
பஜனை கோயிலிலிருந்து
தொடங்கிவிடும்
சிரசு ஊர்வலம்.
சின்னப்பையன்
தலையில் அமர்ந்து
ஒவ்வொரு வாசலிலும்
ஆடிக்கொண்டே நிற்பாள்
கங்கையம்மா.
ஆட்டக்காரிக்கு
கற்பூரமோ தேங்காயோ
கடாவோ
பலியிடுவதில்தான்
பூரிப்பு நிறைந்திருக்கிறது
அவரவர்களுக்கு.
ரத்தம் உறிஞ்சிய சிவப்பாய்
உதட்டோடு
பல்லைக் காட்டி
சிரித்தவளாய்
ஆடுகிற ஆட்டத்தில்
சொக்க வைத்துவிடுவாள்
இளவட்டங்களை.
குடித்துவிட்டு
காசியம்மாளை
அடித்துத் திரியும்
முருகேசன்தான்
காளியாத்தாள்
வேசங்கட்டி
சூலம் ஏந்தியவனாய்
ஊர் சுற்றி
ஆடி வருவான்.
புருசனை
"எழவெடுக்கோ' என்று
வசைமாரி பொழிகிற
பெண்களெல்லாம்
தாலிபாக்கியம் வேண்டி
தீச்சட்டி பிடித்து
ஆடுவார்கள் அம்மனுக்கு.
- சா. இலாகுபாரதி