Ramaகடலடியில் கிடக்கிறதோர் கல்லைக் காட்டி
கதைகட்டி விடுகின்றான் கடவுள் பக்தன்!
மடமனிதர் இன்னும் இருக்கின்றார் என்னும்
மமதையிலே மிதக்கின்றான் மதத்தின் பித்தன்!

கதைகளிலே வருபவனைக் கடவு ளாக்கி,
கற்பனையின் நாயகனைத் தலைவ னாக்கி,
உதவாத மதவாத உறக்கத் துள்ளே
உலவுகிறான் கனவை மட்டும் சொந்தமாக்கி!

ஆழிக்குள் தெரிகிறதாம் ராமர் பாலம்..
அதைக் கண்டு சொல்லியதாம் ‘நாஸா’ இல்லம்..
கூலிக்குக் கோஷமிடும் கும்பல் இங்கே
குதியாட்டம் போடுதடா, என்னே வெட்கம்!

கண்டகண்ட ஆழிப் பேரலைகள் வந்தால்
கடற்பாறை வரிசைகளின் கதி என்னாகும்?
கண்டதுண்ட மாகிவிட்ட ராமர் பாலம்
கடலுக்குள் இன்னமுமா காட்சி நல்கும்?

பலகோடி வருடங்கள் பழக்கம் கொண்ட
பாறைகளின் நீட்டம்தான் இன்னும் உண்டு!
சில நூற்றாண்டின் முன்பே சிதைந்து போன
சீதை மணாளன் பாலம் எங்கே உண்டு?

அவதார புருஷனவன் அமைத்த பாலம்
ஆடாமல் அசையாமல் இருக்கு மென்றால்
தவமான தமிழ்மன்னன் இராவணன்தன்
தடயங்கள் ஒன்றேனும் ஏன் அங்கில்லை?

கால்வாயை வெட்டுவதோ கடவுள் துரோகம் -
கல்லெடுத்து மாற்றுவதோ ‘ராம’ சாபம் -
தாழ்வான இவ்வகை வீண் கூச்சல் எல்லாம்
தமிழனுக்கே எதிரான கொடிய பாவம்!

அறிவியலின் சிகரத்தை எட்டிப் பார்க்கும்
ஆற்றலுறு பாரதத்து மக்கள் மையம்,
சிறியமதி வெறியர்களின் கிளர்ச்சி கண்டு
சினம் கொண்டு தூற்றாமல் என்ன செய்யும்?..

சேது சமுத்திரத் திட்டம் நன்றோ, தீதோ…
செந்தமிழர்க்(கு) அது தேவைதானோ, வீணோ..
ஏது முடி(வு) என்றாலும் ‘இராமன்’ என்பான்
எதற்கிங்கே வரவேண்டும்? சொல்லுங்கப்பா!..

பூசல்களைத் தூண்டுவதும் ‘ராமன்’ பேரால்
பூச்சாண்டி காட்டுவதும் போதும்! போதும்!
ஏசல்களைத் தாண்டி இந்தத் ‘திட்டம்’ வெல்லும்:
(இ)ராமபிரான் கோபமுறான்: காலம் சொல்லும்! 

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It