கருப்பூவோட சந்தோசமா பொழுதை போக்கிக்கிட்டிருந்த வாழ்க்கை இப்படி முள்ளுல பட்ட பலூனாட்டம் பொசுக்குனு போய்டும்னு கனவுல கூட நௌச்சுப் பார்த்திருக்க மாட்டா மஞ்சு. ஊரே நாக்க நாலு மொழம் தொங்கவிட்டுட்டு அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்களோடு அங்கிட்டும் இங்கிட்டுமா அலைந்துக் கிட்டிருக்க... அன்னஞ்செவந்தானுக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பூசையை தடபுடலா நடத்திகிட்டு இருந்தார் பூசாரி. நெத்தி நிறைய துந்நூறுப் பட்டை, குங்குமம். மழிக்கப்படாத தாடி குத்திட்டு ஒரு புறம் நிற்க உள்ளே இறக்கிய டாஸ்மாக் சரக்கு தன் வேலைய மறுபுறம் காட்டிக் கொண்டிருந்துச்சு அவருக்கு. இடுப்புல முடிஞ்ச வேட்டியை நழுவிவிடாம கெட்டியாய் புடிச்சிருந்துச்சு மஞ்சத் துண்டு ஒன்னு.

கோவிலுக்குப் பின்னாடியே வெந்துக் கிட்டிருந்த கறியோட வாசம் கிளம்பக் கிளம்ப மஞ்சுவுக்கு மட்டும் ஒரு மாதிரி வயித்துப் பிறட்டி எடுத்துடுச்சு. குபுக்னு வந்த எச்சிலைக் காரி தரையில துப்பிக் கொண்டே மெதுவா நடக்க ஆரம்பிச்சா முகம் வெயில்ல கன்னிப் போயிருந்துச்சு. மாம்பழம் கணக்கா. அழுகையையும் ஆத்திரத்தையும் அவளால் கொஞ்சங்கூட தாங்கிக்க முடியல. இந்த உலகத்தையே பிச்சு பீறாய்ஞ்சு விடலாம் போலிருந்துச்சு அவளுக்கு நடக்குற காரியமா அது? சாதாரண... இல்ல இல்ல, ரொம்ப ரொம்ப சாதாரண பொண்ணு அவ. அங்கேயிருக்கிற பஞ்சாயத்து ஸ்கூல்ல அஞ்சாம் கிளாஸ் படிக்கிற சின்னப் பொண்ணுதான் மஞ்சு. நல்லக் கெட்டியோட படு சுட்டி.

மண்ணுல செவப்பு திப்பித் திப்பியா ரத்தம் உறைஞ்சு காய்ஞ்சுக் கிடந்துச்சு. அதுலேர்ந்து வீசிய கவிச்சு நாத்தம் அவ மூக்கத் துளைக்க ஆரம்பிச்சுடுச்சு. வச்சக் கண் வாங்காம அதையே வெறிச்சுப் பார்த்தவ கண்ணுலேர்ந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பொலபொலன்னு கொட்டித் தீர்த்துட்டு உள்ளுக்குள்ள எரிமலையாக் குமுறிக்கிட்டிருந்த ஆற்றாம. யாருக்கும் தெரியாம பாவாடையால கண்ண ரெண்டும் நல்லா கசக்கிக்கிட்டா மஞ்சு.
"ஏ புள்ள! அய்யா வேட்டைக்கு வர நேரம். ஓடு! ஓடு!!" தள்ளாடியபடி ஒரே பாய்ச்சல் பாய்ஞ்சி ஓடும் பூசாரியோடு சாம்புராணிப் புகையும் புகைஞ்சி எதிரோட்டம் பிடிச்சது. கொஞ்சத் தொலைவில இடிஞ்சு பாழாய்ப் போன கோவில்ல கதவு மூடிக் கெடந்தார் அய்யனாரு.

"பூசாரி சொல்றாருல்ல. பொம்பள புள்ள இதெல்லாம் பார்க்கக் கூடாது. போ! போ! பூசை முடிஞ்சு வரலாம்."

சதா தட்டிக் கழியும் தன்னோட ஒரே மகன் கல்யாணம் நல்லபடியா முடிய அங்காளிப் பங்காளிகளோடு குடும்பம் சகிதமா பூசை நடத்தி ஜோசியர் சொன்ன வேண்டுதலை நிறைவேத்திக்கிட்டு இருந்த அப்பெரியவர் விரட்டியடிக்காதக் குறையாகச் சொல்லியதை மஞ்சு சட்டை செய்ததாகத் தெரியல. அது அலட்சியப் பார்வையா? முறைப்பா? அவரால சட்டுனு அதை விளங்கிக்க முடியாம சரியான அதிகப் பிரசங்கினு மனசுக்குள்ளாற திட்டி கவுரவம் பார்த்து கம்முனு வேறு ஜோலிப் பக்கம் அவர தாவிப்போக.. மஞ்சுவுக்கு கால் சூடு தாங்காம பழுத்துடுச்சு. ஓரமாப் போக முடிவு பண்ணவளுக்கு, பேசாம இந்தக் கருமத்தைப் பார்க்காம வூட்டுக்கே ஓடிப்போயிடலாமானு கூட நெனைச்சா.

சாப்புடாமப் போனா அம்மா வேறு வையும். அதைவிட கருப்பூ முகத்தைக் கடேசியாப் பார்த்துடணும்கிற வைராக்கியம் தான் அவளை வீட்டுக்கு நகர விடாம இழுத்துக் கட்டிப் போட்டுடுச்சு.

சமைக்கிற இடத்துலேர்ந்து சாராய வாடையும் கூட சேர்ந்துக்கிட்டு. அங்கேயிருந்த ஆம்பள பொம்பள எல்லாத்துக்கும் பூசையில கண் இருந்திச்சே ஒழிய மனசு பூரா கொதிச்சுகிட்டு இருக்கிற கறி மீதே சுத்தி இருந்துச்சு. யார் கூப்பாட்டுக்கும் காது கொடுக்காதவளா மஞ்சு ஒரு பித்துப் பிடித்தவப்போல கருப்பூவைத் தேடத் தொடங்கிட்டா.

"அக்கா! வாக்கா ஒக்காருவோம்"

கையைப் பிடிச்சு இழுத்த தன் ஒரே தம்பிக்கிட்டேர்ந்து வெடுக்கென பிடியை உதறியவ, "போடா, அங்க வவுறு முட்ட கொட்டிக்கலாமுன்னு நாயா ஒக்காந்துருக்குற பெரியக்கா நடுக்காக்கிட்ட!"

அவ எப்போதுமே அவனை அப்படி பேசியதில்ல. மஞ்சுவுக்கே இது புதுசு, பேயறைஞ்சவன் போல நின்னுகிட்டு இருந்தான் அப்பொடிப் பயல்.

"ஏய் மஞ்சு வாடீ. இங்க!"

அந்த மிரட்டல் செவிடன் காதுல ஊதுன சங்காய் வீணாப் போனது தான் மிச்சம்

"வூட்டுக்கு வரட்டும். நல்லா வச்சுக்குறேன். இவன் ஒருத்தன். அந்த திமுரு புடிச்ச எருமை வாலப் புடுச்சுட்டு அக்கா நொக்கானு. வாடா இங்க."

நெஞ்சுல சாம்பலா நெருப்பு புகைச்சல். எல்லாம் சொன்ன பேச்சுக் கேட்காத மஞ்சுவால வந்த வினை. எங்கு தேடியும் கருப்பூ கடைசிவரை தட்டுப்படல அவளுக்கு. அவள் அலைஞ்சு தேடுறதுக்கு முன்னமே அது பூசாரி வீட்டுக்கு தலைக்கறி கூட்டுக்காய் போயி சேர்ந்துட்டு. பாவம் மஞ்சு. இது தெரியாத அப்பிராணி.

சுட்டுப் பொசுக்குற வெய்யிலும் கருப்பூவைக் காணாதத் தவிப்பும் அலைக்கழிப்பும் அவளை ரொம்பவே களைப்படையச் செய்திட்டு. பக்கத்துல மண்டிக் கிடந்த கருவேல மர நிழலு அம்மா மடி போல அவளுக்கு தெரிஞ்சதும் பொசுக்குனு உட்கார்ந்துட்டா. உடம்பு முழுக்க ஒரே காந்தல் நெடி. நாக்கு வறட்சியில தவிக்க, வேர்வை அரும்பி உடம்பெங்கும் கம்பளிப்பூச்சியா ஊர‌ ஆரம்பிச்சது. ரெண்டு கையையும் தலைக்கு முட்டுக் கொடுத்து பெரும் புதையலை இழந்தவளா உட்கார்ந்திருந்தா மஞ்சு. வெடிச்ச எருக்கம் பஞ்சு போல. பூமி நெசமாவே சுத்துவது இப்போ அவளுக்குச் தெரிய ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கண்ணு இருட்டிக்கிட்டு வந்துச்சு.

"நம்மோட மூணு பொட்டப் புள்ளைகளும் நம்மூரு பள்ளிக்கொடத்துல தான படிக்குதுக. அதுவும் நல்லா. இவுரு மட்டும் என்ன ஒசத்தி?"

தன் பிள்ளையின் எடது கன்னத்துல செல்லமா விரல்களைச் சுருட்டி குத்து விட்டதைக் கண்டு பதறி வாரி அணைச்ச வேலாம்பா தன்னைக் கட்டுனவனை முறைச்சப்படி...

"என்ன இருந்தாலும் எம்புள்ள தான நம்ம ரெண்டு பேரையும் கடேசி வரைக்கும் காப்பாத்திக் கொள்ளிப் போடப் போறவன். அதுங்க இன்னொருத்தன் வூட்டுக்குப் போகப் போற கழுதைங்க தானே!..."

"ஆனாலும் நம்ம இருக்குற இருப்புக்கு இங்கிலீசு மீடியம் பள்ளிக்கொடத்துல சேக்குறது ஓவரில்லியா?"

குத்துக்காலிட்டு கூரையை வெறித்தான் முருகேசு, பாவமாக. நல்லா கரையான் திருட்டுத் தீனி தின்னதுல அந்தச் சின்னக் குடிசை உசுரு போகப் போறாப்ல இழுத்துக்கிட்டுருக்குறதை அவனால காணச் சகிக்கல. வேலாம்பாவுக்கு அதுபத்தி எந்தக் கவலையுமில்ல. பிறந்ததுலேர்ந்து பார்த்துப் பார்த்துப் பழகிட்டு. கடவுளு கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் சரியாய்டுமா என்ன, இந்தக் கூனு?

"இந்த ஓட்டக் குடிசைக்கே வக்கில்லாத ஓன் தம்பி பொண்டாட்டி அவ புள்ளைய அங்க சேர்த்திருக்கும் போது எனக்கென்னக் கொறைச்சல்? மவராசன் கட்டுன மவராசி நான். இந்தா! என் தலைய வேணாலும் அடமானம் வச்சுக்க! ஆனா ஏம் புள்ள அந்த பள்ளிக்கொடத்துல தான் படிக்கணும்! ஆமா சொல்லிப்புட்டேன்."

வேலாம்பா ரொம்ப வீராப்புக்காரி. உப்புச் சப்பில்லாததுக்கே ஈரக்குலைய நடுங்க வைத்தவ. இதுக்கு பொசுக்குனு உசுர மாய்ச்சுக்கிட்டாலும் மாய்ச்சுக்குவா. நமக்கேன் பொல்லாப்புனு தன்னோட தலையை முதல்ல அடகு வைக்கத் துணிஞ்சான் முருகேசு. கெஞ்சிக் கூத்தாடி வாரத் தவணைக்காரன்கிட்ட எட்டு வட்டிக்குனு நாலாயிரத்தை மூணே நாள்ல வாங்கிப்புட்டான். இதைக் கேட்ட வேலாம்பாவுக்கு புரு­ன்மேல அன்னிக்கு மட்டும் ஒரு கொள்ளைப்பிரியம் ஏற்பட்டு அவனுக்குப் பிடிச்ச திருக்கை கருவாட்டுக் குழம்பையும் அவிச்ச முட்டையையும் அவ பாசத்தோடு வச்சதை ஒரு பிடி பிடித்தான் முருகேசு. பத்தாததுக்கு அவளையும் பிறகு! ரொம்ப காலமாச்சு இது மாறி ஒரு ராத்தியைப் பார்த்து என சந்தோசத்துல திளைச்சவனை முகம் கறுக்கச் செஞ்சது இருண்டுக் கிடந்த வானம். நசபுசன்னு கத்த ஆரம்பிச்ச ஆடுகளை எல்லாம் கொட்டாயில கட்டிப்புட்டு அந்த லேசா அடிக்கிற கூதக் காத்துல வேர்க்க விறுவிறுக்க முழிச்சுக் கெடந்தவன் தோளை ஆதரவா தொட்டவாறு வேலாம்பா. இறுகிப் போனவளாக.

நல்ல வேளையாக காத்து மழையைத் தள்ளிக்கொண்டு போய்ட்டு. சின்னச் சின்னத் தூறலோடு சரி. இப்பத்தான் அந்த ரெண்டு பேருக்கும் மீண்டும் உசுர் வந்துச்சு. தவணைக் கடன், குழுக்கடன்னு இருக்கிற அத்தனையையும் எடுத்துகிட்டு ஜோரா பையனைக் கெளப்பிக் கொண்டு போனதுல எல்லாம் அட்மி­ன் பீஸீக்கே காலியாயிட்டு. இன்னும் யூனிபார்மு, ஷீ, பைண்டிங்னு... நினைக்கவே வேலாம்பாவுக்கு தலை சுத்தத் தொடங்கிடுச்சு. புரு­ன் சொன்னதையே கேட்டுருக்கலாமோனு கூட ஒரு யோசனை மின்னலா தோன்றி மறைஞ்சுச்சு. இன்னொரு பக்கம் ஓர்ப்படிக்கிட்டர்ந்து கேலியும் கிண்டலும் சிரிப்பாக வரும். ஏற்கனவே அவளுக்குப் படிச்ச திமிரு வேற. இடியே விழுந்தாலும் முன் வைச்ச காலைப் பின் வைக்கக் கூடாதுனு மகன் படிப்பு விசயத்துல கடுமையாக விரதம் இருக்க முடிவெடுத்துட்டா அவ. முருகேசுவுக்கு எதுவும் சொல்லத் தோணல. ஏன்னா அவனுக்கு அவ தான் உசுரு.
விதைச்ச விதை எப்படியும் முளைச்சுடும்கிற குருட்டு நம்பிக்கை தான் இதுமாதிரி சமயங்கள்ல அவனை முட்டுக் கொடுத்துக் காப்பாத்தியிருக்கு.

ஆத்தா மாரியாத்தா அந்த ரெண்டு பேரையும் கைவிடல.

"ஏலே! முருகேசு வர்ற ஞாயித்துக் கெழம இந்த அய்யாவுக்குக் கெடா வெட்டு. கெடா இங்குனயே இருக்குமான்னார். சட்டுனு ஓன் நௌப்புத்தான் எனக்கு வந்துச்சு. அதான் கப்புனு கூட்டியாந்துட்டேன். இனிமே நீதான் சொல்லணும்."

கடவுளா முன்னாடி வந்து நேரம் அறிஞ்சு பேசுறவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டான் முருகேசு. தோள்ல கெடந்தத் துண்டு தானாக எறங்கி எடது கக்கத்துல தஞ்சம் புக இருப்புக் கொள்ளாதவனாகிப் போனான், இன்னும். வீட்டில் ஒரு நாதியும் இல்ல. எல்லாம் படிக்கப் போயிருக்கு. வேலாம்பா மகனோட மிஸ்ஸீக்கிட்ட பாக்கிக்கு ஒரு வாரம் தவணைச் சொல்லிட்டு வரப் போயிருக்கா. பயந்து செத்தபடி.

தெளிவாக இருந்தார் பூசாரி. அவருக்குப் பக்கத்துல பேன்ட் சட்டையில் வெள்ளை வெளேரென ஓர் நடுத்தரக் கிழவர். மூக்குக்கண்ணாடியும் அம்மைத் தழும்பும் அவரோட குறுஞ்சிரிப்பும் நல்லா பார்த்த ஞாபகத்தை அவனுக்கு உண்டு பண்ணிச்சு. ஆனா சட்டுனு பிடிபடல.

"ஐயா...." சவ்வாக இழுத்தான் முருகேசு.

"மணிப்புள்ள வெத்தலைக் கடை"

சொன்னதுதான் தாமதம். புரிஞ்சுகிட்டான். அட நம்ம அசலூரு தெரிஞ்ச வாடிக்கை!.

பெரிதா பேரம் எதுக்கும் வழியில்லாம வியாபாரம் நல்லபடியா முடிஞ்சு போச்சு. இன்னுமொரு முந்நூறை பிசிராம பெரிய மனசு வச்சு தந்திருந்தாங்கன்னா நியாயமா வியாபாரம்னு சொல்லியிருக்கலாம். நம்ம வலிக்கு இதைவிட்டாலும் வேறு வழியில்ல. அலையுற மனசை முளைக் குச்சியில கட்டுறானா? இல்ல படுத்துட்டு அசைபோடுற கருப்புக் கிடாவை அவுக்கிறானா? எனத் தெரியல. கை சும்மா சுழன்றுக் கொண்டிருந்துச்சு.

ஒரு வழியா அதை இழுத்து பூசாரி கையிலேயே பிடித்துக் கொடுத்தபோதுதான் மஞ்சு அவன் ஞாபகத்துக்கு வந்தா.

"பாவம். புள்ள ரொம்பத் தவிச்சுப் போய்டுவா."

அவன் மனசுல லேசா கீறல் விழுந்துச்சு. மஞ்சுவுக்கு இது கெடாயில்ல கருப்பூ. கருப்பூ மேல அவளுக்கு அம்புட்டு ஆசை. எனக்கு வேலம்பா கிட்ட இருக்கிற மாறி. இது இம்புட்டு நல்ல வெலைக்குப் போகக் காரணமே அவதெனமும் கொடுத்தப் புல்லும், தீனியும் தான். அந்தக் கழுதைக்கு அது மேல மட்டும் எப்படி அவ்வளவு பிரியம் வளர்ந்திச்சோ தெரியல. குட்டியாகக் கிடந்தவரை அவ பக்கத்துல தான் அதுவும் படுத்திருக்கணும். இல்லாட்டி ஒரே கச்சேரி தான்.

காது பிளந்திடும். முட்டுகிற அளவு வளர்ந்ததும் படுக்க எல்லாருக்கும் போதுமான எடம் இல்லாததுனாலும் மொச்ச வாடை வீசுறதுனாலும் அரை மனசோடு தான் வெளியிலக் கட்டிப் போட ஒப்புக்கிட்டா. ஒன்னுக்கு தண்ணிக்கு என நடுராத்திரியில அவ எழும்புறது இதுக்குத்தான்னு தெரியும். அதுவும் அவளைக் கண்டுட்டுனா அப்படியயாரு ஆட்டம் தான் போடும். அதுபோல அவள் சொல்லுக்கு மகுடிப்பாம்பாய்க் கட்டுப்படும்.

இப்போது வேலாம்பா எடத்துல மஞ்சு உட்கார ஆரம்பிச்சா முருகேசுவுக்கு. தாயைப் போலப் புள்ளைங்கறது எனக்கு சரியாகத்தான் இருக்கு. உள்ளூற உதறல் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு, அவனுக்கு. அவனால என்ன செய்ய முடியும்? அவனும் ஓர் அன்றாடக் காய்ச்சி தான்! மஞ்சுவை வேலாம்பா தான் சமாளிக்க வேண்டுமென மனசைத் தேத்திக் கொண்டிருந்தவனை,

"என்ன ஒரே யோசனையில ஆழ்ந்துட்டாப்ல இருக்கு?"

தட்டிக் கிளப்பினார் பூசாரி.

அடித்து விரட்டி கருப்பூவை கூடவே இழுத்துச் செல்லும் பூசாரியையே வெகுநேரமாக கண்ணுலேர்ந்து மறைகிற வரைக்கும் வெறித்தபடி பார்த்திருந்தான் முருகேசு. இப்போ கண்ணீர் முட்டியது அவனை. அன்னஞ்செவந்தான் கோவிலுக்கும் ஒரு காத தூரம் தான் மஞ்சுவோட வீடு. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் ஞாயிறு வெள்ளிக் கிழமைகள்ல அங்கு கிடாவெட்டு பூசை நடக்கும்.

பூசை நடக்குற அன்னைக்கு சுத்தி இருக்கிற எந்த வீட்டிலேயும் மத்தியான சோறு கிடையாது. தெரு முறை வச்சு பந்தி நடத்த பூசாரி மூலமா பூசை போடுறவங்ககிட்ட தெரிவிக்கப்படும். சாதா பூசைக்கெல்லாம் இது இல்ல. கூட்டமும் அவ்வளவாகக் கூடாது. பல நேரங்கள்ல குழம்பு இருக்கும்; எலும்பிருக்காது. சில சமயத்துல அதுவும் இருக்காது. அந்த வெறும் சோத்துக்கே தள்ளு முள்ளுச் சண்டை நடக்கும். தொடர்ந்து வீட்டுச் சண்டை வீதிக்கு வந்து வெட்டுக்குத்து வரை முடிஞ்ச கதையுண்டு. அப்படி பிரிஞ்சது தான் அத்தனை தெருவும். நூத்துல ஒருத்தர் தான் அத்திப் பூத்தாப்போல எல்லாருக்கும் கறி சோறு வருமாறு பூசை செஞ்சு திருப்தியாப் போவார். மத்தப்படி மத்தவங்க நடத்துறதெல்லாம் ஏதோ காமா சோமானுதான்!

மஞ்சுவும் எத்தனையோ படையல் சோறை அக்கா தம்பியோடும் அக்கம் பக்கத்தோடும் பிடிச்ச ப்ரண்ட்ஸ்களோடும் ரசிச்சு ருசிச்சு கும்மாளமாச் சாப்பிட்டுருக்கா. அப்போதல்லாம் கருப்பூம் அவளோடே இருந்துச்சு. ஆனா இப்போ கருப்பூவே படையல் துண்டமாகக் கிடக்கும்போது‍‍ அவளுக்கு சாப்பிட அறவே பிடிக்கல. வலுக்கட்டாயமாகத் தான் அவளை அவள் மூத்த அக்கா அலேக்காகத் தூக்கி உட்கார வச்சுப் பிடித்திருந்தா. அந்த முரட்டு முழுங்கால் முட்டி மஞ்சுவை அமுக்கியபடியும் ஒவ்வொரு புடியா கறிச்சோறு உள்ளே எறங்கும்போது முறைத்து "ம்ம் சாப்புடு"னு அதட்டியபடியும் இருந்தா அந்த காணாததை கண்டுவிட்ட ராட்சஸி.

மஞ்சுவோ சரியான அழுத்தக்காரி. எதுக்கும் மசியல. சோத்துல ஈ வேற மொய்ச்சுது. பொடியன் தான் விரட்டிக்கிட்டு இருந்தான். சின்ன அக்கா மீது பரிதாபப்பட்டு. மூத்தவ திணிச்சக் கவள உருண்டையை வாய் கொள்ளாம குமட்டி பாதி துப்பியபடி இருந்தவன் திரும்பி மஞ்சுவைப் பார்த்து அரண்டுப் போனான். அவள் முகம் கோவைப்பழமாய்க் கெடந்துச்சு. கண்கள்ல தீப்பொறி பறக்க கை கொள்ற மட்டும் கறிச்சோறை வாரி அள்ளிகிட்டு 'குய்யோ முறையோ'... ன்னு கத்திக்கிட்டும் தின்னுக்கிட்டும் இருக்கிற கூட்டத்திலேர்ந்து ஆவேசமா எழுந்து அன்னஞ்செவந்தானை நோக்கி குட்டிப் பேயா பூமி அதிர நடந்தா மஞ்சு.

மண்ணில் எறைய ஆரம்பிச்சுச்சு மஞ்சு கையில் பிடிச்சிருந்த சோறு யாருக்கும் ஒண்ணும் புரியல. பூசாரியோ சாமி முன் குப்புற விழுந்து கிடந்தார். பக்கத்தில காலியாக ரெண்டு பிராந்தி பாட்டில். அவர் வாயிலேர்ந்து மெல்லிசா ஒரு முனகல் குழறிக் குழறி வந்துக் கிட்டிருக்க....

"இந்தா! எல்லாத்தையும் நீயே தின்னு !பத்தலைனா என்னையும் சேர்த்துத் தின்னு! அப்போவாச்சும் ஓன் வெறி அடங்குதான்னு பாப்போம்."

பேய் பிடிச்சவளாட்டம் கையிலிருந்த பிடிச் சோத்தை ஓங்கி வீசி அடிச்சவ பிறகு தன் சக்தியெல்லாத்தையும் கூட்டி அண்ணாந்து ஆகாசம் நடுங்கக் கத்தினா மஞ்சு.

"ஐயோ..........கருப்பூ!...."

- மணி.கணேசன்

Pin It