பதிலாக தந்தார்.

Pin It