கண்டங்கள் நாடுகள்
நாடுகளுக்குள் உட்பிரிவுகள்...
மதங்கள் ஜாதிகள்
அவைகளுக்குள் உட்பிரிவுகள்...
இப்படி
எத்தனையெத்தனை வேற்றுமைகள்
இவ்வுலகில்!
இவையனைத்தையும் இன்றே
மிச்சமின்றி களைத்து...
ஒன்றாய்...
ஒற்றுமையாய்...
ஒரு உலகம் அமைப்போம்!

வெறுமையின்றி...
வன்முறையின்றி...
பஞ்சமின்றி...
வஞ்சமின்றி...
பொய்யின்றி...
புரட்டின்றி...
போட்டியின்றி...
பொறாமையின்றி...
தீங்கின்றி...
தீண்டாமையின்றி...
மனம் முழுதும்
மகிழ்ச்சி மட்டும்
அலையலையாய் பொங்கிடும்
அழகாய்...
அமைதியாய்...
ஒரு உலகம் அமைப்போம்!

மனிதப் போர்வையில்
மிருகங்கள் வாழும்
இவ்வுலகம் அழித்து
உண்மையாய் வாழும்
மனிதர்களுக்காக வொரு
நல்லுலகம் அமைப்போம்...
அங்கே
தீமைகள் யாவையும்
தீயிட்டு கொளுத்தி
சுவையாய் பல
நன்மைகள் சமைப்போம்!

இப்படியொரு உலகை
எண்ணிப் பார்ப்பதிலேயே
எவ்வளவு இன்பம்!
இயற்கையில் கூட
கலப்படமுள்ள கலியுகத்தில்
தூய்மையாய் கிடைப்பதிந்த
கற்பனை மட்டுமே!

ஆம்...
உலகம் முழுமையும்
ஒரு குடையின்கீழ்
என்
கற்பனைச் சக்கரவர்த்தியின்
செங்கோல் ஆட்சியில்
மக்கள் யாவரும்
வளமாய் வாழும்
அற்புதமான உலகம் அது!

அச்சங்கள் ஏதுமின்றி...
கவலைகள் எதுவுமின்றி...
சுதந்திரத்தின் முழுமையான
பொருள் உணர்ந்து
வாழுமிந்த வாழ்க்கைக்கு
செல்வச் செழிப்புகளோ...
அறிவியல் ஆக்கங்களோ...
ஈடில்லை... இணையில்லை!

இவையனைத்தும் மீறி
ஒரு
குறையுண்டு என்னுலகில்...
மக்கள் தொகை மிக சொற்பம்!
எல்லைகளே இல்லாது
பரந்து விரிந்த
என்னுலகத்தின் வாயிலில்
வாழ்க்கையின் அர்த்தத்தை
உணர்ந்தோரின் வருகைக்காக
வழி மேல் விழி வைத்து
காத்துக் கொண்டிருக்கிறேன்! 

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It