சேது முழங்கை சட்டை பித்தான்களை நிதானமாய் போட்டுக்கொண்டார். கைத்தடியை தேடும்போதே மகள் நீட்டினாள். சொத்து விஷயத்துக்காய் ஊரில் இருந்து வந்திருக்கிறாள். அவர் நடை இறங்கும்போது, "என்னப்பா முடிவு பண்ணீங்க?" என்றாள். சேது திரும்பி மிக நிதானமாய், "அம்மா எங்க சொல்றாங்களோ அங்க கையெழுத்து போடறேம்மா" என்றார். "இப்படி சொன்னா எப்படிப்பா? இதில் எவ்வளவு பிரச்சனை இருக்கு. நீங்கதான் பேசணும். உங்களுக்குதானே விஷயம் தெரியும்" எனும்போது திரும்பி நிதானமாய், "அம்மாவோட முடிவுதான்மா" என்றார். சொல்லிக்கொண்டே படி இறங்குவதை, அந்த ஒட்டாத குரலை, மனசைப் பார்த்ததும், பேசாமல் மவுனமாக தன்னை சுட்டு பொசுக்கிகொண்டிருக்கும் அவர் பேச காத்திருந்தவள் போல சீறிக்கொண்டு வந்தாள் அம்மா. "ஆமாண்டி, எல்லாம் என் முடிவுதான். இது அவங்க பிரச்சனை இல்ல பாரு, அவங்க குடும்பம் இல்ல பாரு" குமுறுபவளின் குரலும், "சும்மா இரும்மா" என்று அடக்கும் மகளும், "சும்மாதாண்டி இருக்கேன், மேல கை விழுதா, கட்டை விழுதான்னு புரிஞ்சும், கடமைக்கு குடித்தனம் பண்றவங்களோட சும்மாதாண்டி கிடக்கறேன் வருஷக்கணக்கா" அவளின் அழுகை தேய்ந்து கேட்கிறது.

lovers_268வனம் என்று கூவி சொல்லாமல், சிறுபாதையாய் புறப்பட்டு மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அடர்ந்து வனமாகும் குளிர்ச்சியும், அரை வெளிச்சமும் தரும் பாதையில் நடந்து காளி கோயிலை அடைந்தார். அந்த இடத்தின் அடர் மணம், பச்சை மரங்கள், பாசி, தூய்மை என்று காற்றில் கலந்து நாசியில் ஏறியது. காளியை பார்த்துக்கொண்டு நின்றார். அங்குள்ள கல்படியில் கால் நீட்டி படுத்துக் கொண்டார். காளியைத் திரும்பிப் பார்த்தார். ருத்ர ரூபம் இல்லை. சாந்தமும் இல்லை. வெளியில் தெரியாத உக்கிரம். "நீ காளியா? இல்லை என் மனோகரியா?" சேது கண்களை மூடிக்கொண்டார். இனிமையும், வலியுமாய் மனோகரி அவருள் பரவினாள்.

வேகமும் திமிரும் இளமையும் பிடிவாதமும் நிறைந்த சேது. சிறுவயது முதல் விரும்புவதை அடைந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் கூடப்பிறந்தது. அப்படித்தான் அடைந்தான் மனோகரியை. அடைந்தபின் அலைச்சல் எல்லாம் ஓய்ந்த இடம்போல் ஒரு அமைதி. இந்த பூமியில் கால் ஊன்றிக்கொள்ள ஒரு இணை. பாசாங்கு இல்லை. பொய் இல்லை. இவள் என்னுடையவள் என்ற பிரகடனத்துடன் புரவியில் அவளை வைத்து கண் மண் தெரியாத பாய்ச்சல். தன் முரட்டுத்தனங்களை அவளிடத்தில் ஒப்புக் கொடுத்து விட்டமாதிரி. அவனுடைய பிடிவாதங்களை அனுமதித்து, ரசித்து அவன் வழியிலேயே போய் உயிரை சுண்டி இழுப்பாள்.

அவனுள் சுவாசமாக நிரம்பினாள். ரத்தமாக ஓடினாள். ஒரு வாரத்துக்கு மேல் பார்க்காமல் தாங்காது. நெஞ்சுக்குழி காய்ந்து ஒரு தாகம் பெருகும். மனம் பொங்கி அலையும். அவளைப் பார்த்ததும் தொண்டைக் குழியில் ஒரு ஈரம் பரவும். அவளுக்கு அவனை முத்தமிடப்பிடித்த இடமும் தொண்டைக் குழிதான். தோட்டத்து வராண்டாவில் மதிய நேரத்த்தில் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு வெறும்தரையில் படுக்க வேண்டும் அவனுக்கு. துடைத்து துடைத்து தரையை சுத்தமாக வைப்பாள் அவனுக்காய். அவன் மல்லாந்து கைகால் விரித்துப் படுத்ததும் அவன் மீது படர்ந்து, தொண்டைக்குழியை முத்தமிடுவாள். "அப்படியே உறிஞ்சி உயிரை எடுத்துடுடி" என்பான் அவன். ஒரு முறை வேறு ஏதோ தீவிர யோசனையில் இருந்தவனை வம்புக்கு இழுக்க, "கொஞ்சம் சும்மாயிருக்கியா" என்றான் கோபமாக. விடாமல் அவள் சீண்டவும் முகத்தில் அறைந்தான். உதடு பிய்த்து கொட்டியது. முகம் பொத்தி சுருண்டவளைப் பார்த்து பதறி விட்டான். அவன் மனம் நடுங்கி பறிதவிப்பதைப் பார்த்து, "ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல, தப்பு என் பேரில்தான்" என்று பொத்திப் பொத்தி வைத்து சரி செய்ய வேண்டியதாயிற்று. ஏனோ அந்த நிக‌ழ்வுக்குப் பின் சிறு குழந்தை போல் அவளிடம் இன்னும் ஒட்டிகொண்டான்.

அவளிடத்தில் தூங்கும்போது சட்சட்டென அவன் கை துடிக்கும். மெல்ல அணைத்து ஆசுவாசிப்பாள். அபூர்வமான தருணங்களில் அவன் வேகம் கண்டு, "நான் எங்க போய்டுவேன், எதுக்கு இப்படி?" என்று இறுக்குவாள். ஒரே ஒருமுறை தன்னை மறந்து, "தினம் பார்க்கணுமா இருக்கு இப்பலாம்" என்று விசும்பினாள். தன் மனசு அவன் குடும்ப வாழ்க்கையைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று கவனமாக இருப்பாள். சித்தப்பாவுடன் நிலத்தில் அளவு தகராறு ஏற்பட்டபோது அவன் ஒரே பிடிவாதமாக இருந்தான். "ஒன்னு சொல்றேன் கேக்கறியா" என்றபோது, "ஒண்ணும் சொல்லவேணாம் போடி" என்றான். மெல்ல மெல்ல அவள், "வயசுல பெரியவர் அவர். கோடு போடற விஷயம் இல்ல. விட்டு கொடுக்கிற விஷயம். உன்னை விட அந்த நிலத்தை அதிகம் பார்த்தவரு" என்று கரைத்துவிட்டாள்.

தெளிவான முடிவுகளும், தீர்க்கமான எண்ணங்களும்; கூடவே அவன் உயிரை தன்னுள் வைத்து போற்றும் தாயாயும்; பதினேழு வருடங்கள். பேரமைதியாய் மனோகரி அவனுள் நிரம்பினாள். கூடவே சேதுவின் பயம் நியாய‌ம்தான் என்று பிரச்சனை மகளை அடித்து அனுப்பிய மாப்பிள்ளை ரூபத்தில் வந்தது. அத்தனை சொந்தங்கள் மத்தியில் வைத்து, "கூத்தியா வச்சிக்கிட்டு அலையறோமா என்ன?" என்றான். எல்லோரும் அவனை ரசித்தனர். மறைவில் ஏற்றி விட்டார்கள். "என் புருஷன்" என்று மகள் கண்ணீர் விட்டாள். இத்தனை நாளாய் அங்கீகாரத்துக்காய் துடித்த மனைவி, அவளா இல்லை நானா என்று போர்க்கொடி தூக்கினாள். சேது மகளிடம், "அவளை விடமுடியாதும்மா, உன் வாழ்க்கையை சரி பண்ணிக்க வேண்டியது உன் பொறுப்பு" என்றார் உறுதியாக. ஆனால் அவருக்குப் புரிந்திருந்தது, ஒரு புழுக்கம் எங்கும்  நிறைந்து விட்டது என.

அந்த முறை போனபோது சேதுவிடம் மனோகரி, "ஒன்னு சொல்லட்டா" என்றபோது அவர் சோபாவில் சாய்ந்து கால்நீட்டி உட்கார்ந்திருந்தார். அவள் அவர் கால்களுக்கிடையில் மடியில் தலைவைத்திருந்தாள். "ஒரு மயித்தையும் சொல்ல வேணாம், மூட்றியா?" என்றதோடு அவளை முரட்டுத்தனமாய் சுவற்றோரம் நகர்த்தி முட்டினார். அப்படியே அவள் மீது சாய்ந்தார். முகம் நெஞ்சில் விழுந்தது. கை இடுப்பை இறுக்கியது. கால் அவள் காலை விரித்து இடையில் போட்டுகொண்டது. அப்படி ஒண்டிக் கொண்டால் மேலே பேசாதே என்று அர்த்தம். மனோகரி அவரை சேர்த்து அணைத்துக் கொண்டாள். மெல்ல அவர் உடம்பு குலுங்கியது. அவர் அழுது அவள் பார்த்ததே இல்லை. "ரண்டு பேருமா சேர்ந்து என்னை கொன்னுடாதீங்காடி, எல்லாம் சரியாயிடும், ஆனா என்னமோ திகிலா இருக்குடி, நீயாவது என்னை புரிஞ்சிக்கோ" இருவரும் வாய்விட்டு அழுதார்கள்.

அழுது ஒய்ந்ததும் அவள் மெதுவாய், "நேத்து தங்கம் அக்காகிட்ட சொல்லி விட்டாங்க" அவர் உடல் விறைத்தது.

"என்னன்னு?"

"நிறுத்தனும், இல்லன்னா கயிறு போட்டுக்குவேன்னு"

அவர்  பதறி எழுந்தார். "நீ என்ன சொன்ன அதுக்கு?"

அவள் அவன் காலை பிடித்துக்கொண்டு அழுதாள். "என்னை மன்னிச்சேன்னு சொல்லு".

சேது அவளை உதறினார். தெருவில் யாரோ கூச்சலிடுவதாய். "அக்கா கயிறு போட்டுகிச்சு". மிருகத்தின் ஓலம் போல கூவினாள் மனோகரி. பின்னாலேயே வந்தவர்கள், "ஒண்ணும் ஆகலை, பாத்து இறக்கிட்டாங்க" என்று. நடுவில் இருந்த ஐந்து நிமிடம் அவர்களைப் பிய்த்து வீசி இருந்தது. உள்ளே ஓடிபோய் தண்ணீர் கொண்டு வந்தாள் மனோகரி. இறந்த பிணம் போல அந்த நீரை கையால் ஒதுக்கிவிட்டு சேது நிதானமாய் நடந்து போனார். அழுதுகொண்டே மனோகரி பின்னால் வந்தாள். அவர் திரும்பிப் பார்க்கவில்லை.

அதன் பின் அவளை அவர் பார்க்கவில்லை.

வீட்டிற்குப் போனபோது கூட்டமாய் இருந்தது. சேது, மனைவியின் அருகில் உட்கார்ந்து கொண்டார். ஆவலாய் காத்திருந்த ஊரை திரும்பிப் பார்த்தார். மனைவி விசும்பி அழுதாள். அவமானத்தில் முகம் பொத்திக் கொண்டாள். உறவு நிம்மதியுடன் கலைந்தது. மகள் வாழப் போனாள்.

இதோ, இந்த காளியோடு சரி. சேது நிதானமாய் எழுந்து வீட்டிற்கு நடந்தார். வீடுள் நுழையும்போது தூற‌ ஆரம்பித்தது. மகள் கைத்தடியை வாங்கிக் கொண்டாள்.

"அப்பா"

அவர் மாடி ஏறாமல் திரும்பிப் பார்த்தார். அவள் தயங்கினாள். மனைவி தூண்டினாள். "போயிட்டு வந்துடச் சொல்லு".

மகள் மெதுவாய், தங்கம் பெரியம்மா பைய்யன் போன் பண்ணாங்க, மனோகரியம்மா......"

அவள் நிறுத்தினாள். சேது நன்றாகத் திரும்பி மனைவியைப் பார்த்தார். திடீரென பலத்த சத்தத்துடன் பெய்யும் மழையைப் பார்த்தார். அவர் மனம் சலனமற்று இருந்தது. அவர் மெதுவாய், முன்னிலும் நிதானமாய் மாடிப் படிகளில் ஏற ஆரம்பித்தார்.

- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It