கீற்றில் தேட...

அழுது...
அடம் பிடித்து
மண்ணில் புரளும்
என் மனக்குழந்தைக்கு
எப்படி சொல்வேன்?
அன்பே நீ...
கிடைக்கமாட்டாய்! என்று


நட்சத்திரங்கள்
தன் ஒளியால்
இருளுக்கு நன்றி சொல்கின்றன..!


இசையை அறிவதில்லை
தனித்தனியாய் கிடக்கும்
காற்றும் புல்லாங்குழலும்...!


தேவதைகளின் உருமாற்றம்

நட்சத்திரங்களை மூக்குத்தியாய்
சூடியிருக்கும் தேவதையான
என் காதலி....
மனைவியான பின்பு
மூக்குத்தி துவாரம்
மூடிப் போகாதிருக்க
வேப்பங்குச்சியை செருகியிருக்கும்
அபலைப்பெண்களில்
ஒருத்தியாக...!


அறியாத வெயில்

அதிகாரத்திற்கு எதிராக
குரல் எழுப்பும் என்னிடம்
அடங்கிப் போகும் படி
அறிவுறுத்துகிறார் முதலாளி...!

அவரின் அலுவலகத்தில்
நிழலில் மட்டுமே
வளர்ந்து பழக்கப்பட்ட...
தொட்டிச்செடிகளுக்கு
மத்தியில் நான்..!


கலையும் காலச்சித்திரங்கள்..!

உதிர்ந்து கொண்டிருக்கிறது
தன் உறுதியை இழந்து...
வர்ணமடிக்கப்பட்ட
பழைய அரண்மனை...!

சிலந்திகள் கூடுகட்டி
குடும்பம் நடத்துகின்றன
மகாராணிகள் வாழ்ந்த
அந்தப்புரத்தில்....!

குழந்தைகளின் விளையாட்டிற்கு மட்டுமே
பயன்படுகிறது
அச்சு முறிந்த தேர்...!

துருவேறிக்கிடக்கின்றன
வரலாற்றின் குருதிக்கறை படிந்த
போர்க்கருவிகள்..!

மகாராஜாக்களின் சிம்மாசனத்தில்
ஓடி விளையாடுகின்றன
அணில்கள்...!

சமகாலத்தின் ஜனநாயகம் போல்
நாவை இழந்து தொங்குகின்றன
ஆராய்ச்சி மணிகள்...!

அரசியல் அதிகாரத்தின்
நிலையாமை குறித்து...
அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன
எருமை மாடுகள்...
இராஜசபை கூடிய இடத்தில்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)