கீற்றில் தேட...

வடலி குலைந்து
வானம் பார்த்தபடி
ஒற்றைப்பனை

அதன் மேல்
அக்கினி உமிழத் தயாராக
ஊர் நிலவு

குருதி படிந்த
வேலி இடுக்கில்
தலை கிழிந்த
ஒரு புகைப்படம்

கிடுகின் பொந்தல்லூடு
புன்னகை மறந்து
பொசுங்கிப்போன
ஒற்றைக்கை உருவம்

தன்நிலை மறந்து
கோவிலடி ஆலமரம்
அம்மன் பாவம்
ஒரு கண்ணுடனும்
ஒற்றைக் காலுடனும்
அதே...
அப்பாவிச் சிரித்த முகம்

காற்றில் அலைந்து
களைத்து விழுகிறது
ஒரு துளி மழை

மழைத்துளி விழுந்தாலும்
எதோ என்று
பதறியடித்து
பதுங்கிக்கொள்கிறது
உடைந்த ஒற்றைக் கதவடியில்
ஒரு குழந்தை

ஏன் என்பதை
முழுவதுமாய் யாராவது
இனியேனும் உணரக்கூடும்...?

- கவிதா நோர்வே [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]