
சுறுசுறுப்பாகிவிடும்
அந்த இடம்
ஒரு அடி உயரத்திற்கு
மண்குவித்து
கோணி பரப்பி
மூட்டைகளை ஆவெனத் திறந்து
வைத்துக் காத்திருப்பார்கள்
சனிமூலையோரம்
ஆடுமாடு
வாங்குபவர்கள்
துணிபோர்த்தி
விரல்களில் விலைபேசுவார்கள்
சந்தைமேடு செல்லும்
பாதையோரம்
கிளி ஜோசியக்காரன்
நான்கு சதுர அடியில்
ஆணி அடித்துத்
துணிச்சுவர் எழுப்பி
கூரையில்லா வீட்டில்
கிளி தரும் சீட்டில்
வெள்ளாமைக்கான எதிர்காலம் சொல்லி
காசுசேர்ப்பான் வீடுகட்ட
அத்தை வீட்டு
முருங்கைக்காயைத் திருடி
ரூபாய்க்கு இரண்டாய்
விற்று
ரெண்டாவது ஆட்டம்
பார்ப்போம்
மீனாட்சி கொட்டாயில்
அடுத்து
ஆடுமாடு வாங்க வருவோருக்காக
துண்டில் விலைபேசிய
தரகு ராமசாமி
சாராயம் குடித்து
சாய்ந்திருப்பான் ஆலமரத்தடி
பஸ்டேண்டில்
அன்றைக்கு மட்டும்
கூச்சல் கூடாக மூச்சிறைக்க
ஏரிக்கரை ஏறி இறங்கும்
எங்கள் ஊர் பஸ்
அடிக்கடி குறுக்கும்
நெடுக்குமாய் ஓடும் பஸ்
சாலையை கடக்க
விளக்கை எதிர்பார்த்துக் கிடக்கும்
பலருடன் சேர்ந்து கடக்க வேண்டியுள்ளது
அடையாளம் வைத்து
சென்ற வீடுகள்
ஓராண்டுக்குள்
அடுக்குமாடி குடியிருப்பாகின்றன
அரசமரம் ஆலமரம் புளியமரம்
இல்லாமல் வேகமாய் வளரும்
தூங்குமூஞ்சி மரங்களுக்கிடையில்
வாழும்போதும்
நினைவில் வந்து போகிறது
கருவாடு வாசனை
மாறாத
அந்தச் சந்தைமேடு
- இளங்கோ (e_