கடிகார முள்ளின் வேகத்தில்
உதறித் தள்ளியது
பால் தந்த என் முலைக் காம்புகள்.
சில மாதங்களே ஆன இளஞ்சிவப்பு இதழ்களுக்கு
பசி அமர்த்தும் தவணை இன்னும் முடியவில்லை.
உன் அழுகை
என் முழங்கால்களை மடக்கி இருக்கச் செய்யவில்லை,
நான் ஒரு இரை தேடும் பறவை
மணி பார்த்து பறக்கிறேன்.
உன் பிஞ்சு வயிற்றை
நனைக்க முடியாத ஏக்கத்தில்,
அழுது புலம்பும் என் மார்பகங்கள்
வேலை பார்க்கும் இடம் என பார்க்காமல்
மேலடையை வீணாய் நனைக்கிறது...
மன்னித்து விடு என் உயிரே!
நிரந்தர வரவுக் கணக்கில்
தோல் நிறத்தோடு,
என் சம்பளத்தையும் சேர்த்தால் தான்
தாலி பாக்கியம் கிடைக்கும் என்ற
உன் அப்பனின் திருமண ஒப்பந்தம் அப்படி.
- மால்கம் X இராசகம்பீரத்தான் (