Caveகுகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்
"குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்"
குகையின் கேலியாய்
எதிரொளிக்கிறது எங்கெங்கும்
கூனாகி குனிந்து இருட்டினுள்
குறுக்கிக்கொள்கிறேன்!

குகை புகுவாய்
கொண்டாடி மகிழ்வாய்
வாழ்த்தொலிகள் முழங்க
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்ததாய் சொன்ன
குகைபுகுந்தேன் ஒரு நாள்

குகையின் சுவரெல்லாம்
விந்துக் கறைகள்
முத்தத்தின் ஒழுகலில்
வழியும் எச்சில்கள்
இதில் எழுதப்போவதில்லை
என் சரித்திரத்தை
வெள்ளைத் தாளொன்றுண்டு என்னிடம்
குகையிருட்டை கையள்ளி
எழுதுகோலை நிரப்புகிறேன்
எழுதும் முனையில்
எதுவும் இல்லை
விரலில் எடுத்து
விந்து பீய்ச்சி
வெள்ளைத் தாளில் எழுதுகிறேன்
பின்னொரு நாள் குகைபுகும்
யாரேனும் படிக்க கூடும்!

குகையின் வாயிலில்
சாரல் விழுகிறது
சிறகை நனைத்து
சிலிர்த்து குகை
விளையாட்டில்!
குகை வாழ்க்கைக்கு
சிறகு வேண்டுமா
குகை தத்துவம்!
உரக்க சொல்லி
உயர பறக்க எத்தனித்து
சுவர் மோதி தரைதொடுகிறேன்
பறத்தல் கூடாது
குகை விதிகள்!
பறவையென்றே சொல்லத்தான்
இறகுதிரும் சிறகுகள்!

அகன்ற வானமும்
ஆழ் பள்ளத்தாக்கும் மோதும்
குகை மறுமுனை நோக்கி
மெல்ல நடக்கிறேன்
சுவாசிக்க வேண்டும்
சிறகடிக்க பறக்க வேண்டும்.
குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்!

பாஷா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It