நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்திலிருந்த
காந்தியின் படம் கழன்று விழுந்திருந்தது

குரல்வளையிலிருந்து கொப்பளித்து
குஜராத்வரை மிரண்டோடிய ரத்தம்
ஆஸ்ரமத்துக்குப் போக அஞ்சி
அகதி முகாமொன்றில் அடைக்கலம் வேண்டியது

மாட்டியிருந்த கொக்கியின் மறை கழன்றோ
தொங்கிக்கொண்டே இருக்கமுடியாத துயரில்
தானாகவோ
விழுந்திருப்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் முன்பே
அயலார் சதியென வழக்கம்போல் அறிக்கை வைத்த அரசு
கவனக்குறைவு குற்றத்திற்காகவென
கைதுசெய்தது காவலர்களை

எல்லாம் முடிந்து இருட்டிய பிறகு
இப்போதும் தப்பிக்கவைத்த சிஷ்யர்கள் விசுவாசத்தால்
நெஞ்சு விம்ம
கபடமாய் சிரிக்கும் சாவர்க்கர் கடைவாயில்
மீண்டும் குடித்த ரத்தத்தின் சிறுதுளி.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It