பச்சைஓளி பரவசமூட்ட
தெளிந்த வானத்தில் ஆழ்ந்தவாறு
கற்பூக்களின்மேல் படுத்திருந்தேன்
சற்றுத்தள்ளிப் பரவியிருந்த புல்திட்டில்
இருவர் அமர்ந்திருந்தனர்
காதலர்களாக இருக்கக்கூடும்
பூவிரியும் சூட்சுமத்தோடு
அவன் விரல்களில் சொடுக்கெடுத்தாள்
ஒவ்வொரு சொடுக்கிற்கும்
காற்றிலவன் உதடுகுவிக்கையில்
வெட்கத்தின் சரிகை அவள் முகத்தில்
உரத்த குரலில் அவனொரு
கவிதை வாசித்தான் போலிருக்கிறது
கோடைமழையில் நனைந்த
வெடிப்புநிலமாய் இலகுவானாள்
வெகுநேரம் கெஞ்சிக் கொண்டிருந்த
அவன் உதடுகளில் முத்தத்தின் ஏமாற்றம்.
பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை
பின்புறத்தைத் தட்டியபடி எழுந்த அவர்கள்
என்னை சமீபித்து மடியில்
தலைஉயர்த்திப் படுத்துக் கொண்டனர்
அமைதியாக இருந்த என்னை
விநாடியில் புணர்ந்துபோட்டது ரயில்
காதலின் வலிமையைச் சொல்ல
காதலர் வலிமை சுயபலியிடுகிறது.
- சுகிர்தராணி
கீற்றில் தேட...
தண்டவாளமும் இரு காதலர்களும்
- விவரங்கள்
- சுகிர்தராணி
- பிரிவு: கவிதைகள்