கர்ப்பிணியோ

தீராத அலுப்பில்
தூங்கியது போல
நடிக்கவும்
பச்சை விளக்குக்காக
காத்திருக்கையில்
விபத்திற்கு பலியானவர்
குறித்த வருத்தத்தை விட
அலுவலக அவசரத்திற்கு
வருந்தவும்
வரைந்த கைகளையோ
கோலத்தின் அழகையோ
பொருட்படுத்தாது
காலணிகளால்
காயப்படுத்தவும்
தருமம் பண்ணுங்கய்யா
வாசகம் கேட்கும் போதெல்லாம்
காது கேட்காதவராய்
மாறி விடவும்
சொன்ன விலைக்கு
வாங்கிய
அடுக்குமாடிக் கடைகளின்
அதிருப்தியை
சாலையோரக் கடைகளில்
பேரம் பேசித்
தீர்த்துக் கொள்ளவும்
மரங்களை வெட்டி
வீடாக்கி விட்ட
வாடகை அறையில்
ஒட்ட வைத்த
பிளாஸ்டிக் பட்டாம் பூச்சியில்
மனம் லயிக்கவும்
மிஞ்சிப் போனால்
மூன்றுப் பேர் தங்கலாம்
என்ற நிலைமையில்
‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’
என்று சொன்னவனை
முட்டாள் என
முன்மொழியவும்
பாரிமுனையை
‘பாரிஸ் கார்னர்’ என்றும்
திருவல்லிக்கேணியை
‘டிரிப்பிளிகேன்’ என்றும்
தியாகராய நகரை
‘டி.நகர்’ என்றும்
சொல்லிச் சொல்லி
புறம் மகிழவும்.
இப்படியாக...
இன்னும்...இன்னும்
ஏராளமாய்
என்னுள் விதைத்திருக்கிறது
நகர வாழ்க்கை.
- கதிர்மொழி