கீற்றில் தேட...

1.

சுவர் பூசாத கட்டிடத்தில்
கிடந்த உள்ளாடையின்
பின்புறத்தை இணைக்கும்
கொக்கிகளுக்குப் பதிலாக
ஊக்குகள்!
கொக்கிகளுக்குப்பதில் எப்படி
ஊக்குகள் வந்தது

அது தனிக்கதை
தனிக்கவிதை

2.

உனக்குக் கொண்டுவர
அக்கனிகளை நோக்கி
கைகள் ஏந்தியே
பிரார்த்திக்கிறேன்

அந்த மரமே
விழுந்தது
(மகளுக்கு)

3.

தென்படும்பார்வைக் கோணத்தில்
ஜன்னல் சட்டத்தில்
சில்லறைக்காசை எண்ணியபடி
போய்க்கொண்டிருந்தாள்
பின்பு வலுத்த மழையில்
கம்பிகளுக்கு இடப்பக்கம்
யாரையோ எதிர்நோக்கிய வண்ணம்
நனைந்திருந்தாள்

செம்பருத்திப் பூக்களை முகமேந்தி
வலப்பக்கம் முன்னேறினாள்
தன் கணவனிடம் விசும்பியபடி
அவனைப்பின் தொடர்ந்தே
மறைந்து போனாள்

ஜன்னலுக்கு திரைச்சீலையிட்டபிறகும்
அவள் கடந்துகொண்டிருக்கும்
காலடியோசை கேட்கத்துவங்கிய
அன்று
பெருமழை பொழிந்தது 

- சீனு ராமசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)