தனது இரு கைகளையும் பின்புறமாக கட்டிக் கொண்டு, அந்த கால வில்லன் நடிகர் வீரப்பாவைப் போல, முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு, வகுப்பிற்குள் நுழைந்த அவரை யாருமே மதிக்கவில்லை. தான் தான் இந்த வகுப்பின் ஆசிரியர் என்பதை உணர்த்துவதற்கு, காலம் காலமாக இந்திய ஆசிரியர்கள் பயன்படுத்தும் உடல்மொழியை சற்று மிகைப்படுத்தி நடித்துக் காட்டினாலும் மதிக்க மாட்டேன் என்கிறார்களே என உள்ளூர வருத்தப்பட்டாலும், உடலில் விறைப்பையும், முகத்தில் முறைப்பையும் சற்றும் குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார்.

போர்க்களத்தில் போர் வீரர்கள் எதிரிகளை முறைத்துப் பார்ப்பதையும், கல்லூரியில் மாணவர்களை ஆசிரியர்கள் முறைத்துப் பார்ப்பதையும் காலம், காலமாக கடைபிடித்து வரும் இந்தியர்களுக்கு என்றுமே ஒரு புரிதல் மட்டும் இருப்பதேயில்லை. பள்ளிகளில் அடித்துப் போட்டால் ஏன் என்று கேட்க ஆளில்லாத அனாதைப் பயல்களைப் போல மாணவர்கள் காணப்படுவார்கள். அதனால் அவர்களை தூக்கிப் போட்டு மிதிக்க முடிந்தது. மாணவனை குனியவைத்து ரெஸ்லிங் வீரன் ராக்கைப் போல் தரையிலிருந்து 2 அடி மேல் எழும்பி கைமுஷ்டியை மடக்கி நங்ங்ங்ங்ங்........... கென்று முதுகில் குத்த முடிந்தது. விசு படத்தில் வரும் வில்லன், பாவப்பட்ட மனைவியை பளார்...பளார்.... என அறைவது போல் கன்ன‌ங்கள் இரண்டையும் சிவக்க வைக்க முடிந்தது. மாட்டை அடிக்க பயன்படுத்தும் பிரம்பைக்கொண்டு தனது சிலம்பாட்ட திறனையெல்லாம் மாணவர்களின் பின்புறத்தில் காட்ட முடிந்தது. ஆனால், கல்லூரி என்பது பள்ளிக்கூடம் அல்லவே, அது பழிவாங்கப்படும் இடமாயிற்றே, எத்தனை காலம் தான் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மட்டும் அடிவாங்க முதுகை காட்டிக்கொண்டே இருப்பார்கள். எதிர்ப்பதற்குரிய காலம் வந்துவிட்டால் அதற்குரிய செயல்பாடுகளில் இறங்கி விடுவது சகஜம் தானே.

கல்லூரிக்கும், பள்ளிக்கூடத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. எப்பொழுதும், பள்ளியில் மாணவர்கள் வரிசையாக செல்ல கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால், அதே கட்டாயத்தை கல்லூரிக்குள் கொண்டுவர நினைத்தால் ஆசிரியருக்கு மனநிலை குழ‌ம்பிவிட்டதோ என மாணவர்கள் தங்களுக்குள் கேலி பேசிக் கொள்வார்க‌ள். வெள்ளைக்காரன் குளிருக்கு அணியும் ஆடை, அணிகலன்களையெல்லாம், மொட்டை வெயிலில் வெந்து கொண்டிருக்கும் இந்திய குடிமக்கள் மீது திணித்துப் பார்க்க பள்ளிக் கூடங்களில் மட்டுமே முடியும். நாளையிலிருந்து டை கட்டிக் கொண்டுதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று ஒரு விரிவுரையாளர் கூறுவாரேயானல் அவர் எதிர்கொள்ளும் பதில்

"வரலேன்னா ....... என்ன பண்றதா உத்தேசம்" என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் மரியாதைக்குரிய திரு. சீனிவாசன் (ஆங்கிலப் பேராசிரியர்), மாலை நேரக் கல்லூரிக்கு பாடம் எடுக்க வந்திருக்கிறோம் என்கிற பதற்றம் சற்றும் இல்லாமல் அக்கம் பக்கம் சற்றும் விசாரிக்காமல், சுயயோசனையையும் சட்டையை கழற்றுவது போல் கழற்றி வீட்டில் மாட்டிவிட்டு, எந்தவொரு முன்னேற்பாடும் இன்றி, விறைப்பாக வகுப்பறைக்குள் நுழைந்து விட்டார்.

எப்படியாவது மாணவர்களை பயமுறுத்திவிட வேண்டும் என்று வெகுநேரமாக வலிக்க வலிக்க கண்களை உருட்டிக்கொண்டிருந்தார் சீனிவாசன். சற்று உற்றுப்பார்த்தால் கண்கள் லேசாக கலங்கியிருப்பதை கண்டுகொள்ள முடியும். வகுப்பறைக்குள் நுழைந்ததும் 'குட்மார்னிங் சார்' என்று கோரஷாக வெளிப்படும் மாணவர்களின் குரலை கேட்டு கேட்டு பழகிப்போன அவருடைய காதுகளுக்கு குட்ஈவினிங் சொல்ல இன்று ஒருவர் கூட இல்லை. பள்ளியில் ஒவ்வொரு மாணவனையும் அடித்து, உதைத்து, அழகாக குரலில் தேன் வடிய குட்மார்னிங் சொல்ல வைத்த அவருக்கு, இன்று கல்லூரியில் அவமானமாக இருந்தது.

23ஆம் புலிகேசி விடுபட்டு போன குலோத்துங்கு துதியை தன் சேவகனுக்கு சொல்லிக் கொடுத்தது போல, கல்லூரி மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பது என்று கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தார். வகுப்பறைக்குள் நுழைந்திருப்பது 5 அறிவுள்ள, ஒரு இன்னோசென்டான நாயாக இருந்திருந்தால் கூட ஒன்றிரண்டு பேர் அகஸ்மாஸ்தாக திரும்பிப் பார்த்திருப்பார்கள். ஆனால், வந்திருப்பது 7 அறிவுள்ள, 6 அறிவுடையோரை அவமானப்படுத்த நினைக்கிற, நெஞ்சம் நிறைய ஈகோவை நிரப்பிக்கொண்டு வஞ்சம் தீர்க்க காத்திருக்கிற பேராசியர். அவரை இவ்வளவு மதித்தால் போதும் என்கிற தோரணையில், வகுப்பறையில் குண்டாக அமர்ந்திருக்கும் பெண்ணிடம், இந்தியா -பாகிஸ்தான் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று சீரியசாக பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு மாணவன் ஏதோ ஒரு உருவம் இந்தப் பக்கமாக வெகுநேரமாக அசைந்து கொண்டிருக்கிறதே என்கிற உறுத்தல் காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணமாகவா என்று சரியாகத் தெரியவில்லை ஆனால் திரும்பிப் பார்த்தான். அது மட்டும் உண்மை.

இந்த அவமானத்தை மட்டும் பள்ளியில் ஏதேனும் ஒரு சிறுவன் செய்திருந்தால் அவ்வளவுதான். அவனை என்கவுண்டர் செய்திருப்பார். ஆனால் அவர் வந்திருப்பது கல்லூரியாயிற்றே. யாராவது திரும்பிப் பார்க்கட்டும், ஏதேனும் பேசலாம் என்று வெகு நேரமாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். 2 கிலோமீட்டர் தூரம் நடந்தது போதும் என்று நினைத்தாரோ என்னவே, தனக்கென்று போடப்பட்டிருந்த நாற்காலியை விருட்டென்று இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். கண்களில் கிராபிக்ஸ் தீப்பொறியெல்லாம் கிளம்பியது.

முழுதாக 15 நிமிடங்கள் தனக்குள்ளே திட்டங்களை வகுத்தார்.

ஒழுக்கம் ஒரு கிலோ 2 ரூபாய்க்கு கொடுப்பாயா? அப்படியே கொடுத்தாலும் கொஞ்சம் கொசுறு கிடைக்குமா? என கேள்வி கேட்பவர்களைப் போல் அமர்ந்திருக்கும் இந்த மட மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை போதிப்பது என்கிற கடுமையான சிந்தனைக்குள் நுழைந்து விட்டார் திரு. சீனிவாசன். கண்கள் வலித்துதான் இருந்தன. ஆனால் அவரது கண்கள் எதையும் பார்க்கவில்லை. அவரது கண்கள் அவரது யோசனையை பார்த்துக் கொண்டிருந்தன.

மாட்டின் காலில் லாடம் அடிக்கும் அதன் உரிமையாளன், பார்ப்பவர்களின் கண்களுக்கு கொடூரமாகத்தான் தெரிவான். ஆனால் அவனுக்குத்தான் தெரியும், தான் அந்த மாட்டிற்கு நன்மை செய்து கொண்டிருக்கிறோம் என்று. இந்த மாணவர்களுக்கு லாடம் அடித்தே தீர வேண்டும். இல்லையென்றால் இவர்கள் வாழ்க்கை வீணாகிவிடும். ஒழுக்கம் என்றால் என்ன என்று இவர்களுக்கு போதித்தே ஆக வேண்டும். ஒழுக்கம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்று இவர்களுக்கு உணர்த்த வேண்டும். இளமையில் கல்வி என்பது எவ்வளவு கிடைத்தற்கரிய விஷயம் என்பதை இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். (இவை மேல் மனதில் ஓடிய விஷயங்கள்)

தன்னை மதிக்காத ஒரு அற்ப புழு போன்ற மாணவனை மாட்டுக்கு மூக்கணாங்கயிறு குத்துவது போல் குத்தி அடக்கி தன் காலடியில் உள்ள நுகத்தடியில் இழுத்து கட்ட வேண்டும். அதை மீறி திமிறி நியாயம் பேசும் மாணவனிடம் உன்  நன்மைக்குத்தான் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்று உபதேசம் செய்ய வேண்டும். உன் வாழ்க்கை வீணாகிப் போய்விடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தின் பேரில் நான் செய்யும் ஆக்கிரமிப்புத்தனங்களையெல்லாம், உன் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும். அந்த 'உன் எதிர்கால வாழ்க்கை' என்பதுதான் நான் அவனுக்கு வைக்கும் 'செக்' என்பதை அந்த மாணவன் அறிந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கல்வி என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு உயர்வு தாழ்வு ​பேதத்தை ஆணித்தரமாக ஆழ்மனதில் விதைக்க வேண்டும். அவன் தன்னை அற்பபுழுவைப் போல் உணர வைக்க வேண்டும். என்னைப் பார்த்தவுடன் நடுங்கும் அவன் தொடைகளைக் கண்டு நான் ரசிக்க வேண்டும். ஆக்கிரமிப்புத் தன்மையின் சுகத்தை பள்ளிக்கூடத்தை போலவே, கல்லூரிக்குள்ளும் முழுமையாக அனுபவிக்க வேண்டும். (இவை ஆழ்மனதில் ஓடிய விஷயங்கள்)

டெஸ்கின் மேல் கால்களை தூக்கிப் போட்டு வெகு நேரமாக உறங்கிக் கொண்டிருந்த மாணவன், ​டக்கென்று தனது குறட்டை ஒலியை நிறுத்தினான். அப்பொழுதுதான் தெளிவாக ஒரு விஷயம் புரிந்தது. இவ்வளவு நேரம் ஒலித்துக் கொண்டிருந்தது ஜெனரேட்டர் ஒலி அல்ல, குறட்டை ஒலி என்று. டெஸ்கின் மேல் இருந்த கால்களை எடுத்து மரியாதை நிமித்தமாக தரையில் வைத்தான் என்று சொன்னால் அவன் கோபித்துக் கொள்வான் என்பதால், கெட்ட கனவு ஒன்றை கண்டதால்தான் காலை தரையில் ஊன்றினான் என்கிற உண்மையை சொல்லிவிட வேண்டும். விருட்டென்று விழித்துக் கொண்டு எழுந்து பார்த்தவன், அந்த அசிங்கமான முகத்தைப் பார்க்க பிடிக்காமல் அந்தப் பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டான்.

திரு. சீனிவாசனால் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தான் கொண்டுவந்திருந்த பிரம்பை ஸ்லோமோஷனில் கையில் எடுத்தார். தன் பலம் கொண்ட மட்டும் அதை கொண்டு ஓங்கி டெஸ்கில் அடித்தார்.

சத்தம் கேட்டு அந்த குண்டுபெண் 'க்ளுக்' என்று வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். தூங்கிக் கொண்டிருந்தவன் கெட்டவார்த்தையில் திட்டியதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. பாகிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருந்தவன், மீண்டும் ஒருமுறை அவசியம் திரும்பிப் பார்க்க வேண்டுமா என யோசித்துவிட்டு, பின் வேண்டாம் என முடிவெடுத்தவனாய் தன் உரையைத் தொடங்கினான். வெகு நேரமாக பக்கத்து வகுப்பறையில் பெண்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தவன், எந்த பாதிப்பும் அடையாதவனாய், தன் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தான். ஒருவன் வாயின் முன் சொடுக்கு போட்டபடி கொட்டாவி விட்டான். மற்றொரு பெண் ஆனந்த விகடனின் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள். ஒரு மாணவி தான் கொண்டு வந்திருந்த புட்டு மாவை அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தாள். சற்றும் கருணையே இல்லாமல் ஒருவன் ஒரு பெண்ணை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

சீனிவாசன் யோசனையில் ஆழ்ந்தார். துக்கம் தொண்டையை அடைக்கும்போது ஏன் கேவி கேவி அழத் தோன்றுகிறது என வெகுநேரமாக யோசித்தும் அதற்கான விடை அவருக்கு கிடைக்கவில்லை.

ஆக்கிரமிப்பு சுகத்தில் ஊறிப்போன சீனிவாசன் பாடம் நடத்தி, அதை ஆக்கிரமிப்பு அசிங்கத்திலிருந்து வெளிவந்துவிட்ட மாணவர்கள் புரிந்து கொண்டு பட்டம் பெற்றுவிடும்போது இந்தியா வல்லரசாவது நிச்சயம் நடந்தேறிவிடும் என்பதை ஆணித்தரமாக உணர்த்துவதற்காக இன்றும் அந்த மாலைநேரக் கல்லூரி கம்பீரத்துடன் தனது கல்விப் பணியை தொடர்ந்து ​ஆற்றிக் கொண்டிருக்கிறது.

Pin It