
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
விடியலில் வந்தவள்
இன்னமும் திரும்பவில்லை
காலையிலேயே வாதம் தொடங்கிவிட்டது
எதையோ இவள் கேட்பதும்
அவள் மறுப்பதுமாக
சிறுபிள்ளையின் ஆசைக்குச் சிறிது
அக்கறை காட்டியிருக்கலாம் அவள்
இவ்வளவு பெரியவளால்
கொஞ்சமாவது உதவமுடியாதா என்ன
நீலம் பச்சை வெளுப்பு
எத்தனை முகம் காட்டினாலும்
இவள் விடுவதாக இல்லை கோரிக்கையை
பின்பு சிவக்க
எட்டி இடதுகையால் மறுவிளிம்பைப்
பிடித்து இழுத்து
வலதுகையால் ஆரஞ்சு மிட்டாயை எடுத்து
வாயில் திணித்துக்கொண்டு திரும்புகிறாள்
உதட்டிலிருந்து ஒளிச்சாறு வழிய
சிறுமியிடம் தோற்ற சோகத்துடன்
முக்கடலும் முகம் கறுத்துக் கிடக்கிறது
- மாலதி மைத்ரி