துள்ளிக் குதித்தோடி
வரும் சொற்களை
நீ கேட்கத் தயாரில்லாத நிலையில்
ஆர்ப்பாட்டமோ,
கூச்சலோயின்றி
வெளிநடப்பு செய்கின்றன
சோர்ந்த சொற்கள்..

------------------
உன் காதுமடல் கூட
அறியாது
உன் மீசையோடு
நான் பேசும் இரகசியங்களை...
------------------------------

எனதுளறலை
உனக்கு உண்மையாகவும்
எனதுண்மையை
உனக்கு உளறலாகவும்
அறியத் தரும்
கையாலாகாத சொற்களை
வைத்துக் கொண்டு
என்ன செய்ய?
------------------------

சொற்களாலோ
செயல்களாலோ
உன் மீதான நேசத்தின்
முழுப்பரிமாணத்தையும்
காட்டவியலாத போது
பால்கட்டிக் கொண்ட
மார்பின் வலியுணர்கிறேன்..
--------------------------------------

எப்போது
கவிதை எழுதுவீர்களென
கேட்பவர்களுக்கு
ஓரப்புன்னகையையும்
சமாளிக்கும் வார்த்தைகளையும்
பதிலிறுக்கிறேன்..
உன் நினைவென்னை
கொன்று போடும் சமயங்களில்
உன் ஸ்பரிசத்தில்
மூர்ச்சையுற்று மயங்கிச் சரிகையில்
உன் ஓரிரு சொற்களென்
உயிர் குடிக்கையில்
அடம்பிடித்து பிடிவாதமாய்
சண்டையிடுகையில்
இப்படியான பதில்களையும்
இதற்கு மேலானவற்றையும்
நீயே அறிவாய்..
துடிப்பறியும் இதயமாய்..
-------------------------------------

என் இரவை பகிர்ந்தளிக்க யாருமில்லை
என் தூக்கத்தை நீயே தூங்குகிறாய்..
என் உணவு வேளையில் உடன்வர யாருமில்லை
என் பசிக்கும் சாப்பிட்டு விடுகிறாய்..
என் சிந்தனையைக் கேட்பதற்கு யாருமில்லை
எனக்கும் சேர்த்து சிந்திக்கிராய்
என் வாழ்க்கையை நீட்டிக்க விருப்பமில்லை
எனக்கும் சேர்த்து வாழ்ந்திருப்பாய்
----------------------------
உன்னோடு
நான் சேரும் நாளில்
பூமியின் எடை குறையும்
என் பாரத்தின்
சுமை நீங்கி..
-----------------------------
- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It