எல்லாருமே
பெருந்தன்மையோடு சிந்திக்கிறார்கள்
இலாபம் நட்டம்
பார்க்கிறவர்களால்
காலம்
கர்ப்பமுற்றிருக்கிறது
பிரசவம் பற்றிக் கவலையில்லை
பெரிதாய்
பிரசவத்தின்போது
வலிகூடாது என்பதுதான்
வாதம்
இழிவை எதிர்க்கவும்
நியாயத்தை
உரிமையை
யாரையும் புண்படுத்தாமல்
கேட்கவும் தெரியவேண்டும் நமக்கு
ஏனெனில்,
மலம் அள்ளுவதால்
யோகநிலை எய்தலாமென்ற
பண்பட்ட உபதேசத்தால்
புண்படக்கூடாது நாம்
ஏனெனில்
மலம் அள்ளினால்
மகாத்மா ஆகலாம்
'சதி' என்றால்
உடன்கட்டை ஏறுதல்
என்று பொருள்
உடன்கட்டை ஏறும் திட்டத்தை
ஒழிக்க
ராஜாராம் மோகன்ராய் முனைந்தபோது
பெண்கள்
சொர்க்கத்திற்குப் போவதைத்
தடுக்கும் சதி என்றார்கள்
எங்களுக்கே உரிய
கட்டுமானத்தைக்
கட்டுக்கோப்பை
உடைக்கக்கூடாது என்று
உரக்கக்கூறினர்
நெருப்புக்கு உணவான
பெண்களையோ
பெண்ணின் புண்ணையோ
பெரிதுபடுத்தவில்லை பெரிதாய்
உடன்கட்டைத் தடுப்புச்சட்டத்தால்
அன்றைக்கு அனைவரும்
புண்பட்டுப் போனார்கள்
புண்ணை மறைத்துக்கொண்டு
மூக்கைப் பிடித்துக்கொண்டு
புண்படுத்தாமல்
வாழ்வதுதான்
நம் நாகரீகத்திற்குப் பெருமை
நாம் பண்பட்டவர்கள்
பண்பாட்டாளர்கள்
இன்னும்பல
நூற்றாண்டுகளுக்கு
நிலைத்திருக்கட்டும்
நம்
நாற்றமிகு பண்பாடு
- பிச்சினிக்காடு இளங்கோ (