பக்கம் திரும்ப முடியாமல்
இரும்புத் திரைகள்
இருப்பதன் காரணத்தால்
ஏதும் அறியாரை
எதிரியைப்போல் கொல்வது...
பொய் மானை முயன்று
மெய் மானாக்க
ஆறாம் அறிவை
அடகு வைக்கச் செய்வது...
'எவரெஸ்ட்'டில் ஏற
ஏற்ற வாகனம்
எருமை தான் என்று
ஏற்றுக் கொள்வதுடன்
அதுதான் சரியென்று
அடித்துச் சொல்வது...
நெஞ்சை விட்டு முதலில்
நீக்க வேண்டியது
கருணை எனச் சொல்லி
கத்தி தூக்க வைப்பது...
ஈவு இரக்கம்
எல்லாம் புதைத்து
எட்டாததை
எதிர்பார்த்து
ஏமாற்றத்தை
ஏற்கச் சகிக்காமல்
எது வேண்டுமானாலும்
செய்வது...
ஆட்சிக்கு ஜனநாயகம்
அறவே வேண்டாம்!
அராஜகமே எங்கும்
அற்புதம் என்பது...
உற்ற துணையாய்
உடன் இருந்தவரை
அற்ப காரணத்திற்காக
அழித்து விடுவது...
மொத்தத்தில்
நாசத்தின்
நாற்றங்கால்!
தேசத்தின் 'எய்ட்ஸ்'
தீவிரவாதம்.
- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை.