மணி மாலை ஐந்தரை இருக்கும். பரபரப்பு அடங்கிய சனிக்கிழமை. நான் பஸ்ஸிலிருந்த இறங்கினேன். பஸ் நின்ற வேகத்தில் எழுந்த தூசி சுற்றிக் கொண்டிருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன். வியாபாரிகள் வேலைநிறுத்தம். வெள்ளையன் அணி வியாபாரி சங்கத்தை தனது ஆதரவு வியாபாரிகளை வைத்து உடைக்க, அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எல்லாக் கடையும் மூடப்பட்டிருந்தது. கடைத்தெருவே சோபை இழந்திருந்தது. அடுத்த என்ன செய்வது எனத் தெரியாது, விழித்துக் கொண்டிருந்தேன்.

"மக்கா! இப்பதான் வந்தீயா உன்னைக் காலையில் இருந்தே எதிர்பாத்துக் காத்துட்டு இருக்கோம்!” என்று ஒருவர் எதிர்த்தாற்போல் பிரசன்னம் ஆனார். கொஞ்சம் குள்ளமான ஆசாமிதான், என்றாலும் அவரது மழிக்கப்படாத தாடியில் ஒரு அன்னியத்தனம் வீசியது. அவருக்கு அம்பது வயசிருக்கலாம். தாடி நரைக்கவில்லை. ஒருவேளை தாடிக்கு டை அடிச்சிருக்கலாம்.

நான் வந்தவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். "என்ன லக்கேஜ் எதுவுமில்லாமலா வந்தாய்?”

"ஐயாம் சாரி! வந்தா, லக்கேஜ் எடுத்துட்டு வரணும்ங்கிறது, எனக்குத் தெரியாது!” என்றேன்.

வந்தவர், என்னை வித்தியாசமாய் பார்த்தார். சன்னமாய். அவரது முகத்தில், ஒரு பயம் பரவுவது புரிந்தது. "சரி! வா போவோம். எல்லாம் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க!”

எனக்காக ஏன் எல்லாம் காத்துட்டு இருக்காங்க என்பது எனக்குப் புரியலை. அதுவும் கடையெல்லாம் வெறிச்சோடி மூடிக்கிடக்கும் இன்றைக்கு, எனக்காக எதுக்கு இவங்க ஏன் காத்துக் கிடக்கணும்? கடை கண்ணிக்குப் போக வேண்டிய வேலையில்லாததால், என்னையாவது பார்க்கலாம்னு நிக்கிறாங்களா?

"ஒரு நாலு நாட்களுக்காவது தங்கியிருக்கிற மாதிரி, துணிமணிகளை எடுத்துட்டு வந்து இருந்திருக்கலாம்,” என்று வந்தவர் அங்கலாய்த்தார்.

நான்கு நாட்களுக்கு மேல் அங்குத் தங்கியிருக்க முடியாது என்பது, புரிந்தது. அதற்குப் பிறகு என்ன செய்வது? எங்கே போவது? என்ற எண்ணம் தலையைப் பிராண்டியது.

அவர் தனது டிவிஎஸ் விக்டரில் உட்கார்ந்து கொண்டு, என்னைப் பின் ஷீட்டில் அமரச் சொன்னார். பள்ளி மாணவன் வாத்தியார் சொல்லும் கட்டளைகளை அதன் அர்த்தம் புரியாமல் பாலோ செய்வது போல், நானும் அவர் சொல்வதை அப்படியே கேட்டுச் செய்தேன்,

இப்போது இங்கே மல்லிகா வந்து, அவள் வழக்கமாய் தருவது போல, எனது கீழுதட்டின் வலதுபக்கம் முத்தமிட்டால், நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். எனக்குத் தேவை, என் மனச்சோர்வுக்கு ஒரு ஆறுதல். மல்லிகாவால்தான் அதைத் தர முடியும்!

சத்தம் இல்லாமல் விக்டர் சென்று கொண்டிருந்தது நாம்ப எங்கே போறோம்

தாடிக்காரர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவருக்கு என்னைப் பற்றி ஏதோ குழப்பம் இருந்தது. நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், "ரியலி யூ ஹேவ் சேஞ்ட் எ லாட்.” என வேறு ஏதோ சொன்னார்.

நாங்கள் ஒரு சிறிய கட்டிடத்தின் முன்னர் நின்றோம். அந்தக் கட்டிடத்தை ஒட்டி பல பெயர் தெரியாத ஹைபிரிட் மரங்கள் அடர்ந்து கிடந்ததால், கட்டிடத்தின் கம்பீரம் வெளியே தெரியவில்லை. கட்டிடத்தின் பாரபட் சுவரின் விளிம்பில், 'ஸ்பிக் எம்ப்ளாயீஸ் யூனியன்' என்று எழுதியிருந்தது.

அந்தக் கட்டிடத்திற்கு இடது பக்கத்தில் இருந்த சர்ச்சில் மணி அடித்தது. வலதுப் பக்கத்தில் இருந்த எக்சேஞ்ச் மூடிக்கிடந்தது. அது பலகாலமாக மூடியே கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் தந்து கொண்டிருந்தது.

யூனியனுக்குள் பலர் காத்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும், அங்கே ஒரு பரபரப்பு எழுந்தது. ஒருவர் என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டார்.

"உன்னால் திரும்பி வர முடியும்னு நான் நினைக்கலை,” என்று சொன்னவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் உகுத்தார். எனக்கு மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்படும் அளவிற்கு இறுகத் தழுவியிருந்தார்.

"கோபாலுக்கு அவன் மேல் என்னைக்கும் பாசம்தான்,” என்றார் பக்கத்தில் இருந்தவர்.

"நான்தான் கிருஷ்ணன். சங்கத்தின் தற்போதைய தலைவர். இவர் சாமி! இப்போதைய செயலாளர்,” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் அல்லாமல், சங்கத்தின் செயலாளரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் அந்த கிருஷ்ணன். பின்னர் பலர் ஒருவர் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து, என்னிடம் கைகுலுக்கித் தாங்களாகவே அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

நான் பற்றற்ற சித்தர் போல ஒர ரெடிமேட் புன்னகையை உகுத்துக் கொண்டே அனைவருக்கும் கைக்குலுக்கினேன்.

"நாங்கள் இந்த குரூப் பாலிடிக்ஸில் எல்லாம் ஈடுபடுவதே இல்லை. எந்தக் குரூப்பைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்கள் இந்தச் சங்க வளர்ச்சிச்காக உழைத்தவர்கள் என்றால், அவர்களை நாங்கள் பாராட்டத் தவறுவதில்லை,” என்று தலைவர் கிருஷ்ணன் கூறினார்.

"சங்க வளர்ச்சிக்கு உழைக்காதவர்களைக் கூட, நீங்க பாராட்டலாம். தவறில்லை!” என்றேன். அனைவரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாமல், சந்தேகத்துடன் பார்த்தார்கள். அப்போது ஒருவர் முகத்தில் சந்தோசம் பரவியது. "அப்படிச் சொல்லு!” என்று சொல்லிய படியே முன்னால் வந்தார்.

"உனக்கு ஞாபகம் இருக்கா? நீ இங்கிருந்து போகும்போது, உன்னை ரயில்வே ஸ்டேசன் வரை வந்து வழியனுப்பியவன், நான்தான்! ஒருவேளை என்னை மறந்து விட்டாயோ என்று நினைத்தேன்!” என்றார் ஒருவர். அவர் வழுக்கைத்தலையுடன் நல்ல ஆரோக்கியமாக இருந்தார். ஆள் நல்ல வெள்ளை. ஒரு முதலாளியைப் போல கொழுத்து இருந்தார். ஏதோ ஒரு பெரும் அதிகாரியைப் போல, அவரது பாவனை இருந்தது.

என்னை இங்கே அழைத்து வந்த தாடிக்காரர்தான், அந்தக் கொழுத்த மனிதரை, எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர்தான் அனந்து! யூனியனின் முன்னாள் தலைவர்.”

"அப்படியா சந்தோசம்! ஆனால் எனக்கு ஒருவரிடம் வந்து, எனது முன்னாள் தலைவன், முன்னாள் காதலி, முன்னாள் தகப்பன், முன்னாள் தாய், என்று சொல்லி எல்லாம் உரிமை கோருவது பிடிக்காது,” என்று சொன்னேன். ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியா விட்டாலும், சொன்னேன். அவ்வளவுதான்! முன்னாள் தலைவருக்குக் கோபம் வந்து விட்டது. சென்றவர் என்னிடம் விடை பெற்றுக் கொள்ளாமலேயே, காரைச் ஸ்டார்ட் செய்து சென்றார்.

என்னை வந்ததும் கட்டிப்பிடித்த கோபாலுக்கு, உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "நீ நன்றி மறந்தவன். அதுதான் நமது முன்னாள் தலைவர் அனந்துவை, அவமானப் படுத்தி விட்டாய்!”

எனக்கும் கோம் வந்தது. "முன்னாள் பட்டங்களை உபயோகிப்பவர்களை, நான் என்றுமே மதிப்பதில்லை,” என்பதைக் கருணை தாட்சண்யம் இல்லாமல் மறுபடியும் சொன்னேன்.

"நீ விளங்க மாட்டாய்! உருப்படவே மாட்டாய்!” என்று வைது கொண்டே, கோபாலும் அங்கிருந்து அகன்றார்.

அப்போதுதான் அந்த யூனியனில் இரண்டு குழுக்கள் இருப்பது எனக்குப் புரிந்தது. யார் யார் எந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் என்று தெரியாமல் பேசுவது சரியியல்லை என்பது புரிந்தது.

தாடிக்காரர் எனக்கு ஒரு பேப்பர் கப்பில் காபியைப் பிடித்துக் கொண்டு வந்து தந்தார். "உனக்குப் காபி என்றால் ரொம்ப பிடிக்கும். இப்ப சுகர் கிகர் எதுவும் இருக்கா? இதில் சீனி அதிகம் போட்டிருக்குது!”

நான் பதில் சொல்லாமல், காபியை வாங்கிக் குடித்தேன். "மறுபடியும் காபி வேண்டும்,” என அவரிடம் கேட்க, அவர் இன்னொரு கப்பில் மற்றொரு காபியைக் கொண்டு வந்தார். "எதுக்குக் கப்பை வேஸ்ட் பண்றீங்க? இதுலேயே காபியை ஊற்றி தந்திருக்கலாம் இல்லையா?” என்று சொல்லி, அதையும் குடித்து விட்டு, "இன்னும் காபி வேண்டும் பசிக்குது!” என்றேன்.

அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

தாடிக்காரர் என்னைத் தர்மசங்கடத்துடன் நோக்கினார். "மறுபடியும் சொல்றேன். யூ ஹேவ் சேஞ்ட் எ லாட்!” என்றார்.

"சேஞ்ச், ஈஸ் த இன்ஹரண்ட் புராபர்டி ஆப் ஆல் த மேட்டர்!” என்று சொன்னேன்.

அங்கிருந்த பலருக்கு நான் சொன்னதின் பொருள் புரியவில்லை என்பது அவர்களது முகம் போன போக்கில் இருந்து புரிந்தது.

தாடிக்காரர், "உனக்கு அந்தப் பாழாப் போன பழைய கூர்மை இன்னும் போகவில்லை என்பது புரியுது. இருப்பினும் நான் உன்னை ஆதரிக்க முடியாது. ஏனெனில் நான் உனது எதிரணியைச் சார்ந்தவன். சரி நான் வரேன்!” என்று சொல்லி விட்டு, அவர் புறப்பட துவங்கினார்.

தனது விக்டரிடம் போய் அதை அவர் ஸ்டார்ட் செய்ய துவங்கிய போது, நான் அவர் பின்னாலேயே ஓடினேன்.

"இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினால் எப்படி? எனக்கு உறுதியான பதில் வேண்டும்!” என்று அவரை மறித்து நின்றேன்.

"என்ன பதில் வேண்டும்?” என்று அவர் எரிச்சலுடன் என்னைப் பார்த்தார்.

"நான் யார்? எதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன்? இங்குள்ள ரெண்டு அணியில், நான் எந்த அணியைச் சார்ந்தவன்? எதற்காக அந்த அணியில் நான் சேர்ந்தேன்? அனைத்துக்கும் பதில் வேண்டும்!”

அனைவரும் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள்

"ப்ளீஸ்! சொல்லுங்க! ரிலேடிவ்வா என் பொசிஷன் என்னவென்று தெரியவில்லை என்றால், அடுத்து என்ன செய்வது என்று என்னால் சரியாக எதையும் முடிவு செய்ய முடியாது!” நான் அழுது விடுவது போல சொன்னேன்.

"எந்த அணியிலும் சேராதே! எதுவும் செய்யாதே! முன்னேற்றம் அது தானா நடக்கும். நாம முன்னேற்றத்திற்குக் குந்தகமா தடையா நிற்காம இருந்தா சரிதான்! அணிகள் வளர்ச்சிக்குக் குந்தகமாதான் இருக்கும்,” என்று சொல்லி விட்டு தனது விக்டரை உதைத்து ஸ்டார்ட் செய்தார்.

இது எனது ஆசான் குரல் அல்லவா! அவர்தானே மேலிருந்து கீழ் அருளாசி வழங்கிச் செல்வார்? கீழிருந்து மேல் வருவது, அவரது காதுகளில் ஏதும் ஏறாதே! கீழே கிடந்த செங்கல்லை எடுத்து அவரை நோக்கி எறிந்தேன். அவர் தலையை லாவகமாக தாழ்த்தி தப்பித்துச் சென்றார். வேகமாக விக்டரை முடுக்கி சடுதியில் மறைந்தார்

அப்போதுதான் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே சொன்னார்: "நாங்களும் இந்த அருளாசியின் படிதான், எந்த அணியிலும் சேராமல் ஒரு அணி அமைத்தோம். இப்போது அதுவே ஒரு மாற்றணியாக அமைந்து விட்டது.”

நான் கிருஷ்ணனைப் பார்த்துக் கோபமாக அருளாசி வழங்கினேன்: "எந்த ஆசானிடம் இருந்து அருளாசி வாங்காதீர்கள்! துப்புக் கெட்டவன்தான் அருளாசி வழங்குவான்!”
Pin It