கீற்றில் தேட...

நினைவுகள் சுழித்தோடும்
வாழ்க்கை

படித்துறைகளில் அமர்ந்து
கறைகளை
அலசிக்கொள்கிறோம்

காயங்களிலிருந்து கசியும் நிணம்
கைகளில் உறைந்த குருதி
விழிகளில் வழியும் கண்ணீர்
எல்லாமே ஒன்றுதான்
கழுவும் நீருக்கு

அடித்த கைகளால்தான்
குழந்தையின் கன்னம் வருடுகிறோம்
வஞ்சினம் கூறிய உதடுகள்தான்
முத்தமிடுகின்றன

கொன்றவர்களாலும்
தின்றவர்களும்
நிறைந்திருக்கிறது ஊர்

அடித்து
நசுக்கிக்கொன்ற
ரத்தத்தடத்தின் மீதுதான்
சக்கரங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன


அழகிய பெரியவன்