யார் யாரிடமோ
பணம் வாங்கிக் கொண்டு
வினா எழுப்பி
விடை பெற்றுத் தருகிறார்கள்
அங்கு
அனுப்பப்பட்டவர்கள்.
தாங்கள் அங்கம் வகிக்கும்
அரசால் நடத்தப்படும்
கல்லூரிகளின் தரத்தில்
நல்ல அபிப்பிராயம் இல்லை
என்பதற்காகவோ
என்னவோ,
தாங்களே
கல்லூரிகளை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
மந்திரிகள்.
முன்னாள் மந்திரி
இந்நாள் மந்திரி
என்ற
வேறுபாடு இல்லாமல்
பொட்டல் தரிசுகளை எல்லாம்
பொறியியல் கல்லூரிகளாக்கி
கல்விச் சேவையில்(?)
களைகட்டி நிற்கிறார்கள்.
அந்நிய முதலீடு
அவசியம் தேவை
தேச வளர்ச்சிக்கு என்று,
'ரியல் எஸ்டேட்'-ல் கூட - இது
அனுமதிக்கப்படுகிறது
அரசால்.
உலக மயம்
தனியார் மயம்
தாராள மயம்,
பொருளாதரத்தை
தூக்கி நிறுத்த
தேவை என்று சொல்லி,
லாபங்கள் எல்லாம்
தனியார் மயமாக்கப்பட்டு
நட்டங்கள் மட்டும்
தேசிய மயமாக்கப்படுகிறது.
'இந்த கண்றாவிகளை
எங்கே போய்ச் சொல்வது' - என
ஆதங்கப்பட்டு
வெந்து நொந்தவர்களிடம்
போதனை செய்யப்படுகிறது
இந்தியா
இரண்டாயிரத்து இருபதில்
வல்லரசாகும் என்று.
- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை.