உலகமே போற்றும் வண்ணம், கேரள, மராத்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்கள் மொழிக்கு இப்படி ஒரு மாநாடு நடத்த முடியவில்லையே என்று ஏங்கும் வண்ணம், மொழியைப் போற்ற இத்தனை இலட்சம் மக்கள் ஒன்று கூடுவார்களா என்று வெளிநாட்டு அறிஞர்கள் வியக்கும் வண்ணம் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்புடன் நடந்து முடிந்திருக்கிறது.

அறிஞர்கள் கூறிய ஆய்வரங்கம், கணிப்பொறியாளர்கள் கூடிய இணையத்தள அரங்கம், பொதுமக்கள் கூடிய பொது அரங்கம் என மூவரங்குகளும் சிறந்து திளைத்தன. ஏறத்தாழ ஐந்து மணி நேரம் காத்திருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

semmozhi_meeting_530

இத்தனை சிறப்புகள் இருந்தாலும், தேடித் தேடி, துருவித் துருவி குறைகள் சிலவற்றைக் கண்டுபிடித்து, அவற்றைப் பெரிதுபடுத்தி வெளியிடுவதில் உள்ளம் பூரித்திருக்கின்றன சில ஏடுகள். நம்மைப் பொறுத்தவரையில் அறிவுத் தளம், உணர்வுத்தளம் ஆகிய இரு இடங்களிலும் மாநாடு நல்ல பயனைத் தந்திருக்கிறது.

மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது, தமிழில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்னும் தீர்மானம் பெருமகிழ்வைத் தந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. 1999 ஆம் ஆண்டு, தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் 100 தமிழறிஞர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் வைத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் விருப்பம் செயல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. எனினும், என்ன ஒரு முரண் எனில், காலமெல்லாம் அந்தக் கோரிக்கைக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெருமக்கள், இப்போது அது ஏற்கப்பட்டிருக்கும் வேளையில், பாராட்டி ஒரு சொல்லும் கூறாமல் பதுங்கி இருப்பதுதான்.

இத்தருணத்தில், இன்னொரு செய்தியையும் நாம் நினைவு படுத்திக் கொள்வது நல்லது. நல்லனவற்றை அரசு செய்ய முன்வந்தாலும், சில வேளைகளில் சட்டம் குறுக்கிடும். 1999 இல், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்று கலைஞர் அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவ்வாணையைச் செல்லாததாக ஆக்கி விட்டனர். இப்போதும் அதுபோன்ற முயற்சிகள் நடக்கவே செய்யும். அதனைக் கவனத்தில் கொண்டு, உரிய வகையில் சட்டத்தை இயற்ற, முதல்வர் அமைச்சரவையில் கலந்துரையாடி இருக்கிறார் என்னும் செய்தி வரவேற்கத்தக்கது.

- இனியன்

Pin It