குல தெய்வப் பொங்கல் இட வேணி தயாராகிக் கொண்டிருந்தாள். பாலாற்றின் கரையில் மண்ணால் அம்மனை சமைத்து, நான்கு கட்டு பங்காளிகள் சேர்ந்து பொங்கலிட்டு படைப்பது. ஆற்றில் தண்ணீர் இருக்கவேண்டும். சிதறிக்கிடக்கும் உறவினர்கள் சேரவேண்டும். சில சமயம் வருடங்கள் கடந்து விடும்.

பெரிய திருவிழா போல் இருக்கும். இரண்டு நாளாய் மாமனாரின் நினைவாகவே இருந்தது. மேலும் விஜி கண்டிப்பாய் வருவான். பார்க்க வேண்டும் எனவும், பார்க்கவே வேண்டாம் எனவும், பார்த்தால்தான் என்ன எனவும், அவனைத் தவிர்க்க வேண்டி தன்னை வருத்திக் கொள்கிறோம் என்று தெரிந்திருந்தும் கோமாளியாகக் கிடந்த நாட்களை நினைத்துக் கொண்டாள்.

நெகிழ்ந்து,நெகிழ்ந்து தன்னில் கரைந்து கொண்டிருந்த காலங்கள். மனம் கரைய ஆரம்பித்தால் நிறுத்த முடியாத எல்லைக்கு போய்க்கொண்டே இருக்கும். முற்றிலும் தான் வேறாகிக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வுகளின் அலைக்கழிப்பும் பயமுமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விஜியை பற்றிக்கொள்ளும் அழுத்தமான சார்பு நிலை அவனை சினம் கொள்ளச்செய்து கொண்டிருந்தது. தேவை அற்ற சிக்கல்களுக்கு அவள் தன்னை உட்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை செய்தான். யதார்த்தத்தின் பிடியில் இருந்து தான் நழுவிக்கொண்டிருக்கிறோம், மேலும் அதைத் தன்னால் நிறுத்த முடியவில்லை என்ற குழப்பத்தில் தான் தவறு செய்யவில்லை என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள போராடிக்கொண்டு இருந்தாள்

எவ்வளவு முயற்சித்தும் மகளுக்குப் பொருத்தமான ஒரு மணவாழ்க்கையை அவளால் தேடித்தர முடியவில்லை. "சந்தோஷமா இருக்கிறது நம்மகிட்டதாம்மா இருக்கு" என மன முதிர்ச்சியுடன் வாழும் மகளைப் பார்க்கும்போது நெஞ்சை அறுத்தது. சீராக போய்க்கொண்டிருந்த குடும்பத்தின் சரிவுகளை கால மாற்றம் என்றோ விதி என்றோ எடுத்துக் கொள்ள முடியாமல் தன்னைப் பற்றிய குற்றவுணர்வில் தவித்தாள்.

மனமா அல்லது குடும்ப அமைப்பா எது சரி என்றும் காலம் காலமாக பெரியவர்கள் இட்ட கோடுகள் குடும்ப அமைப்புகள் சிதறாமல் இருக்க வேண்டியே எனினும் இரண்டுக்குமான போராட்டங்கள் தவிர்க்க முடியாததாக அவள் வாழ்வில் நிக‌ழ்ந்து கொண்டிருந்தது. மனதின் எளிய சார்தல்களுடன் நிறுத்திக்கொண்டு இயல்பாய் வாழ முடியாமல் வேர் வரை பற்றிக் கொள்ளும் சிக்கலில் தவித்துக்கொண்டிருந்தாள். உணர்வுகளின் அலைக்கழிப்பில் காட்டாற்று வெள்ளமாய் அவள் பொங்கிப் பெருகுவதை விஜி சுட்டிக் காட்டினான். பின் மெல்ல மெல்ல தன்னை அவளில் இருந்து விடுவித்துக்கொண்டு விட்டான். நம்மை நிரூபிக்க என்று இறங்கும் அனைத்து செயல்களுமே பின் நாளில் மனம் சமனப்படும்போது, சுய வெறுப்பாக மாறும் என்று அவன் சொல்லிப் பிரிந்தது சரிதான் எனினும் எதையும் யோசிக்கும் மனநிலையை வேணி கடந்திருந்தாள்.

கொந்தளிப்பும் வெறுமையும் மாறி மாறி அலைக்கழிக்க கிணற்றில் குதித்து விட்டாள். மாமனார் கிராமத்துக்கு திரும்பாமல் நாற்பது நாள் வேணியுடன் தங்கி இருந்தார். "ஏன்?" என்று கேட்கவில்லை. நான் இருக்கிறேன் என்று வாய் வார்த்தையாய் சொல்லவில்லை. கூடவே இருந்தார். காய்கறி மார்க்கெட்டிற்கு, மிஷினுக்கு, கோவிலுக்கு, கடைவீதிக்கு, உறவினர் வீடுகளுக்கு, வைபவங்களுக்கு என்று அழைத்துப் போனார். ஒரு குழந்தையை பாதுகாப்பது போல் பாதுகாத்தார். முக்கியமாக மதியத்தில் தூங்க அனுமதிக்க மாட்டார். இரவு ஒன்பது மணிக்கு படுத்து காலை நான்கு மணிக்கு எழ வேண்டும் என்பார். இரவின் தூக்கம் மனதிற்கு அவசியம், பகல் நேரத்தை ஆரோக்கியமாக பொருத்திக் கொள்ள வேண்டும் என்பார்.

மகளின் திருமண வாழ்வை எண்ணி வேணி மருகும்போதெல்லாம், "கல்யாணம் எல்லாம் நாம் தீர்மானிப்பது இல்லையம்மா" என்பார். நாற்பது நாட்களுக்குப் பின் அவர் கிராமத்துக்கு கிளம்பியபோது வேணிக்கு பயமாக இருந்தது. "இங்கயே இருந்திடுங்களேன் மாமா" என்றாள். அவர் பையை எடுத்துக்கொண்டு, "இனிமேல் நீயே நின்னுக்கவம்மா" என்று சரசரவென படி இறங்கிப் போனார். மந்திரம் போல இருந்தது. பலம் கூடின மாதிரி, பழைய கம்பீரம் திரும்பின மாதிரி இருந்தது. மனதின் ஒரு ஓரத்தில் நிரந்தரமாக படர்ந்துவிட்ட வெறுமை அவளை எள்ளி நகையாடும்போதெல்லாம், வாழ்வின் ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு மாறும்போது தவிர்க்க முடியாத மனமாற்றம் இது என்று வாழ்வதற்கு சொல்லித்தந்த மாமனாரை வழிபடுவாள். அவருக்கு இன்று சிறப்பாக படையல் இடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 பாலாற்றங்கரை நிறைத்து கிடந்தது. உறவினர் கூட்டம் என்பதே மனசின் விரிவை சுருக்கி, வாழ்வின் கோடுகளை உணர்வுருத்தும் இடம்தான் என்று வேணி நினைத்துக் கொண்டாள். கனவுகளற்று யதார்த்தம் அந்த கரை முழுவதும் விரிந்து கிடந்தது.

 விஜி வேனில் இருந்து குடும்பத்துடன் இறங்கிக்கொண்டு இருந்தான். உறவுகளிடம் பேசிக்கொண்டே வந்தவன், வேணியைப் பார்த்ததும் இரண்டு தாண்டாக அவளை நோக்கி வந்து, "சவுக்கியமா?" என்றான். தொடர்ந்து பேசினான். எப்போதும் மாறா இயல்பு. சலனங்கள் அற்ற சீரான நடவடிக்கை. "என்னை நியாபகம் இருக்கா?" என்று கேட்பது கூட தான் தோற்றுக்கொடுத்ததாய் ஆகிவிடும் என்று அதிகப்படியாய் எதுவும் பேசாமல் அளந்து பேசினாள்.

 பொங்கல் வைத்தபின் படையல். எல்லோரும் அவரவர் இலை முன் உருக்கமாக நின்று கொண்டு இருந்தார்கள். இறந்தவர்களின் நினைவில் கனத்துக் கிடந்தது நெஞ்சங்கள். உரத்த குரலில் காவேரி பெரியம்மா, "சாமியானவங்க படையலை ஏத்துகிட்டு எங்களை அனுக்கிரகிக்கணும்" என்றபோதே உடைந்து அழுதாள்.

போன வருடம்தான் பெரியப்பாவை இழந்திருந்தாள். வேணிக்கு நெஞ்சை முட்டியது. கீழே விழுந்து கும்பிடும்வரை சமாளித்தவள் தலை மண்ணில் பட்டதும் கரைந்தாள். எழுந்து முழங்கால் மேல் மடிந்து உட்கார்ந்தவள், எல்லோரும் நமஸ்கரித்துப் பொங்கி அழுத நேரத்தின் அலைகளில், "என்னை பெத்த அய்யா, நான் உன் குடும்பத்துக்கு ஏதாவது தப்பு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சிடு" என்று நெஞ்சில் அறைந்து கொண்டாள். அங்கிருந்த எல்லோர் உள்ளங்களிலும் மரணம் பற்றிய நெகிழ்வுகள் ஓலங்களாய் பாலாற்றில் கலந்தது.

 சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாக கலகலப்பு திரும்பிக் கொண்டிருந்தது. போகும்போது விஜி விடைபெற வந்தான். ஒரு தலை அசைவு. நிமிர்ந்து பார்த்தபோது அவன் கண்கள் சிவந்திருந்தது. அவள் அவன் வேனில் ஏறும்வரை பார்த்தாள். ஏறும் முன்பு திரும்பிப் பார்த்தான். "ஏன் என்னை திரும்பி பார்த்த விஜயா?"

"நீ நான் பார்ப்பேன்னு காத்திருப்பன்னுதான்". பழைய கேள்வியும் பதிலும்.

 இரவு படுக்கும்போது வெறுமை, குழப்பம், பயம் எல்லாம் சேர்ந்த உணர்வு அவளைத் தாக்கியது.

 அப்போது தொலைபேசி நீண்டு ஒலித்தது. 

- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It