நீண்ட நேரம் அமர்ந்து
சொல்லிவிட்டு வந்தேன்
என் கவலைகளை
அவனிடம்

sad manஎன் கவலைகள் குறித்து
அவன் என்ன நினைக்கிறான்
என்பதே என்னுடைய
இப்போதைய கவலையாக
இருக்கிறது.

நிதானமாகத் தலையசைத்து
என் கவலைகளைக் கேட்டு
உள்ளூர அவன்
மகிழ்ந்தான் என்பதற்கும்
அப்படியில்லை என்பதற்கும்
ஆதாரமற்றுத் தவிக்கிறேன்
நான்.

என் கவலைகள் குறித்து
கவலைப்படாத ஒருவனிடம்
சொல்லியிருக்கக் கூடாதுதான்
என் கவலைகளை.

தனது கவலைகளைப் பிறரிடம்
சொல்லிக் கொள்ளாமலிருப்பதைத் தவிர
வேறென்ன தகுதியிருக்கிறது
அவனுக்கு என் கவலைகளைக் கேட்க?

அநியாயமாக ஒருவனை
நீதிபதியாக்கிவிட்ட
அவமானம் குடைகிறது
என்னை.

தீர்வு காணத் தெரியாதவர்கள்
தீர்ப்பு கோரிப் புலம்புவார்களோ
ஒரு வேளை?


ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It