
அவலமாகத் தெரிகின்றன
மனிதர்களின் கண்களுக்குக்
கழுதைகள்.
எதன் பொருட்டேனும்
ஒரு கழுதை நுழைந்துவிடுகிறது
மனிதர்களுக்கிடையேயான
உரையாடல்களில்.
வேலை வாங்கிக் கொண்டே
கேலி செய்வதற்கு
உகந்ததாக வாழ்கின்றன
மனிதர்களுக்குக் கழுதைகள்.
வீடுகளைக்
குட்டிச் சுவராக்கியவர்களும்
குட்டிச் சுவர்களுக்குக்
கூரைபோட முடியாதவர்களும்
கழுதையைத்தான் வம்புக்கிழுக்கிறார்கள்,
பழமொழி வாயிலாக.
கட்டுண்டுக் கிடக்கும்
கழுதைகளுக்கு எதிராக
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன
ஏராளமான பழமொழிகள்.
கழுதைக்குத் தெரியுமா
கற்பூர வாசனை?
என்று கூடக் கேட்கிறார்கள்.
கழுதைக்குத் தேவைதானா
கற்பூர வாசனை?
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_