புதைத்துவிட்டு
திரும்பிப் பாராமல் நகர்ந்தபின்
தவித்துக் கிடக்கும் பிணம்போல்
நீயற்ற தனிமையில்
நான்
உடனிருக்கும் போது சண்டையிடுகிறேன்
அழவைக்கிறேன்
சலிக்கும் அளவிற்கு
இறுக்கம் கொள்கிறேன்
பெயர் தெரியாப் பூச்சிகளைப் போல்
என் வசவுகள்
உன் கண்களில் விழுந்து
சுரீரென்கிறது
தெரியுமா
அனைத்தையும்
எனக்கு நானே இப்போது...
தாகம் தணிக்கவும்
தலைமுழுகவுமான தோட்டக் கிணறுபோல்
உன்னையன்றி
எவரைச் சொல்ல
மண்டிக்கிடக்கும் காரமுட்களுக்கிடையில்
தளிர்த்தவைகளைப்
பசியோடு கடிக்கும் வெள்ளாட்டினைப் போல்
ஆடைகளுக்குள் உன்வாசம் தேடி
குளிர்கிறதென பூமி
மானாவாரியில் விதைத்த விதைப்பாடாய்
ஏகாந்தத்திற்கு
நாலு இலைவிட்டுக் கிடக்கிறது மனசு
மந்தை மந்தையாய் இறங்கும்
கம்பளிப் பூச்சிகளைப் போல
இந்த இரவு இருக்கிறது
என்னிடம் ஏராளமாய்க் கண்ணீருண்டு
எவரிடமும் காதுகளில்லை
இருக்கும் இந்த உயிருக்காக மட்டும்
எல்லோரிடமும் முழக்கயிறு இருக்கிறது
உன்னையுட்பட
- பச்சியப்பன்
கீற்றில் தேட...
நீ மட்டும் படிப்பதற்கு
- விவரங்கள்
- பச்சியப்பன்
- பிரிவு: கவிதைகள்