"துயர்மிகு வரிகளை இன்றிரவு
நான் எழுதக் கூடும்"
பாப்லோ நெரூடாவின்
அந்த வரிகள்
என்னை அழுத்திக் கொண்டேயிருக்கிறது..
நீ இரவாகும் போது
நான் நிலவென்றும்
நீ நிலவாகும் போது
நான் இரவென்றும்
நீயனுப்பிய
குறுஞ்செய்திகள்
வலியை அதிகப்படுத்துகிறது..
ஒவ்வொரு முறையும்
உன் வரவால்
அலங்கரிக்கப்பட்ட இரவு
மூன்று நாட்களாக
மூளியாயிருக்கிறது..
நீ வந்துவிட்டால்
இனி ஒவ்வொரு இரவும்
முழுநிலவின் உச்சம்..
உன் வருகைக்காக
என்னிடமிச்சமிருக்கிறது
இன்னும் ஒரே இரவு..
------------------------------------
இன்றில்லை எனில்
நாளை
நாளையில்லை எனில்
நாளை மறுநாளென
சமாதானமாகி
தள்ளிப்போட விருப்பமில்லை
நிமிடத்தில் மாறக்கூடியது
வாழ்க்கையும் உணர்வும்..
வந்துவிடு வாழ்ந்துவிடலாம்
இந்த நொடியில்..
-------------------------------------
துக்கம் மேலிட
அழும் மனதின் ஓசை
உன் தூக்கத்தைக்
கலைக்கக்
கூடுமென
ஒத்தி வைக்கிறேன்
என் துக்கத்தை
உன் விழிப்பிற்குப் பின்..
--------------------
எனக்கு சந்தோசம் வந்தால்
கொஞ்சவும்
கோபம் வந்தால்
மிஞ்சவும்
உன்னைவிட்டால்
யாருண்டு
இவ்வுலகில்
புரிதலுடன்..
---------------------
இதுதான்
உன்னை நேசிக்கக் காரணமென
என்னால் சொல்ல முடியாது..
இதுதான்
என்னை நேசிக்க முடியாததற்கு
காரணமென
உன்னால் சொல்ல முடிகிறது..
----------------------
- இவள் பாரதி (