மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார்.

"வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என் பொண்ணு என் வீட்டில் இருக்கணும், அப்படி ஒரு மாப்பிள்ளைதான் எனக்கு வேண்டும்"

பெற்ற பெண்ணின் மீது மானாவாரியாக பாசம் வைத்திருக்கும் தந்தையை நினைக்கையில் பெருமிதமாகத்தான் இருந்தது. ஆனால் மற்றொரு புறம் யோசித்துப் பார்ககையில் இதுபோன்ற வசனங்களை பிரபல தமிழ் சினிமா வில்லன்கள் பேசி பார்த்தது போலவே இருக்கிறது. அவருக்கு மட்டும் மீசை இல்லை என்றால் அசல் பொன்னம்பலம் போன்றுதான் இருப்பார். அவருக்கு இடுப்பு என்ற ஏரியாவில் இடுப்பு இல்லாமல் அந்தப்பகுதியும் வயிறாக மாறியிருந்ததால் வேட்டி கட்டுவதற்கு சிரமமாக இருந்தது போல. அந்த இடுப்பில் (மன்னிக்கவும்) வயிற்றில் ஒரு கருப்பு பட்டையை (அதற்கு பெயர் பெல்ட்டாம், அவ்வப்போது மாடுகளை அடிப்பதற்கு அதைத்தான் உபயோகப்படுத்துகிறார் என கேள்விப்பட்டேன்) இறுக்கிக் கட்டியிருந்தார்.

அந்த வேட்டியை இடுப்பில் கட்டாமல் நெஞ்சுப்பகுதியில் ஏற்றிக் கட்டியிருந்ததைப் பார்த்த போதே நான் உஷாராகியிருக்க வேண்டும். அல்லது விருந்து ஒன்றில் ராஜ்கிரண் கறிசோறு சாப்பிடுவது போல சாப்பிட்ட போதாவது சந்தேகப்பட்டிருக்க வேண்டும். சட்டையை காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் மேல் பட்டனை கழற்றி விட்டு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் முற்றிலும் வித்தியாசமான இந்த மனிதரைப் பற்றி எப்படி சொல்வது. அவர் கீழ் பட்டனை மட்டுமே ஏதோ சமுதாயத்திற்கு மரியாதை கொடுத்து போட்டிருந்தார். மீதம் 4 பட்டன்களையும் சத்தியமாக காற்று வாங்குவதற்காக மட்டுமே திறந்து விட்டிருந்தார் என்றே தோன்றுகிறது.

ஆட்டுக்கால் எலும்பின் உட்பகுதியை உறிஞ்சியபின் தூக்கிப் போட்ட எலும்புத் துண்டில் ஏன் பைனாகுலர் போன்ற கருவிகள் செய்யக் கூடாது என்பது தான் எனது கேள்வி. இந்தப் பக்கம் இருந்து பார்த்தால் எலும்புத்துண்டின் அந்தப்பக்கம் உலகின் மறுபக்கமே தெரிகிறது என்று அதன் வழியாக பார்த்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன.

ஆரம்பத்தில் பார்த்தபோது மனித நாகரீகத்தின் தந்தை என்று போற்றப்படத்தக்க மனிதரை நான் பார்த்து விட்டேன் என்ற பூரிப்பில் மாமா என்று வாய் நிறைய கூப்பிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது வருத்தப்பட்டுத்தான் என்ன பிரயோஜனம். பாதங்கள் தரையில் படுகின்றனவா? இல்லை மிதந்துதான் வருகிறாரா என்கிற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தளைய‌ தளைய‌ பட்டுவேட்டியை அணிந்து கொண்டு விரலுக்கு ஒன்று என அளவாக 3 மோதிரங்களை போட்டுக் கொண்டு, 5 பெண்கள் கழுத்தில் அணிய வேண்டிய தங்கச் சங்கலிகளை ஒன்றாக சேர்த்து உருக்கி ஒரே செயினாக மாற்றி ஹீரோஹோண்டா பைக் செயின் போல மொந்தையாக கழுத்தில் போட்டுக் கொண்டு, அது என்ன எண்ணெய் என்று தெரியவில்லை ஒருவேளை விள்கெண்ணெய்யாக இருக்கலாம், அதை தலையில் போட்டு தேய்த்து மழுங்க சீவியபடி, நெற்றியில் டேஞ்சர் லைட் சைசில் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு. அதைச் சுற்றி வெள்ளையடித்து வைத்திருந்தார். ஒருவேளை அதுதான் திருநீறு போல. ஒருமாதத்திற்கு உபயோகப்படுத்த வேண்டிய திருநீற்றை 2 நாட்களில் தீர்த்து விடுவார் என்றே தோன்றுகிறது.

2 நாட்களுக்கு முன் செய்தித் தாளில் படித்த செய்தி எவ்வளவு பெரிய பொய் என இப்பொழுது தான் புரிகிறது. உலகத்திலேயே இந்திய பெண்கள் தங்கத்தின் மீது  அதிக மோகம் கொண்டிருக்கிறார்களாம். தங்கத்தை கிலோ கணக்கில் உபயோகிக்கும் ஆண்களை பற்றி அந்த பத்திரிக்கைகாரர்கள் கணக்கெடுக்காதது இந்தியர்களின்  ஆணாதிக்க தன்மையைத்  தான் காட்டுகிறது.

அவர் காலில் அணிந்திருந்த செருப்பை வாழ்நாளெல்லாம் வம்படியாக கீழே போட்டு தேய்த்தாலும் அது அப்படியே இருக்கும் போல. இவ்வளவு கடினமான மெட்டீரியலை எங்கே சென்று கண்டுபிடித்தார் என்றுதான் தெரியவில்லை. கிராமத்து ஆட்கள் எப்பொழுதும் கடினமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை பார்க்கும் பொழுதே தெரிந்தது.

அவருக்கு மாப்பிள்ளையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக எனக்கு அந்த கடவுளிடம் ஒரு ரிவென்ச் பாக்கி இருக்கிறது. மேலுலகத்தில் நான் அவரது சட்டையை கொத்தாக பிடித்து இவ்வாறு கேட்பேன்.

"மனசாட்சி இல்லாதவனே பலிவாங்கிவிட்டாயே, உனக்கு எத்தனை முறை 10 ரூபாய் தேங்காய் வாங்காமல் 15 ரூபாய் தேங்காய் வாங்கி உடைத்திருக்கிறேன். தேங்காய் விலை உயர்வை பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருப்பேனா நான். ம். நினைவில்லை உனக்கு, சூடம் ஏற்றி கையின் நடுப்பகுதியில் வைத்தேனே, வாழை இலையை வைத்தேன் என்றா நினைத்தாய், துரோகி, எப்படிப்பட்டதொரு ஏமாற்று நாடகத்தை நடத்திவிட்டாய், கண்ணில்லாதவனே "

அன்று பெண் பார்க்கும் படலத்தின் போது பட்டுச் சட்டையையும், பட்டு வேட்டியையும் அணிந்து கொண்டு தங்கத் தகடு வேய்ந்த கோபுரத்தைப் போல அங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களுக்கு நடுவே கைகளை கூப்பியபடி தனது வெள்ளைப் பற்கள் தெரிய ஒரு சிரிப்பு சிரித்தார் என் மாமனார். ஒரு தேர்ந்த அரசியல்வாதியை நினைவு படுத்திய  அவரது உருவம் ஆரம்ப நேரத்தில் யாரையும் ஏமாற்றக் கூடியது தான்.

வீட்டிற்குள் சென்றதும் உட்காருவதற்காக பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தியிருந்தார்கள் அந்த வீட்டுக்காரர்கள். அதில் உள்ள சில பொருட்களை பட்டியலிடுகிறேன். கருப்புநிற கம்பளி போர்த்தப்பட்டிருந்த  அந்த பொருள் அனேகமாக ஆட்டுக்கல்லாக இருக்கலாம். அழகான பூ வேலைபாடுகள் மிக்க போர்வை போர்த்தப்பட்டிருந்த பொருள் நெல் மூட்டையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அது எனது மாமனாரின் வேட்டியாகத்தான் இருக்க வேண்டும் அதை அம்மிக்கல் ஒன்றின் மீது போர்த்தியிருந்தார்கள். வெகு நேரமாக ஒரு தகரம் உரசும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததை வைத்து பார்க்கும் பொழுது யாருக்கோ  எண்ணெய் தீர்ந்து போன பெரிய தகர டப்பாவை கவிழ்த்து போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் எனக்கு சத்தியமாக ஒரு மரநாற்காலிதான் போட்டிருந்தார்கள் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன். அதன் 4 கால்களில் தென்மேற்குத் திசையில் பின்புறமாக வைக்கப்பட்டிருந்த 3வது காலை நினைக்கையில் என் நெஞ்சு பதறியது. அது எப்பொழுது என்னை கீழே தள்ளிவிடுமோ என்கிற பயத்தில் எனக்கு வேர்த்ததை புரிந்து கொள்ளாத ஒருவர் இவ்வாறு கூறினார்.

'மாப்பிள்ளை ரொம்ப பயப்படுகிறார் போல"

எனக்கு காபி கொண்டு வந்த பெண்  எனக்கு மனைவியாக வரப்போகிறவள் தான் என நம்பி ஒரு நிமிடம் சைட் அடித்து விட்டேன். பின்னர் தான் புரிந்தது அது அவளது அக்காவாம். அறிவு கெட்டவனே என என்னை நானே திட்டியதை தவறாக புரிந்து கொண்டு குழப்பமாக பார்த்தார் அருகில் இருந்தவர். காபியை அண்டாவில் தயாரித்திருப்பார்கள் போல. ஒவ்வொருவரும் ஒரு சொம்பு குடித்தார்கள். அது டம்ளரா சொம்புவா என பட்டிமன்றம் வைத்தால் முடிவு சொல்வது கடினம் தான். அவ்வளவு பெரிய டம்ளர் எங்கு தயாரிக்கிறார்கள் என்று என் மனதிற்குள் எழுந்த கேள்வியை கட்டுப்படுத்த கடினமாக இருந்தது.  அங்கே அனைவரும் ஒட்டுமொத்தமாக காபி அருந்தியது, ஒரே நேரத்தில் 5 டிராக்டருக்கு நடுவே பயணித்தது போல இருந்தது. ஒருவழியாக திகட்ட திகட்ட குடித்து முடித்துவிட்டு காபி டம்ளரை  கீழே வைத்தால், அதில் மீண்டும் ஒரு காபியை ஊற்றி நிரப்பி விட்டு நான் வெலவலத்து போனதை பார்க்காமல் நமுட்டுச் சிரிப்புடன் சென்றார் அந்த பெண்மணி. அப்படியே ஓடிச் சென்று நறுக்கென்று மண்டையில் கொட்டினால் என்ன என்று தோன்றியது. இதில் வசனம் வேறு

"தம்பி வெக்கப்படாமல் குடிங்க, நம்ம வீடுதான்."

ஆனால் அந்த ஏப்பச்சத்தத்தை கேட்ட போது மேலும் பீதியை ஏற்படுத்தியது. அவர் மீசையை முறுக்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது அந்தப் பாத்திரத்தை காலி செய்திருந்தார். அவர் கையில் இருந்த அந்தப் பாத்திரத்தை டம்ளர் என்று உறுதியாக கூறிவிட முடியாது. அதை ஒரு கையால் பிடிக்க முடியாது என்ற ஒரே காரணத்தினால் தான் என்று நினைக்கிறேன், 2 கைகளாலும் அந்த பாத்திரத்தை பிடித்து தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து அப்படியே கவிழ்த்தார். கொதிக்க கொதிக்க இருந்த காஃபி அவரது வாயை நிரப்பியது. சற்றும் முகம் சுளிக்காமல் அதை விழுங்கினார். அப்பொழுதுதான் அந்த ஏப்பம் வெளிப்பட்டது. சற்று உற்றுக் கவனித்தவர்களுக்குத் தெரியும் வாயிலிருந்து புகை வெளிப்பட்டது. எச்சில் படாமல் பாத்திரத்தை உபயோகப்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது என்றாலும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் அப்படியொரு காஃபி அருந்தும் முறையை கடைபிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஏதோ வீரச்செயலை செய்துவிட்டது போல மீசையை முறுக்கி விட்டதைப் பார்த்தால் கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அப்ளை செய்வார் போல. அந்தக்கால மாயாபஜார் படத்தில் ரங்காராவின் கதாபாத்திரம் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கும் என்று இப்பொழுதுதான் நன்றாகப் புரிந்தது.

பெண்ணை இன்றைக்குள் கண்ணில் காட்டி விடுவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். வெகு நேரமாக வளையல் சிணுங்கல் சத்தம் ஒரு அறையிலிருந்து ​கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது ஒரு சிறிய குழந்தை அந்த அறைக்குள் இருந்து கைகளை சூம்பியபடி எட்டிப்பார்த்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணை ஒரு தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். இறுதியாக வந்த அந்த குட்டிப்பெண் சூட்பிக் கொண்டிருந்த இடது கை கட்டை விரலை வெளியே எடுத்துவிட்டு என்பெயரை கேட்டுவிட்டுச் சென்றாள். நான் ஊமை இல்லை அல்லது திக்குவாய் இல்லை என்பதை உணர வைப்பதற்காக நான் மேலும் சில வார்த்தைகளை அந்த குழந்தையிடம் பேசினேன். மேலும் எனக்கு கண்கள் நன்றாகத் தெரியும் என்பதை நிரூபிக்க அந்த குட்டிப்பெண்ணின் பச்சை நிறப் பட்டுப் பாவாடையை பற்றி வியந்து கூறினேன். அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விட்டதோ என்னவோ? கடைசியில் ஜல் ஜல் என்று சத்தம் வெளிப்பட மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள்.

மறுபடியும் அவள் கையில் காஃபி டம்ளர். முகத்தில் சூடு அடித்தது.

என்முகத்தில் பட வேண்டும் என்பதற்காகவே ஜன்னலை திறந்து விட்டிருக்கிறாள்.

கனவு கலைந்த போது  மணி 9

ஞாயிற்றுக் கிழமைகளில் கூட காலை 9 மணி வரை  தூங்குவதற்கு இந்திய மனைவிகள் அனுமதிப்பதில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில் அந்த காஃபியை குடித்து என்னை நானே தண்டித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அப்பொழுது என் மனைவி என்னைப் பார்த்துக் கூறினாள்.

"எங்க வீட்டுல இன்னைக்கு வடை சுடப் போறாங்களாம். நாம இன்னைக்கு போறோம்"

கண்டிப்பாக அந்தத் திருவிழாவில் நாம் கலந்து கொண்டே தீர வேண்டும் என்று எனக்குள்ளேயே நான் கூறிக் கொண்டேன். கனவுகள் முன்னறிவிப்பதில்லை என்று யார் கூறியது. அனேகமாக நேற்றிரவே ஒரு அண்டா காஃபியை தயாரித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இப்பொழுதே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட சித்தத்துடன் எழுந்து சென்றேன் குளியல் அறையை நோக்கி பிரார்த்தனை நடத்துவதற்காக....

Pin It